ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிதயத்துல்லா ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனதா அரசின்போது, துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டார். நமது அரசியலமைப்பு சட்டத்தின் நீதிபதிகள், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஹிதயத்துல்லாவை சிறப்பான முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கத்தொடங்கலாம். இதுதான் அதற்கு சரியான நேரம்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகையை மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் அண்மையில் நியமித்தார். கோகைய் உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசியல் பதவிகளில் நியமிக்கப்படுவது முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்து நடைமுறையாக இருந்து வருக்கிறது. எனினும், ஒரு சிக்கலான கேள்வி எழுப்புவதற்கான நேரம் நமக்கு இப்போது வந்திருக்கிறது. ஓய்வு பெற்றபின், அரசு தரும் பணிகளை ஏற்பதை நீதிபதிகள் கைவிட வேண்டும். இதுபோன்ற அரசியல் பதவிகளை ஏற்றுக் கொள்வதால், நீதித்துறையின் சுதந்திரம் குறைத்து மதிப்பிடப்படும் என்பதால் ஓய்வு பெற்ற பின்னர் சில வருடங்களுக்காகவது பதவிகள் ஏற்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அமெரிக்காவின் ஃபெடரல் நீதிபதிகள் போல, இந்தியாவில் வாழ்க்கை முழுவதற்கும் நீதிபதிகள் பதவி வகிப்பதில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி என்றால், ஓய்வு பெறும் வயதான 65 வயது வரையும், உயர் நீதிமன்ற நீதிபதி என்றால் ஓய்வு பெறும் வயது 62 வயது வரையிலும் அவர்கள் பதவியில் இருக்கின்றனர். குடியரசுத்தலைவரின் இஷ்டத்துக்காக பதவியில் நீடிப்பதில்லை. இதர வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒருமுறை அவர்கள் பதவியில் நியமிக்கப்பட்டால், தன்னிச்சையாக பதவியில் இருந்து அவர்களை அரசால் நீக்க முடியாது. தவறான நடத்தை அல்லது இயலாமை நிரூபிக்கப்படும் அடிப்படையில், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் அதீத பெரும்பான்மையினால் மட்டுமே ஒரு நீதிபதியை நாடாளுமன்றத்தின் கண்டனத்தீர்மானத்துக்கு உட்படுத்த முடியும்.நாடாளுமன்ற கண்டனத் தீர்மான செயல்முறை என்பது மிகவும் சிக்கலானது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவில் ஒருபோதும் நாடாளுமன்ற கண்டனத்தீர்மானத்தின் மூலம் நீதிபதிகள் நீக்கப்பட்டதில்லை.சில நேரங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகையால், நீதிபதிகள் பதவி வகிக்கும்போது, பதவிகால பாதுகாப்பை அனுபவிக்கமுடியும். நீதித்துறையின் சுதந்திரத் தன்மைக்கு இது அவசியமான ஒன்றாகும்.
எனினும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதித்துறையின் சுதந்திரத்தில் குறைவு ஏற்படுத்துவதில் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அனைத்து ஓய்வு பெற்ற நீதிபதிகளும் அப்படி அல்ல. சிலர் மட்டுமே, ஓய்வுக்குப் பின்னர், அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒரு நீதிபதி, ஓய்வு பெறும் நாட்களுக்கு அருகாமை காலகட்டத்தில் நடைபெறும் வழக்குகளில், ஓய்வுப் பின்னர் தமக்கு சாதகமாக கிடைக்கப்போகும் பதவிகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்தை மகிழ்விக்கும் வகையில் தீர்ப்புக்கூறலாம்.
ஒரு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய நாட்டுக்குள் எந்த ஒரு அதிகார அமைப்பின் முன்போ அல்லது எந்த நீதிமன்றத்தின் முன்போ வழக்காடுவதற்கோ அல்லது செயல்படுவதற்கோ முடியாது என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
அரசியலமைப்பு அவையில், ஒரு பொருளாதார வல்லுனர் மற்றும் வழக்கறிஞரான கே.டி. ஷா, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசுடனான நிர்வாக அலுவலகப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்கிறார். பெரிய கவுரவத்துக்காக அல்லது பெரும் ஊதியத்துக்காக ஒரு நீதிபதி, விவேகமற்ற ஒன்றை செய்வதற்கு அனுமதி இல்லை. இது ஒரு நீதிபதியாக அவரது சுதந்திரத்தை எந்த வகையிலாவது பாதிக்கக் கூடியதாக இருக்கும். எனினும், இந்த யோசனை பி,ஆர் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், அரசுதொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தீர்மானிக்கும்போது எப்படியிருந்தாலும் அதில் இருந்து விலகி இருக்கவோ அல்லது உண்மையில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கவோ வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அம்பேத்கரின் காலகட்டத்தின் போது, தனியார் உடனான பிரச்னைகளை தீர்ப்பதில்தான் நீதிமன்றங்கள் நேரத்தைச் செலவிட்டன. அரிதினும் அரிதாகத்தான் குடிமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான பிரச்னைகளில் தலையிட நேர்ந்தது. இதன்காரணமாக, “அரசானது நீதிமன்றத்தின் உறுப்பினரின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் தூரத்தில் இருந்தது” என்கிறார் அம்பேத்கர். இப்போது அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், இந்த காரணத்தை இன்றைக்கு நாம் கடைபிடிக்க முடியாது.
அரசியல் பதவிகளில் நியமிக்கப்படும் முதல் ஓய்வு பெற்ற நீதிபதி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோகைய் என்று நிச்சயமாக நாம் சொல்ல முடியாது. 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி ஃபாசல் அலி, ஓய்வு பெற்ற சிலகாலத்துக்குள்ளாகவே ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1958-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு அழைப்பின்பேரில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராக பதவி ஏற்பதற்காக, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.சி.சாக்லா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தார். 1967-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை நீதிபதி சுப்பாராவ் ராஜினாமா செய்தார். பீகார் காங்கிரஸ்(ஐ) முதல்வராக இருந்த ஜகநாத் மிஸ்ராவுக்கு எதிரான கிரிமினல் குற்றசாட்டு, பதவியை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய சர்ச்சைக்குரிய வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி பஹரூல் இஸ்லாம். இதற்கு பலனாக 1983-ம் ஆண்டு தமது நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் (ஐ) சார்பில் போட்டியிட்டார். மிகவும் அண்மைகாலத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் ஓய்வுக்குப் பின்னர் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதுபோன்ற மேலும் பல உதாரணங்கள் உள்ளன.
இந்தியாவின் முதல் அரசு வழக்கறிஞர் எம்.சி.சிடால்வாத் வரிகளில், நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்புச் சொத்தின் ஒரு கேள்வியாக இவை அனைத்தும்எழுப்பப் படுகின்றன என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, வழக்குகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ,தீர்ப்புசொல்லும் நீதிபதிகளுக்கு பதவி எனும் பரிசளிக்கும் யுக்தியை அரசாங்கம் உபயோகப்படுத்தாதா? மேலும், ஒரு நீதிபதி, உயர்ந்த பட்ச சர்ச்சை மற்றும் தவறான எதிர்ப்புகளைக் கொண்ட வழக்குகளை அரசுக்கு சாதமாக தீர்மானிக்கும்பட்சத்தில், அப்போது ஒய்வுக்குப் பின்னதான ஒரு பணியை ஏற்றுக் கொண்டால், உண்மையான வினோதமான சார்பு இல்லையென்றாலும் கூட, சுதந்திரமான நீதித்துறை சமரசமாகிவிட்டது என்ற பொதுமக்களின் கருத்துக்கு வழிவகுப்பதாக ஆகாதா?
1958-ம் ஆண்டு சட்டக்கமிஷனின் 14வது அறிக்கையில், ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒய்வுக்குப் பின்னர் இரண்டு விதமான பணிகளில் மட்டும் ஈடுபடலாம் என்று கூறி உள்ளது. முதலாவது, சேம்பர் பிராக்டிக்ஸில் (வாடிக்கையாளர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குதல், தனியார் தகராறுகளில் நடுவர்களாகப் பணியாற்றுதல் என்று இப்போதைய நடைமுறையில் பொருள் கொள்ளப்படுகிறது. )ஈடுபடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது, அரசின் கீழ் முக்கியமான பணிகளுக்கான வேலைகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சேம்பர் நடைமுறை கீழ்தரமாகிவிட்டது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.ஆனால், அதனை கலைத்து விட வேண்டும் என்று சொல்லவில்லை. எனினும், அரசானது நீதிமன்றங்களில் பெரும்பான்மையான வழக்குகளில் ஈடுபாடு கொண்டிருப்பதால், ஓய்வுக்குப் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசு வேலை அளிப்பது தடை செய்யப்பட வேண்டும் என்று இது வலுவாகப் பரிந்துரைத்திருக்கிறது. கமிஷனின் இந்தப் பரிந்துரைகள் ஒருபோதும் அமல்படுத்தப்படவில்லை.
1980-ம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான தலைமை நீதிபதிகள், ஓய்வுகாலத்துக்குப் பிறகான அரசுடனான வேலைவாய்ப்பு என்பது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு குறைவு ஏற்படுத்தும் என்று நம்பினர். சில நீதிபதிகள், ஓய்வுக்குப் பிந்தைய அரசின் பதவிகளை எதிர்பார்த்து அரசு தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை எழுதினர் என்று தலைமை நீதிபதி ஒய்.வீ சந்தரசவுட் உணர்ந்தார். ஒய்வுக்குப் பிந்தையதான நல்ல பணி என்பது வாடகை இல்லாத வீடு, ஓட்டுநருடன் கூடிய கார், சலுகைகள் மற்றும் சில அந்தஸ்தையும் கொடுக்கக் கூடியவற்றை பெரும்பாலான நீதிபதிகள் பெரிதும் விரும்பினர் என்று தலைமை நீதிபதி பி.என்.பகவதி கருதினார். உச்ச நீதிமன்றத்தில் குறுகிய காலம் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஒய்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் ஒரு நல்ல நிலையைப் பெறும் எண்ணத்துடன் அரசுக்கு ஆதரவான சார்பு நிலை மேலோங்கி இருக்கின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். பதக் நம்புகிறார்.
1970-ம் ஆண்டு, முகமது ஹிதயத்துல்லா, உயர்ந்தபட்ச அரசியல் கவனம் பெற்ற அந்தரங்க பர்ஸ் வழக்கை விசாரித்தார். தலைமை நீதிபதியாக இருந்தபோது ஓய்வு பெறும் முன்பு அவரது கடைசி வழக்காக இது இருந்தது. முன்னாள் இந்திய அரசர்களுக்கு (இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் சென்றபோது, இந்தியாவுடன் இணைந்த அரசர்களுக்கு) வழங்கப்பட்ட அந்தரங்க பர்ஸ் முறை, இந்திரா காந்தி அரசால் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓய்வுக்குப் பின்னர் ஹிதயத்துல்லா உலக நீதிமன்றத்தின் நீதிபதியாக அல்லது லோக்பாலில் ஒரு நல்ல பதவிக்கு நியமிக்கப்படும் நபராக அரசால் கருதப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஓய்வுக்குப் பின்னர் தலைமை நீதிபதிக்கு அரசு பதவி வழங்குவது பற்றி கருதப்படுவதால், அந்தரங்க பர்ஸ் வழக்கை அவர் விசாரிக்கக் கூடாது என்று சில வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் கருத்துத் தெரிவித்தனர். எனினும் , இது குறித்து தெளிவுபடுத்திய ஹிதயத்துல்லா, தமது ஓய்வுக்குப் பின்னர் இதுபோன்ற எந்தப்பதவிகள் அளிக்கப்பட்டாலும் அதனை தாம் ஏற்றுக் கொள்ளப்போதில்லை என்று சொன்னார். அதன்படி ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிதயத்துல்லா ஜனதா அரசின்போது, துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டார். நமது அரசியலமைப்பு சட்டத்தின் நீதிபதிகள், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஹிதயத்துல்லாவை சிறப்பான முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கத்தொடங்கலாம். இதுதான் அதற்கு சரியான நேரம்.
இந்த கட்டுரை முதலில், மார்ச் 18-ம் தேதியிட்ட நாளிதழில் “The Hidayatullah example” என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர். மற்றும் Supreme Whispers: Conversations With Judges of the Supreme Court of India, 1980-89 என்ற புத்தகத்தின் எழுத்தாளரும் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.