திராவிட ஜீவா
கடந்த மாதம் ரஜினி- அவரது ரசிகர்கள் இடையேயான பந்தம் குறித்த ஒரு கட்டுரையை நாம் பதிவு செய்திருந்தோம். அந்தக் கட்டுரையில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த், ராமராஜன், டி. ராஜேந்தர், ராஜ்கிரண், பிரபுதேவா, விக்ரம், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் ரசிகர்கள் இருந்தாலும்கூட ரஜினி- ரஜினி ரசிகர்கள் இடையே இருக்கும் பந்தமும் உறவும் வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் ஒவ்வொரு அசைவிலும், ஏற்றத்திலும், பிரச்சனையிலும் உடனிருந்து தாங்கியவர்கள் ரசிகர்களே. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஆயிரத்து எட்டு படிகளை முட்டிப் போட்டுக்கொண்டு ஏறிய ரசிகர்கள் நிறைய பேர்! இன்னும் பாதயாத்திரை மேற்கொண்ட ரசிகர்கள், மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் சாதி மதங்களை தாண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்ட ரசிகர்களையும் தமிழகம் கண்டது.
ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு பிரார்த்தனை செய்யும்போது இருக்கும் எதிர்பார்ப்புகள் இவருக்கு எப்போதும் இருக்காது. அத்தனையையும் தாண்டிய ஒரு ஈர்ப்பும் பந்தமும் உறவும் கொண்ட அன்பு அது. ரஜினி- ரஜினி ரசிகர்கள் இடையேயான உறவையும் பந்தத்தையும் அவர்கள் இருவரைத் தாண்டி வேறு யாராலும் அறியமுடியாது; உணரமுடியாது. அந்த பிணைப்பை வார்த்தைகளில் வடிப்பது கடினம். ரஜினியின் குரல் மட்டுமல்ல, அவரின் விரல் அசைவையே வேதமாக்கிக் கொண்டவர்கள் அவர்கள்.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக எதையும் உள்வாங்கி எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்கள்தான் அவரது ரசிகர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி; ஆன்மீகம் என்றாலும் சரி; எதுவுமே இல்லை என்றாலும் சரி. தலைவர் எங்களது உயிர்; எங்கள் வழி தலைவர் வழி என்று தனி உலகத்தில் வாழ்பவர்கள் ரஜினி ரசிகர்கள். அவர்களின் பேச்சு, செயல், நடை , உடை, பாவனை அனைத்துமே ரஜினி என்கின்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு கட்டுப்பட்டது.
தமிழ் சினிமாவிலும் சரி; அரசியலிலும் சரி; ரஜினி ரசிகர்கள் என்கிற அடையாளம் பிறருக்கு பயம் கலந்த உணர்வுகளை உருவாக்கி வைத்துள்ள தாக்கத்தை உணராதவர்கள் எவருமே இருக்க முடியாது. அதற்கான உதாரணங்கள் பட்டியலில் அடங்காது. அது காலப்போக்கில் சற்று குறைந்திருந்தாலும் கூட, அது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் என்கிற அச்சம் பலரிடத்திலே இன்னும் இருக்கின்றது.
எதைச் சொன்னாலும் செய்யக்கூடிய ரசிகர்களை பெற்றிருக்கக்கூடிய ரஜினி, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றோம் என அன்று அவர் பேசியதற்கு பின்பும் பல தருணங்களில் ரஜினி நேரடி அரசியலுக்கு வரமாட்டார் என்கிற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டது. அப்போது பல இடங்களில் ரசிகர்கள் தன்னிச்சையாக சமூக வலைதளங்களில் எதிர் வினையாற்றினர்.
உடனே, ‘இதையெல்லாம் செய்யக்கூடாது; மன்றகொடியை பயன்படுத்தக்கூடாது; காரில் கொடிகளை பயன்படுத்தக் கூடாது’ என்கிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட நிபந்தனைகளை எல்லாம் எந்தவித எதிர்ப்பையும் சிறு சலசலப்பையும் உண்டாக்காமல் ஏற்றுக்கொள்வது என்பது சர்வாதிகாரமாக தோன்றலாம். ஜனநாயகமில்லை என்றாலும்கூட ரஜினியின் ரசிகர்கள் மத்தியில், ‘தலைவர் சொல்வதை மட்டுமே நாங்கள் செய்வோம்; அது எதுவாக இருந்தாலும் சரி; எந்த கட்டுப்பாடுகளாக இருந்தாலும் சரி என்று கண்ணை மூடி ஏற்றுக் கொள்வோம்’ என்று ஏற்றுக்கொண்டதே ரஜினி என்கிற மந்திரசொல்லின் மகத்துவம்.
அதேபோல ரசிகர்களின் வற்புறுத்தலால் ரஜினியே ரசிகர்கள் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டார். அது ரசிகர்களின் அன்புக்கு ரஜினி கட்டுப்பட்ட தருணம். குறிப்பாக குசேலன் பட சர்ச்சைகளுக்குப்பிறகு ரசிகர்களின் வற்புறுத்தலால் அளவுக்கதிகமான அன்புத் தொல்லை! இன்னும் சொல்லப்போனால் பல ரசிகர்கள் பலமுறை அவரிடமே முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.
80 களில் 90 களில் எல்லாம் பல ரசிகர்கள் தொடர்ந்து அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்போது சிலரை, ‘நீங்கள் உங்கள் தொழிலை கவனியுங்கள்’ என்று ரஜினிகாந்த் எச்சரித்தார். அதற்கு, ‘அப்படித்தான் வருவோம்’ என்று பதில் சொல்வார்கள். ரஜினியே கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு ரசிகர்கள் அன்புத் தொல்லை அதிகமான அளவில் இருந்த காலம் அது. அப்போதைய அந்த சந்திப்புகள் எல்லாம் வெறும் ரசிகர்கள்- அபிமான நடிகர் என்கின்ற அளவில் நிச்சயமாக இருக்காது. ஒரு குடும்ப உறுப்பினர்- மூத்த சகோதரன் என்ற அடிப்படையிலேயே இருக்கும்.
இன்று பல நடிகர்களுக்கு பட்டப் பெயராக வைத்து அழைக்கும் பல பெயர்கள் ரஜினியிடமிருந்து இரவலாக பெற்றவையே. தல, தலைவர், அண்ணன், தளபதி, ரஜினி சார் என்கின்ற அனைத்து மரியாதைக்குரிய சொற்களும் ரஜினிக்காக அவரது ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டன. ரஜினி- ரஜினி ரசிகர்கள் என்கின்ற ஒரு இணைப்பை, பந்தத்தை, உறவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். கடந்த 30 ஆண்டுகளாக வந்த செய்திகளையெல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் அந்த பந்தத்தை உணரலாம்.
தற்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்று தெளிவான விளக்கத்தை ரஜினி கொடுத்த பிறகும் ரஜினி ரசிகர்கள் தரப்பில் எந்தவித எதிர் விமர்சனமும் எழாதது ரஜினியை ரசிகர்கள் உள்வாங்கியதன் விளைவே! சில ரசிகர்கள், ‘வா தலைவா’ என்று அழைத்தாலும் கூட மிகப் பெரும்பான்மையான ரசிகர்கள், நிர்வாகிகள் தலைவரின் உடல் நலனே எங்களுக்கு முக்கியம் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தபோது, ‘தலைவர் மட்டுமே எங்களுக்கு உயிர். அவர் சொல்வது எங்களுக்கு வேதவாக்கு. நாங்கள் கடவுளை கண்ணால் பார்த்ததில்லை. அதற்கு பதிலாகத்தான் எங்கள் தலைவரை பார்க்கின்றோம். நாளைக்கு மன்றத்தை கலைத்தாலும் கூட நாங்கள் ரசிகர்களாகவே தொடருவோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்று கூறினார்.
மேலும் சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மாவட்ட ரசிகர்களிடமும் இதே கருத்து எதிரொலிக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் முக்கிய பொறுப்பாளரிடம் பேசிய போது, ‘எங்களுக்கு தலைவரை தாண்டி எதுவுமே தெரியாது. அரசியலும் தேவையில்லை. தலைவர் உடல்நலனும் தலைவர் சொல்லும் மட்டுமே எங்களுக்கு தேவை. அவர் எதை சொன்னாலும் செய்ய தயாராகவே இருக்கின்றோம். எங்கள் தலைவரின் வளர்ப்பு அப்படி. அவர் முதலில் எங்களையும் எங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கச்சொல்வார். இப்படி ஒரு தலைவனை உலகத்தில் எங்குமே காணமுடியாது’ என்று நெகிழ்ந்தார்.
சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி செயலாளர்களில் ஒருவரிடம் பேசியபோது, ‘தலைவர் எள் என்றால் எண்ணையாக நிற்போம். அவர் ஒரு பார்வை பார்த்தால் அமைதியாக இருப்போம். அவர் சுட்டுவிரலை காட்டினால் சுழன்று வேலை செய்வோம்’ என்றார். பல மாவட்டங்களில் முக்கிய பொறுப்பாளர்கள் யாருமே எந்தவித எதிர் கருத்து தெரிவிக்காதது ரஜினி என்கின்ற தனிமனிதரின் சாம்ராஜ்யம் சரிக்க முடியாத சாம்ராஜ்யம் மட்டுமல்ல, எவராலும் கணிக்க முடியாத சாம்ராஜ்யமாகவே தொடர்கிறது.
முப்பது ஆண்டுகளில் அவர் சந்திக்காத விமர்சனங்களும் இல்லை; எதிர்ப்புகளும் இல்லை. நான் எனது ரசிகர்களுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லை. கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராத கடன்காரன் போல் இருக்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கிறார். அதேசமயம் அவரிடம் ரசிகர்கள் எதையுமே எதிர்பார்க்கவில்லை. அவர் நன்றாக இருந்தால் மட்டுமே போதும்; எங்க தலைவர் நன்றாக இருக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் நாங்கள் வாழ்ந்து விடுவோம் என்பதே ரசிகர்கள் குரலாக இருக்கிறது.
ரஜினியே சொல்வது போல், ‘இது நானா சேர்த்த கூட்டம் இல்ல; தானா சேர்ந்த கூட்டம்! இது அன்பு சாம்ராஜ்யம். யாராலும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று சொல்வது அதீத நம்பிக்கையோ படத்தின் வசனமோ மட்டுமல்ல. ரஜினி- ரஜினி ரசிகர்களின் உறவின் வெளிப்பாடு தான் அந்த பஞ்ச் டயலாக். ஆம், ரஜினியின் சாம்ராஜ்யம் அசைக்க முடியாத அன்பு சாம்ராஜ்யமாகவே இருக்கின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.