ஒரு கொலை எழுப்பும் கேள்விகள்!

டெல்லி பள்ளியில் நடந்திருக்கும் ஒரு கொலை, நமது கல்வி முறை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அது பற்றி இங்கே கருத்தை பகிர்கிறார், முனைவர் கமல.செல்வராஜ்.

முனைவர் கமல. செல்வராஜ்

பள்ளிக் கூடங்கள் பண்பாட்டின் கருவூலங்கள். வகுப்பறைகள் அறிவின் பிறப்பிடங்கள். இவை இரண்டும் மனித வாழ்க்கையை பதப்படுத்திப் பக்குவப்படுத்துபவை.

இங்கிருந்துதான் அன்பும், அறிவும், அறமும் அரும்ப வேண்டும். என்றால்தான் ஆக்கப்பூர்வமான எதிர்கால சமுதயத்தை உருவாக்குவதற்கு இயலும். ஆனால் சமீபகாலமாக நமது நாட்டில் பள்ளிக் கூடங்களில் நடக்கும் சிலக் கொடூரச் சம்பவகளைப் பார்க்கும் போது உள்ளம் பதறிப் போகிறது.

அப்படிப்பட்டச் சம்பவங்களில் ஒன்றுதான் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரயான் சர்வதேசப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவன் பிரதியுமன்(வயது 7) மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது. நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை உருவாக்கியிருக்கும் இக்கொலை சம்பவத்தின் காரணிகளை அறிந்த ஒவ்வொருவரும் பேரதிர்ச்சி அடையாமலிருக்க இயலாது.

கொலை நடந்தவுடன் உள்ளூர் போலீசார், அப்பள்ளியின் பேருந்து நடத்தினர் அசோக் குமார் மற்றும் இருவரை கைது செய்துள்ளனர். அதோடு அசோக் குமார், மாணவனைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவனின் பெற்றோர் தொடர்ந்து நடத்திய வற்புறுத்துதலினாலும், போராட்டத்தினாலும் அவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து விசாரணையில் திருப்பம் ஏற்பட்டு உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

அக்குற்றவாளி வேறு யாருமல்ல, அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் 16 வயதான மாணவன் ஒருவன்தான். அவன் எதற்காக இக்கொடூரக் கொலையைச் செய்திருக்கிறான் என்பதுதான் விசித்திரமானது.

அப்பள்ளியில் நடக்கவிருந்த தேர்வைத் தள்ளி வைக்கவும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறிதளவுகூட ஈவிரக்கமின்றி இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.

பள்ளிக் கூடங்களில் தேர்வு நடைபெறுவதும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டப்படுவதும் இயல்பான ஒரு நடைமுறையே. ஒருவேளை இந்த இரண்டு விஷயங்களும் எதேனும் ஒரு காரணத்திற்காக ஒரு நாள் மாற்றி வைத்தாலும், அதற்குப் பதில் இன்னொரு நாள் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இத்தனை கொடூரமான முறையில் கொலை செய்யத் துணிந்திருக்கும் ஒரு மாணவனுக்கு இது தெரியாத விஷயமாக இருக்காது. அதனால், கொலை செய்தவன் இவனாக இருந்தாலும், கொலைக்கானக் காரணம் இதுவாகத்தான் இருக்குமா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சி.பி.ஐ. போலீசாரின் விசாரணை நுணுக்கத்தாலும், உளவியல் அணுகுமுறையாலும் இந்தக் கொலையாளி மாணவனை இன்னும் மிகத் துல்லியமாக விசாரித்தால், பல முடிச்சுகள் அவிழ்வதற்கும், வேறு காரணங்கள் புலப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.

ஒருவேளை அம்மாணவன் கூறியிருப்பது போல் தேர்வும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் காரணமாக இருந்தால், பள்ளிகளில் இப்படிப் பட்ட நடைமுறைகள் இருப்பது அர்த்தமற்றதாக அல்லவா உள்ளது?

பள்ளிகளில் தேர்வு நடத்துவது என்பது மாணவர்களின் கற்றல் அடைவுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பயமுறுத்துவதற்காகவோ, பழிவாங்குவதற்காகவோ இருக்கக் கூடாது. ஆனால் இன்றைய கல்வி முறை அதற்கு இடம் கொடுக்கிறதா? என்றால் அது இம்மியளவிற்கும் இல்லையென்றே கூறலாம்.

மாணவர்களின் மதிப்பீடுகளை இழக்கச் செய்து, வெற்று மதிப்பெண்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கும் கல்வியாகவும், கல்விக் கூடங்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் மாறி வருகிறது நம் நாடு என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

இந்த நடைமுறையை உடனடியாக நம் நாட்டிலிருந்தும், கல்வி முறையிலிருந்தும் மாற்றியாக வேண்டும். மதிப்பெண்ணிற்குப் பதில், மதிப்பீடுகளை வளர்க்கும் கல்விக்கு முக்கியத்தும் கொடுத்தாக வேண்டும். மாணவர்கள், பள்ளிப் பாடங்களை மனப்பாடம் பண்ணி மதிப்பெண்கள் பெறும் தேர்வு முறைகளை மாற்றி, அவர்களின் தனித்திறன்களைச் சோதித்தறியும் தேர்வுகளாக மாற்றவேண்டும்.

அதுபோலவே பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்கள் நடத்துவதும், மாணவர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்றோருடன் பகிர்ந்து கொண்டு, அதில் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை பெற்றோர் முன்னிலையிலும், மற்றவர்கள் மத்தியிலும் வெறுமனே கொச்சைப் படுத்துவதற்காக மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, மாணவர்களின் பிரச்னைகளைப் பெற்றோரிடம் கலந்தாலோசித்து, அப்பிரச்னைகளுக்கு நல்ல ஆரோக்கியமானத் தீர்வை உருவாக்கும் கூட்டமாக அமைய வேண்டும்.

இதைத் தவிர்த்து வீட்டிலிருக்கும் பெற்றோரைப் பள்ளியில் வரவழைத்து, மாணவர்களை, ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகள் போல் பாவித்து, பழிசுமத்தும் நடைமுறைப் போக்கை பள்ளிகளும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி குறை கூறவோ, பழிசுமத்தவோ செய்தால், அதனை பெற்றோர்களும் அப்படியே நம்பி விடுகின்றனர். உடனே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏதோ கொடும் குற்றம் புரிந்த குற்றவாளியாக கருதுகின்றனர். இச்செயல் மாணவர்களின் மனதில் ஒரு பழிவாங்கும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

அதனால் ஏற்படும் மன அழுத்தவும், பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போகும் போதும் சில மாணவர்கள் இதுபோன்ற எதிர்வினை செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிறது.

எது எப்படியாயினும் இக்கொடூரக் கொலையைச் செய்திருக்கும் மாணவனை, அவனது வயதைக் காரணம் காட்டி சும்மா விடுவது அல்லது சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துப் பராமரிப்பது என்பது எவ்வகையிலும் நியாயமானதன்று. இவன் செய்திருக்கும் குற்றம் உறுதியாக நிரூபணமாகியிருக்கும் பட்சத்தில், வழக்கமான நமது கோர்ட் நடைமுறைப்படி அதிக காலம் விசாரணைக்காக இழுத்தடிக்காமல், உடனடியாக கடுமையானத் தண்டனை வழங்கியே தீர வேண்டும்.

அதுவே மற்ற மாணவர்களுக்கும் ஒரு பெரும் பாடமாகி, இது போன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கு இயலும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ்,  கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! தமிழில் இவரது கவிதை, கட்டுரை தொகுப்புகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close