தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதி பாதி அளவுகூட கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் என்றால், ரயில் போக்குவரத்து வசதி உள்ள இடங்களில் ரயில் பயணிகளின் கோரிக்கைகள் மாநில அரசின், மத்திய அரசின் கவனத்திற்கோ எட்டாமலே போகிறது என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. அதனால் தான், தமிழ்நாடு அரசு ரயில்வே தொடர்பாக மத்திய அரசிடம் குறைவான கோரிக்கைகளையே வைக்கிறது. அதனால், தமிழகம் ரயில்வேயில் குறைவான திட்டங்களையும் குறைவான புதிய ரயில்களையும் மத்திய அரசிடம் இருந்து பெறுகிறோம் என்கிறார்கள் ரயில் பயனர்கள்.
தென் மாநிலங்களில், தமிழகம்தான் புதிய ரயில் சேவைகளைக் கேட்டுப் பெறுவதில் பின்தங்கி இருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எல்லாம் அவர்களுக்கு தேவையான அளவு ரயில்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தமிழகம் அந்த அளவுக்கு ரயில்களைக் கேட்டுப் பெறவில்லை.
உதாரணத்துக்கு கேரளாவில், அவர்களுக்கு இன்னும் கூடுதலாக புதிய ரயில் தேவை இருக்கிறது என்றால், அதை எப்படியாவது மத்திய ரயில்வே துறையிடம் கேட்டு பெற்று விடுகிறார்கள். அதற்கு காரணம், கேரளாவில் ரயில்வே விவகாரங்களை கவனிப்பதற்கு ஒரு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பதுதான் முக்கிய காரணம் என்கிறார் கன்னியாகுமரி ரயில்வே பயனர்கள் சங்கத்தின் செயலாளர் எட்வர் ஜெனி.
ரயில்வே துறை மத்திய அரசின் துறையாக இருந்தாலும், மாநிலத்தில் ரயில்வே சம்பந்தமான மக்களின் கோரிக்கைகளையும் புதிய ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் புதிய ரயில் தடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், ரயில் பயணிகளின் நலன் ஆகியவற்றை நிறைவேற்ற ரயில்வே துறைக்கு மாநிலத்தில் பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படுகிறார். தற்போது கேரளாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் வி.அப்துர்ரஹிமான் ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சராக உள்ளார்.
அங்கே ரயில்வே பொறுப்பு அமைச்சரின் பணிகள் என்ன என்றால், மாநிலத்தில் ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள், புதிய ரயில்கள் இயக்க வேண்டிய தேவை எங்கே இருக்கிறது? புதிய ரயில் தடங்கள் எங்கே அமைக்கலாம், புதிய ரயில் தடம் திட்டங்களை எங்கே தொடங்கலாம், ரயில் பயணிகள் பாதுகாப்பு, ரயில் பயணிகளுக்கான வசதிகள், ரயில் பயணிகளின் நலன் என அனைத்து கோரிக்கைகள் மற்றும் தேவைகளையும் கேட்டு அதை நிறைவேற்ற மத்திய அரசுடன் தொடர்புகொண்டு ரயில்வே துறை மூலம் அதை நிறைவேற்றுவதுதான் இந்த கேரளாவின் ரயில்வே துறை பொறுப்பு அமைச்சரின் பணிகள். அதனால், மக்கள் ரயில் போக்குவரத்தை பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள்.
அதனால், கேரளாவைப் போல, தமிழக அரசும் ரயில்வே விவகாரங்களை கவனித்து ஒருங்கிணைக்க ஒரு ரயில்வே துறை பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி ரயில்வே பயனர்கள் சங்கத்தினர் முக்கிய கோரிக்கையாக வைக்கின்றனர். அப்போதுதான், நம்முடைய ரயில்வே கோரிக்கைகளை முழுமையாகவும் முறையாகவும் முன்வைத்து மத்திய அரசிடம் முன்வைத்து விரைவாக பெற முடியும்.
இது குறித்து கன்னியாகுமரி ரயில்வே பயனர்கள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், தமிழகத்தில் ரயில்வே பற்றியான பெரிய விழிப்புணர்வு ஏற்படாததற்கு, குறிப்பாக பிரபலமான பெரிய ஊடகங்களைத்தான் நான் குறை சொல்வேன். பிரபலமான பெரிய ஊடகங்கள் செய்தித்தாள்கள், ரயில்வே சம்பந்தமான செய்திகளை வெளியிடும்போதுதான் அது மக்களுக்கு தெரிய வந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். ரயில்வே பற்றி மக்கள் கருத்து உருவாகும். ரயில்வே தொடர்பான மக்களின் கோரிக்கைகள் அவர்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்களின் வழியாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மத்திய அரசுடன் பேசி அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
அதனால், தமிழகத்தில் ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்ற, கேரளாவைப் போல, தமிழக அரசும் ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும்” என்று எட்வர்ட் ஜெனி வலியுறுத்துகிறார்.
தமிழகத்தில் ஏராளமான ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் இருக்கிறது. பல திட்டங்கள் நிதி இல்லாமல கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக முதல்வர் 2 வாரங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்தபோது, சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் பற்றியும் மேலும் 5 கோரிக்கைகள் மட்டுமே பிரதமரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம், ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு முழுமையாகக் கொண்டு செல்ல ஒரு தனி அமைச்சர் இல்லாததுதான் மிக முக்கிய காரணம். ஏனென்றால், கன்னியாகுமரியிலேயே நிறைய ரயில்வே கோரிக்கைகள் இருக்கிறது. எங்களுக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினமும் இன்னும் 2 புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மும்பைக்கு வாரத்தில் 6 நாள் மட்டுமே ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலை வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும் என்று கோருகிறோம். கொல்கத்தாவுக்கு வாரத்திற்கு ஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. அதை 2 ரயில்களாக இயக்க வேண்டும் என்று கூறுகிறோம். இப்படி, எங்களிடமே 6-7 கோரிக்கைகள் இருக்கிறது. இப்படி, திருச்சி, மதுரை, சேலம், கோவை என எல்லா மக்களிடமும் இன்னும் நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளித்த கோரிக்கையில் 5 கோரிக்கைகள் மட்டுமே இருக்கிறது. இதற்கு காரணம், கேரளாவைப் போல, தமிகத்தில் ரயில்வே துறைக்கு மாநில பொறுப்பு அமைச்சர் இல்லாததுதான் காரணம் என்கிறார் எட்வர்ட் ஜெனி.
தொடர்ந்து பேசிய எட்வர்ட் ஜெனி, “கேரளாவில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மேலும் புதிய ரயில்களை இயக்க அங்கே ரயில்களை நிறுத்த இடமில்லை. ஆனால், அவர்களுக்கு புதிய ரயில்களின் தேவை இருக்கிறது. என்பதால், திருநெல்வேலி, நாகர்கோயிலில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களை இயக்க கோரிக்கை வைத்து இயக்குகிறார்கள். அந்த ரயில்கள் திருநெல்வேலி, நாகர்கோயிலில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும். அதனால், அந்த நேரத்தில், திருநெல்வேலி, நாகர்கோயில் பயணிகள் அந்த ரயிலில் செல்ல முடியாது. அதனால், அந்த ரயில்கள் இங்கிருந்து காலியாக செல்கின்றன. திருவனந்தபுரத்துக்கு செல்லும்போது, அது கேரள பயணிகளுக்கு உதவியாக இருக்கிறது. அங்கே ரயில்களை நிறுத்த இடமில்லை என்றாலும், புதிய ரயில்களின் தேவை இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, இன்னும் 2 புதிய ரயில்களை கேட்டு வாங்குகிறார்கள். அதில், கேரள மாநில ரயில்வே பொறுப்பு அமைச்சருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர் கேரளாவின் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை சேகரித்து அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். பிறகு, கேரள எம்.பி.க்களை ஒருங்கிணைத்து மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வைத்து கேட்டு பெறுகிறார். அதனால், தமிழக அரசும்ரயில்வே துறைக்கு ஒரு பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழகத்தில் ஏற்கெனவே, அமைச்சர்கள் அவரவர் துறையுடன் வேலைப் பளுவில் இருப்பார்கள், இதில் கூடுதலாக ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சர் பதவி வேறா என்று கேட்டால், “இல்லை, அதிகம் வேலை இல்லாத சில துறைகளின் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரயில்வே துறை பொறுப்பை அளிக்கலாம். உதாரணத்துக்கு, தகவல் தொழில் நுட்பவியல் துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை போன்ற துறை அமைச்சர்களுக்கு அதிக வேலைப் பளு இல்லை. அதனால், அவர்களிடம் இந்த ரயில்வே துறை பொறுப்புகளை ஒப்படைக்கலாம்” என்கிறார்.
கேரளாவிலும் கூட தற்போது அம்மாநில விளையாடுத்துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் தான் ரயில்வே துறை பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். அந்த வகையில், தமிழகத்திலும், அதிகம் வேலைப் பளு இல்லாத துறைகளின் அமைச்சர்களான, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரில் யாராவது ஒருவரை ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும். அப்போதுதான், ரயில்வே தொடர்பாக, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் உள்ள கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டு, அவை மத்திய அரசிடம் பேசி விரைவாக நிறைவேற்ற முடியும்” என்று கூறுகிறார் எட்வர்ட் ஜெனி.
ரயில்வே மத்திய துறையாக இருந்தாலும், தமிழக மக்களின் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை விரைவாக நிறைவெற்ற ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. அதனால், நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சரை நியமிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.