மேடை நாகரீகம் என்ன விலை?

வேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது?

By: Updated: September 28, 2019, 04:03:04 PM

க.சந்திரகலா

ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர் என்பவர் முகமாக அறியப்படும் சூழலில், அதிமுகவின் முகமாக மட்டுமின்றி முழுவதுமாக இருந்தவர் ஜெயலலிதா. அவரது பார்வையை நேராக எதிர்கொண்டவர்கள் அங்கு இல்லை. பேச்சுக்கு மறு பேச்சு இல்லவே இல்லை. ஆண்டவனை வணங்கியதைவிட அவர் போகும் ஹெலிகாப்டரை பார்த்து ஆகாயத்தை வணங்கியவர்கள்தான் அங்கே அமைச்சர்களாக இருந்தார்கள்.

பேசாமல் இருந்து கொள்வதே பிறவிப்பயன் என்பதைப்போல ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சர்கள் பலருக்கும் அவரது மறைவுக்குப்பிறகு பேச்சுத்திறன் வந்திருக்கிறது. அமைச்சர் பதவி பறிபோகும் அளவுக்கு மணிகண்டன் பேசியது உள்கட்சி பிரச்னை என்றால், வேறு சில அமைச்சர்கள் பேசுவது விபரீதமானதாக இருக்கிறது. காதுகளுக்கு மட்டும் கதவுகள் இருந்தால் தானாகவே அவைகள் பூட்டிக்கொண்டிருக்கும். அந்த அளவுக்கு அருவருப்பாக பேசுகிறார்கள்.


தமிழக அரசியல் கட்சிகளில் கூட்டம் சேர்க்கிற பேச்சுத்திறன் மிக்கவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், வார்த்தை வங்கியிலிருந்து கெட்ட கெட்ட வார்த்தைகளை வாரி இறைத்து கேட்க வந்தவர்களை குஷிப்படுத்துகிற நுட்பம் தெரிந்தவர்கள் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளில்தான் அதிகம் நிரம்பி வழிகிறார்கள்.

கட்சி கூட்டத்தை பிரமாண்டமாக காட்டுவதற்காக தொண்டர் கூட்டம் கலையாமல் பார்த்துக்கொள்ள காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மலிவான உத்தியாகத்தான் ஆபாச பேச்சாளர்களின் கூச்சலை பார்க்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க வருகை தருபவர்களின் மனம் கோணாதபடி கூட்டத்தை கட்டிப்போடும் இத்தகைய ஏற்பாடுகளுக்குப்பிறகு , பேசவரும் மாண்புமிகு அமைச்சர்களின் பேச்சு முத்தாய்ப்பாய்பாக இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை.

கட்சிக்கூட்டத்துக்கென நேர்ந்துவிடப்பட்ட அடிமட்டத்தொண்டனின் விசிலடிச் சத்தத்துக்கு ஆசைப்பட்டு பேசுவது போல இருக்கிறது சிலரது பேச்சு. இதுல என்னை யாரும் அடிச்சுக்க முடியாது என்பதைப்போல மேடைக்கு மேடை வம்பிழுக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஜெயலலிதா இருந்தவரையில் அவரை மட்டுமே புகழ்ந்து பாடி வந்த புலவர்களுக்கு..மன்னிக்கவும் … அமைச்சர்களுக்கு இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழவேண்டும். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை புகழ வேண்டும். அதற்கும் மேலாக பிரதமர் மோடியை புகந்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

அந்த மோடியா இந்த லேடியா என ஜெயலலிதா கர்ஜித்ததையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மோடியை டாடி என ராஜேந்திரபாலாஜி கொண்டாடியதில் பிரச்னையில்லை. அது உச்சபட்ச புகழ்ச்சியின் வெளிப்பாடு என கொள்ளலாம். அதேநேரம், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுலை பழிக்கும் போது அதல பாதாளத்துக்குப் போகிறது அவரது நாக்கு. ராகுலின் வித்து எது ? விளைநிலம் எதுவென மிக மலிவான வினா எழுப்புகிறார். ஒரு மாண்புமிகு அமைச்சரின் மாண்பை கூட்டுகிற சொல்லாடலா இது?

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொதித்துக் கிடந்த போது, ஜெயலலிதாவின் வித்து எது? விளை நிலம் எதுவென்கிற கேள்வியோடு விடாமல் எம்ஜிஆரின் விளைநிலம் எது? வித்து எதுவென விளாசினாரே திருச்சி வேலுச்சாமி. ஒரு நிமிடம் ராஜேந்திர பாலாஜியின் விழி பிதுங்கியதா இல்லையா?

அரசியல் மேடையில் பேச அமைச்சர்களுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன. மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் , கைத்தட்டல் என்ற ஒற்றை காரணத்துக்காக எதையாவது பேசி இப்படியா உயரச் சிகரத்திலிருந்து ஒரேயடியாக கீழிறங்குவது? ராஜேந்திரபாலாஜியின் இந்த பேச்சை நாகரீக அரசியலை விரும்புகிற எவரும் ரசித்ததாக தெரியவில்லை.

ஆனாலும், அடுத்தொரு மேடை கிடைத்த போது விருதுநகர் தொகுதி காங் எம்பி மாணிக்கம் தாகூர் மீது அபாயகரமான சொல்லம்பு எய்கிறார். ஓட்டு கேட்டும்வரலை; நன்றி சொல்லவும் வரலை. மனைவி குழந்தைகளோடு டெல்லியில இருந்துகிட்டு அறிக்கை விடுறான் ஒருத்தன். அவன் தொகுதி பக்கம் வந்தான்னா, ஆளுக்கு சேதாரம் இல்லாத ரப்பர் குண்டால சுடுங்க என்கிறார். என்ன பேச்சு இது?

இரத்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை பொதுக்கூட்ட மேடைகளில் வீசுவது எவ்வளவு ஆபத்தானது. ஒரு அமைச்சராக இருப்பவர் அரைப்புள்ளிக்குக் கூட அர்த்தம் உணர்ந்து பேச வேண்டாமா? தொண்டர்களுக்கு முன்மாதிரியாக தலைவர்கள், நிர்வாகிகள் இருந்தாக வேண்டும். ஏதோ வேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது?

ராகுல் குறித்த ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பாஜவினரை சந்தோசப்படுத்தியிருக்கலாம். அல்லது சந்தோசப்படுவார்கள் என நினைத்து அப்படி பேசியிருக்கலாம். அதிமுக தலைமை இதனை எப்படி அனுமதிக்கிறது?

ஒன்றை ஞாபகத்தில் கொள்ளுங்கள் ஆட்சியாளர்களே…
ஆளுமைத்திறன் என்பது ஆட்சியை தக்கவைப்பது மாத்திரமல்ல; அமைச்சர்களையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது. ஜெயலலிதா உங்களை எல்லாம் வைத்திருந்தாரே.அதுமாதிரி!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Rajendra balaji minister speech row k chandrakala writes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X