Advertisment

பகுஜன் சமாஜ் பாதை... பரிசீலிக்கலாமே ரஜினிகாந்த்?

ரஜினியின் அரசியல் திராவிட எதிர்ப்பு என்பதைவிட தேசிய நலனுக்கானது என்பதை நினைத்தாலே தமிழகம் தாண்டிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

author-image
WebDesk
New Update
சென்னையில் ரஜினி ரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம்: போலீஸ் நிபந்தனைகள்

பாஜக பிடியில் இருந்து மீண்டுவிட்ட ரஜினிகாந்த், உ.பி.யின் பகுஜன் சமாஜ் கட்சி போல மதச் சார்பற்ற தேசிய அரசியலை கையில் எடுக்கலாம். அதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்கிறார், விமர்சகர் திராவிட ஜீவா. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய இதழுக்கான அவரது கட்டுரை இது...

Advertisment

ரஜினிகாந்தின் அரசியல் பின்வாங்கல் பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிர்ச்சியையும், ரசிகர்களிடத்தில் இனம்புரியாத அமைதியையும் உருவாக்கியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் தமிழகத்தில் மாற்றத்தையும் உருவாக்கக்கூடிய பெரிய ஆளுமை ரஜினி என்பது அரசியலை தொடர்ந்து கவனித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவரது அரசியலை வெறும் 1996 தேர்தல் வாய்ஸ் என்று மட்டுமே சுருக்கிவிட முடியாது. ஆந்திர அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம், என்.டி. ராமராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முதலமைச்சர்கள் ரஜினிகாந்துக்கு கொடுத்திருந்த உயரிய இடம், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ரஜினிக்காக காத்திருந்தது, மன்மோகன்சிங் ஜப்பான் பாராளுமன்றத்தில் ரஜினியைப் பற்றி பெருமிதமாக பேசியது, மலேசிய பிரதமர், துபாய் பிரதமர்கள் ரஜினியை விருந்துக்கு அழைப்பதும் தேடிவருவதும், இந்தியாவின் ஆகச்சிறந்த பிரதமர் வேட்பாளராக 2014ல் இந்தியா முழுவதும் கட்டமைக்கப்பட்டிருந்த வேளையில் மோடி அவர்கள் ரஜினி வீடு தேடி வந்ததும், திமுக தலைவராக இருந்த கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ரஜினியை அருகிலேயே வைத்துக்கொண்டதும், தன்னுடைய அரசியல் எதிரிகளை அதுவும் பிரதமராகவே இருந்தாலும் கூட அவரை சர்வசாதாரணமாக விமர்சிக்கும் ஜெயலலிதா அயன்லேடி என்று புகழப்பட்டவர் தன்னை மிகக்கடுமையாக எதிர்த்த ரஜினியை மென்மையாக கையாண்டவிதம் போன்றவைகள் எல்லாம் ரஜினியின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் அரசியல் வரலாறுகளே.

இப்படி உள்நாட்டு, வெளிநாட்டு பிரதமர்கள் முதல் மற்ற மாநில முதல்வர்கள் வரை உயரத்தில் வைத்து பார்க்கப்படும் ரஜினியை தந்திரமாக வளைக்க முயன்றது பாஜக. பொதுவாகவே தேசிய சிந்தனை கொண்ட ரஜினி ஆன்மீகவாதியாகவும் அறியப்படுகின்றார். இவற்றையெல்லாம் மையமாகக்கொண்டு பாஜக ரஜினியை தொடர்ந்து வட்டமிட்டது.

சற்றேறக்குறைய பதினைந்து, பதினாறு வருடங்களாக ரஜினியை சுற்றி பாஜக ஆதரவு நபர்களே அந்த தேசிய சிந்தனைகொண்ட ஆன்மீகவாதியை ஆக்கிரமித்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அவரை யாரும் மிரட்டி பணியவைக்கவும் முடியாது. அறிவுரை சொல்லியும் சம்மதிக்கவைக்கவே முடியாது என்பதை ரஜினியின் ஆளுமையை நன்கு உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

அதே நேரத்தில் நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர், தேசிய சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி என்பதால் பாஜக ஆதரவு நட்பு வட்டாரம் கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தேசியம் தெய்வீகம் என்கிற வளையத்திற்குள் அவரை சுலபமாக இழுத்தது. அதன் வெளிப்பாடே 2017 டிசம்பர் 31 அன்று அறிவித்த ஆன்மீக அரசியலின் வெளிப்பாடு.

அதாவது இந்திய அரசியலில் தென்னிந்திய அளவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாக இதுவரை யாருமே அரசியலில் கோலோச்சியதில்லை. பெருந்தலைவர் காமராஜர், நிஜலிங்கப்பா, கருணாகரன் போன்ற தலைவர்கள் அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்டாலும் கூட தங்களுடைய எல்லைகளைத் தாண்டி மற்ற மாநிலங்களில் அவர்களால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்கிற சூழலே இருந்தது. ஆனால் ரஜினிக்கு அந்த எல்லைகளே கிடையாது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மட்டுமல்ல மகாராஷ்டிரா வரை வாக்கு வங்கிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழகம் அளவுக்கு மற்ற மாநிலங்களில் இல்லை என்றாலும் கூட 3 சதவீதம் முதல் 6 அல்லது 7 சதவீதம் வரை மற்ற மாநிலங்களில் வாக்குவங்கி தலைவராகவே அவர் களம்பதிப்பார். தொடர்ந்து இந்த வாக்கு வங்கி உயரவும் வாய்ப்பு இருக்கின்றது. ஒருவேளை இதுபோன்ற முடிவை அவர் எடுத்தால் தென்னிந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக அவரால் உருவாக முடியும் எப்படி பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் உத்திரப்பிரதேசத்தை தாண்டி பீகார், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, மத்தியப்பிரதேசம் தேர்தல்களில் களம் பதித்து அரசியலில் தனது எல்லைகளை கடந்து ஆளுமை செலுத்துகிறதோ அதுபோன்றதொரு கட்சியை தென் இந்தியாவில் ரஜினியால் உருவாக்க முடியும். அது பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்று அணியாகவும் உருவாகலாம். இல்லை என்றால் மிகப்பெரிய தீர்மானிக்கும் சக்தியாகவும் உருவாகலாம்.

குறிப்பாகத் தமிழகத்தில் வலிமையான ஒரு தேசிய சக்தியாகவும் கர்நாடகத்தில், ஆந்திரா தெலுங்கானாவில் மதசார்பற்ற ஜனதாதளம், ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலங்கானாவில் சந்திரசேகர்ராவின் டிஆர்எஸ், மகாராஷ்டிராவில் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனது ஆளுமையை நிரூபிக்க முடியும். ஒருவேளை அவர் விரும்பினால் தனது மகள்களையும் அகில இந்திய அளவில் கேபினெட்டில் நுழைக்க முடியும்.

இப்படி பரந்துபட்ட ஒரு எல்லைகளைக் கொண்ட ரஜினியை வெறும் திராவிட எதிர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தும் தந்திர அரசியலால் தன்னை சிவாஜி , விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற வாக்குவங்கி கூட்டணி தலைவராகவும் உருவாக்க முயன்ற சதியை ரஜினிகாந்த் தந்திரமாக முறியடித்துவிட்டார். கடந்த மூன்றாண்டுகளில் தன் மீது பூசப்பட்ட காவிச்சாயத்தை அழிக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் தனது மிகப் பெரும்பான்மை ரசிகர்களில் மெஜாரிட்டி ரசிகர்களை திராவிட எதிர்ப்பு அரசியலில் மூழ்க வைத்துவிட்டனர் ரஜினியை பயன்படுத்த நினைத்தவர்கள். ரஜினியின் அரசியல் திராவிட எதிர்ப்பு என்பதைவிட தேசிய நலனுக்கானது என்பதை நினைத்தாலே ரஜினியின் அரசியல் மாற்றம் என்பது தமிழகம் தாண்டிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது அரசியலில் எப்போதுமே மாறுபடும். இதற்கு கொள்கை தலைவர்களும் விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளும் பிஜேபியுடன் இணைந்து அரசியல் செய்த காலமும் உண்டு. திராவிட தலைவரான கலைஞரும் பிஜேபி அரசில் தனது சகாக்களை பங்கேற்க வைத்தவர்தான்.

ஒருவேளை ரஜினி தீர்மானிக்கும் சக்தியாக வந்துவிட்டால் தென்னிந்தியா முழுவதும் ஒரு 40 முதல் 60 எம்பிகளை பெற்றிருந்தால் அவரின் தேசிய சிந்தனைகள் கனவாகக்கூடிய வாய்ப்பும் இருக்கும். ரஜினியின் உயரத்திற்கேற்ற அரசியல் இதுதான். 2004, 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினி களம் கண்டிருக்கலாம் என்று பேசிய அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கருத்து நிச்சயமாக பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்துதான். அது ரஜினியின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பாக இருந்திருக்கும்.

தமிழகம் மட்டுமல்ல சற்றேறக்குறைய இந்திய அரசியலின் புள்ளிவிவர கணக்குகளை விரல் நுனியில் வைத்திருப்பவர், சாதிவாரியான வாக்குகளின் தாக்கமும் எதிர்விளைவுகளும் ஆதரவு கணக்குகளும் இவருக்கு அத்துபடி. மேற்கண்ட அரசியல் ஆய்வுகள் அனைத்தும் மிகச்சரியானவை என்றே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜும் தெரிவிக்கின்றார்.

இது போன்றதொரு அரசியல் முடிவை ரஜினி எடுத்தால் ரசிகர்களால் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்கிற அளவுகோலிலிருந்து ரஜினியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் அரசியல் நகர்வுகள் நகரும். அது தமிழகத்தில் மிகப்பெரிய தேசிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும். தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் 1971 ல் கலைஞர் எடுத்ததைப்போன்று பாராளுமன்றத்தேர்தலில் முடிவெடுக்கக் கூடிய சூழல் உருவாகும்.

தமிழகத்தின் தாக்கம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும் அது ரஜினிக்கான கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கும். அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய எட்டமுடியாத மைல் கல்லாகவே அது இருக்கும் மற்ற மாநில எல்லைக்குட்பட்ட நடிகர்களின் அரசியலின் வெற்றிதோல்விகளில் ரஜினியை ஒப்பிடமுடியாத நிலையும் தொடரும். இது போன்றதொரு முடிவை ரஜினி எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு 2024 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment