சி.ராஜா மோகன்
பாதுகாப்பு உள்கட்டமைப்பில் வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் செயல்பாடு என்ற வகையில், கடந்த வாரம் இந்திய பெருங்கடல் தீவுகள் நாடான சீஷெல்ஸ் உடன் திருத்தப்பட்ட ஒப்பந்தமானது, விரைவில் விடைபெறும் இந்திய வெளியுறவு செயலர் ஜெய்ஷங்கர் மூலம் கையெழுத்தானது. அப்போது அவர் குறிப்பிட்ட "கரையோர நாடுகளுக்கான பாதுகாப்பு காவலனாக இந்தியாவின் வளர்ச்சி, சாத்தியங்களும் சவால்களும் நிறைந்ததாக இருக்கும்" என்பதாகும்.
இந்திய பெருங்கடலில் இந்தியா முன்னெடுக்கும் பெரும் பொறுப்புகளுக்கு முன், கடந்த காலங்களில ராணுவ சக்தியாக நிலைபெறுவதற்கு ஏற்பட்ட முயற்சிகளின் ஊடான சிரமங்களிலிருந்து கற்று கொண்ட பாடங்களை கவனிப்பது மிகவும் அவசியமானது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தின் பெரும் அரசியல் விளையாட்டுகளில், இந்திய ஆங்கில அரசு இந்திய பெருங்கடல் பகுதியில் மூலோபாய சக்தியாக நிலை நிற்க தொடர்ந்து ஐரோப்பிய சக்திகளுடன் போட்டியை தவிர்க்க வேண்டியதாக இருந்தது.
மேலும், இந்திய பெருங்கடல் தீவுகளில் உள்ள முக்கியமான இடங்களுக்கும், சிக்கலான பகுதிகளுக்கும் தங்களது சுய அணுகுதலுக்காக இந்திய பெருங்கடலிலிருந்து நுழைவதற்கும், வெளியேறவும் அப்பகுதிகளில் உள்ள உள் கொந்தளிப்புகள் மற்றும் சக போட்டியாளர்களின் ஆதிக்கமுறைகள் எதுவும் அச்சுறுத்துவதாக அமையாது என்று உறுதி அளிக்க வேண்டியிருந்தது. இதை செய்வதற்க்கான சுமை "அரசியல்வாதிகள்" என்று அழைக்கப்படுபவர்களின் தோள்களின் மேல் ஏற்றிவைக்கப்பட வேண்டியிருந்தது.
இவர்கள் ஆங்கில அரசால் "புகழ் பெற்ற அரசு துறை அதிகாரிகள்" என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர்கள் தான் தற்போதைய வெளியுறவு அலுவலக அதிகாரிகளுக்கு முன்னோடிகள். இவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையானது, எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பேரரசுகளுடனும், கான் அரசுகளுடனும் சிறப்பு அரசியல் ரீதியான உறவுகளுக்கும் மற்றும் ராணுவ ரீதியான உறவுகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி பூகோளம் சார்ந்த அரசியல் மாற்றத்தை ஆங்கில அரசுக்கு சாதகமாக திசை திருப்புவது என்பதே.
1947ல் கிடைத்த சுதந்திரம், இந்திய ராஜதந்திர செயல்பாடுகளில் விசித்திரமான விலக்கத்தை உருவாக்கியது. இந்திய வெளியுறவு துறை என தற்போது கூறப்படும் ராஜதந்திர உறவுகள், ஆங்கில அரசால் உருவாகி வந்த யதார்த்த அரசியல் நிலைப்பாட்டிற்கும், நேருவால் அமைக்கப்பெற்ற தார்மீக அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையே அறுபட நேர்ந்தது. அண்டை நாடுகளுக்கு இடையில், சுதந்திர இந்தியா ஒரு முக்கிய சக்தியின் சுமையை பற்றி கூறினாலும், உலக அரங்கில் தில்லி தனது நெறிகள் மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் சாம்பியன் போல் ஆனது.
இந்திய பெருங்கடல், எதிர்பாராதவிதமாக யதார்த்த அரசியல் நிலையிலிருந்து தார்மீக அரசியல் நிலைக்கு மாறும் சூழல் வந்தது. கிழக்கு சூயஸிலிருந்து இங்கிலாந்து தன் அதிகாரத்தை திரும்ப பெறும் சமயத்தில், இந்தியா அதனை சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் உருவாக இருந்த "அதிகார வெற்றிடம்" என்ற நிலையை முற்றிலுமாக தவிர்த்தது. மேலும் அது அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்திய பெருங்கடலில் தங்கள் ராணுவ உறுப்புகளை முடுக்குவதற்கு செய்த முயற்சிகளை எதிர்த்தது. அதனுடன் இந்திய பெருங்கடலை "சமாதான மண்டலமாக" அறிவிக்க அழைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் இந்தியா சுய நம்பிக்கை மற்றும் அணி சேரா நாடு என்ற பெயரில் பொருளாதாரத்திலும், உத்திகளிலும் தன்னை தானே மற்ற அணிகளிலிருந்து துண்டித்து கொண்டது.
இந்திய பெருங்கடலின் அரசியல் தளத்தில் டெல்லியின் சமாதான பார்வை யதார்த்தத்தை ஒப்பிடும்போது உயிர்ப்பித்திருக்க முடியவில்லை. பிராந்திய முரண்பாடுகள் மற்றும் பெரும் வல்லரசு போட்டியிடல், கரையோர நாடுகள் தங்களின் பிராந்தியங்களில் இராணுவ தளங்களை திறந்து வைக்க செய்தன. பனிப்போரின் முடிவானது பெரும் வல்லரசு பதட்டங்களை எளிதாக்கினாலும், வெளிநாட்டு இராணுவ தளங்கள் மறைந்துவிடவில்லை.
இந்திய பெருங்கடல் மூலோபாய முக்கியத்துவம் பெறும்போது, கரையோர பிராந்தியங்களின் தளங்களில் பெரும் அதிகார விருப்பமும், ராணுவ வசதிகளும் புதுப்பிக்கப்படுகிறது. ரஷ்யாவும், பிரான்ஸும் முறையாக சிரியா மற்றும் அபுதாபியில் தங்கள் ராணுவ தளங்களை கைப்பற்றிவிட்டனர். அமெரிக்க ராணுவமும் டீகோ க்ராஸியாவில் தளத்தை சிறப்பாக உருவாக்கிவிட்டனர்.
தற்போதைய நிலையில் இந்தியாவும், சீனாவும் தளங்களையும், வசதிகளையும் கைப்பற்றி கொள்வது என்பதே புதியது. வலிமையான எதிரிகள் என்று கருதப்படுபவர்களின் வெளிநாட்டு ராணுவ தளங்கள் ஆசியாவிலும், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் உருவாகியிருப்பது, பெய்ஜிங்கியையும், டெல்லியையும் எல்லை தாண்டிய பாதுகாப்பு விருப்பங்களுக்காக அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்க்கான பார்வையை நோக்கி திருப்பியுள்ளது. சீனா தனது முதல் ராணுவ தளத்தை ஜிபூட்டியில் அமைத்துவிட்டது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திய பெருங்கடல் தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இந்திய பெருங்கடல் பாதுகாப்பிற்க்கான இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்தினார். இந்த புதிய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, சீஷெல்ஸ் உள்ள அஸ்ஸோம்ஷான் தீவிலும், மொரீஷியஸில் உள்ள அகா லேகாவிலும் ராணுவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் டெல்லியால் தீர்மானிக்கப்பட்டது. இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாமதமாக்கின.
இது டெல்லிக்கு ஆச்சரியம் தரத்தக்கதாக இல்லை. சீஷெல்ஸ் உடனான ஒப்பந்த தாமதத்திற்கு கேள்வி எழுப்பும் இந்தியாவில் உள்ள சிலர், மிக எளிமையான தளவாடங்கள் ஆதரவு உடன்படிக்கைக்கு வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டெல்லி எடுத்து கொண்டதை இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மற்ற நாடுகள் ஒரு நாட்டின் மண்ணில் இராணுவ வசதிகளை செயல்படுத்துவது எந்த நாட்டிலும் எளிதானது அல்ல. இது பெரும்பாலும் போட்டியிடும் பிரிவுகளுக்கு இடையே அரசியல் கால்பந்து போல் ஆகிறது. மேலும் உள்நாட்டு வாதங்களை நீர்த்துப்போக செய்வதற்கும், சிறப்பு அரசியல் உறவுகளை முடக்க செய்வதற்கும் போட்டியாளர்கள் தங்கள் பெரும்பான்மை பலத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கின்றனர்.
தில்லிக்கு, சவாலானது அதன் கூட்டாளர்களின் உள்நாட்டு கவலைகளை நோக்குவதோடு, இராணுவ ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை, உண்மையில் பரஸ்பரம் இருவருக்கும் பயன்மிக்கதாக உருவாக்குவதாகும். சிறிய நாடுகளுடன் எந்தவொரு உறவும் நம் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்பட முடியாது. பங்குதாரர்கள் வெற்றி பெற வேண்டுமேயொழிய வார்த்தைகளில் மட்டும் கூறப்பட முடியாது. இந்த நாடுகளின் தலைவர்கள் மற்ற அதிகாரங்களுடன் தங்கள் விருப்பங்களை முழுமையாக அறிந்திருக்கிறார்கள். எனவே, இந்தியா இந்த அரசியல் உறவுகளை கவனமாக தக்கவைத்து கொள்ள வேண்டும்.
இதை தான் குறிப்பாக ஆங்கிலேய அரசின் அரசுத்துறை அதிகாரிகள் செய்து வந்தார்கள். இந்த சவாலானது தேசிய அடையாளங்கள் மற்றும் இறையாண்மைக்கு ஆர்வமுள்ள பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் கடினமாக உள்ளது. சீனாவின் புதிய பொருளாதார வளமானது துணைக்கண்ட பிராந்தியத்திலும், அதன் எல்லைக்கு வெளியேயும் அதன் அரசியல் செல்வாக்கையும், ராணுவ பங்களிப்பையும் அதிகரித்து வருகிறது. அதனை சமாளிக்கும் சவாலை உருவாக்குவது இந்தியாவிற்கு கடினமாக உள்ளது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் புவிசார் அரசியல் போட்டிகளில், அரசுத்துறை அதிகாரிகளின் பங்களிப்பை அவர்களின் தீவிர முனைப்பின் மீது திருப்பிவிட, விடைபெறும் வெளியுறவு செயலர் ஜெய்ஷ்ங்கர் விழைகிறார். நீண்ட காலத்திற்கு அதன் தீவிரத்தை தக்க வைக்க, அவருக்கு அடுத்தபடியாக வரும் விஜய் கோகலேவுக்கு டெல்லியில் உள்ள அரசின் வலுவான நிறுவன ஆதரவு அவசியமாகும். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் இயற்கை நன்மைகளை ஒருங்கிணைக்க தேவைப்படும் சவால்கள் இந்நாட்களில் மிகவும் கடினமாகி வருகிறது.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 30.1.18 அன்று, சி.ராஜாமோகன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழாக்கம் - சரவணன் சுப்பிரமணியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.