ஆர்.சி.இ.பி.-ல் இந்தியா கையெழுத்திடுவது, இந்தியாவின் ‘கிழக்கு’ கொள்கைக்கு உரமூட்டக்கூடும்.
பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்திய நாடுகள் ஒப்பந்தம்- ஆர்.சி.இ.பி.-ல் இல்லாமல்போவது என்பது அந்தக் குழுவிலுள்ள நாடுகளின் ஏற்றுமதி இலக்கிலிருந்து நாம் விலக்கப்படுவோம் என்று பொருள் அல்ல; ஏனென்றால், அந்நாடுகள் மேற்கொண்டும் தங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று விருப்பம்கொண்டவை. இதில், நம்மை விலக்கவைக்கும் சூழ்ச்சியைத் தவிர்ப்பதற்கு விழிப்புடனான கண்காணிப்பு அவசியப்படுகிறது.
ஏழு ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்திய நாடுகள் ஒப்பந்தத்தில் சேர்வதில்லையென இந்தியா முடிவெடுத்துள்ளது. பாங்காக்கில் முடிவடைந்த ஆர்.சி.இ.பி. உச்சிமாநாடு முடிவடைந்தபின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த விவகாரமானது நிலுவையில் உள்ளதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. உடன்படிக்கையின் குறிப்பிட்ட அம்சங்கள் பற்றி இந்தியா தெரிவித்த அதிருப்தியைத் தீர்ப்பதற்கு, இந்தக் குழு நாடுகள் முயலும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையோ இதில் மேற்கொண்டு பேசுவதற்கோ முடிவை மறுபரிசீலனைசெய்வதற்கோ இடம் இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்தியாவின் முடிவுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவையாகக் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, தற்போதைய உலக சூழல் உதவிகரமற்றதாகக் கருதப்படுவது. அமெரிக்க- சீன வர்த்தகப் போர் மற்றும் பலதரப்பு வர்த்தக முறையின் சவால்கள் ஆகியவை, ஆர்.சி.இ.பி. பேச்சுவார்த்தையை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் தந்தன. இதுவே, அனைத்து தரப்பினருக்குமான உடன்பாட்டை உருவாக்குவதிலிருந்து திசைதிருப்பிவிட்டது. இரண்டாவதாக, ஆர்.சி.இ.பி.-ன் இறுதிக்கட்டமானது சமநிலையற்றதாகவும் நேர்மையற்றும் காணப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. இறக்குமதி அளவு திடீரென கட்டுக்கடங்காமல் போய்விடுவது, குறிப்பாக சீன இறக்குமதி, வரியற்ற தடைகள், வேளாண்மைத் துறையின் சில பிரிவுகளுக்கு பாதுகாப்பு, ஒப்பந்த விதிகள் அமைப்பதில் விலக்கு மற்றும் சேவைத் துறையில் கூடுதலான பங்களிப்பு ஆகியவை இந்தியத் தரப்பின் வலியுறுத்தல்கள் என்று கூறப்படுகிறது.
இன்னதான் காரணம் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் பொருளாதார மந்தநிலையும் ஏற்றுமதி தேக்கம் அடைந்துள்ளதாக நாடு முழுவதும் நிலவும் ஒரு மோசமான மனநிலையும் அரசின் முடிவுக்குக் காரணமாக அமைந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைய வாரங்களாகவே இந்த ஒப்பந்தத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததுவும் முக்கியமானதாகும். 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் இது இடம்பெறாதபோதும், அரசியல் தளத்தில் கடந்த சில வாரங்களாகவே சூடு பற்றிக்கொண்டிருந்தது.
ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் இந்தியா சேரவேண்டும் என நான் வலியுறுத்தினேன்; அதேவேளை, நமக்கு சாதகமான விளைவு கிடைக்கும்வகையில் பேச்சுவார்த்தையில் வலுவாக இருக்கவேண்டும் என்றும் கூறினேன். இப்படியான வாய்ப்புகள் அரிதாகத்தான் அமையும். இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு- சி.ஐ.ஐ.க்காக என்னுடைய தலைமையிலான நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், வரிகள் விவகாரத்தில் இந்தியா அதிக பலமுள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்ளவேண்டும்; அப்படிச் செய்வதன் மூலம் 2025வரையிலான சில ஆண்டுகளுக்கு சாதகமான இடத்தைப் பெற்றுத்தரும் எனும் கருத்தை முன்மொழிந்தேன். இது, போட்டியிடக்கூடியதாக இந்தியாவை உருவாக்கும். ஆர்.சி.இ.பி. உறுப்பு நாடுகளில் ஒன்றுகூட சக நாடுகளுடன் அதிக வர்த்தகப் பற்றாக்குறை கொண்டதாக இல்லை.
அந்த சி.ஐ.ஐ. ஆய்வானது 2025வரைக்குமான காலக்கெடுவுடன்கூடிய செயற்பாடுகளைக் கோடிட்டுக்காட்டியது. ஆர்.சி.இ.பி. தயார்நிலைக்கு வருவதற்கு இப்படியான ஒரு செயல்திட்டத்தை இந்தியா பெற்றிருந்திருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தம் வரும் சூழலில், அதிக வெற்றிவாய்ப்பைக் கொண்டதாகவும் அது இருக்கவேண்டும். ஆர்.சி.இ.பி. விவகாரத்தில், குறிப்பிட்ட கால வரம்புக்குள் அதைச் சீராக்குவது என்பதை எடுத்துக்காட்டாகக் கருதலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், உலக வர்த்தக அமைப்பில் நாம் ஒரு வாய்ப்பை இழந்தபின்னர், இறக்குமதியில் அளவுரீதியான தடையை இந்தியா கைவிட்டது. அதனால், இறக்குமதி அளவுகடந்து வெள்ளம்போல வந்துவிழுமென அச்சம் உண்டானது. வர்த்தக அமைச்சகமானது, இறக்குமதியைக் கண்காணிக்க ஒரு போர்க்காலப் பொறிமுறையை ஏற்படுத்தியது. இறக்குமதியில் வரம்பு மீறப்பட்டது. தொழில்துறை மறுசீரமைப்பில் தாராளமயமாக்கல் உதவியது. இன்னொரு உலவ வர்த்தக அமைப்பு இழப்பை அடுத்து, இப்போது, ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. கடினமான சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக பொதுமக்களையோ அரசியல்சக்திகளையோ திரட்டுவது எப்போதும் எளிதானது அல்ல. உடனடியாகவோ பிற்பாடோ சர்வதேச நடைமுறைகளுக்குள் பொருந்திப்போயாகவேண்டும்; தனிமைப்பட்டுவிடக்கூடாது.
ஆர்.சி.இ.பி. உச்சிமாநாட்டில் இந்தியா கடுமையாக நடந்துகொண்டிருப்பது தெரிகிறது. இறுதிக் கட்டத்திலும் மற்ற நாடுகள் இந்தியாவின் கவலைக்கு இடமளிக்க விரும்பவில்லை. அவை ஒரு தளர்வான நிலையை எடுத்திருந்தால், இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கும் குழுவின் அனைத்து நாடுகளும் பலனடையும்படியாக பெரும் இந்திய சந்தைக்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். இதனால்தான் ஆர்.சி.இ.பி. எனும் பேருந்திலிருந்து நாம் இறங்கிவிட முடிவுசெய்தோம்.
பொருளாதாரரீதியாக, ஐயத்துக்கு இடமின்றி ஆரம்பத்திலிருந்தே இந்தியா ஆர்.சி.இ.பி.-ல் அயன்மையானதாகவே இருந்தது; காரணம், இதன் பெரும்பாலான உறுப்பு நாடுகள், (கம்போடியா, லாவோஸ், மியான்மரைத் தவிர ஏனெனில், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என்பதாலும் மென்மையான எதிர்வினையையே பெறுவதாலும்) ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு- எ.பி.இ.சி.யிலும் அதன் பல்வேறு முயற்சிகளிலும் அங்கம்வகிக்கின்றன. குறிப்பாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதியளிப்புக்கான எ.பி.இ.சி. செயல்திட்டங்கள் நிலைமாறு முடிவுகளைக் கண்டுள்ளன. சகாக்களின் அழுத்தமானது பரிவர்த்தனை செலவைக் குறைப்பதிலும் தளவாடங்கள் அல்லது வணிகத்தை எளிதாக்குவதில் இந்த நாடுகளின் நிலையை மேம்படுத்துவதிலும் குறிப்பாக இந்த பொருளாதாரத்துக்கு உதவியது. அவர்களின் பேச்சுவார்த்தையாளர்களும் சக நாடுகளின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்து நன்கு பரிச்சயம்கொண்டவர்களாக உள்ளனர். மாறிவரும் மனநிலைகள் குறித்து எ.பி.இ.சி. அமைப்பு ஆண்டுக்கு 300 முறையாவது வினைப்பாடு பற்றிய சந்திப்புகளை நடத்துவதானது, பெருமளவில் உதவியாக இருக்கிறது. இந்த குறிப்பான காரணமே, ஆர்.சி.இ.பி.யின் மூலம் ஒரு அணுக்கமான உறவை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்தியாவுக்கு உதவியாக விளங்கி இருந்திருக்கமுடியும். மேலும், வழங்கல் சங்கிலி உருவாக்கத்தை மேம்படுத்தியிருக்கவும் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களில் பங்கேற்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கவும் முடியும்.
ஆர்.சி.இ.பி.-ல் சேரக்கூடாதெனும் முடிவானது, போட்டித்தன்மை மற்றும் ஏற்றுமதி விரிவாக்கத்தை மேம்படுத்தும் கவனக்குவிப்பு முயற்சியிலிருந்து நாட்டைத் திசைதிருப்பிவிடாது என ஒருவர் நம்புகிறார். முகிழ்த்துவரும் இந்திய இறக்குமதித் தேவைகள் குறைவாக இல்லை.
உள்நாட்டு, பன்னாட்டுத்தரங்களுக்கு ஏற்ப இறக்குமதியை ஒழுங்குபடுத்துவது, இப்போது கூடுதல் கவனத்தைப் பெற்றிருப்பதால், அது அவசியமானதாக இருக்கும். ஆர்.சி.இ.பி.-ல் இல்லாமல்போவது என்பது அந்தக் குழுவிலுள்ள நாடுகளின் ஏற்றுமதி இலக்கிலிருந்து நாம் விலக்கப்படுவோம் என்று பொருள் அல்ல; ஏனென்றால், அந்நாடுகள் மேற்கொண்டும் தங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று விருப்பம்கொண்டவை. இதில், நம்மை விலக்கவைக்கும் சூழ்ச்சியைத் தவிர்ப்பதற்கு விழிப்புடனான கண்காணிப்பு அவசியம்.
நாட்டின் சந்தையை அணுகுவதை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் உலக வர்த்தக அமைப்பானது இப்போது நம்பகமற்றதாக ஆகிவிட்டது. இதனால், இதற்கான மாற்று வழியை கண்டாகவேண்டிய தேவை நமக்கு உருவாகியுள்ளது. நம்முடைய பெரும் ஏற்றுமதி இலக்கான அமெரிக்காவுடன் நடந்துவரும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிப்பதை முதன்மையாகக் கொள்ளவேண்டும்.
தாராள வர்த்தக ஒப்பந்தங்களில், கிழக்குப் பகுதி நாடுகள் பக்கமே நாம் அதிகமாகப் பார்க்கிறோம். மேற்குலக நாடுகளுடன் ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம்கூட இதுவரை நாம் செய்திருக்கவில்லை. ஆர்.சி.இ.பி. பேச்சுவார்த்தை அனுபவத்திலிருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான- அர்த்தமுள்ள, யதார்த்தமான தாராள வர்த்தக ஒப்பந்த உத்திகளை உருவாக்கவேண்டியது அவசியம். இதற்காக நடந்துவரும் பரிசீலனைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும். நடப்பிலுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் நமக்கு சாதகமானவையாக அமையாவிட்டால், புதிய தா.வ. ஒப்பந்தங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவது கடினமாகிவிடும்.
ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் சேர்வது ‘கிழக்குலகச் செயல்பாட்டு’க் கொள்கைக்கு மேலும் உரமூட்டக்கூடியதாக இருந்திருக்கும். இந்தக் கொள்கையின் பொருளாதாரத் தூண் ஆனது, இரு தரப்பு மக்களுக்கிடையிலான உறவுகள், மூலவுத்தி மற்றும் பாதுகாப்பு கூறுகள், அரசியல் பிணைப்பு ஆகியவற்றைவிட வலுவிழந்ததாகவே காணப்படுகிறது. ஆர்.சி.இ.பி.உடன்பாட்டிலிருந்து வெளியே நிற்கும் முடிவால், இருதரப்பு முதலீடு, வர்த்தகம், பிணைப்பை வலுப்படுத்துவதற்கு பெருமளவில் உழைக்கவேண்டியுள்ளது. மற்றபடி இந்தோ- பசிபிக் போன்ற கருத்தமைவுகள் நமக்கான ஆதரவை இழக்கச்செய்யும்.
தமிழில் : இரா. தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.