Advertisment

பாதைகள் சரி... போய்ச் சேருகிற இடம், நரகம்!

Rajinikanth politics: ராணிப்பேட்டை எந்த மாவட்டத்தில் இருக்கிறது? எனக் கேட்டால், ரஜினியால் சொல்ல முடியுமா? இவருக்கு தமிழ்நாடு வரலோறோ, புவியியலோ தெரியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாதைகள் சரி... போய்ச் சேருகிற இடம், நரகம்!

Rajinikanth politics, Rajinikanth SP Udayakumar, Koodankulam Udhayakumar, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் அரசியல்

சுப.உதயகுமாரன்

Advertisment

ரஜினிகாந்த் ஒரு கட்சியை ஆரம்பிக்கும் திட்டத்திலேயே இல்லை என்றே நான் நினைக்கிறேன். இங்கே நாம் களத்தில் நிற்கிறோம் என்றால், ‘சதை’ ஆடுகிறது. ‘தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்’ என்பார்களே, அப்படி! ‘நம் பகுதி வீணாகிறதே, நம் மக்கள் சிரமப்படுகிறார்களே என்கிற உந்துதலில் நிற்கிறோம். ரஜினிக்கு அப்படி சதையும் ஆடவில்லை; ரத்தமும் கொதிக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் மீது அவருக்கு எந்த உணர்வார்ந்த ஈடுபாடும் கிடையாது. ரஜினிகாந்த், ஒரு ‘பிசினஸ்மேன்’. 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பேசி கொளுத்திப் போட்டார். அது ‘சூப்பர் ஹிட்’ ஆனது. அவரது சினிமா வர்த்தகத்திற்கு அது உதவியது. அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரிடம் தெளிவான பார்வையும், முடிவும் இருந்திருந்தால், கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததுமே, இவற்றை கூறியிருக்கலாம். அப்போது, ‘சின்ன ஏமாற்றம்’ என முடித்துக் கொண்டார். அதன்பிறகு எங்கிருந்து அழுத்தம் வந்ததோ, மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.

publive-image

3 அம்சங்களை தனது கொள்கைகளாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கட்சிப் பதவிகள் என்கிறார். அது சாத்தியமே இல்லை. பெரிய கட்சிகளின் வட்டச் செயலாளர்களும், ஒன்றியங்களும் கட்சிப் பதவிகளை வைத்து பஞ்சாயத்து செய்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். அதன்பிறகும் தேர்தல் வேலைக்கு தனியாக சம்பளம், சாப்பாடு, மது என வாரிக்கொடுத்துதான் அரசியல் வர்த்தகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கட்சிப் பதவி என்றால், தேர்தல் பணிக்கே இவரிடம் சம்பளம் எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை இதைத் தாண்டி, நல்ல சிந்தனை உடையவர்கள் மட்டும் போதும் எனக் கூறினால், கட்சிக்கு தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். மாவட்டத்திற்கு 100 அல்லது அதிகபட்சம் 1000 பேர் சேரலாம். 32 மாவட்டங்களிலும் மொத்தம் 32,000 பேரை வைத்து என்ன பெரிய கட்டமைப்பை செய்துவிடப் போகிறார் ரஜினி?

அமெரிக்காவில் ரஜினிகாந்த் சொல்கிற மாதிரி அரசியல் இருக்கிறது. அங்கு தலைவரின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு போகிறவன் கிடையாது. 24 மணி நேரமும் அரசியல் செய்கிறவன் இருக்கமாட்டான். அங்கு தேர்தல் நேரத்தில் போஸ்டர்கூட ஒட்டமாட்டான். தனது வீட்டுப் புல்வெளியில் ஒரு சிறிய போர்டில், ‘வோட் ஃபார் டிரம்ப்’... அல்லது, ‘வோட் ஃபார் ஹிலாரி’ என எழுதி வைப்பான். இவர் அமெரிக்காவை பின்பற்ற நினைக்கிறார். இந்தியா, அமெரிக்கா இல்லையே?

2-வதாக, ‘கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு’ என்கிறார். பால்தாக்கரேவை மனதில் வைத்து, இதை ரஜினி பேசுகிறார். இவர், பால்தாக்கரேவின் அதிதீவிர ரசிகர். பால்தாக்கரே தன்னை ஒரு ‘தாதா’வாக கட்டமைத்தவர். பல ஆண்டுகளாக கட்சியை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். அவருக்கு எதிராக மூச்சுவிடவே அவரது கட்சியினர் பயந்தார்கள்.

அதேபோல, இங்கு ஜெயலலிதா கட்சியை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். சிவசேனாவும், அதிமுக.வும் எத்தனை ஆண்டுகள் பாரம்பரிய கட்சி? ஆனால் இவர், கட்சியே இன்னும் தொடங்கவில்லை. ராணிப்பேட்டை எந்த மாவட்டத்தில் இருக்கிறது? எனக் கேட்டால், ரஜினியால் சொல்ல முடியுமா? எனத் தெரியவில்லை. இவருக்கு தமிழ்நாடு வரலோறோ, புவியியலோ, வணிகமோ தெரியாது. ஜெயலலிதாவும், பால்தாக்கரேவும் அப்படி அல்ல. விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இவரது கட்சியில் ஒருவர் கொஞ்சம் விஷயம் தெரிந்தவராக இருந்தால், ரஜினியை தூக்கி சாப்பிட்டுவிடுவார். ஒருவேளை கட்சி ஆரம்பித்து, 10 வருடம் மாநிலம் முழுவதும் சுற்றிவந்து, பொதுப் பிரச்னைகளை அறிந்து, கட்சி நிர்வாகிகளை முழுமையாக புரிந்து, கட்சியை முழுவதுமாக கட்டுக்குள் வைத்திருந்து, அதன்பிறகு இதைச் சொன்னால் சாத்தியமாகலாம்.

3-வதாக கட்சியில் இளைஞர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களுக்கு முக்கியத்துவம் என்கிறார். அது நல்ல விஷயம்தான். மக்கள் நலக் கூட்டணியில் வைகோ, ‘எனக்கு கிடைக்கிற சீட்களில் சிலவற்றை போராளிகளுக்கு வழங்கப்போகிறேன்’ எனக் கூறி நாகை திருவள்ளுவன், வீரலட்சுமி ஆகியோரை நிறுத்தினார். அவர்களுக்கு பெரிதாக அரசியல் முன் அனுபவம் இல்லை. வைகோவுக்கும் அவர்களை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு பின்புலம் இல்லை. அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை.

பழைய காலம் மாதிரி இப்போது இல்லை. இப்போது அனைவருமே சிந்தனையாளர்கள்; அனைவருமே எழுத்தாளர்கள், அனைவருமே அறிவுஜீவிகள்! இவர்கள் ஆட்சித் தலைவர்கள் சொல்வதை கேட்பார்களா, கட்சித் தலைவர் சொல்வதை கேட்பார்களா? தான் தோன்றித்தனமாகவே இவர்கள் முடிவெடுப்பார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.கள் ஏற்கனவே ஓரளவு ஆளுமையுடன் இருப்பார்கள். இதில் அரசியல் என்றாலே ஈகோவும் வந்துவிடுகிறது. எனவே பல அதிகார மையங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது.

ஆங்கிலத்தில், ‘The road to hell is paved with good intentions’ என கூறுவார்கள். அதாவது, நரகத்திற்கு போகிற பாதைகள் நல்லவையாக இருந்து என்ன பயன்? ரஜினி முன்வைக்கும் பாதைகளும் திட்டங்களும் நடைமுறைக்கு சாத்தியமில்லாவிட்டாலும், நல்லவை என வைத்துக் கொள்வோம். ஆனால் போய்ச் சேருகிற இடம் நரகமாச்சே? ரஜினியின் ‘இந்துத்வா’ மனநிலை அனைவரும் அறிந்தது. கடைசிப் பேட்டியில்கூட, மீன்குழம்பு- சர்க்கரைப் பொங்கல் உதாரணம் கூறுகிறார். மீன் குழம்பு அவ்வளவு கேவலமா?

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். ரஜினியிடம் இருப்பது பார்ப்பனீய காவி சிந்தனை. போராட்டம் நடத்தினால், அதை வன்முறை என்பார். ஆனால் தனக்கு தேவை என்றால், எழுச்சி வரவேண்டும் என்கிறார். எம்.ஜி.ஆரும் அண்ணாவும் வீட்டுக்குள் இருந்து கொண்டா, எழுச்சியை கொண்டு வந்தார்கள்? எழுச்சி வேண்டும் என்றால், தலைவர் ரோட்டுக்கு வரவேண்டும். அடி வாங்க வேண்டும்; உதை வாங்க வேண்டும்.

ஸ்டெரிலைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் திரண்டதுதான் எழுச்சி. அதை இவர் ஏன் குறை சொன்னார்? ரஜினி இன்னும் ஏழெட்டு திரைப்படங்கள் நடிக்கலாம். அதை மட்டும் செய்வது அவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

(கட்டுரையாளர் சுப.உதயகுமாரன், அணு உலை எதிர்ப்பு போராளி. பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்)

 

Rajinikanth S P Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment