மிருனாள் பாண்டே
டெல்லியில் அதிகாரம் என்பதும் அரசியலில் மிகவும் தீவிரப் போக்கினை கையாளும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் என்னவோ, டெல்லி அரசு சார் வளாகங்களுக்குள் ஒரு மகிழ்ச்சிகரமான சூழலும், மனிதர்களுக்கு இடையேயான ஒரு சுமூகமான உறவு முறையும் கூட இல்லாமல் இருக்கிறது.
அதனால் தான் என்னவோ, ராகுல் காந்தி, நம்பிக்கையில்லா தீர்மான விவாத முடிவில் மோடியை கட்டிப்பிடித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த எதிர்பாராத நிகழ்வினால், எதிர்கட்சியினர், காங்கிரஸ்காரர்கள், சமூக வலைதளங்கள், ஏன் இந்தியாவே ஸ்தம்பித்துவிட்டது.
தன்னுடைய பேச்சினைக் கேட்டு அதில் இருந்து பாஜகவினர் வெளியே வருவதற்குள் மோடியை கட்டிப்பிடித்து மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ராகுல்காந்தி.
நம்முடைய டி.என்.ஏ.விலேயே எல்லை தாண்டுதல் குறித்த வரையறைகளும் பயங்களும் இருக்கின்றன. 1958ல் அறிவியல் அறிஞர் ஹாரி எஃ. ஹார்லோவ் ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் போது, ரீசஸ் வகை குரங்குகளில் இளம் குரங்குகள் தங்கள் தாயின் அரவணைப்பினை மிகவும் அதிகமாக நாடுமாம்.
ஆனால் மத்திய அமைச்சரோ நாம் குரங்குகளில் இருந்து வரவில்லை என்றும், அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். மனித உறவுகளுக்கும் தொடுதல் முறைகளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களும் மனநிலை மருத்துவர்களும்.
நம்முடைய விரல் நுனியில் மட்டும் தோராயமாக 3000 ரிசப்டர்ஸ் இருக்கின்றது. அதனால் தான் உடலின் மொழியை அன்பாக, தொடுதலாக, அரவணைப்பாக வெளிப்படுத்தும் போது, ஆக்ஸிடாசின் அதிகமாக பரவி எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஹக் என்ற ஆங்கிலேய வார்த்தையே அமைதிப்படுத்தும் என்று பொருள் கொண்ட Norse Hugga என்ற வார்த்தையில் இருந்து மருவி இத்தனை வருடங்களாக பயன்பாட்டில் இருக்கிறது.
இந்துத்துவா உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு வார்த்தைப் பற்றியும் கூறிவிடுவோம். ஆலிங்கன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஒரு பெரியவர் கையில் தங்களை ஒப்புவித்தல் என்று பொருள். 16 வயதினை தொடும் ஆண்பிள்ளைக்கு அங்கத் அங்கத் ஸ்பர்ஷ்யாமி என்ற மந்திரம் ஓதி அப்பா தன் மகனை கட்டிப்பிடித்தல் இந்து பாரம்பரியத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவில் 40 வயதிற்கும் குறைவானவர்கள் மட்டும் சுமார் 80% நபர்கள் இருக்கின்றார்கள். இளைய இந்தியாவின் மத்தியில் ராகுல்காந்தியின் செயல் வரவேற்கப்பட்டதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தியாவின் தெருக்கள் அனைத்தும் வண்ணங்களாலும் இளைஞர்கள் பட்டாளத்தாலும் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாராளுமன்றமோ, பிரதமர் அலுவலகமோ வெறுமனே தேமே என்று செயல்பட இயலாது. மேலும் இன்று யாரும் தேர்தல் கால வாக்குறுதி வசனங்களையும், மன் - கீ - பாத் போன்ற ரேடியோ நிகழ்ச்சிகளை மட்டும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதில்லை.
இங்கு அனைத்து மாற்றங்களுக்கும் காலம் இருக்கிறது. இளைய சமுதாயம் பொறுமையாய் அதனை கையாள பெரியவர்கள் அதற்கான இடம் கொடுத்து ஒதுங்கிப் போவதிற்குமான காலமும் வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.