ராஜா மோகன்
இந்த வருட இரமலான் அனைவருக்கும் சந்தோசத்தையும் அமைதியையும் தரும் என்று நம்புவோம். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் யாவும் அவற்றையே உணர்த்துகின்றன. ஆசிய கண்டத்தில் எப்போதும் சச்சரவுடன் காணப்படும் இரண்டு பகுதிகளில் அமைதி நடவடிக்கையினை அரசு மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமைதியினை நிலை நிறுத்த டெல்லியும் காபூலும் முறையே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனால் இவ்விரண்டு பகுதிகளிலும் அரசு சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்மறையோடு எதையும் அணுகுபவர்கள் இந்த திட்டங்களை குறைக் கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எதையும் நேர்மறையோடு காண்பவர்கள் இதில் இருக்கும் நம்பிக்கைக்கு உரிய விசயங்களை மேம்படுத்த முயல்வார்கள். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானிற்கும் மத்தியில் இருக்கும் பாகிஸ்தானும் இந்த அமைதி நடவடிக்கைக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவியிருக்கின்றது. பாகிஸ்தானின் ராணுவ தளபதி திரு. கமர் ஜாவேத் பஜ்வா இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிக்கல் நாட்டியவர்.
டெல்லி மற்றும் காபூலில் நடக்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளில் ராவல்பிண்டியின் பங்கு என்பது மிகவும் சிறியது தான். ஆனால் கடந்த சில வாரங்களாக நடக்கும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஆச்சரியத்தினைத் தருகின்றன. பாகிஸ்தானின் இண்டெலிஜென்ஸ் துறையான டிஜிஎம்ஓவின் தலைமை அதிகாரி இந்தியாவில் இருக்கும் இண்டெலிஜென்ஸ் துறை அதிகாரியிடம் 2003ம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக செயல்படுத்த விரும்புவதாக மே இறுதியில் கூறியிருக்கின்றார். இதனால் சர்வதேச எல்லைப் பிரச்சனை மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைப்பெற்று வரும் பிரச்சனைகள் ஒருவாராக முடிவிற்கு வரும் என்று நம்புகின்றார்கள்.
ஆப்கானிஸ்தானின் அமைதி நடவடிக்கை இன்னும் ஆச்சரியத்தினை தந்திருக்கின்றது, அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கான் அரசு, கடந்த வாரம், இரமலான் காரணமாக, தாலிபான்கள் மீதான தாக்குல்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தாலிபான் தலைமை, ஆப்கான் பாதுகாப்பு படையின் மீதான தாக்குதல்களை இரமலான் காரணமாக மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கின்றது. தாலிபான் போர் நிறுத்தம் குறித்து பேசியிருப்பது இதுவே முதல்முறை. இப்போர் நிறுத்தம் தொடருமானால் அது அமைதிக்கான பாதையாக மாறும் என்று நம்புகின்றார்கள்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான நல்லுறவினை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதை யாராலும் மறுத்துவிட முடியாது. அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் ஏற்கனவே பாகிஸ்தானிற்கு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றார். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தரும் தொடர் ஆதரவுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றது அமெரிக்கா. ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானிற்கு அளித்து வந்த உதவிகளை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறுத்திக் கொண்டது. இஸ்லமாபாத்தின் ஒவ்வொரு நிதி குறித்த நடவடிக்கைகளையும் அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகின்றது.
ஒபாமாவின் ஆட்சியில், அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்கி சுதந்திரமாக செயல்பட ஆணையிட்டிருக்கின்றார் ட்ரம்ப். இதனால் தாலிபன் படைகள் இருக்கும் இடங்களில் அதிக பதட்டம் ஏற்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் தாலிபானிற்கு அளிக்கும் ஆதரவினை நிறுத்திக் கொண்டால், அதன் மூலம் ஒரு நிலையான அரசியல் முடிவினை ஆப்கானிஸ்தானில் எடுக்க முடியும் என்று அமெரிக்கா நம்புகின்றது. சர்வதேச பாதுகாப்புப் படையின் கமாண்டர், ஜெனரல் ஜான் நிக்கோல்சன், இந்த முடிவுகளினால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கின்றார். தாலிபான் மற்றும் ஆப்கான் அரசிற்கு மத்தியில் நிறைய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆரம்பத்தில் தாலிபான் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த ஒப்பந்தங்களில் போர் நிறுத்தம், கைதிகளை விடுவித்தல், தாலிபான்களின் அரசியல் நிலைப்பாடு, மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது,.
அமெரிக்க மாகாண செயலர் மைக் பாம்பியோ, ஜெனரல் பஜ்வாவுடன், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியிருக்கின்றார். தெற்காசிய பிராந்திய செயலராக இருக்கும் லிசா கர்டிஸ் சென்ற வாரம், அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கின்றது என்பதை பட்டியலிட்டார். அமெரிக்க அரசாங்கம், ராவல்பிண்டியில் இருந்து தாலிபன் அமைப்பிற்கு முதுகெலும்பாக செயல்படுத்தப்படும் அனைத்து காரியங்களும் நிறுத்தப்பட்டு அமைதியினை நிலைநிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்க்கின்றது.
தாலிபான்களை ஆப்கானிஸ்தானில் இயங்கவைக்க சீனா விரும்பவில்லை என்பதும் வெளிப்படை. கானி, போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பினை வெளியிட, அதனை சீனா வரவேற்றது. இரமலான் என்பது அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நாளாக மாறிக்கொண்டே இருக்கின்றது. காபூலில் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது ஆப்கன் அரசு. காஷ்மீரிலும் போர் நிறுத்தம் தொடரும் என்று நம்பப்படுகின்றது. காஷ்மீரும் காபூலும் அமைதிக்கான அடுத்த அடியினை எடுத்து வைத்திருக்கின்றது.
தமிழில் நித்யா பாண்டியன்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 12.6.18 அன்று, ராஜா மோகன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.