சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும், நிச்சயம் களத்திற்கு வருவேன் என கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக ஒரு தகவல் பறக்கிறது.
உண்மைதான்; விடுமுறை காலத்துக்காக சர்க்கஸ் முதலாளிகள் காத்திருப்பதைப்போல , ஒரு புதிய அரசியல் கட்சி கடைவிரிக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்துக்கு காரணியாக வாய்ப்பிருக்கிறது என ஆரூடம் சொல்கிறது. அதே நேரம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ க்கள் என மேலும் 3 பேரை கழிக்க சபாநாயகர் வரைபடம் தயாரிக்கும் சாதுர்யம் பார்த்து அதிமுக தொண்டர்களே ஆடிப்போயிருக்கிறார்கள்.
திமுக மட்டும் லேசுப்பட்டதா என்ன? அவர்கள் எடுத்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான நிலைப்பாடு சூழ்நிலையை மேலும் உஷ்ணமாக்கியிருக்கிறது. என்னென்னவோ நடக்கிறது தமிழக அரசியலில். ரஜினியை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை. ஆனால் இரவல் கண்களால் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
ஒரு சுய உதவிக்குழுவை நிர்மாணிப்பதற்கே அடிப்படை கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிற ரஜினி அதற்கேற்றபடி காரியமாற்ற வேண்டாமா? எதுவும் செய்யாமல், ‘முதல்வர் பதவியேதான் வேணும்’ என்பது எப்படி சரியோ?
தமிழருவி மணியன் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறார். பல வருடங்களாக அரசியல் இயக்கம் நடத்தியும் தாலுகாவுக்கு பத்து பேரை வைத்திருக்க முடியாதவரிடமிருந்து என்ன அரசியல் சூத்திரத்தை இவர் கற்றுக்கொள்ளப்போகிறார்.?
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மன்ற நிர்வாகிகளை அழைத்து, போட்டோ ஷூட் நடத்தினார். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை வீட்டைக்கவனியுங்கள் என்றது பொறுப்பான பேச்சாக பார்க்கப்பட்டது.
இப்போது போர் மேகம் சூழந்திருக்கிறது. மூத்தோர் பட்டியலில் இருக்கும் அவரது ஆதிகால ரசிகர்கள் கூட ஒருவித படபடப்புடன் இருக்கிறார்கள். ரஜினியோ... படப்பிடிப்பில் இருக்கிறார்.
ஜன்னல் வழியாக கைக்குட்டையை போட்டு டவுன்பஸ்சில் இடம்பிடிப்பது போல எளிதல்ல.., பொது ஜனத்தின் இதயத்தில் இடம்பிடிப்பது. அதற்கு நிறையவே நெருங்கி வந்தாக வேண்டும். எம் ஜி ஆருக்கு வசப்பட்ட அரசியல் சிவாஜிக்கு பிடிபடாமல் போன சூட்சுமம் அதுதான்.
என்னதான் நாற்பது வருடம் சினிமாவில் நின்று நிலைத்து யானை பலம் பெற்றவராக ரஜினி இருந்தாலும், முதல்வர் பதவி ஒன்றும் கிண்ணத்து சந்தனமல்ல..! ஒரேயடியாக வழித்து தந்துவிட..
தமிழகத்தின் இருபெரும் அரசியல் ஆளுமைகளின் மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது உண்மையாகவே இருக்கட்டும். அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆளுமை மிக்கவன் தான் மட்டுமே என்று நம்பினால் அவர் தாராளமாகவே வரட்டும்.
ஹரித்துவார் குளிருக்கும்,கேரவன் சொகுசுக்கும் பழகிய ரஜினி இவற்றையெல்லாம் விட்டு விடுதலையாகி வருவாரா என்பதுதான் கேள்வி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.