அரசியல் மொழி அதற்கே உரிய தர்க்கத்தை கடைப்பிடிக்கிறது. முதல் 20 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஐந்து தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது. முதல் மூன்று தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் வென்றுகாட்டியது. அப்போது யாரும் பெரும்பான்மைவாதக் கொடுங்கோலாட்சி என்றோ ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றோ நினைக்கவில்லை. 1971-ல் இந்திராகாந்தி வென்றபோது, அவரை பாப்புலிஸ்ட் என்றோ பெரும்பான்மைவாதி என்றோ எதேச்சதிகாரி என்றோ (1975-ல் அப்படி அவரைக் கண்டுபிடிக்கும்வரை) யாரும் கூறவில்லை.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளநிலையில், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அச்சம் வெளிப்படுகிறது.இயல்பாக பா.ஜ.க. என்கிறபோது பாசிசக் குற்றச்சாட்டும் கூடவே வரத்தானே செய்யும்.
நல்லது, நான் சொல்வது ஒவ்வொருவருக்கும் ஏமாற்றமாக இருக்கவேண்டும். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்கள் இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்போடும் நன்றாகவும் வலுவாகவும் இருப்பதைக் காட்டுகின்றன. சில நாள்களுக்கு முன்னர், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு முடிவுகளில் பாஜகவுக்கு பெருவெற்றி என்று கூறப்பட்டது. மகராஷ்டிரம், அரியானா இரண்டு மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திலும் அந்தக் கட்சி காஷ்மீரின் 370 விவகாரம் குறித்து பேசியது. அந்தந்த மாநில விவகாரங்கள் பிரச்சாரத்தில் முதன்மையாக இடம்பெறவில்லை. மகாராஷ்டிரத்தில் அண்மைய மழைவெள்ள பாதிப்பைவிட சாவர்க்கருக்கான பாரத் ரத்னா விருது பற்றிதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அரியானாவில் கார் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை எப்படிப்பட்டது.. அதைப் பற்றி கிஞ்சிற்றும் பேசப்படவில்லை.
சில சங்கதிகள் தெளிவானவை. எப்போதும் வாக்காளர்களை பொருட்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தங்கள் வாக்கை எப்படி பயன்படுத்துவது என்பது மட்டுமல்ல, வாக்குப்பெறுவோரிடம் எப்படி பொய்சொல்வது என்பதும் நன்றாகத் தெரியும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் ஒரு சிப்பை, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜக வைத்திருந்ததாக அக்கட்சிக்காரர் ஒருவர் சொல்ல, அதைப் பற்றி விசாரணை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இப்படிச் சொல்வது இது முதல் முறையா என்ன? நாடாளுமன்றத் தேர்தலின்போது மேனகாகாந்தி இதைப்போலவே பேசியது நினைவிருக்கலாம். வாக்காளர்களோஒ இவர்கள் இப்படிக் கூறுவதை நம்புவதுமில்லை; தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதால் ஏற்படுவதாகக் கூறப்படும் விளைவுகளைப் பற்றி அஞ்சுவதாகவும் இல்லை. இந்தமாதிரியான பேச்சுகள் வாக்காளர்களிடம் குறிப்பிட்ட கட்சியின் நற்பெயரைக் கூட்டிவிடாது என்பது மட்டும் தெளிவு.
அக்.24 வியாழன் அன்று நள்ளிரவுவரை, இரு மாநிலத் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வந்திருக்கவில்லை. ஆனால், அரியானாவில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு முடிவின்படி பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்கிற கணிப்பு நிகழவில்லை. அந்தக் கட்சிக் கூட்டணியின் எதிர்பார்ப்பில் மண்விழுந்ததுபோல ஆனது. ஜனநாயக் ஜனதா கட்சியும் காங்கிரசும் கைகோர்த்திருந்தால் பாஜகவின் 40 தொகுதிகளைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியைப் பெற்று, பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்திருக்கவும்கூடும். அரியானாவின் சுயேச்சை எம்.எல்.ஏ.வின் விசுவாசத்தின் விலையானது நிமிடக்கணக்கில் கூடிக்கொண்டே போயிருக்கும் என்பதால், அதை ஊகிப்பது கடினமாக இருந்தது.
மகாராஷ்டிரத்தில் நடந்த அதிசயம் எனப் பார்த்தால், மெய்யாக சரத்பவாரின் உறுதியும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. தன்னோடு எப்போதும் பின்னிப்பிணைந்திருக்கும் மாநிலப் பிரச்னைகளை அவர் கையிலெடுத்தார். பழைய தலைகள் நிலைமைக்கேற்ப மாறக்கூடியவர்கள் என்பதைப் பார்க்கமுடிகிறது. அரியானாவில் சௌதாலா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வெற்றிபெற்றதும் காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹூடாவின் நிலையும் கவனத்துக்குரியது. பாஜகவின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரியானாவுக்கு மட்டுமல்ல, தேர்தல் அரசியலுக்கே புதியவர். இராம்ரகீம் விவகாரம் பெரிதாகி, சட்டம் ஒழுங்கைச் சிதைத்தபோது கட்டாரின் ஆட்சி அதை அடக்குவதில் தோல்விகண்டது. கட்டார் இதை மறந்துபோனாலும் அரியானா மக்கள் இதை மறந்துவிடவில்லை.
பெரும் வியப்பாக அமைந்தது, காங்கிரஸ் கட்சியின் மீள்வருகை. நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே அந்தக் கட்சிக்கு நெருக்கடிதான். அதன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்த இளம் தலைவர் மாறி, புதிதாக மூத்தவர் ஒருவர் மீண்டும் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் சாதனை காட்டுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை அது இன்னும் அரியானா வாக்காளர்களையும் பிரச்னைகளையும் கையிலெடுத்தாகவேண்டும்.
தமிழில்: இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.