Advertisment

ராகுல் காந்தியின் தலையாய கடமை

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது முக்கியமான ஒன்று. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து போவது ராகுலுக்கான ஆகப் பெரிய சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi- congress - sugitha 2

சுகிதா

Advertisment

(காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தினம் நேற்று (28.12.17) கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

சோனியாவிடம் இருந்த மற்றொரு குறை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு உடனடியாக அவர் பதலளித்ததே இல்லை. எப்போதும் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பதை பழக்கமாக கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை தன் வசம் வைத்திருந்தாலும் மிகவும் முக்கியமான கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஒரு போது அவர் வைத்திருந்ததே இல்லை. ஆளுங்கட்சியினருக்கு எதிர்கட்சியாக உடனுக்குடன் பதிலடி கொடுத்து நாடாளுமன்ற அவைகளில் அனல்பறக்க விட வேண்டியது அவசியம். இதனை பாஜக செவ்வனே கடந்த காலங்களில் செய்திருக்கிறது. மாதவராவ் சிந்தியா, ஷிவ்ராஜ் பட்டேல், பிரணாப் முகர்ஜி தற்போது மல்லிகார்ஜூனா கார்கே என்று எதிர்கட்சி தலைவர்களாக காங்கிரசில் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்கள் போகும் போது சோனியாவை தொலைக்காட்சி கேமராக்களில் குளோசப்பில் காண்பிப்பார்கள். அவர் மவுனமாக அமர்ந்திருப்பார். அந்த குறியீடு காங்கிரசிற்கு பின்னடைவு.

ஆனால் ராகுல் நாடாளுமன்றத்தில் சிறப்பாக, ஆக்கப்பூர்வமாக பேசுபவர். இனி கூடுதலாக பேச வேண்டியது அவசியம். இவ்வளவு நாட்கள் சோனியாவின் தோளில் இருந்த பொறுப்பு இப்போது இவர் தோளுக்கு வந்துள்ளது. வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் இனி நேரடியாக அவரே பொறுப்பாக வேண்டும். இத்தனை நாட்கள் பின்னால் இருந்தது அவர் மீது விமர்சனம் இல்லாமல் தப்பித்துக் கொள்ள உதவியது. ஆனால் இனி நேரடியாக அவரது பேச்சுக்கள், செயல்பாடுகள் விமர்சிக்கப்படும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குஜராத் விலைவாசி உயர்வு குறித்து ராகுல் எழுப்பிய கேள்வியில், சில தகவல்களின் புள்ளிவிவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பா.ஜ.க குற்றம் சுமத்தியது. ’பா.ஜ.க தொடர்ந்து என் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது’ என்று ராகுல் பேசியது பக்குவப்பட்ட தலைவராக காண்பிக்கிறது. அதே போன்று மணிசங்கர் ஐயர் மீதான நடவடிக்கை வருங்காலங்களில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் மீது கறார் நடவடிக்கைகள் எடுக்கும் போது ராகுலின் தலைமை பண்பை மக்கள் உணர்ந்துக் கொள்வார்கள்.

சோனியாவிடம் உள்ள மிக முக்கியமான தலைமை பண்பு ஒன்றிற்கு ராகுல் தயாராக வேண்டும். சோனியாகாந்தி, ”காங்கிரஸ் கட்சியுடன் மதசார்பின்மை கட்சிகளை ”பசைபோல்” ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பவர். ஆனால் ராகுல் இத்தகைய கூட்டணியை உருவாக்க மாட்டார். ஒரு போதும் கூட்டணி அமைப்பதில் சோனியாவோடு ராகுலை ஒப்பிட முடியாது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். இதை ராகுல் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்கால கூட்டணி வியுகத்தில் இடதுசாரிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது, தனி ஆவர்த்தனம் நடத்தும் திரினாமூல் காங்கிரசின் மம்தா பானர்ஜியை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது, உத்திர பிரதேசத்தில் முரண்டு பிடிக்கும் மாயாவதியை சரிகட்டுவது என்று 2019 கூட்டணி அமைப்பதற்கான பணிகள் ராகுலுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளன. மேற்குவங்கத்தை மனதில் கொண்டு மம்தாவை ஓரம்கட்டுவதும், கேரளாவை மனதில் கொண்டு இடதுசாரிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும், உத்திரபிரதசத்தை மனிதல் கொண்டு மாயாவதியை ஒதுக்குவதும் ராகுலுக்கு 2019 க்கு உகந்ததாக தெரியவில்லை. திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதியின் அகிலேஷ்யாதவ் என இளம் தலைமுறை தலைவர்கள் காங்கிரசிற்கும், ராகுலுக்கும் நெருக்கமாகவே இருக்கிறார்கள். மோடி -அமித்ஷா கூட்டணியை எதிர்கொள்ள வலுவான கூட்டணியை ராகுல் முன்னெடுப்பது முக்கிய தேவையாக உள்ளது.

பொருளாதார கொள்கைகளை பொருத்தவரை பாஜக, காங்கிரஸ் பெரும்பாலும் ஒரே படகில் தான் பயணிக்கின்றன. மானிய வெட்டு, ஜிஎஸ்டி, ஆதார் உள்ளிட்டவற்றை கடந்த காலங்களில் காங்கிரஸ் தயங்கி தயங்கி செய்ததை, தற்போதைய பாஜக தடாலடியாக தன்னிடம் உள்ள பெரும்பான்மையை வைத்து செய்கிறது. ஆட்சியாளர்களுக்கும் - குடிமக்களுக்குமான இடைவேளை பொருளாதார கொள்கையில் பார தூரமாகிவிட்டது. இதை குறைப்பது ராகுல் தலைமையிலான காங்கிரசிற்கு இன்று காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வயாப்பு திட்டம், விவசாயிகள் நலன் என மக்களுக்கான ஆட்சியை காங்கிரஸ் கொடுத்துள்ளது என சோனியா பெருமையோடு ராகுல் பொறுப்பேற்ற நாளில் குறிப்பிட்டார். இதே போன்று மக்களுக்கான பொருளாதார சீர்திருத்தத்தை காங்கிரஸ் வருங்காலங்களில் முன்வைக்க வேண்டும்.

டெக்கான் ஹெரால்டு வழக்கு ஒன்றை தவிர காங்கிரஸ் மீதும் கூட்டணி கட்சிகள் மீதும் உள்ள குற்றச்சாட்டு அளவிற்கு ராகுல் என்ற தனிநபர் மீது இல்லை. ஆனால் இனி காங்கிரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் அது ராகுலையும் சேர்த்து தான் கணக்கில் கொள்ள வேண்டும். அமித்ஷாவின் மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் மவுனம் காக்கும் ராகுல், ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் என்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று.

குஜராத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி கோவிலுக்கு போனார். ராகுலும் ஜெகனாத் கோவிலுக்கு போனார். இது பெருமளவில் ராகுல் மீதான விமர்சினமாக வைக்கப்பட்டது. அது எந்தளவுக்கு என்றால் குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி பாஜக ஒரு போதும் ஆட்சி அதிகாரத்திற்காக கொள்கைகளை அடகு வைத்ததில்லை என்று பேசினார். மதசார்பின்மை, சமூக நீதி தான் காங்கிரசின் அடித்தள கொள்கை. அதன் மீது தான் காங்கிரஸ் வரலாறும், இந்திய வரலாறும் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அதன் சில பக்கங்களை கிழிக்கும் முயற்சியாக தான் ராகுலின் குஜராத் கோவில் பிரவேச நிகழ்வுகள் உணர்த்துகின்றன. சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதுகாப்பு அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு எதிரி இல்லை என்று மென்மையான இந்துத்தவத்தை முன்னெடுக்கிறார் ராகுல். தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அரசியல் என்று கூறபட்டாலும் இது காங்கிரசிற்கு ஒரு போதும் பலனளிக்காது. மதசார்பின்மை காங்கிரசின் அடிநாதம் என்பதால் தான் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் மூன்றாவதாக ஒரு அணி வலுவாக உருவாகாமல் தகர்த்தது. காங்கிரசின் சமூக நீதி பாதுகாப்பு தான் மூன்றாவது அணி அமைப்பதற்கான கொள்கை முடிவை ஆரம்ப கால கட்ட பேச்சுவார்த்தையில் வேரறுத்தது. ஆனால் வருங்காலங்களில் ராகுலின் காங்கிரஸ் கொள்கை தேர்தலில் எப்படியாக வளைந்து நெளிகிறது என்பதை பொறுத்து தான் மூன்றாவது அணி உருவாவதும், உருவாகாமல் போவதும் உள்ளது. சோனியா போனவுடன் காங்கிரசின் இந்துத்வ முகம் வெளியே வந்துவிட்டது என்று இப்போதே பேசத்தொடங்கி விட்டார்கள் .

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான ஒன்று. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து போவது ராகுலுக்கான ஆகப் பெரிய சவால். இதைவிட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து வரும் போது ராகுல் என்ற தனி நபர் அல்லது பாஜக எதிர்த்து களமாடும் எதிர்கட்சி தலைவர் காப்பாற்றுவார் என்ற மக்கள் எண்ணுவதை காட்டிலும் பன்முகத்தன்மையை பாதுகாத்த - பாதுகாக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி என்று மக்களுக்கு ராகுல் மீதும் அவர் தலைமை ஏற்று நடத்தும் காங்கிரஸ் கட்சி மீதும் ஆணித்தரமான நம்பிக்கை வர வேண்டும். அந்த நம்பிக்கையை உருவாக்க வேண்டியது பாரம்பர்ய காங்கிரஸ் குடும்ப பின்னணியில் வந்த ராகுலின் கடமை ஆகும். செய்வீர்களா ராகுல்!

முற்றும்.

(கட்டுரையாளர் சுகிதா, கவிஞர், ஊடகவியலாளர்)

Rahul Gandhi Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment