வன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை?

ரஜினிகாந்தைப் போல, வன்முறை என்கிற ஒரு சமூக தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியம் நமது அரசியல் கட்சிகளுக்கு ஏன் இல்லாமல் போனது?

கமல.செல்வராஜ்

ரஜினிகாந்த், தூத்துக்குடியில் பேசியிருப்பது சராசரி வாக்கு அரசியல் அல்ல! சமூகத்தில் புரையோடி வரும் வன்முறை புற்றுக்கு, வார்த்தைகளால் அறுவை சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார் என்றே அதை குறிப்பிடலாம்! வன்முறை என்கிற ஒரு சமூக தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியம் நமது அரசியல் கட்சிகளுக்கு ஏன் இல்லாமல் போனது?

சாதாரணமாக ஊர்புறங்களில் இயல்பாக ஒரு பழமொழியைப் பயன்படுத்துவார்கள்… ‘கோழியக் கொல்லப் பிடித்தாலும் … கியோ கியோ… வளர்க்கப் பிடித்தாலும் கியோ… கியோ… எனக் கரையும்’ என்பதுதான் அந்தப் பழமொழி. அதே நிலைதான் இன்று தமிழகத்திலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

சமீபக்காலமாக தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் அது நல்லதா இல்லை கெட்டதா என எதுவும் ஆராய்ந்துப் பார்க்காமல் போராட்டம் நடத்துவது என்பது விளையாட்டுப்பிள்ளைத் தனமாகிவிட்டது. மீத்தேன் திட்டத்திலிருந்து தொடங்கி… தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து… கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம் எதிர்ப்பு போராட்டம்… வரைப் போராட்டப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை யாரும் சிறிதளவுகூட எதிர்பார்க்காத விதத்தில் விபரீதமாக மாறியுள்ளது. போலீசாரின் துப்பாகிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் கொடூரச் செயல் என்றே எல்லோராலும் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் அதன் பின்னணியில் நடந்திருக்கும் செயல்களையும், தமிழகத்தில் வளர்ந்து வரும் நாசகாரத்தின் கோர முகத்தையும் எண்ணிப் பார்ப்பவர்களோ, அதற்காகக் குரல் கொடுப்பவர்களோ தமிழகத்தில் எவரும் இலர்.

Rajinikanth, Thoothukudi District

ரஜினிகாந்த் அரசியல்: முனைவர் கமல.செல்வராஜ்

இந்நிலையில்தான் தூத்துக்குடி போராட்டக் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறி, உதவித் தொகையும் வழங்கி விட்டு பத்திரிகையாளர்களின் மத்தியில் பேசியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் குரலானது, தமிழகத்து மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் ஈர்ப்பதாக ஒலித்துள்ளது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஓர் இளைஞனைப் பார்த்து ரஜினி ஆறுதல் கூறிய போது நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே. என அந்த இளைஞன் கூறிய உடனேயே “நான் யாரும் இல்லை. உங்களைப் போல் ஒரு சாதாரண மனிதன்தான். அதனால்தான் என்னை உங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் என்னிடம் இப்படி கேள்வி கேட்பதற்கு உங்களுக்குப் பயிற்சியளித்திருப்பவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும்’ என அந்த இளைஞனுக்குப் பதிலடி கொடுத்திருப்பதிலிருந்து, அவரின் தெளிவானச் சிந்தனையும், பேச்சும், எதையும் ஆய்ந்தறிந்து உற்று நோக்கும் தன்மையும் தெளிவாகப் புலப்படுகிறது.

இப்படி இந்த இளைஞனை ரஜினிகாந்திடம் கேள்வி கேட்பதற்குப் பயிற்சியளித்தவர்களால், ஏன் இந்த இளைஞனை கலவரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பயிற்சியளிக்க இயலவில்லை என்பது நடுநிலையாளர்களின் கேள்வி. மட்டுமல்ல ஒருவேளை அந்தப் பயிற்சியாளர்கள்தான் இந்த இளைஞனைக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு கருவியாக ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? என்பதும் இன்னொரு நியாயமானக் கேள்வி.

எனவே இப்படி கேள்விக் கேட்ட இளஞனை, அது அவனின் சாமர்த்தியம் என நினைத்து சும்மா விட்டுவிடக்கூடாது. போலீசார் அல்லது கலவரத்தை ஆய்வதற்காக அமைக்கப் பட்டிருக்கும் விசாரணைக் கமிஷன் இந்த இளைஞனை கரிசனையாகக் கருதி, இவனிடம் மிகவும் கருதலையோடு விசாரணை நடத்தி கலவரத்தின் உண்மை நிலையினை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

“தமிழகத்தில் விஷமிகளும், சமூக விரோதிகளும் அதிகரித்து விட்டார்கள் இவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்திற்கு தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த இரண்டாம்தர அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தானது.

ஏனென்றால் தங்களால் தைரியமாகக் கூறமுடியாத ஒரு கருத்தை இவரால் எப்படி கூற முடிந்தது என்ற ஆதங்கத்தில்தான் இவர்கள் இப்படி கூக்குரல் போடுகின்றனர். இதுவரை ஒரு போராட்டம் அல்லது கலவரம் என்றால் மக்கள் மத்தியில் அதற்குச் சாதகமாகப் பேசி, அவர்களின் அனுதாபத்தைப் பெற்று வந்த அரசியல் தலைவர்களுக்கு ரஜினியின் வெளிப்படையான, யதார்த்தமான கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இயலவில்லை. இதனால் மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்குக் கேள்விக்குறியாகி விடுமோ என்ற ஐயப்பாடு இவர்களைக் கவ்விக் கொண்டுள்ளது.

ஆனால் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்து முற்றிலும் உண்மையானது. தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் கலவரமானது மக்களால் உருவானதல்ல, சமூக விஷமிகளாலும், விரோதிகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது என்பதில் எள்ளளவிற்கும் சந்தேகமில்லை. இக்கலவரத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பங்கு உண்டு என்பது வெறும் வெட்டிப் பேச்சல்ல. அது நிதர்சனமான உண்மை. எனவே அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது முழுமையான, நியாயமான விசாரணைக்கு அடையாளமாகும்.

இனி தமிழகத்தில் இதுபோன்ற கலவரங்கள் நடந்தால் தமிழக அரசு இரும்பு கரம் கொண்டல்ல எவ்வித ஈவு இரக்கமுமின்றி எஃகு கரத்தால் தடுத்தாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தமிழகத்தை போலி அரசியல்வாதிகளிடமிருந்தும், இதயமே இல்லாத ஈன சமூக விரோதிகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்கு முடியும்.

“தமிழகத்தில் இப்படியே போராட்டங்கள் தொடர்ந்தால், இங்கு தொழிற்சாலைகள் தொடங்க எவரும் முன் வரமாட்டார்கள். இதனால் தமிழகம் தொழில்துறையில் பின்தங்கி, இங்குள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுவார்கள்” என ரஜினிகாந்த் எச்சரிக்கை விட்டிருப்பதை தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் மிக உன்னிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் மிக விரைவில் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி இன்னொரு சுமேலியாவாக மாறிவிடும் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம். அப்போது இங்குள்ள மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் வரமாட்டார். அவர்கள் சுகவாசத்தலங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் மட்டும் நிராகாரமின்றி மரணித்துக் கொண்டிருப்பார்கள்.

ரஜினியின் இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். 98ம் ஆண்டு தென் மாவட்ட கலவரங்கள் குறித்து மறைந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல்பாண்டியன் கமிஷன் அறிக்கையில், ‘தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாததால், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கலவரக்காரர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியிருப்பதற்கும், போலீஸ் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதற்கும் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுவும் வரவேற்க வேண்டிய விஷயமாகும்.

சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இயற்கையாக மரணமடைந்த போதே அக்கட்சி தொண்டர்கள் சுமார் 150-க்கும் அதிகமான அரசு பேருந்துகளை சேதப்படுத்தியுள்ளார்கள் என்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம். இது தமிழகத்தைத் தவிர இந்த உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஒரு சம்பவம். இதற்கும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடாமல் வாய்பொத்தி மௌனம் சாதிக்கின்றனர். இதன் இரகசியம் என்ன?

தமிழகத்தின் நிலமை இப்படியே கேட்பாரற்று போய்க்கொண்டிருந்தால் இங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை எவரேனும் சிந்தித்துப் பார்ப்பதுண்டா? இல்லை மக்கள்தான் சுயமாக உணர்கின்றார்களா? சமீபத்தில் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நடந்த தீவிரமானப் போராட்டத்தின் பேது, நடிகர் சிம்பு எவரும் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். “கர்நாடக மக்கள் தமிழகத்திலிருந்து செல்லும் மக்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுபோல் தமிழக மக்களும் கர்நாடக மக்களுக்கு ஒரு குவளை தண்ணீரைக் கொடுத்து வரவேற்க வைக்க வேண்டும்’’ என்பதுதான் அவரது கருத்து.

இரு மாநில மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் விதமான இதுபோன்ற கருத்து அப்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இக்கருத்தை ஏற்று தமிழகத்திலிருந்து வானங்களில் சென்ற ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் கர்நாடாகாவில் இருந்த மக்கள் தண்ணீர் கொடுத்து வரவேற்றனர்.

அது போல்தான் ரஜினிகாந்த் தூத்துக்குடிப் பிரச்னையில் தனது நியமானக் கருத்தை மிகவும் தெளிவாக, தைரியமாக முன் வைத்துள்ளார். இக்கருத்துகள் அனைத்தும் இன்றையச் சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை. அதனால் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு தூத்துக்குடியில் ரஜினிகாந்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

அரசியலுக்கு வரவேண்டுமா? இல்லை வேண்டாமா? என்று இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்த ரஜினிக்கு தூத்துக்குடி வரவேற்பு அரசியலுக்கு வாருங்கள் ஆதரவு தருகிறோம் என்று அழைக்கும் ஒரு பச்சைக் கொடி வரவேற்பாகவும் சிவப்பு கம்பள வரவேற்பாகவும் அமைந்துள்ளது என்றே கருதலாம்.

(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர்! கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக ஆளுமை இவர்! பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

×Close
×Close