Advertisment

சில புலிகள்... சில பூனைகள்!

அரசியலிலும் சரி; சினிமாவிலும் சரி; சில புலிகள்... சில பூனைகள்! பூனைகள் சூடு போட்டுக்கொண்டாலும் ஒரு போதும் புலி ஆகா!

author-image
WebDesk
New Update
சில புலிகள்... சில பூனைகள்!

திராவிட ஜீவா

Advertisment

ரஜினிகாந்த்- விஜய்- சூர்யா; இந்த மூவரின் திரைத்துறை பயணங்களும், அரசியல் அபிலாஷைகளும் விவாதிக்கப்படும் வேளை இது. இவர்களில் சினிமாவில் பெரிதாக சாதித்தவர்கள் யார்? அரசியலில் சாதிக்கப் போகிறவர்கள் யார்? என திண்ணைப் பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய ஆடியன்சை வைத்திருக்கும் நடிகர் விஜய். சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன்னை ரஜினி ரசிகராக அடையாளம் காட்டிக் கொண்டு ஒரு பத்து பதினைந்து வருடங்கள் கடந்தார். ரஜினி ரசிகன் என்ற அடையாளமே விஜய்க்கு தமிழ்சினிமா தனி இடம் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகரன், புரட்சி இயக்குனர்; பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்; சமுதாயக் கருத்துக்களை சமரசமின்றி படங்களில் வைத்தவர்; புரட்சிக் கலைஞர் என்ற விஜயகாந்த்தை அரசியல் நாயகனாக மாற்றிய அடித்தளத்திற்கு சொந்தக்காரர்; முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர்தான் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது படங்களிலேயே அரசியல் வாடை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

பிரபல இயக்குனராக இருந்தும் தனது மகனின் ஆரம்பகால திரைப்படங்களை புரட்சிப்படமாக; வெற்றி படமாக எஸ்.ஏ.சி.யால் இயக்க முடியவில்லை. தனது மகனின் சினிமா ஆசைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததை தவிர முன்னணி கதாநாயகனாக மாற்ற முடியவில்லை என்பதுதான் அன்றைய எதார்த்தமான சூழல்.

விஜய் திறமையானவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் திறமை மட்டுமே; கடின உழைப்பு மட்டுமே சினிமாவில் ஒரு இடத்தை பெற்றுத் தந்துவிட முடியாது. எம்ஜிஆர், விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து கதாநாயகர்களுக்குமே இது பொருந்தும். இதில் விதிவிலக்கு பெற்றவர் ரஜினிகாந்த் மட்டுமே. எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே தன்னுடைய அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார் ரஜினி. அதற்காக பெரிதாக மெனக்கெடல் இல்லாமலேயே தனது இடத்தை யாராலும் நெருங்க முடியாத நிலையில் வைத்துக்கொள்வதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே.

publive-image 90களில் ரஜினி ரசிகர்கள் அரசியல் செய்தபோது எழுந்த ஆரவாரமும் பரபரப்பும் அனலும் தற்போது இவர்களுக்கு இல்லை.

விஜய்யின் நோக்கம்; லட்சியம்; ஆசை எல்லாமே தான் ஒரு ரஜினி ஆகவேண்டும் என்பதே. இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருந்த தனது தந்தையின் ஆஸ்தான கதாநாயகர் விஜயகாந்தைவிட ரஜினி மீதே விஜய்க்கு ஈர்ப்பு! ரஜினியின் செல்வாக்கு; அவரின் ஸ்டைல் மற்றும் நடிப்பால் ஈர்க்கப்பட்ட விஜய் தன்னை ரஜினி ரசிகராக அடையாளம் காட்டிக் கொண்டு திரையில் அறிமுகமானார்.
ஆரம்பத்தில் விஜய்யின் வளர்ச்சிக்காக விஜயகாந்த் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்திருந்தாலும் கூட ரஜினியின் ரசிகராகவே; ரஜினியின் சிஷ்யனாக காட்டிக் கொள்ளவே விஜய் விரும்பியதை பல பேட்டிகளில்; பல திரைப்படங்களில்; பல மேடைப் பேச்சுகளில் காண முடியும்.

ரஜினி சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலை வரும்; அப்போது அந்த இடத்தை- நம்பர் 1 அந்தஸ்தை அடையலாம் என்கிற அளவுக்கு விஜயின் சினிமா கேரியர் வளர்ந்திருந்தது. ஆனால் ரஜினி திரைத்துறையில் தனது சிம்மாசனத்தை இன்னும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்!

ரஜினியின் திரை சாதனைகளை நிரப்புவது விஜய்க்கு மட்டுமல்ல; எவருக்குமே எளிதான ஒன்று அல்ல. சுமார் 40 ஆண்டுகள் நம்பர் ஒன் என்பதை மற்றவர்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. எனினும் அந்த இடத்தை அடைவதில் ஆரம்பம் முதல் விஜய்க்கு அலாதிப்பிரியம் இருக்கவே செய்தது. அது அவரை மீறி பல இடங்களில் வெளிப்பட்டது.

publive-image விஜய்யின் தற்போதைய அரசியல் என்பது சூர்யாவை நோக்கியே பயணிக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால் அறியலாம்.

ரஜினியின் சந்திரமுகி, சிவாஜி த பாஸ் படங்களின் உலகம் தழுவிய யுனிவர்சல் வெற்றி, ஒரு கட்டத்தில் அவருக்கு இளைய நடிகர்கள் அத்தனை பேரையும் திகைக்க வைத்தன. அதாவது அஜித், விஜய் போன்றவர்கள் திரைக்கு வந்து 15 வருடங்கள் கழித்தும் ரஜினியின் வெற்றி கட்டுப்படுத்தமுடியாத, எட்டிப் பிடிக்க முடியாத உயரமாகவே இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எந்த ஒரு சகாப்தங்களும் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க பத்து வருடங்கள் தேவைப்படலாம். ஆனால் ரஜினிகாந்த் திரைக்கு வந்த நான்கு வருடங்களில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களையே ப்ரியா, பில்லா, முரட்டுக்காளை போன்ற படங்களில் வீழ்த்தினார். அஜித்தும் விஜய்யும் திரைக்கு வந்து 15 வருடங்கள் கழித்தும் அடுத்த ரஜினி யார் என்கிற விவாதத்திற்குள்ளாகவே சுழன்றனர். இதுதான் ரஜினியின் திரை ஆளுமைக்கான ஆதாரமே!

ரஜினிக்கும் அவரது போட்டியாளர்களுக்குமான வெற்றி சதவிகிதம், வசூல் சதவிகிதம் 1980, 90களிலாவது சற்று ஒப்பிடும் படியாக இருந்தது. ஆனால் 2004, 2007 வருடங்களில் வந்த சந்திரமுகி, சிவாஜி தி பாஸ் படங்களின் வெற்றி ஒப்பிட முடியாத அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தியது. அதாவது ரஜினி திரைக்கு வந்து 30 வருடங்கள் கழித்தும் கூட அவரின் திரை செல்வாக்கும் அவரின் அரசியல் எதிர்பார்ப்பும் சற்றும் குறையவில்லை.

எனினும் ரஜினியின் ரசிகராக சினிமாவிற்குள் நுழைந்து அவருக்கே போட்டி என்கிற ஒப்பீட்டு செய்திகளும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற வட்டத்தை விஜய் அடைந்ததும் மிகப்பெரிய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. வழக்கமாக தமிழகத்தில் சினிமா கலைஞர்களின் அரசியலும் தவிர்க்க முடியாதது. அதுவும் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அந்த சூழலுக்கு உட்படாமலிருப்பாரா?

publive-image மத்திய அரசையே நேரடியாக எதிர்க்கும் சூர்யாவின் இமேஜ் முன், மாநில எடப்பாடி அரசிடம் கூட தனது எதிர்ப்பினை பதிவு செய்ய முடியாத விஜய்யின் இமேஜ் கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது.

1956 முதல் 1972வரை முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதலமைச்சராக வந்தார். அந்த அரசியல் வெற்றி அவருக்குப் பின் வந்த பல நடிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது வரை எம்ஜிஆரை விட மூன்று மடங்கு வெற்றியை கொடுத்த ரஜினிகாந்த் தனக்கான பல வாய்ப்புகளை தவிர்த்ததும் ஒருகட்டத்தில் அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என்கிற கருத்துருவாக்கம் உருவானது. அந்த அவசர இடைவெளியில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய இடைவெளியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

எம்ஜிஆர், விஜயகாந்தின் அரசியல் வெற்றிகள் அடுத்த தலைமுறை நடிகர்களை பாதிக்கவே செய்தன. ரஜினிகாந்த் அரசியலில் இன்னும் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அது அவருக்கு அரசியல் ரீதியாக சற்று பின்னடைவையே கொடுக்கும் என்று கணித்திருக்கும் விஜய், தனக்கான அரசியல் சூழலை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறார். அதன் வெளிப்பாடே போஸ்டர்கள், மன்ற ஆலோசனைகள், அவரின் தந்தை எஸ்ஏசி-யின் பேட்டிகள் போன்றவை! அந்நிகழ்வுகள் செய்தி ஆகின்றன.

இவை ரசிகர்களின் ஆர்வமிகுதியில் செய்யப்பட்டது என்று சொன்னாலும் கூட, 90களில் ரஜினி ரசிகர்கள் செய்தபோது எழுந்த ஆரவாரமும் பரபரப்பும் அரசியல் அனலும் தற்போது இவர்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ரசிகர்கள் அன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற இரண்டு தலைவர்களையும் விமர்சித்து அவரவர் இல்லங்களுக்கு அருகிலேயே போஸ்டர் வைத்தனர்.

publive-image ரஜினிகாந்த் எழுந்து கைதட்டியதுதான் அஜீத்தை காப்பாற்றியது என்று அன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

காவல்துறை கண்காணிப்பையும் தாக்குதல்களையும், பல இடங்களில் அரசியல் பிரமுகர்களையும் எதிர்த்து ரஜினி ரசிகர்கள் நின்றனர். அந்த கட்டுக்கடங்காத தைரியம் அரசியல்வாதிகளுக்கு ஒருவித அழுத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்திருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ரஜினியே அவர்களை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமும் வெறித்தனமும் கொண்டவர்களாக இருந்தனர்.

கலைஞர், ஜெயலலிதா போன்ற அனுபவமிக்க முதலமைச்சர்களும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கவே விரும்பினர். அந்த நிகழ்வுகள் இயல்பாக நடந்தன. அப்படிப்பட்ட வாய்ப்புகளையெல்லாம் ரஜினிகாந்த் தவறவிட்டார் என்பதைவிட, அது பற்றி சிந்திக்ககூட தவறிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அது போன்ற சூழல்கள் தற்போது எந்த நடிகர்களுக்கும் இல்லை என்பதும் உண்மை.

சில இடங்களில் ரசிகர்கள் ஆர்வமிகுதியில் செய்தாலும்கூட, விஜய், அஜித் போன்றவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். விஜய் பல இடங்களில் ரஜினியை தொடர்ந்து பின்பற்றினாலும் கூட, வெளிப்படையாக ரஜினி போன்று அரசை விமர்சிக்கக்கூடிய இடத்தில் இல்லை. 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தின் போது, ‘மக்கள் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கின்றேன்’ என்று சொன்னார். அதை அவர் அப்படியே கிடப்பில் போட, மக்கள் இயக்கம் என்கிற பெயரை 2009ம் ஆண்டு விஜய் பயன்படுத்திக் கொண்டார்.
திமுக ஆட்சியில் விஜய்க்கும், கலைஞரின் பேரன் உதயநிதிக்கும் விஜய்யின் காவலன் பட வெளியீடு தொடர்பான உரசல் இருந்தது. விஜய் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் கிரேடு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் உதயநிதி தான் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம், அப்போது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியின் சிறுத்தை படம் வியாபாரத்திலும் தியேட்டரிலும் முந்திக்கொண்டது. அப்போது கூட அவர் வெளிப்படையாக தன்னுடைய பிரச்சினைக்காகக்கூட குரலை வெளிப்படுத்தவில்லை.

அதைத்தொடரந்து 2011 தேர்தலில் விஜய்யின் தந்தை அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதாவை கலைஞரின் ஆதரவாளராக இருத்த எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மகனுமான நடிகர் விஜய்யும் சந்தித்தார்கள். அதிமுகவின் வெற்றியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்ற அர்த்தத்தில் அவர் வெளியே வந்து பேசினார். அது அன்றைய ஆளும் தரப்பை மிகவும் கோபப்படுத்தியது. அதற்குப் பிறகு வெளிவந்த விஜய்யின் தலைவா என்ற படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.

அப்போதும்கூட ஜெயலலிதாவை எதிர்த்து எந்த கருத்தையும் வெளிப்படையாக விஜய்யும் அவர் தந்தையும் கூறவே இல்லை. இந்த நிகழ்வுகள் எல்லாம் விஜய்யின் இமேஜுக்கு ஒரு பின்னடைவை கொடுத்தன. ரஜினி போன்று எவரையும் துணிந்து எதிர்க்கும் தலைமைப்பண்பை அவர் பெற்றிருக்கவில்லை என்ற விமர்சனத்தையும் உருவாக்கியது.

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும் அவர் தந்தையும் சென்ற போது பாதி வழியிலேயே அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்தியதாக ராஜபக்சேவை கண்டித்து ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் பேசினார். அவரிடம் மன்னிப்பு கோருவது போல் பேசினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் விஜய்யின் ஸ்டார் வேல்யூவை கேள்விக்குள்ளாக்கிய முக்கியமான விஷயங்கள். இவற்றுக்கெல்லாம் இன்று வரை எந்தவித விளக்கமும் பதிலும் விஜய்யிடம் இல்லை. விஜய் ஒரு ரஜினி அல்ல என்பதனையும் இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுவதாகவே கருத வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில் திமுக ஆட்சியில் நடிகர் அஜித் மிரட்டப்பட்டதாக நேரடியாகவே செய்திகள் வந்தன. நடிகர் அஜித்தும் முதலமைச்சர் கலைஞரின் மேடையிலேயே அதை பேசினார். அப்போதுகூட அவர் தவறை சுட்டிக் காட்டவில்லை. அய்யா என்று கோரிக்கைதான் வைத்தார். அந்த நேரத்திலும் கூட ரஜினிகாந்த் எழுந்து கைதட்டியதுதான் அஜீத்தை காப்பாற்றியது என்று அன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதாவது மேற்கண்ட நடிகர்கள் ஒரு அரசியல் சூழலை உருவாக்க நினைத்தே இதுபோன்ற காரியங்களை செய்திருக்கலாம் என்பது ஆய்வுக்குட்பட்டது. தொடர்ந்து நடிகர் விஜய் அமைதியாக இருந்தார், ஜெயலலிதா மறையும்வரை! ஜெயலலிதா மறைந்தவுடன் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேச ஆரம்பித்தார். படங்களில் அரசியல் பேச ஆரம்பித்தார். சரி, ஜெயலலிதாவிற்கு பின்பாவது தைரியமான நிலைப்பாட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், மெர்சல் படத்திற்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு கீழிறங்கினார்.

சர்க்கார் பட பிரச்சினையில் வெளிப்படையாகவே அவரது பேனர்கள் கிழிக்கப்பட்டன. தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. அப்போதும்கூட எதிர்வினையாற்ற வில்லை என்பதில் அவரின் கதாநாயக பிம்பமே கேள்விக்குள்ளானது. மக்கள் மத்தியில் ஆளுங்கட்சியை எதிர்த்தும் பொதுவாக அரசியலை விமர்சித்தும் எந்த பொது மேடைகளிலும் வெளிப்படையாக அவர் அரசியல் பேசியதே இல்லை.

விஜய் 2011ஆம் ஆண்டு ராகுல்காந்தியை சந்தித்து தனக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும் எங்களுடைய சட்ட விதிகளின்படி உங்களுக்கு 35 வயதை கடந்து விட்டது அதனால் எங்களால் உங்களுக்கு பதவியை கொடுக்க முடியாது என்று நேரடியாகவே கைவிரித்து விட்டார் ராகுல்காந்தி என்கிற செய்தியும் வந்தது. விஜய் தரப்பிலிருந்து வலுவாக அதை மறுக்கவில்லை.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்தை பிரதமர் வேட்பாளரான மோடி நேரடியாக வீடு தேடி வந்து சந்தித்தார்... அவரின் ஆதரவைப் பெறுவதற்காக! அப்போதும்கூட முன்ணணி நடிகராக இருந்த விஜய் அவராக தேடிச் சென்று மோடியை சந்தித்தார். இதுபோன்று அரசியல் நிலைப்பாடுகளில் பல சமயங்களில் தனது ஆளுமையை நிரூபிக்க தவறி உள்ளார் விஜய். வெளிப்படையாக எதிர்க்கவும் அவரால் முடியவில்லை; ஆதரிக்கவும் முடியவில்லை.

தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின்போது கூட; அவரை குற்றவாளியைப் போல் கையைபிடித்து இழுத்து வந்தபோதும் கூட; மீடியாக்கள் முன்பு முகத்தை மூடிக்கொண்டு வரும்நிலையில்கூட; அவரால் வெளிப்படையாக தனது தார்மீக உரிமையைக்கூட வெளிப்படுத்தமுடியவில்லை.

இதற்கிடையில் நடிகர் சூர்யா பொது மேடைகளில் அரசியல் பேசுவதை ஆரம்பித்தார். சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, நீட் தேர்வு போன்ற சமூகப் பிரச்சினைகளை தமிழக கள யதார்த்த பார்வைகொண்டு எதிர்த்தார். நடிகர் சூர்யாவும் விஜய்க்கு சற்றும் சளைத்தவரல்ல. ரஜினிக்குப் பிறகு மிகப் பெரிய வியாபாரத்தை சற்றேறக்குறைய ஒரு ஆறாண்டு காலமாக கையில் வைத்து இருந்தவர்.

2005 கஜினி முதல் 2010 சிங்கம் வரை அயன், சிங்கம் , ஏழாம் அறிவு போன்ற படங்களின் வியாபாரமும் வசூலும் அவரின் போட்டியாளர்களான அஜித், விஜய்யை விட உச்சத்தில் இருந்தது. அதற்கு முன்பாகவே அழகிய தமிழ் மகன்- வேல் இடையிலான போட்டியில் அழகிய தமிழ்மகன் விஜய்யை வேல் பட வெற்றியால் வீழ்த்தியிருந்தார் சூர்யா். அதற்குப் பிறகு சூர்யாவின் திரை பயணத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டது உண்மைதான். எனினும் ஒரு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டால் அவருக்கான இடத்தை அவர் உறுதிசெய்துகொள்வார்.

சமீப காலமாக சூர்யா பேசி வரும் கருத்துக்கள் அரசியல் அரங்கில், திரையுலகில் மட்டுமல்ல; இளைஞர்கள் மத்தியிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் சூர்யா நம்பர் ஒன் கதாநாயகர் போல் சமீபத்திய கருத்துக்கள் மூலம் சமூக வலைதளங்களிலும் இளைஞர் மத்தியிலும் இருக்கின்றார் என்கின்ற வாதத்தை தவிர்த்துவிட முடியாது.

இது அவரின் திரை செல்வாக்கையும் அரசியல் செல்வாக்கையும் உயர்த்தும் என்று உடனடியாக சொல்லமுடியாவிட்டாலும், இரண்டு தளங்களிலும் ஒரு மாற்றத்திக்கான புள்ளிக்கான தொடக்கம். சமீபகாலமாக தமிழக அரசியலில் சித்தாந்த மோதல்கள் இருதரப்பினரிடையே மிக அதிகமாக இருக்கின்றன. அந்த இடத்தில் நடிகராக சூர்யா வெகுவாக ஸ்கோர் செய்திருக்கிறார். இது பொதுதளத்திலும் விவாதமாகியுள்ளது.

சூர்யா உருவாக்கிய இந்தத் தாக்கம் மற்ற நடிகர்களிடையே சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடே படங்கள் இல்லாத காலகட்டத்தில் தான் பேசுபொருளாக இல்லாமலிருக்கக்கூடாது என்கிற தொனியில் வெளிவந்த அஜித்ன் அறிக்கை! அதேபோல விஜய்யின் பசுமைதிட்ட புகைப்படங்களின் சமூகவலைதள வெளியீடு!

சூர்யாவின் தொடர் அரசியல் பேச்சும் சமூகப் பொறுப்பும் இளைஞர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. மத்திய அரசையே நேரடியாக எதிர்க்கும் சூர்யாவின் இமேஜ் முன், மாநில எடப்பாடி அரசிடம் கூட தனது எதிர்ப்பினை பதிவு செய்ய முடியாத விஜய்யின் இமேஜ் கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது. இதனை சரி செய்யவே விஜய் ரசிகர்கள் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் போஸ்டர் பப்ளிசிட்டிகள்!

மத்திய அரசு தரப்பு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்த போதும் கூட விஜய்யும் அவர் தந்தையும் மத்திய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மாறாக விஜய்யின் தந்தை பிரதமர் மோடியை நான் தந்தை வடிவில் பார்க்கின்றேன்; எடப்பாடியை நான் தந்தைவழியில் பார்க்கின்றேன் என்றெல்லாம் பேசுகிறார். ஒருவேளை விஜய் அரசியலுக்கு வருவார் எனில் அரசியலில் காலூன்ற சுயமரியாதை உணர்வும் தவறுகளை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரமும் வேண்டும். ஆனால் விஜய் தன்னுடைய சக நடிகர்களால் சினிமாவிலேயே அரசியல் செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்.

விஜய்யின் தற்போதைய அரசியல் என்பது சூர்யாவை நோக்கியே பயணிக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால் அறியலாம். இப்படிப்பட்ட சூழலில் எம்ஜிஆர் போல் திட்டமிட்டு அரசியல் காய்களை நகர்த்துகிறாரா? அல்லது ரஜினிகாந்த் போல் அரசியலில் தன்னுடைய இருப்பை பதிவு செய்து கொண்டு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வர முயற்சிக்கின்றாரா? இல்லை விஜயகாந்த் போல் அரசியலில் தான் தீர்மானிக்கும் சக்தியாக வர விரும்புகிறாரா?

மேற்கண்ட மூன்று பேருமே ஆளும் அரசுகளை தைரியமாக எதிர்த்து அரசியல் செய்தவர்கள். எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்தார்கள். அரசியல் கட்சி என்ற ஒரு அமைப்பு இல்லாமலேயே தனது ஆளுமையை நிரூபித்தவர் ரஜினி. தமிழக கள எதார்த்தத்தை மீறி ஆன்மீக அரசியல் என்று அறிவித்ததும், பாஜகவைவிட தைரியமாக ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை பேசுவதுமே ரஜினியின் நிலைப்பாடாக வெளிப்படுகிறது.

ரஜினி ஆவதற்கான வாய்ப்புகள் விஜய்க்கு இல்லை. எம்ஜிஆர், விஜயகாந்த் வழியா என்பதை விஜய் தான் தீர்மானிக்க வேண்டும். அவர் கொஞ்சம் அசந்தாலும் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் சூர்யா முன்னேறி சென்று விடுவார் என்பதே தற்போதைய களம் உணர்த்தும் உண்மை.

அரசியலிலும் சரி; சினிமாவிலும் சரி; சில புலிகள்... சில பூனைகள்! பூனைகள் சூடு போட்டுக்கொண்டாலும் ஒரு போதும் புலி ஆகா!

(கட்டுரையாளர் திராவிட ஜீவா, எழுத்தாளர்- விமர்சகர்)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Actor Vijay Rajinikanth Ajith Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment