Abdul Khaliq
ராம்விலாஸ் பாஸ்வான் தனது அரசியல் பாடத்தை ஜெயப்பிரகாஷ் நாராயண், கர்பூரி தாக்கூர், ராஜ் நாராயண் ஆகியோரின் வழிகாட்டலின்கிழ் கற்றார். ஆனால், அவருடைய உலகப் பார்வையும் அரசியலும் முக்கியமாக ராம் மனோகர் லோகியாவால் தாக்கம் கொண்டவை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் லோகியாவின், “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான போராட்டத்தில், ஏழைகளுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையினால், உயர் சாதியினருக்கும் தலித்துக்கும் இடையிலான சண்டையில் அல்லது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கான சண்டை இரண்டிலும் பலவீனமானவர்களுக்கு ஆதரவளிக்க வாருங்கள். நீங்கள் சரியானதைச் செய்திருப்பீர்கள்.” என்ற வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்.
அநீதியை எதிர்த்துப் போராடுவதும், ஏதிலிகளின் குரலாகவும் நலிந்தவர்களின் குரலாகவும் இருப்பதும்தான் அவரது வாழ்நாள் பணியாக இருந்தது. தங்கள் சொந்த சாதியைத் தாண்டிப் பார்க்கமுடியாத தலைவர்களைப் போல இல்லாமல், அவர் தனது அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சார்பாகப் பயன்படுத்தினார். ஒ.பி.சி இடஒதுக்கீட்டை ஊக்குவித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அது இந்திய அரசியலை நன்மைக்காக மாற்றியது. எஸ்சி, எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தண்டனை விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு நிர்வாகம் நிராகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த அவர் தலித் உரிமைகளின் அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்தார்.
முஸ்லிம்களுக்கு எப்போதும் பாஸ்வான் மீது ஒரு தனி பாசம் உண்டு. 2002ல் குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை அவர்கள் மறக்கவில்லை. அவர், காஷ்மீரில் இடைவிடாமல் போராட்டங்கள் நடந்த ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்னாண்டைஸைத் தவிர ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பு இல்லாமல் மாநிலத்தை சுற்றிவரக்கூடிய ஒரு சில தலைவர்களில் ஒருவராக இருந்தார். 2016-ம் ஆண்டின் பிற்பகுதியில், பாஸ்வான் ஐரோப்பிய ஒன்றியம் போல, பொதுவான ரூபாய், திறந்த வர்த்தகத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் ஒரு பெரிய அமைப்பாக இருக்க வேண்டும் என குரல் கொடுத்தார். சமீபத்திய ஆண்டுகளில், அந்நாட்டின் தொடர்ச்சியான துரோகத்தின் காரணமாக பாகிஸ்தானுடனான உறவுகளில் ஏற்பட்ட முழுமையான சேதம் அவரது நிலைத்த வருத்தங்களில் ஒன்றாக இருந்தது. இந்த தேசத்தின் நாடித்துடிப்பை மிக நெருக்கமாக அறிந்திருந்த அவர், பாகிஸ்தானுடனான உறவுகள் இந்தியாவில் முஸ்லிம்களை எவ்வாறு பாதித்தது என்பதை வலியுடன் அறிந்திருந்தார்.
பாஸ்வான் மிகச்சிறந்த அமைச்சராகவும், கண்ணியம் மிக்கவராகவும், மென்மையாகப் பேசுபவவராகவும் இருந்தார். அவர் அரசு நிர்வாகத்தில் சுய முக்கியத்துவத்திலிருந்து முற்றிலும் விலகியவராகவும் இருந்தார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற அரசாங்க அதிகாரிகள் அவரது மிகக் கூர்மையான சிந்தனைக்கும் தோழமையான பாணிக்கும் சாட்சியாக இருப்பார்கள். அவர், மிகவும் தொழில்நுட்ப ரீதியான பாடங்களைக்கூட புரிந்துகொள்வதில் வேகமானவராக மட்டுமல்லாமல், அதில் பெரும்பாலும், அவரது கருத்துகள் புரிதலை மேம்படுத்தியதாக இருந்தது. அவர் உறுதியாக முட்டாள்களை பாதிக்கவில்லை என்றாலும், அறிவின் மூலம் அறியாமை, தவறுகள் மற்றும் தவறான எண்ணத்தை வெல்லும் மக்களின் திறனில் அவருக்கு எல்லையற்ற நம்பிக்கை இருந்தது. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக அலுவலக விதிகளின் அதிகப்படியான அதிகாரத்தையும் அதிகாரத்துவத்தையும் நீக்குமாறு அவர் தனது அதிகாரிகளை வலியுறுத்தினார். உண்மையில், அவர் ஒரு அற்புதமான ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் நாம் மறக்கமுடியாத அளவில், நம் காலத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அவரது உரைகள் தெளிவான சிந்தனை வெளிப்பாட்டின் தன்மைக்கு எடுத்துகாட்டாகும்.
பாஸ்வான் பற்றி பலமுறை தவறாகத் தெரிவிக்கப்பட்ட விமர்சனம் என்னவென்றால், அடிக்கடி அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்பவர் என்பதே அது. அவர் அன்றைய அரசாங்கம் உருவாக்கிய கூட்டணியில் தனது வழியைத் தொடர்ந்து கையாண்டார். சிந்தியுங்கள், நாட்டில் எந்தக் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற முரண்பட்ட சித்தாந்தங்களுக்கு இடமளிக்கவில்லை? அப்படி எதுவுமில்லை! அரசியல் அதிகாரத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பாஸ்வான் புரிந்து கொண்டார். அதை தேடுவதைப் பற்றி வெட்கப்படவில்லை. அதை மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக, பல்வேறு அரசாங்கங்களில் அம்மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் முன்னேறவும் பயன்படுத்தினார்.
ஒரு துறவி, சிறிய விஷயங்களில் கௌரவமாகவும் உண்மையாகவும் இருப்பது பெரிய விஷயம் என்று ஒருமுறை கூறினார். நான் ஒருபோதும் பாஸ்வானுடையதைவிட நல்ல விருந்தோம்புகிற வரவேற்கும் இல்லத்திற்கு சென்றதில்லை. அங்கே சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் உண்மையான அரவணைப்புடனும் அக்கறையுடனும் தவிர்க்க முடியாத இனிப்பு மற்றும் தேநீர் ஆகியவற்றைக் கொண்டு உபசரிக்கப்பட்டனர். அவர் மக்களின் துன்பங்களை உணர்ந்தார். தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் உதவி செய்வார். அவரது மறைவு அவரை மீட்பராகக் கருதிய லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய அன்பான ஐயாவுக்கு பிரியாவிடை அளிக்கிறேன். கடந்த 3 தசாப்தங்களாக உங்கள் நன்மையில் பெருமளவில் பயனடைந்த இந்த ஏழை ஆன்மா அனாதையாக தனித்து இருக்கிறது. உங்களைப் போல வேறொருவர் இருக்கமாட்டார்கள்.