ச.செல்வராஜ்
ரஜினிகாந்த் - பாரதிய ஜனதாக் கட்சி இடையே கூட்டணி இல்லை என நிர்வாகிகள் கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜ நிலவரம் என்ன?
ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியை தொடங்கி, அதே வேகத்தில் தேர்தலை எதிர்கொள்வது அவரது திட்டம்! அதுவரை ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளை அவர் செய்து வருகிறார்.
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்றரை கோடிக்கு உயர்த்த வேண்டும் என்பது நிர்வாகிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் அஸைன்மென்ட்! இதுவரை மாநிலம் முழுவதும் 8500 நிர்வாகிகளை மக்கள் மன்றத்திற்கு நியமனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 65,000 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 30 பேர் கொண்ட குழுவை தேர்வுசெய்யும் பணியையும் மக்கள் மன்ற நிர்வாகிகள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இந்தப் பணிகள் தொடர்பாகவே விவாதித்து வருகிறார். மேற்படி பணிகளில் சுணக்கமாக இருக்கும் மாவட்ட நிர்வாகிகளை வேகப்படுத்தி வருகிறார். ‘முழுக்க மன்றத்தில் உள்ள நிர்வாகிகளை பயன்படுத்தி பணிகளை செய்ய விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் சரியாக செய்யாவிட்டால், அந்த இடத்திற்கு வேறு ஆட்கள் வருவார்கள்’ என மன்ற நிர்வாகிகளை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அதாவது, இதுவரை மாற்றுக் கட்சிகளில் இருந்து யாரையும் சேர்க்கவோ, அவர்களை கட்டமைப்புப் பணிகளில் பயன்படுத்தவோ ரஜினிகாந்த் விரும்பவில்லை. ‘தேவைப்பட்டால், அதைச் செய்வேன்’ என்பதையே இப்படி சூசகமாக ரஜினி கூறியிருப்பதாக தெரிகிறது.
ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை சுமார் 30 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது சிலர், ‘பாரதிய ஜனதாவுடன் நாம் கூட்டணி அமைக்கப் போவதாக பலரும் பேசுகிறார்களே?’ என வெளிப்படையாக ரஜினியிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரஜினி, ‘அப்படி இல்லை என நீங்கள் தாராளமாக கூறலாம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்தை இயக்குவதே பாரதிய ஜனதாதான் என்கிற விமர்சனத்திற்கும் இதன் மூலமாக பதில் கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆரம்பகாலம் தொட்டு ரஜினிகாந்த் மன்றத்தில் இஸ்லாமியர்களும் தலித்களும் கணிசமாக இருக்கிறார்கள். எனவே பாஜக.வுடன் இணைந்து அந்த வாக்கு வங்கியை இழக்க தயாராக இல்லை என்பதையே ரஜினியின் நிலைப்பாடு உணர்த்துவதாக கருதப்படுகிறது.
‘ரஜினிகாந்தும், மோடியும் இணைந்தால் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப முடியும்’ என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறி வருகிறார். அதற்கு இதுவரை ரஜினி ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், ‘இதற்கு காலம் பதில் சொல்லும்’ என கருத்து தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்தை தொடர்ந்து சந்திப்பவர்களில் ஒருவரான தமிழருவி மணியன், ‘பாஜக.வுடன் ரஜினிகாந்த் சேரமாட்டார் என்பதுதான் எனது கருத்து. ஒருவேளை சேர்ந்தாலும், அதை நான் சகித்துக் கொள்வேன்’ என்கிறார். பாஜக.வை நோக்கி ரஜினிகாந்தை தள்ள சில சக்திகள் வரிந்து கட்டி வேலை பார்ப்பதை புரிந்துகொண்டு தமிழருவி இந்தக் கருத்தை குறிப்பிட்டதாக கருத வேண்டியிருக்கிறது.
ரஜினிகாந்தை அறிந்த வேறு சிலர் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் செண்டிமெண்ட், பாஜக.வுக்கு எதிராக இருப்பதை ரஜினி புரிந்து கொண்டிருக்கிறார். எனவே பாஜக.வுடன் அணி சேர அவர் விரும்பவில்லை என்பது நிஜம்! அதேசமயம், எடப்பாடி ஆட்சி 2021 வரை நீடிப்பதை ரஜினி விரும்பவில்லை.
காரணம், புதிய கட்சி அறிவிப்பை 2021 வரை தள்ளிப் போடுவது சிரமம் என ரஜினி உணர்ந்திருக்கிறார். எனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தலை கொண்டு வர டெல்லி உதவுமானால், பாஜக.வுடன் அணி அமைக்கும் முடிவுக்கு ரஜினி வருவார்’ என்கிறார்கள் அவர்கள். அரசியல் கூட்டணி என்பதே, ‘கிவ் அண்ட் டேக்’ பாலிஸிதானே!
ரஜினியின் இந்த ‘மூவ்’வை அறிந்துகொண்டே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் ஆரம்பித்து அவரது அமைச்சரவை சகாக்கள் செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஜெயகுமார் என வரிசையாக பலரும் ரஜினிகாந்த் மீது பாய்கிறார்கள். காலம் போன கடைசியில் நதி நீர் இணைப்பைப் பற்றி ரஜினி பேசுவதாக அங்கலாய்க்கிறார் எடப்பாடியார்! செல்லூர் ராஜூ கொஞ்சம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டு, ‘ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது. காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் கட்டிப் பிடிக்கலாம்’ என குறிப்பிட, அதுவும் வில்லங்கமாக போயிருக்கிறது.
அமைச்சர் சி.வி.சண்முகம், ‘கன்னடரான ரஜினி, காவிரியைக் கொண்டு வர என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’ என கேள்வி எழுப்புகிறார். ஓ.எஸ்.மணியனோ, ‘ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை’ என்கிறார். அமைச்சர் ஜெயகுமார், ‘காலா பாடல்கள் போராட்டத்தை தூண்டினால் சட்டப்படி நடவடிக்கை’ என மிரட்டுகிறார்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட அரசியல், ரஜினிக்கு போட்டி யார்? என்பதாகத்தான் இருக்கும் என்கிற கணிப்பும் இருக்கிறது. எனவே ரஜினிக்கு போட்டியாளர்களாக தங்களை முன்னிறுத்தும் விதமாகவே அதிமுக தாக்குதலை தொடங்கியிருப்பதாகவும் கருத வேண்டியிருக்கிறது.
ரஜினிகாந்தின் அரசியல் தாக்கத்தை மிக நுட்பமாக உணர்ந்து கொண்டவர்கள், திமுக தொண்டர்கள்! கமல்ஹாசன் குறித்து எந்த விமர்சனமும் வைக்காத திமுக தொண்டர்கள், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியான நாள் முதல் சமூக வலைதளங்களில் வறுக்கிறார்கள். திமுக.வுக்கு போட்டியாளராக அரசியல் களத்தில் ரஜினி திகழ்வார் என உணர்ந்து கொண்டதன் அறிகுறி இது!
ஆனால் திமுக தலைமை இன்னமும் ரஜினியை விமர்சிக்க தயங்குகிறது. ஒருவேளை ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்பு வந்த பிறகு, மு.க.ஸ்டாலினும் தனது அஸ்திரங்களை ஏவக்கூடும்! ரஜினிக்கு ஆதரவு, ரஜினிக்கு எதிர்ப்பு என இரு துருவ அரசியல் மையம் கொண்டால், அதுவும் ரஜினிக்கு சாதகமே! காரணம், ரஜினியை எதிர்க்கிறவர்கள், ஓரணியில் திரள வாய்ப்பே இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.