20 தொகுதி இடைத் தேர்தல்: வாங்க ரஜினி, அரசியல் பழகலாம்!

ரசிகனுக்கு கதை சொல்லி விட்டு இவரோ சினிமாவுக்கு கதை கேட்கிறார். என்ன நிலைப்பாடு இது?

க.சந்திரகலா

கொண்டாடுகிற இடத்தில் வளர்கிற குழந்தை தூங்கினாலும் பேசினாலும் பேரழகு. ‘ழ’, ‘ழு’ என எச்சில் ஒழுகும் மழலை மொழிந்தாலே அதனை ஆயிரம் அர்த்தத்தில் மொழி பெயர்த்து பரவசப்படும் உறவுகள். ரஜினியும் ஏதேதோ பேச , அவர் அரசியல் பேசத்தொடங்கியதாக அர்த்தம் கொள்ளப்பட்டது அப்படித்தான்.

சினிமா கதாபாத்திரத்துக்கேற்ப வசன கர்த்தாக்கள் தருகிற வசனத்தை கோடிகள் வாங்கிக்கொண்டு இவர் பேசினார். பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி வேசமானாலும் இவர் பஞ்ச் டயலாக் பேசுவார். காரணம், இவரது ரசிகர்கள் கூடாரம் மாறிவிடாமலிருக்க இப்படியொரு அஸ்திரம் தேவைப்பட்டது. ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.., நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது.. வகையறாக்கள் அப்படிப்பட்டவைதான்.

போதாக்குறைக்கு வாலி, வைரமுத்துக்கள் இவரது வடிவழகை, ஆளுமையை, அனல் தள்ளும் கோபத்தை, அணை மீறும் வேகத்தை ஊதியத்திக்கேற்ப பாடலாய் ஊதித்தள்ளியதில், காது கிறுகிறுத்துப் போய் கிடந்தார்கள் ரசிகர்கள்.

தேருக்கு வழிவிடவிலையென்றால் மன்னனுக்கு கோபம் வருமோ தெரியாது. காருக்கு வழிவிடாத போது இவருக்கு கோபம் வந்தது. பொது வெளியில் ஏதோவொரு வார்த்தை பேசினார். அதை, அரசியலுக்கான நகர்வு என எழுதித்தள்ளின ஊடகங்கள். வார்டு கவுன்சிலர் தொடங்கி, நிதித்துறை அமைச்சர் வரை கனவு காணத்தொடங்கினார்கள் பட்டினி கிடந்து சேமித்த காசில் அவரது கட்அவுட்டுக்கு பால் வார்த்து கிடந்த ரசிகர்கள்.

அதன் பிறகு, மாறிவரும் அரசியல் சூழலுக்கேற்ற குளோசப்பில் வசனம் பேசுவார். கோடிக்கணக்கில் வசூலாகும். அதே வேகத்தோடு ஆளும் தலைமையை சந்திப்பார். புகழ்வார். எதிர் அணித்தலைவரை நலம் விசாரிப்பார். அவ்வளவுதான்.

அதிர்ஷ்ட மச்சங்களை குழைத்து செய்த இந்த மாநிற மனிதர் ஆகச்சிறந்த நடிகர்களில்  அபூர்வமானவர். தமிழ் நடிகர்களில் சம்பளத்தின் உச்சம் தொட்டவர். நேற்று வந்த நடிகனை பார்க்க வருகிற கூட்டத்தை கலைக்கவே தடியடி நடத்த வேண்டிய நிர்பந்தமிருக்கும் சூழலில் ரஜினியை விடுவார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்தவரோடு செல்பி எடுத்து திருப்திபட்டுக்கொண்டவர்களல்லவா அவரது ரசிகர்கள்?

இடுக்கி அணையை இரண்டு மாபெரும் மலைகள் இடுப்பில் வைத்திருப்பதைப் போல தமிழக அரசியலை தனது கண்ணசைவில் வைத்திருந்த இரண்டு அரசியல் ஆளுமைகளின் மறைவு எதிர்பாராதது. இதைத் தொடரந்து தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் ஆர்வமாகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் சிலரை சென்னைக்கு வரவழைத்த ரஜினி, ‘போர் வரும், தயாராக இருங்கள்’ என பிரகடனப்படுத்தி விட்டு இமயமலைக்கு போகிறார்.

ரசிகனுக்கு கதை சொல்லி விட்டு இவரோ சினிமாவுக்கு கதை கேட்கிறார். என்ன நிலைப்பாடு இது? வயக்காட்டு பக்கமே போகாமல் அறுவடை ஆனதும் கணக்கப்பிள்ளை காட்டுகிற சாக்கு மூட்டைகளை பார்த்து சந்தோசப்படுவது போல இருக்கிறது இவர் கூட்டுகிற நிர்வாகிகள் கூட்டம்.

இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நாளை நீக்கப்படுகிறார்கள். ரசிகர்களை நம்பி கட்சி நடத்த முடியாதென ஒரு அறிக்கை. பணம், பதவி எதிர் பார்ப்பவர்கள் தேவையில்லை. நான் ரசிகர்களுக்கு கொடுப்பது பணம் தேவைப்படாத வேலை. எனவே பண பலனை எதிர்பார்க்க வேண்டாம். முதலில் குடும்பத்தை கவனியுங்கள். அப்புறம் கட்சிக்கு வாருங்கள்’ என அடுத்தொரு அறிக்கை. ஆன்மீக அரசியலென சொன்னவர், அடுத்தடுத்து குழப்புகிறாரா இல்லையா?

குடும்பத்தை கவனிக்க வேண்டுமென்கிற எண்ணமிருப்பவன் இவரது கட்சிக்கு வர ஆசைப்படுவானா என்ன? அரை வயிற்று கஞ்சியில் உப்பு போட்டு குடிக்க துப்பில்லாத நிலை வருமென தெரியாதா அவனுக்கு?

கட்டிலில் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என நம்பிய அப்பழுக்கற்ற தலைவர்கள் அரசியல் செய்த களம் தகித்து போய் கிடக்கிறது. இவரோ சினிமாவில நடித்துக்கொண்டே ஜெயித்துவிடலாம் என நம்புகிறார் போல.. இல்லையென்றால் தூக்க முடியாத துப்பாக்கியை தூக்கிக்கொண்டு வேட்டைக்கு கிளம்புவாரா?

70 வயதுக்கு பிறகு வருடத்துக்கொரு வயது குறையும் என நம்புகிறாரா இவர்?! மக்கள் சேவைதான் இலட்சியமெனில் கட்சிப் பெயர், கொடி, கொள்கை குறித்து அறித்துவிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலில் இவரது கட்சி போட்டியிட வேண்டும்.

கொல்லைப் புறத்தில் ஸ்கூட்டர் பழகிவிட்டு எட்டு போட புறப்படும் பெண்ணைப்போல ஓட்டு அரசியல் பழக இவருக்கு 20 களம் கிடைத்திருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டி முரட்டுத்தனமாய் இருக்கும். பொதுத்தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என பதுங்காமல் புயலுக்குரிய வேகத்தோடு புறப்பட வேண்டும்.

அல்லாமல்… கலைஞர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இல்லாத தைரியத்தில் தான் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் அவர் கட்டியெழுப்ப உத்தேசிப்பது ஆன்மீக அரசியல் கோட்டையாக இருந்தாலும், திருவிழாக்களுக்கு உருவாகும் சீசன் கடை என்றே அர்த்தம் கொள்ளப்படும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close