கண்ணன்
ஐந்து நாட்களாகத் தன் ரசிகர்களைச் சந்தித்துவரும் நடிகர் ரஜினிகாந்த், சந்திப்பின் கடைசி தினத்தில் மீண்டும் அரசியலைக் குறித்துப் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் அரசியல் வருகை பற்றிப் பொடிவைத்துப் பேசியவர் கடைசி நாளில் மேலும் வெளிப்படையாகப் பேசினார்.
முதல் நாள் அவர் பேசிய பேச்சு ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் சமூக ஊடகங்களில் கேலிப் பொருளாகவும் மாறியது. வெள்ளிக்கிழமை அன்று தனது முந்தைய பேச்சுக்கு எழுந்த எதிர்வினைகளை ஒட்டிப் பேசிய ரஜினி, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வந்தக் கருத்துக்கள் மக்களில் சிலர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகின்றனரே என்ற வருத்தத்தைத் தந்ததாகக் கூறினார். பிறப்பால் தமிழரல்ல என்ற விமர்சனத்துக்கும் பதிலளித்துள்ளார். தன் 66 வயதில் 44 ஆண்டுகளைத் தமிழகத்தில் கழித்துள்ளதாகவும் அதனால் தான் ஒரு பச்சைத் தமிழன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த உரையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த முடிவெடுத்துவிட்டார் என்ற நினைப்பதற்கான வலுவான தரவுகள் அந்தப் பேச்சிலேயே உள்ளன. தன் உரையை முடிக்கையில் "நேரம் வரும் போது போர்களத்தில் இறங்குவோம்", என்று கூறியுள்ளார். இந்த இடத்தில் “போர்க்களம்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது அரசியல் களத்தைத் தான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
அதோடு இந்த உரையில், முதல் முறையாக கருணாநிதி-ஜெயலலிதாவுக்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறார் ரஜினி. நால்வரையும் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஆனால் அமைப்பில் பிரச்சனை இருப்பதால் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை என்ற அர்த்தம் தொனிக்கப் பேசியிருக்கிறார்.
எனவே அந்த அமைப்பை மாற்ற வேறோருவர் வர வேண்டும் என்றும் அது தானாகவும் இருக்கலாம் என்றும் சமிஞை கொடுத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த நால்வரைப் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பதில் இன்னொரு மிக முக்கியமான செய்தி உள்ளடங்கியிருக்கிறது. பொதுவாக ரஜினியின் படங்களையும் அவரது ஆன்மீக நாட்டத்தையும் வைத்து அவர் இந்துத்துவ சார்பு கொண்டவர் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் பாஜகவில் சேரத்தான் வாய்ப்பு அதிகம் என்று தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். அண்மைய ஆண்டுகளில் பாஜகவினர் ரஜினியைத் தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ள வெளிப்படையாகவே முயன்றனர். 2014 மக்களவைத் தேர்ந்தல் பிரச்சாரத்தின்போது தமிழகத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார். இவையெல்லாம் ரஜினி பாஜகவுக்கு இணக்கமானவர் என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்தன.
இந்நிலையில் பாஜகவால் கடுமையாக எதிர்க்கப்படும் திராவிடம் , தலித்தியம் மற்றும் தமிழ்த் தேசியம் உள்ளிட்ட கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் தலைவர்களை ரஜினி பாராட்டிப் பேசியிருக்கிறார். அதாவது ஸ்டாலின், திருமாவளவன், சீமான் ஆகிய மூவரும் பாஜகவைக் கடுமையாக எதிர்ப்பவர்கள், பாஜகவால் கடுமையாக எதிர்க்கப்படுபவர்கள். இவர்கள் மூவரையும் ரஜினி பாராட்டிப் பேசியிருப்பது தனது பாஜக சார்பு பிம்பத்தை உடைக்கும் முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் திராவிடம், தலித்தியம், தமிழ்த் தேசியம் என்ற தமிழக அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தும் மூன்று கொள்கைகளுக்கும் தான் இணக்கமாக இருப்பதற்கான சமிஞையாகவும் புரிந்துகொள்ளலாம்.
இதையெல்லாம் வைத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட மாட்டார் என்று உத்தரவாதமாகச் சொல்லிவிட முடியாதுதான். ”ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதன் கொள்கை -ஆன்மீகம், தமிழ் நேசம், ஊழல் ஒழிப்பு, தேச பக்தி என்ற கலவையாகத்தான் இருக்கும். ரஜினி பாஜகவில் சேராவிட்டாலும் அவரது அரசியல் பிரவேசம் பாஜகவுக்கு உகந்த சூழலை உருவாக்கும். அவர் ஒருபோதும் இடதுசாரிகளோடு கைகோர்க்கமாட்டார்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் சொல்லியிருப்பதைப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் இதுவரை அவரது படங்களிலும் அவர் பொதுமேடைப் பேச்சுகளிலும் இப்படிப்பட்ட கருத்துகளே வெளிப்பட்டுள்ளன.
ஆனால் எப்படியாக இருந்தாலும் ரஜினியின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்தது நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை வலுவடைந்துள்ளது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலர் முதல்வராகியிருக்கிறார்கள். ஆனால் 66 வயதுக்கு மேல் அரசியலைத் தொடங்குபவர்கள் முதல்வர் அளவுக்கு வர முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
ஆனாலும் தமிழக அரசியலில் இதெல்லாம் நடக்கும் இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று எதையும் உறுதியாகக் கூற முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.