திராவிட ஜீவா
90-களின் ஆரம்பத்தில் இருந்து இருபது வருடங்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சத்தையும் மக்களிடையே ஒரு பெரும் அரசியல் எதிர்பார்ப்பையும் ரஜினிகாந்த் ஏற்படுத்தி இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. பத்திரிகைகளில் பரபரப்புச் செய்திகளில் ரஜினி குறித்த செய்திகளே அந்த இருபது ஆண்டுகளில் ஆக்ரமித்தன. இது போன்று ஒரு நடிகரின் பின்னணியும் அரசியலும் அமைதியும் பேச்சும் அலசப்பட்டிருக்குமா? பேசப்பட்டிருக்குமா? என்று எண்ணிப்பார்த்தால் கண்ணுக்கெட்டியதூரம்வரை தமிழ், இந்திய, உலக சினிமா வரலாற்றில் இல்லை. அந்த அளவிற்கு மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
2011ஆம் ஆண்டு அவர் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது ரசிகர்களின் பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் மிக அதிகமாக இருந்தன. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சினையாகவே துடிதுடித்துப் போனார்கள். அவர் திரும்பி வரும்வரை விரதமிருந்த ரசிகர்களும், மக்களும் பதைபதைப்புடன் காத்திருந்தனர். இதெல்லாம் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மக்கள் மனதில் ஊடுருவி இருந்ததையே பிரதிபலித்தது.
அதற்கு முன்பு ஏற்பட்டிருந்த அரசியல் எதிர்பார்ப்பும் சினிமா எதிர்பார்ப்பும் மாறிப்போய் இருந்தன. அவர் அரசியலுக்கு வேண்டாம்; சினிமாவிற்கும் வேண்டாம்; நல்லபடியாக வந்தீங்கன்னாலே போதும் என்கிற அளவிலேயே பலரின் எண்ண ஓட்டங்கள் இருந்தது. சிகிச்சை முடிந்து வந்து ஓரிரு வருடங்கள் கழித்து மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியது ரஜினியின் அசாத்திய மனோதிடத்தை வெளிப்படுத்தியது. தலைவர் மீண்டு விட்டார் என்று ரசிகர்களும், ஒரு நல்ல கலைஞன் திரும்பி வந்துவிட்டார் என்று மக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த முறை களம் சற்று மாறி இருந்தது. ஆம், அதற்கு முன்பு இருந்த அரசியல் எதிர்பார்ப்புகள் சற்று அடங்கியிருந்தது.
ரசிகர்களின் ஒரு பகுதியினர் தலைவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தனர். சில ரசிகர்கள் தலைவர் அரசியலுக்கு வர வேண்டாம்; அவர் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர். மக்களிடத்திலேயும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை ரஜினியால் முன்புபோல் ஏற்படுத்த முடியாது என்கின்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு இருந்தது என்பதை கள யதார்த்தங்கள் காட்டியுள்ளது.
இந்த மாற்றம் எப்பொழுது வந்தது? எப்படி படிப்படியாக வந்தது? என்பதை ஒரு சிறிய ஆய்வின் மூலம் பார்ப்போம். ரஜினிகாந்த் அரசியல் பரபரப்பு குறித்த பேச்சு 90களின் ஆரம்பத்தில் அல்ல; எண்பதுகளின் இறுதியிலே ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகே ரஜினியின் அரசியல் குறித்த பரபரப்புகள் ஆரம்பித்துவிட்டது. அவர் ஜானகி அணியை ஆதரிப்பார் என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் வந்தது. அதை அவரும் மறுக்கவில்லை.
அதற்குக்காரணம் அவரின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் எம் வீரப்பன்.
அதன்பிறகு 90களில் நடந்தது பாமக உடன் மோதல் உள்ளிட்டவைகள்! இதை பல நேரங்களில் விவாதங்களாகவும் செய்திகளாகவும் நாம் அறிந்திருப்போம். இந்த அரசியல் செய்திகள் அல்லாத ஒரு ஆய்வுதான் இது.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ரஜினி ரசிகர்கள் என்பவர்கள் ஒரு அடையாளமாகவே காணப்பட்டனர்; அறியப்பட்டனர். திரை ரசிகர்கள் என்பதை மீறி ரஜினி, ரஜினி ரசிகர்கள் என்கின்ற ஒரு பந்தம் உருவானது. சூப்பர் ஸ்டார் என்ற அலங்கார பதவி பட்டத்தை மீறி அண்ணன், தல, தலைவர், ரஜினி சார் என்கிற வார்த்தைப் பிரயோகங்கள் ரசிகர்களால் அவர் மீது பிரயோகிக்கப்பட்டது.
எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று முதலமைச்சரானதற்குப்பிறகு, சில அரசியல் சர்ச்சைகளால் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே என் பெயரையும் கட்சியின் பெயரையும் கையில் பச்சை குத்த வேண்டும் என்று சொன்னார். ஒரு அரசியல் கட்சி தொண்டர்களாக இருப்பதனாலேயே பல ரசிகர்கள் விருப்பம் இல்லாமலேயே கையில் பச்சை குத்திக்கொண்டனர். அதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது.
ரஜினி நடிகராக இருக்கும்போதே தானாகவே ரசிகர்கள் கையில் பச்சைகுத்திக் கொண்டிருந்தார்கள். எம்ஜிஆரின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்குமே தவிர எந்தவித தாக்கமும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ரஜினியின் ரசிகர்கள் குறிப்பாக அடித்தட்டு கீழ்மட்ட ரசிகர்கள் மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்உயிர் ரஜினிகாந்த் என்று தங்கள் உடலை வருத்திக் கொண்டு பச்சை குத்திக் கொண்டது நடந்தது. இன்றும் பல ரசிகர்களின் கைகளில் அந்த அடையாளம் இருப்பதை நாம் அறியலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் ரஜினியுடன் ஒன்றிப்போன காலகட்டம் அது.
ரஜினியும் மாதத்திற்கு ஒரு முறை... சில நேரங்களில் மாதத்திற்கு இரண்டு முறை ரசிகர்களை சந்தித்த நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுகள் ஒரு நடிகன்- ரசிகன் என்பதை தாண்டி பல நேரங்களில் குடும்பத் தலைவனாக, சகோதரனாக, மூத்த அண்ணனாக அவர் ரசிகர்களிடம் பிரதிபலித்தார். ரஜினி- ரஜினி ரசிகர்கள் என்கின்ற பந்தம் இறுகியது. அது ஒரு உறவு முறையாகவே மாறிப்போனது.
பொதுவாக பெண்கள், ஆண்களை கதாநாயகனாக பார்க்கிற எண்ணத்தையும் ரஜினிகாந்த் அறவே உடைத்திருந்தார். பல பெண்கள் அவரை ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கத் தொடங்கினர். ரஜினிகாந்த் படங்களின் தொடர் வெற்றிக்கு இந்த ரசிகர்கள் என்கிற உணர்வை தாண்டிய இந்த உறவே காரணம். இதை ரஜினியும் நன்றாகவே உணர்ந்திருந்தார். இது போன்ற ஒரு பந்தம் இதற்கு முந்தைய தலைமுறையிலும் தற்போதைய தலைமுறையிலும் ஏன் இந்திய சினிமாவில் எந்த மாநிலங்களிலும் எந்த மொழி கலைஞர்களிடத்திலும் ஏற்படவில்லை. இதை அந்தந்த காலகட்டத்தில் அதற்கடுத்த தலைமுறை நடிகர்களிடத்திலேயே அவர்களின் திரை வீழ்ச்சியை வைத்து அறியலாம்.
ரஜினி இன்றும் திரை வெற்றியை கொடுப்பதற்கு... பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கடந்தகால உணர்வும் பந்தமுமே தீர்மானிக்கிறது. இதை அவரது தோல்விப் படங்களில் இருந்தும் அறியலாம். அதாவது, அவரின் திரைத்தோல்வி என்பது மற்ற ஜாம்பவான் நடிகர்களின் மாபெரும் வெற்றிக்கு இணையாக இருக்கும். இது எம்ஜிஆர் முதல் தற்போதைய அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படையிலேயே ரசிகர்கள்,மக்கள் ஆதரவு அவருக்கு அதிகம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது.
இப்படிப்பட்ட ரசிக மனநிலையை தாண்டிய உறவுகளும் எண்ணங்களும் பந்தங்களும் 2000 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின. ரஜினியின் அரசியல் பரபரப்பு குறைய ஆரம்பித்த காலகட்டம் என்று குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2002-ஐ கூறலாம். அந்த ஆண்டில் காவிரிக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் ரஜினி. தமிழக அரசியல் களத்தில் எங்கே இவர் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்கிற பதைபதைப்பு அப்போது காணப்பட்டது. அவர் அரசியலுக்கு வந்தால் எந்த வாக்குகளை பிரிப்பார்? யாரை எதிர்ப்பார்? என்கிற அரசியல் கணக்குகள் பல தரப்பினராலும் ஆராயப்பட்டது.
அந்த காலகட்டத்தில் அலைகடலென ஆர்ப்பரித்த ரசிகர்களை ஒருங்கிணைக்கத் தவறினார் ரஜினி. அவர்களை அரசியல்படுத்தத் தவறியது முதல் பெரும் சறுக்கலாக தொடங்கியது. இவ்வளவு பெரிய கூட்டத்தை தன்னகத்தே கொண்டவரின் மௌனம் சுயலாபத்துக்கே என்கிற விமர்சனம் எழுந்த தொடக்கப்புள்ளி சம்பவம் அது.
தொடர்ந்து ஒரு சில அரசியல் கட்சிகள் ரஜினி எதிர்ப்பைத் தொடங்கி தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்த காலகட்டமும் அதுதான். ரஜினியின் ஆன்மிக காலகட்டமும் கூட. நாம் கடுமையாக எதிர்த்தால் கூட அவர் வெறும் அறிக்கையோடு சென்றுவிடுவார் என்று அந்த சிறு சிறு அரசியல் கட்சிகள் கணக்குப்போட்டு காய்நகர்த்த ஆரம்பித்தன. அதில் ஓரளவுக்கு அந்தக் கட்சிகளுக்கு விளம்பரமும் கிடைத்தது.
பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ரஜினியுடன் மோத தயங்கும் போது லெட்டர் பேடு கட்சி என்கிற அடிப்படையிலேயே இருந்த சில கட்சிகள் ரஜினியின் விளம்பர வெளிச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. தமிழ் பாதுகாப்பு பேரவை என்கிற அமைப்பு எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு ரஜினி எதிர்ப்பில் மட்டுமே குறியாக இருந்தது. இன்றைக்கு அறிவார்ந்த தலைவராக கருதப்படும் கொள்கை சார் அரசியல் தலைவராக அறியப்படும் ஒருவரும் அந்த அமைப்பில் இணைந்ததும் ரஜினியை எதிர்க்கவே. இவரை அந்த அமைப்பின் இன்னொரு தலைவர் பயன்படுத்திக்கொண்டது துரதிஷ்டவசமானது.
அந்தக் காலகட்டம் உண்மையிலேயே ரஜினிக்கு ஒரு சோதனையான காலகட்டம். அதற்கு முந்தைய ஒரு படமும் அவரின் வழக்கமான வெற்றியை பெறவில்லை. சற்று தொய்வில் இருந்த ரஜினியை இந்த சிறுசிறு அமைப்புகளும் கட்சிகளும் சீண்டின. அது ரஜினியின் அரசியல் வரலாற்றில் இப்பொழுதும் ஒரு பின்னடைவாக பேசப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்திலும் சரி, 2004 பாராளுமன்ற தேர்தலிலும் சரி, ரஜினி ரசிகர்கள் பழைய உத்வேகத்துடனும் வெறி கொண்ட வேங்கைகளாக காத்துக்கொண்டிருந்தனர். இதை ரஜினி உணரவில்லை. இதெல்லாம் ரஜினியின் ரசிகர்களிடத்திலேயே ஒருவித சோர்வையே கொடுத்தது. அதற்கு முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தல் ரஜினிக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. 96 தேர்தலை, ஜெ. எதிர்ப்பலை என்கின்ற ஒரு ஒற்றை வாசகத்தில் ரஜினியை பின்னுக்கு தள்ளி விட பல அரசியல்வாதிகளும் முயற்சிக்கிறார்கள். எனினும்கூட ரஜினி அலை அப்போது இருந்ததை யாராலும் மறுக்க முடியவில்லை.
அந்த தேர்தலில் ரஜினியின் புகைப்படத்தையே பயன்படுத்தி வாக்கு கேட்கும் நிலைக்கு பாரம்பரிய கட்சியும் பெரிய ஜாம்பவான் தலைவர்களும் தள்ளப்பட்டதே சாட்சி. ஆனால் 2004ம்ஆண்டு காலகட்டத்திலே ரஜினி ஒரு இறுக்கத்தையும் அமைதியையும் கடைப்பிடித்தார். இந்த இடத்திலேதான் அவர் பெரிதும் மதிக்கக்கூடிய ஒருவர் ரஜினியின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றார். அதில் அவர் வெற்றியும் பெற்றார் என்றே கூறவேண்டும்.
அந்த நபரும் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தார். ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது; அதை ஒரு கட்சிக்கு சாதகமாக மாற்ற முயன்றது; ஒரு அறிக்கை கொடுத்து ரஜினிக்கு ஒரு சாயத்தை ஏற்படுத்த முயன்றது ஆகியன! ரஜினியின் செல்வாக்கை குறிப்பாக வாய்ஸை சோதிக்கவும் விரும்பி அறிக்கையை கொடுக்க வைத்தார். ரஜினியை முழுவதும் யாரும் நிர்பந்திக்க முடியாது என்றாலும் கூட நண்பர்களுக்காக சில முடிவுகளை அவர்களின் ஆலோசனையின் பேரில் எடுப்பார். அதனால் அந்த பாராளுமன்ற தேர்தலில் எனது ஓட்டு பிஜேபிக்கு என்று ஒரு புதுவித அரசியல் வடிவத்தை அறிக்கையாக கொடுத்தார்.
ரஜினியின் அந்த வாசகம் பல ரசிகர்களுக்கு புரியவே இல்லை. இது தனது ரசிகர்களை குழப்பும் என்பதையும், கள யதார்த்தத்தை மீறியது என்பதையும் உணரத் தவறிவிட்டார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்த ஜெயலலிதாவும் அந்த ஆதரவை முழுமையாக ஏற்கவில்லை. இந்த இடத்திலேதான் ரஜினியின் நம்பிக்கை பெற்ற அந்த நபரின் அரசியல் விளையாட்டு ஆரம்பித்தது.
எந்த ஜெயலலிதாவை ரஜினி கடுமையாக எதிர்த்தாரோ அதே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவரை பேச வைத்த காலகட்டமிது. யாரின் தயவையும் ஜெயலலிதா பெற மாட்டார் என்கிற ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியது. இதன் மூலமாக ஜெயலலிதாவின் ஆளுமை சற்று உயர்ந்தது என ரஜினி ரசிகர்களிடத்திலேயேயும் மக்களிடத்திலேயேயும் ஒரு பிம்பத்தை கட்டமைத்தனர். இதை ரஜினி உணர வைக்கப்படாமல் மழுங்கடிக்கப்பட்டார் என்பதை ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் அறியலாம். ரஜினி ஆளும் கட்சியுடன் இணக்கமாக போவார் என்கிற செய்திகள் பரப்பப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதாவும் ரஜினியும் ராசி ஆகிவிட்டார்கள்; ஜெயலலிதாவின் ஆளுமையை ரஜினி உணர்ந்துவிட்டார் என்கிற தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி ரஜினியின் ரசிகர்களை நீர்த்துப்போகச்செய்யும் அரசியலை ஆரம்பித்தனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படும் அந்த நபரே தான் அதற்கு காரணம். அந்த நபர் ரஜினியைவிட ஜெயலலிதாவை ஆளுமையாக்க, நிலைநிறுத்தவே விரும்பினார் என்பது உளவியல் உண்மை. ஓரிரு வருடங்கள் அவர் ஜெயலலிதாவை எதிர்த்திருந்தாலும்கூட முழுமையாக அவர் மறையும் வரை அவர் ஜெயலலிதா ஆதரவாளராகவே செயல்பட்டார் என்பது அரசியல் அறிந்தோர் அறிவர்.
அந்தப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய எதிரியை... முதலமைச்சரையே வீழ்த்திய ரஜினிக்கு ஒரு சாதாரண சிறு கட்சியான பாமகவை வீழ்த்தமுடியவில்லை என்கிற அரசியல் பின்னடைவை உருவாக்கியது. ரஜினி நேரடி அரசியலுக்கு வர மாட்டார் என்கிற எண்ணங்கள் ரஜினி ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.
ரஜினியை எதிர்த்த அந்த சிறு கட்சியின் தலைவரும் யாரும் எதிர்க்க முடியாத ரஜினியை நாங்கள் எதிர்த்தோம்; வென்றோம் என்று அவர் சார்ந்த சமுதாய மக்களிடையே ஒரு கதாநாயகனாக உருவெடுத்து விட்டார். அதற்கு முன்பாக அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை ரஜினி தன்வசப்படுத்திவைத்திருந்த நிலை தளர்ந்தது.
இதற்கிடையில் அரசியல் ஆசைகொண்ட ரஜினி ரசிகர்கள் தங்களை ரஜினி மன்றத்திலிருந்து விடுவித்துக்கொண்டு அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளில் இணைத்து தங்களுக்கான அரசியல் அதிகாரப் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் பெறத்தொடங்கினர். ஒருவேளை ரஜினி அந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்த ரசிகர்கள் வேறு கட்சிக்கு சென்று இருக்க மாட்டார்கள். அல்லது அவரே சொன்னதுபோல் மக்கள் இயக்கம் என்கின்ற இயக்கத்தை 2002ல் ஆரம்பித்து அதைத் தொடர்ந்து நடத்தியிருப்பாரேயானால் இந்த ரசிகர்களும் வேறு கட்சிகளுக்கு சென்றிருக்க மாட்டார்கள். இதுபோன்ற செயல்வீரர்களை ரஜினி சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் திருமணம் குழந்தை குடும்பம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டார்கள். குடும்ப பாரங்களை சுமக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த அடையாளத்தை துறந்து விட்டு தங்களது தொழில்களையும்,பணிகளையும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் தற்போதும் ரசிக மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் அவர்கள் களத்திற்கு வர மாட்டார்கள் என்பதும் உண்மை. இதுபோன்று பல்வேறு கூறுகளாக பிரிந்து சென்று விட்ட ரஜினி ரசிகர்களை அரசியல் படுத்தவும் அமைப்பாக ஒருங்கிணைக்கவும் ரஜினி எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
கட்டுக்கடங்காத காளைகளாக ஆர்ப்பரிக்கும் கடலலையாக எதிர்த்து நிற்கும் வேங்கைகளாக இருந்த ரசிகர்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்துவிட்டனர். திமுகவும் அதிமுகவும் இரண்டு முறை மாறி மாறி ஆட்சி கட்டிலில் ஏறிவிட்டது. அவர்களும் தங்கள் கட்சிகளை வலுப்படுத்த இளைஞர்களுக்கு அரசியல் ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுக்க தொடங்கிவிட்டனர். ரஜினியும் முன்புபோல் இல்லாமல், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தலைமுறைகள் மாறின. இதெல்லாம் ரஜினி ரசிகர்களின் அரசியல் கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்க ஆரம்பித்தன.
30 வருடங்கள் தனது துறையில் ராஜாவாக இருந்த ரஜினி தற்போதும் அதை நிலையில் தொடர்ந்தாலும் கடந்த பத்து வருடங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் பார்த்துவிட்டார். எண்பதுகளில் தொண்ணூறுகளில் ரஜினி தமிழர் இல்லை என்கிற வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும்கூட அவருக்கான எதிர்ப்பு வெளிப்படையாக அப்போது தெரியவில்லை. தற்போது அரசியல் செய்ய சில தமிழர் அமைப்புகளும் அவரை வீழ்த்த அரசியல் கட்சிகளும் அடுத்த தலைமுறை நடிகர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். ரஜினி எதிர்ப்பு புள்ளியில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைவதும் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
கடந்த ஐந்து வருடங்களாக இதற்கும் ரஜினி அமைதியாகவே இருந்ததும்; இருப்பதும் அவரது கதாநாயக சூப்பர் ஸ்டார் பிம்பத்தை அசைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை அவர் உணர்ந்திருப்பாரா என்றே தெரியவில்லை. இவ்வளவு எதிர்ப்புகள் விமர்சனங்கள் இருந்தும்கூட ரஜினி ரசிகர்கள் எண்பதுகளில் 90-களில் இருந்தது போன்று இல்லை என்றாலும் கூட ரஜினியை பாதுகாப்பு கவசமாக காத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதுவே ரஜினியின் தற்போதைய ஒரே ஆறுதல்.
இவ்வளவு பெரிய சூறாவளியும் சுனாமியும் சழன்று அடித்தாலும் தன்னை பாதுகாப்பு அரண் போல் காத்துக்கொண்டிருந்த காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை முழுமையாக இதுவரை அவர் சந்திக்கவே இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே ஒரு திரைக்கலைஞனாகவே இருந்தால்கூட அவருக்கு இந்த சந்திப்புகள் மிக அவசியமானது என்றாலும் கூட அதை அவர் செய்யவில்லை.
எனினும் ரசிகர்கள் வருத்தப்படப் போவதில்லை. ஆனால் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டு ரசிகர்களையும் சந்திக்காமல் தெளிவான அரசியல் புரிதல் பேச்சுக்களும் இல்லாமல் விளக்கங்களும் இல்லாமல் எதிரிகளை என்ன சொல்லி எதிர்ப்பது என்று தெரியாமலும் ரசிகர்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அனலில் தவிக்கும் புழுக்களாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை ரசிகர்கள் குடும்பத்தினராலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர். தங்கள் சுற்றத்தினராலும் உறவினர்களாலும் அருவெறுப்பாக ஏளமான பார்க்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர்.
தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் கூட பரவாயில்லை; அவர் நன்றாக இருந்தால் போதும்; எங்களை சந்தித்து பேசினால் கூட போதும்; நாங்கள் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவோம் என்று விம்முகின்றனர். இந்தக் கொரோனா காலச்சூழலில் சந்திப்பது சிரமமானது தான் என்றாலும் கூட தன்னுடைய ராகவேந்திரா மண்டபம் போன்ற இடங்களில் ஒரு மாவட்டத்திற்கு 100 பேரை சமூக இடைவெளியுடன் அமரவைத்து தலைவர் தூரத்திலிருந்து எங்களைப் பேசச்சொல்லி கேட்டால் மட்டும் போதும். நாங்ளும் எங்களது தலைவரிம் மனம்விட்டு பேசக்கூடாதா? என்று வெடித்துக் கதறுகின்றனர்.
ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ சீராக இயங்க ஆண்டுக்கு ஒரு முறையாவது நேரடியாக கீழ்மட்ட நிர்வாகிகளுடன் உரையாட வேண்டும். ரஜினி என்கின்ற சகாப்தம் எம் கே தியாகராஜ பாகவதர் போன்று; பி யு சின்னப்பா போன்று; சிவாஜிகணேசனை போன்று எதிர்காலத்தில் குறுகிய வட்டத்திற்குள் ஒரு முன்னாள் நடிகர் என்கிற அந்தஸ்துக்கு போய்விடக்கூடாது. ரஜினியின் ரசிகர்கள் அவர் காலத்திற்குப் பிறகும் கூட அமைப்பாகவே இயங்குவது தான் அவருக்கும் பெருமை. ரஜினி ரசிகர்கள் என்கின்ற அடையாளம் மறந்துவிடக்கூடாது. அது தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று என்கிற ஆதங்கம் ரசிகர்களிடையே வெடிக்கும் எரிமலையாக பொதிந்துகிடக்கிறது.
இதை தலைவர் உணர வேண்டும். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வில்லை என்றாலும் கூட பரவாயில்லை; ரஜினி- ரஜினி ரசிகர்கள் என்கின்ற தடத்தை வலுவாக பதிக்க வேண்டும். அது எதிர்கால தமிழகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதே பல லட்சக்கணக்கான ரஜினி பக்தர்களின் கோரிக்கை. செவி சாய்ப்பாரா ரஜினி?
ரஜினி ரசிகர் மன்றத்தை ஒரு ரசிகரால் மட்டுமே உணரமுடியும்; வழிநடத்தமுடியும். அவர் ஸ்டைலில் சொல்வதென்றால் காலத்தின் கையில் தான் அது இருக்கிறது.
(கட்டுரையாளர் திராவிட ஜீவா, எழுத்தாளர்- விமர்சகர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.