scorecardresearch

யாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி?!

நீங்கள் மக்களிடம் வந்தாக வேண்டும். அப்போதும் கேள்விகளோடு காத்திருப்பார்களே… என்ன செய்யப்போகிறீர்கள், மிஸ்டர் ரஜினி??!

யாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி?!
Rajinikanth against Sterlite Protest? Kavignar Chandrakala

க.சந்திரகலா

யாரும் எதைப்பற்றியும் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டுப்போய் விடலாம். தூத்துக்குடி துயரத்துக்கான காரணம் குறித்து ரஜினி இப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காரணம், ரஜினி குறித்து தமிழக மக்கள் வரிந்து வைத்திருந்த பிம்பம் அப்படி.

ரோஸ் நிறத்தவர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் கறுப்பு மின்னலாய் வந்தவர் ரஜினி. தலைகலையாமல் இருப்பதுதான் கதாநாயகன் லட்சணம் என்றிருந்த எழுதப்படாத விதியை மாற்றி தலைமுடியை கலைத்துப் போட்டு விளையாடியவர். இப்போது தமிழக மக்களின் அவர் குறித்தான நம்பிக்கையை கலைத்துப் போட்டு விளையாடுகிறார்.

லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. அங்கு தாமிரமல்ல.. தங்கம் உற்பத்தி செய்வதாகவே இருக்கட்டும். அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு, சுகாதாரமான சுவாச காற்றுக்கு, குடி நீருக்கு, நிலத்து அடி நீருக்கு கேடு விளைவிக்கும் போது பாதிக்கப்பட்ட மக்கள் பதறமாட்டார்களா? சரும நோய்கள், கான்சர் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புகள் குறித்து அனுபவப்படும் போது கேள்வி கேட்க மாட்டார்களா?

ஆலை நிர்வாகம், தமது ஆக்டபஸ் கரத்தால் ஆளும் தரப்பை வளைக்கும் போது பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய வேண்டும்? அதைத்தானே தூத்துக்குடி மக்கள் செய்தார்கள்! ஸ்டெர்லைட்டுக்கெதிராக உங்களுக்கு கோபம் வருவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பொதுமக்கள், பொது நல அமைப்புகள் சார்பில் ஆலை நிர்வாகத்திடமும் ஆட்சியாளர்களிடமும் கோரிக்கை மனுக்கள் நீட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பயன்?

பொதுவாக, சாதாரண மக்களின் கோரிக்கைகளை, போராட்டங்களை ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை ஆட்சியாளர்கள். வருவார்கள்.. கோஷமிடுவார்கள்… கலைந்து செல்வார்கள்.. இதுதான் பொதுசமூகத்தின் போராட்டம் குறித்து ஆட்சியாளர்கள் குறிப்பாக போலீசார் வைத்திருக்கும் மதிப்பீடு.

எளிது எளிதோடு சேரும்போது வலிதாகி விடுமென்பது ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லையா? தெரியாத மாதிரி நடிக்கிறார்களா?? தகிக்கிற வெயிலில் குடும்பம் குடும்பமாய் திரண்டு 99 நாள் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள்.

ஆலை நிர்வாகம் லாபங்களை கணக்கிட்டது; பொதுமக்கள் நஷ்டங்களை பட்டியலிட்டார்கள். அரசு யந்திரம் பி்ரச்னையை தட்டிக்கழிப்பதில் கவனமாக இருந்தது.

விளைவு.. 100 வது நாள் போராட்ட வடிவம் மாறியது. ஊர் ஊராய் திரண்ட மக்கள் பெண்கள், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் புடை சூழ ஜன சமுத்திரமாய் மாறி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு கிளம்புகிறார்கள். இவர்களிடம் ஆயுதமெதுவுமில்லை. குழந்தைகளோடு வந்தவர்கள் பால் புட்டி பிஸ்கெட் வைத்திருந்தார்கள். இறுதியில் என்ன நடந்தது?

துளித்துளியாய் சேருகிற தண்ணீர் சமுத்திரமாகும் போது அலை எழும்புவதும், கரை மீறுவதும் இயல்பானது. ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த மகன்கள் கூட சுபாவத்தில் மாறுபடுகிறார்கள். ஒருத்தன் அடித்தால் வாங்குகிறவனாகவும், இன்னொருத்தன் திருப்பி அடிப்பவனாகவும் இருப்பதில்லையா? உடனே துப்பாக்கி தூக்குவதா?

போராட்டக்காரர்களை ஒடுக்க கடைசி முயற்சியாக துப்பாக்கி எடுக்க வேண்டிய நிலை வந்தால் கூட முதலில் கூட்டத்தில் ஒருவரின் முழங்காலுக்கு கீழே சுட வேண்டும். கூட்டத்தில் ஒருவரை சுட்டு விட்டால் மொத்த கூட்டமும் சிதறும் என்பது அனுமானம். அதுமட்டுமல்ல சுடப்பட்டவரை உடனே சிகிச்சைக்கு உட்படுத்தி காப்பாற்ற வேண்டுமெனவும் இருக்கிறதே. செய்தார்களா?

போராட்டத்தை முடிக்க வேண்டுமென திட்டமிடாமல் போராட்டக்காரர்களை முடிக்க வேண்டுமென திட்டமிட்டதன் மவுன சாட்சிகள் தான் வாயிலும் நெஞ்சிலும் குண்டடி பட்டு செத்த 13 பேர். போலீசார் சுற்றி வளைத்து அடித்து நொறுக்கியதில், நிரந்தர ஊனமானவர்கள், நடை பிணமாக மட்டுமே வாழ்கிற நிலைக்கு தள்ளப்பட்டவர்களென நீள்கிறது பட்டியல்.

குண்டடி பட்டு செத்து விழுந்தவனை லத்தியால் அடித்து இறப்பை உறுதி செய்தது எல்லோரும் பார்த்தது தானே. ஒரு கொடுமையான கலவரம் நடந்ததும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க யார் யாரோ வந்தார்கள். நீதி மன்றம், மனித உரிமை ஆணையம் பதறியடித்து காரியமாற்றுகிறது. இந்த கண்ணீர் சூழலில் தான் நடிகனான என்னை பார்த்து பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என கூறிக்கொண்டு நீங்கள் தூத்துக்குடிக்கு வந்தீர்கள்.

நீங்கள் மிக பிரபல நடிகர். உங்களை பார்த்ததில் உள்ளூர் மக்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தீர்கள். அதை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

அதே நேரம்.. துப்பாக்கி சூடு, போலீசாரின் அடக்குமுறை அட்டூழியம் ஆகியவற்றுக்கு கலவரம்தான் காரணமென்றால், நம்மூரில் அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற தீர்ப்புகளின் போது என்னென்ன கலவரம் நடந்திருக்கிறது? நூற்றுக்கு மேற்பட்ட பஸ்களை உடைத்தது, தீயிட்டு கொளுத்தியது, கடைகள் வணிக நிறுவனங்களை சூறையாடியது என எத்தனையோ சம்பவங்களை பட்டியலிடலாம். 3 நாட்கள் தமிழகமே முடங்கிப்போய் இருந்தபோது எவர் தலையிலாவது லத்தி இறங்கியதா.. இல்லை, துப்பாக்கிகள்தான் சுட்டனவா?

தூத்துக்குடி மக்களை சந்தித்துவிட்டு ரஜினி என்ன சொல்லப்போறாரோ என ஒட்டு மொத்த மக்களும் அதிலும் குறிப்பாக மத்திய மாநில அரசு காத்திருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விராதிகள் போலீசை தாக்கியதுதான் கலவரத்துக்கே காரணம் என நீங்கள் திருவாய் மலர்ந்து ஆளுங்கட்சியின் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இது யாருக்கு முட்டுக்கொடுக்கிற முயற்சி ?

குண்டயிலும், தடியடியிலுமிருந்து தப்பித்த தூத்துக்குடி மக்கள் உங்கள் வார்த்தைகளால் காயம்படுவார்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளாததன் காரணம் புரியவில்லை. போராட்டத்தை சட்டமே அனுமதித்து அங்கீகரிக்கிறது. போராட்டம் இல்லாமல் இங்கே என்ன சாத்தியப்படும்? இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, ஜல்லிக்கட்டைக்கூட போராடித் தானே பெற்றிருக்கிறோம்.

உலக சரித்திரத்தில் உயிர்ப்புடன் இருப்பவர்கள் எல்லோருமே போராட்டக்காரர்கள்தான். பெருமுதலாளிகளல்ல. போராட்டக் களத்துக்கு அனுப்புகிற போலீசாருக்கு லத்திக்கு பதில் புத்தி சொல்லி அனுப்ப வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களை தயார்படுத்த வேண்டும். அல்லாமல் தன்னெழுச்சியாய் நடைபெறும் மக்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென நினைத்து போலீசிடம் பொறுப்பை கொடுத்தால் வேன் மீது மேடையிட்டு ஆடி முடிப்பார்கள். அப்புறம் தீவிரவாதி புகுந்தான். சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்களென்று காரணம் சொல்வார்கள். நீங்களும் அதை அங்கீகரிக்கிறீர்கள்.

மண்ணையும் மனித வாழ்வையும் மலடாக்கிய ஆலைக்கெதிராக உயிரைக்கொடுத்து, உறவுகளைக் கொடுத்து ஆலையை மூட வைத்த மக்களை உங்கள் வார்த்தை முள்ளாய் குத்துகிறது. போராட்டக்காரர்களை ஆயிரம் திட்டுங்கள். போலீசாருக்கு ஒரு குட்டு வைத்திருக்க வேண்டாமா இல்லையா?

தமிழகத்தின் தலைமை நாற்காலியை பிடிக்கிற முனைப்பில் இருக்கிறீர்கள். நிர்வாகிகளை நியமிக்கிறீர்கள். அவர்களை அருகில் நிறுத்தி புகைப்படம் எடுக்கவே ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கிற நீங்கள் சாதாரண மக்களை எப்படி இதயத்தால் நெருங்குவீர்கள் என்ற கேள்வி எழாமலில்லை.

பொது வாழ்க்கைக்கு வந்தால் ஏராளம் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். கேள்விகளும், போராட்டங்களும்தான் ஜனநாயகத்துக்கான ஆக்சிஜன். நீங்களோ பத்திரிகையாளர்கள் கூட கேள்வி கேட்ககூடாது என நினைக்கிறீர்கள். என்ன மன நிலை இது?

நடிகர் அரசியல்வாதியாவது எளிது. அதேபோல எளிதான விஷயமல்ல.. ஓட்டு வாங்குவது! நீங்கள் மக்களிடம் வந்தாக வேண்டும். அப்போதும் கேள்விகளோடு காத்திருப்பார்களே… என்ன செய்யப்போகிறீர்கள், மிஸ்டர் ரஜினி??!

(கட்டுரையாளர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு கிராமத்தை சேர்ந்தவர்! இவரது கவிதைகள், சிறுகதைகள் வாசகர் பரப்பில் அதிகம் பேசப்பட்டவை! எழுத்து-கட்டுரை வீச்சை இங்கே தந்திருக்கிறார்)

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth against sterlite protest kavignar chandrakala