Advertisment

நீங்கள் யார்? சொல்லுங்கள் ரஜினி..!

கிருஷ்ணனும் அர்ஜுனனும் கண்ட விடையாக கூட ரஜினி இருக்கலாம். யார் கண்டது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, Super Star Rajinikanth, Rajinikanth, shivaji rao gaekwad, rajinikanth real name, Rajinikanth original name, ரஜினிகாந்த், அமித்ஷா

Rajinikanth, Super Star Rajinikanth, Rajinikanth, shivaji rao gaekwad, rajinikanth real name, Rajinikanth original name, ரஜினிகாந்த், அமித்ஷா

க.சந்திரகலா

Advertisment

புத்தகங்கள் பேசுகிற விசயங்கள் விவாதப்பொருள் ஆவதுண்டு. ஆகவும் வேண்டும். இங்கே நடந்து விட்டிருப்பது அதுவல்ல. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. பேசியவர் ரஜினி.

துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா விழாவில் கலந்து சிறப்பிப்பதாக ஏற்பாடு. அமித்ஷா வருவதாக இருந்தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நான் முந்தி நீ முந்தி என வருவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ரஜினி?

வெங்கய்யநாயுடுவின் நீண்ட கால நண்பர் ரஜினி. அப்படியானால் சென்னையில் நடைபெறும் விழாவில் ரஜினி கலந்து கொள்ளாமல் இருப்பாரா என்ன? கலந்து கொண்டார். 1996 லிருந்து சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் பேசி வந்தது போலல்ல ரஜினியின் இப்போதைய நிலைப்பாடு. கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றாகிவிட்டது.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து, பாஜவின் கை பிடித்து அரசியல் நடைபழகுவார் ரஜினி என அரசியல் நோக்கர்களும், அரசியல் புரோக்கர்களும் அனுமானித்துக்கொண்டிருக்கும் சூழலில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது இயல்பானது.

அதிலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இந்த பரபர நாட்களில், இது குறித்த ரஜினியின் பார்வை என்னவாக இருக்குமென்று அறிகிற ஆவல். பத்திரிகை ஊடகம் மாத்திரமின்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் காதுகளை விரித்து காத்திருந்தன. இந்த நிலையில், வெங்கய்யநாயுடு எனது நண்பர். எளிமையானவர். எப்போதும் ஏழைகள் குறித்தே சிந்திப்பவர் என்றெல்லாம் பேசியது ஒரு ஆத்மார்த்த நண்பனின் உள்ளார்ந்த குரலாகவே இருந்தது.

அடுத்து பேசியது? காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு கையாண்ட உத்திகளுக்கு ‘ஹேட்ஸ்ஆப்' சொன்னவர், மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன்= அர்ஜூனன் போன்றவர்கள் என்றார். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது நமக்கு தெரியாது. இது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றதுதான் சர்ரென பற்றிக்கொண்டது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எதேச்சதிகாரத்தை கடைபிடித்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாற்றுக்கருத்து கொண்டவர்கள் வீட்டுச்சிறை வைக்கப்பட்டது, உள்ளூரில் நடைபெறும் அடக்கு முறைகள் உலகத்தின் கண்களுக்கு தெரியாதபடி ஊடகங்களுக்கான கதவு ஜன்னலை இறுகச்சாத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன.

ஊருக்கெல்லாம் சிங்கமாக இருந்தாலும், வீட்டுக்குள்ளே கதை அசிங்கம் என்பதைப்போல இருக்கிறது தமிழகத்தில் பாஜ வின் நிலைமை. அதிமுகவோடு தேர்தல் கூட்டணி தேறாது என்பதால், இன்னொரு பாதையை பாஜ கட்டமைக்கப்பார்க்கிறது. அதற்கு ரஜினி களம் அமைத்துக்கொடுக்கிறார் என்றே தமிழக அரசியல் கட்சிகள் பலவும் சந்தேக கண் கொண்டு பார்க்கின்றன.

வரும் நாட்களில் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் அவரது தோளில் ஏறி வெற்றிப்பழம் பறிக்கலாம். இன்னும் கொஞ்சம் உயரம் தேவையென்றால் அதிமுகவை பரிசீலிக்கலாம் என்று கூட பாஜ கணக்கு போடக்கூடும்.

மோடி அமித்ஷா இழுக்கிற இழுப்புக்கு வருகிற நிலையி்ல்தான் இன்றைய அதிமுக சுயமற்று இருக்கிறது. இவையெல்லாம் கூட்டிக்கழித்து இந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கண்ட விடையாக கூட ரஜினி இருக்கலாம். யார் கண்டது?

காஷ்மீர் விவகாரம் குறித்து அவையில் அமித்ஷா பேசியதை கேட்டவர்கள் அமித்ஷா யார் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள் என்கிறார் ரஜினி. உண்மைதான்.

மக்களுக்கு இன்னமும் புரியாதது ரஜினி 'யார்' என்பது மட்டும்தான்.

(கட்டுரையாளர் க.சந்திரகலா, சிறுகதை- கவிதை உலகில் முத்திரை பதித்தவர். அரசியல், சினிமா, சமூக நிகழ்வுகள் சார்ந்த விமர்சகர்)

 

Rajinikanth Narendra Modi Amit Shah K Chandrakala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment