scorecardresearch

குழு உரிமைகள் கருத்தாக்கத்தை திருத்தியமைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும்

குடியுரிமைச் சட்டத்திருத்தம் – குடிமக்கள் பதிவேட்டின் தேச அளவிலான சேர்க்கையானது, இந்தியா என்பது இயல்பிலேயேயே இந்துக்களின் வாழ்விடம் எனக் குறிப்பதுடன், முஸ்லிம்களை அந்நியர்களென ஏளனமும்செய்யும். இந்தியர்கள் இனி இந்த நிலப்பகுதியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இன- மதவழியாகவும் இந்தியர்கள் என அழைக்கப்படுவார்கள்.

modi govt cab, union home minister amit shah,குடியுரிமை திருத்தம் சட்டம்
modi govt cab, union home minister amit shah,குடியுரிமை திருத்தம் சட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்தமானது, இந்திய அடையாளத் தேடலின் மையமாக விளங்கும் ஒரு அடிப்படையான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. மன்னராட்சிக் காலம் தொட்டு ஒரு நாடாக மலர்ந்ததுவரை, அதாவது, இங்கு சிறுபான்மையினரில் பெருங்குழுவாக இருந்தவர்களின் பிரதிநிதியாக முஸ்லிம் லீக் தன்னைக் கூறிக்கொண்டதை அடுத்து, 1947-ல் மதரீதியாக நாடு பிரிக்கப்பட்டதுவரை, இந்தியர் என்பவர் யார் என்கிற கேள்வி தேசக்கட்டுமானத்தின் மையமாக இருந்துவருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தப் பொருள் குறித்து இரண்டு ஆண்டுகாலம்வரை விவாதித்துள்ளனர். ஒருவழியாக அவர்கள் இந்தியக் குடியுரிமை பற்றி நிலப்பகுதிசார்ந்த ஒரு வரையறுப்புக்கு வந்தனர். அதாவது, எந்த அடையாளமும் தடங்கலாக இல்லாமல், இந்தியாவில் பிறந்த யாராக இருப்பினும் அவர் இந்தியர் என்பதே! இந்தப் பரந்த வரையறுப்புக்கு முற்றிலும் நேர்மாறானதாக அமைந்தது, பாகிஸ்தான் உருவாக்கிய குடியுரிமைக் கருத்து. 1956-ல் அந்நாட்டின் அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து,“ முஸ்லிம்களின் ’தாயகமாக’ விளங்குவதால் இந்த நாட்டின் அரசுத்தலைவராக ஒரு முஸ்லிம்தான் இருக்கமுடியும்” என்று அது தீர்மானித்தது.

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய குடியுரிமைக் கருத்தாக்கத்தை உருவாக்கியதற்காக, அரசமைப்பு நிர்ணயசபையின் உறுப்பினர்களை, முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான வல்லபாய் பட்டேல் பாராட்டினார். இனப்பாகுபாட்டுக்கு எதிரான காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தை அவர்களுக்கு நினைவூட்டிய வல்லபாய், இனவழிக் குடியுரிமைக் கருத்தாக்கத்தைத் தெரிவுசெய்யவேண்டாம் என்று வலியுறுத்தினார். இந்த எண்ணப்பாடு உலக அளவில் கவனிக்கப்படும் என்பதால், அவருக்கும் சபையின் பல உறுப்பினர்களுக்கும் உயிர்நிலையானதாக இருந்தது.

இந்த விவாதங்களின் விளைவான (1955) குடியுரிமைச்சட்டமே, இப்போது இந்தியாவில் குடியுரிமைச் சட்டங்களை ஆளுமைசெய்கிறது. இந்தச் சட்டமானது பல முறை திருத்தப்பட்டாலும், முதல் முறையாக மத – இன அடிப்படையிலான பிரிவைச் சேர்க்கும் முயற்சி 2004-ல் வாஜ்பாயி ஆட்சியின்போது நடந்தது. ஒருசேர குடியுரிமை விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களுடன், அசாமில் அதிகரிக்கும் அமைதியின்மைக்கு முகங்கொடுக்கும்படியாக அத்திருத்தம் அமைந்தது.

ஆவணப்பதிவற்ற புலம்பெயர்ந்தோர் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியிழப்பு செய்யப்பட்டநிலையில், இந்தத் திருத்தமானது பாகிஸ்தானிய இந்துக்களை சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோராகக் கருதாதமல் இருக்க வழிசெய்கிறது. இதற்கு, துன்புறுத்தப்பட்ட சமூகம் எனக் காரணம் கூறப்பட்டது. ஆக, மத- இனப்படியான நோக்கங்களுக்கு சாதகமாக, நிலப்பகுதியின்படியான குடியுரிமைக் கருத்தாக்கத்தை இந்தியா கைவிட்டது.

தற்போதைய சட்டத்திருத்தமானது அதே கருத்தின்படிதான் அமைந்திருக்கிறது. துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை அகதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உறைவிடமும் பாதுகாப்பும் அளிக்கவும் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இயல்பாக்கம் எனும் முறையில் விரைவாக குடியுரிமை வழங்கவும் இவ்வரசு விரும்புகிறது. ஆனால், பாகுபாடான முறையில் இதைச் செய்வதற்கும், (மத)நம்பிக்கைவாதப்படியான குடியுரிமைக் கருத்தாக்கத்துக்கு ஏற்ப களத்தைத் தயார்ப்படுத்தவும் அரசாங்கம் முயல்கிறது.

உண்மையில், குடியுரிமைச் சட்டத்திருத்தமானது, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்துவந்த ஆவணப்பதிவற்ற ‘இந்துக்கள், சீக்கியர், ஜைனர்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் மற்றும் பார்சி’ களுக்கே பொருந்தும். இவர்கள் அகதிகளாக ஆகிவிடும்போது, முஸ்லிம்களோ வேறு சிறுபான்மையினரோ மதநம்பிக்கையற்றவரோ சட்டவிரோதக் குடிபெயர்ந்தோராகவே கருதப்படுவார்கள். இஸ்லாமியத்தை அரசு மதமாகக் கொண்ட நாடுகளில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படமுடியாது என இந்திய அரசு வாதத்தை முன்வைக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் அகமதியா, சியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் ஆப்கானிஸ்தானில் கசரா எனும் சியா பிரிவு முஸ்லிம்களும் ஒடுக்கப்படுவது தொடர்கிறது. மேலும், இந்த சட்டத்திருத்தமானது அண்டை நாடுகள் எனும் பட்டியலில் தமிழர்கள் துன்புறுத்தப்படும் இலங்கையையும் ரோகிங்கியா முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் மியான்மரையும் சேர்க்கவில்லை.

இந்த முரண்பாடுகள், இந்தத் திருத்தத்தில் பெரும்பான்மைவாதப் பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக ஆண்டுத் தொடக்கத்தில் இச்சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பாஜகவால் இயலவில்லை. அதன் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான காரியத்தை அது மீண்டும் கையிலெடுத்தது. பாஜகவின் தலைவரும் தற்போதைய மைய அரசின் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஒரு பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், ‘ஊடுருவல்காரர்கள் இந்நாட்டின் கரையான்கள்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்; அகதிகள் பாதுகாக்கப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டார். 2016 அசாம் தேர்தலிலேயே, ’சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோரின் இந்த மாநிலத்தை குடியுரிமைச் சட்டத்தித்திருத்தம் மூலம் தூய்மையாக்குவோம்’ என வாக்குறுதி அளிக்கவும்செய்தார்.

உச்சகட்டமாக, ஆவணப்பதிவற்ற குடிபெயர்ந்தோரைத் துரத்தியடிக்க, அசாமில் அண்மையில் செயல்படுத்திமுடிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டைப்போல, அகில இந்தியா முழுவதற்கும் கொண்டுவரப்போவதாக அரசாங்கம் உறுதிபடக் கூறியுள்ளது. சர்ச்சைக்குரிய அண்மைய வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 19 இலட்சம் பேர் குடியுரிமையற்றவர்களாகக் கழித்துக்கட்டப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினராவது முஸ்லிமல்லாதவர்கள் என்கின்றன, புள்ளிவிவரங்கள்.

ஆகவே, புதிய குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இன- மதவழியிலான வகைப்பாடு முஸ்லிம்களை குடியுரிமை பெறவிடாமல் நீக்கும்படி வழிகாட்டும்நிலையில், முஸ்லிமல்லாத இந்த மக்கள்( ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமக்கள்) அகதிகள் ஆகிவிடுவார்கள். இந்த மாற்றங்கள் அசாமின் அரசியல்ரீதியான மக்கள்பரம்பலை மாற்றியமைத்து, இந்து மத வாக்காளர்களை தனிப் பெரும்பான்மையினராக ஆக்கும்.

குடியுரிமைச் சட்டத்திருத்தம் – குடிமக்கள் பதிவேட்டின் தேச அளவிலான சேர்க்கையானது, இந்தியா என்பது இயல்பிலேயேயே இந்துக்களின் வாழ்விடம் எனக் குறிப்பதுடன், முஸ்லிம்களை அந்நியர்களென ஏளனமும்செய்யும். இந்தியர்கள் இனி இந்த நிலப்பகுதியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இன- மதவழியாகவும் இந்தியர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்த உலகப்பார்வையானது, இந்துத்துவா கருத்தியலைக் கட்டமைத்த வி.டி.சாவர்க்கரின் கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறது. அதாவது: “ இந்துக்கள் இந்திய அரசின் குடிமக்கள் மட்டுமல்ல; ஏனெனில், அவர்கள் வெறுமனே ஒரு பொதுவான தாயகப் பகுதியில் பிறந்திருக்கிறோம் எனும் அன்பினால் மட்டும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை; அது இரத்தப்பிணைப்பும்கூட. ஒரே தேசத்தவர் என்பதைவிட இனத்தாலும் சாதியாலும் ஆனது இந்தப் பிணைப்பு”.

சாவர்க்கர் சொல்லும் சுவாரசியமான இன்னொரு குறிப்பு : ” இந்துவல்லாத பெற்றோருக்குப் பிறந்த எவர் ஒருவரும், அவர் இந்த மண்ணை தனது நாடாகக் கொள்கிறார் என்றோ ஓர் இந்துவை மணம்முடிக்கிறார் என்றோ சான்றளிக்கப்பட்டால், அவர் இந்துவாக ஆகமுடியும். இவ்வாறாக, நமது நாட்டை தன்னுடைய உண்மையான பித்ருபூமி(தந்தையர் நாடு) ஆகக் கருதி இதை நேசிப்பார்; நமது பண்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் நமது மண்ணை புண்ணியபூமியாகப் போற்றுவார்”.

வேறுவகையில் சொல்வதானால், சாவர்க்கரைப் பொறுத்தவரை, ஒருவர் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு இந்துவாக மதம்மாறுவது ஒரு வழியாகும்; அதற்கு அவர் இந்து ஒருவரை மணம்முடித்தாகவேண்டும். இந்த இந்திய அடையாள வரையறையானது, இந்துத்துவத்தை வளர்த்துவிட்ட ஐரோப்பியக் கருத்தியலாளர்களின் இனவழி தேசியக் கருத்தியலுடன் உறுதியான நாட்டத்தைக் கொண்டது. உலகப்போர் காலகட்டத்தில் அவர்களிடமிருந்தே இந்துத்துவக் கருத்தாக்குநர்கள் தாக்கத்தைப் பெற்றிருந்தனர். காட்டாக, 1939-ல் எம்.எஸ்.கோல்வால்கர் தன்னுடைய ‘நாங்கள் அல்லது எங்களின் தேச வரையறுப்பு’ (We, or Our Nationhood Defined) எனும் புத்தகத்தில் இனவழி தேசம் தொடர்பாக பல ஜெர்மானியக் கொள்கையாளர்களின் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தமானது, குடிமக்களின் உரிமையை அரசு எப்படிப் பார்க்கிறது என்பதை மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் குழு உரிமைகள் பற்றிய கருத்தாக்கத்தைத் திருத்துவதாகவும் இருக்கிறது. இந்தியக் குடியரசில் தாராளவாதத் தனியுரிமைகளுக்கும் குழு உரிமைகளுக்கும் இடையே எப்போதும் ஒரு மோதல்போக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இதுவரை, குழு உரிமையானது வரலாற்றுப் பிழைகளைத் திருத்தியமைக்கும் சுதந்திரமான நோக்கில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக, பொதுக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைக் குறிப்பிடலாம். இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் வர்க்கம், சாதி, பாலினம் ஆகியவற்றின்படியான உரிமைகளின் வரிசைமுறையானது, படிப்படியான முற்போக்கான சமூக மாற்றத்திற்கானது ஆகும்.

மற்ற சமயங்களில், குழுவாரியாகப் பிரித்துக்காட்டுவது என்பது பன்முகத்தன்மையை – பழங்குடியினர், மத, மொழிவழியிலான சிறுபான்மையினரின் தனித்துவமான பண்பாட்டு உரிமைகளை மதிப்பதற்காகவும் மொழிவழியில் இந்திய உள்ளக வரைபடத்தை மறுவரையறை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மோடி அரசாங்கமானது இந்தியக் குடியுரிமையிலிருந்து கணிசமான முஸ்லிம்களை விலக்கிவைப்பதற்காக, சமூக உரிமைகளின் அடிப்படையையே மாற்றியமைக்கத் திட்டமிடுகிறது. விளைவாக, ஏற்கெனவே சமூக, பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருந்துவரும் முஸ்லிம்களின் உரிமைகளை இந்த வரையறுப்பானது மேலும் மோசமாக்கவேசெய்யும்.

இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான காசுமீரத்தின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கியது, பாபர் மசூதி நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காகக் கொடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு, குடியுரிமை சட்டத்திருத்தத்துடன் கூடிய தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியக் குடியரசின் தன்மையை மேலும் மாற்றவேசெய்யும். இந்தியாவானது ஒரு நிழல் இந்துராஷ்டிரமாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் ஒரு மட்டுக்குள் அரசமைப்புச்சட்டத்தை மாற்றாமல் மதவழியிலான சில விலக்குகளின் மூலம் சட்டப்படியான உரிமைபடைத்த இந்துராஷ்டிரமாக இருக்கலாம். இந்த சில மாற்றங்கள் அரசமைப்புத்தன்மையைச் சோதிக்கும்படியாக இருக்கின்றனவா இல்லையா என்பதை இப்போது நீதிமன்றங்கள் முடிவுசெய்யவேண்டும்.

இந்தக் கட்டுரை, முன்னதாக, ’குடியரசை மறுவரையறைசெய்தல்’ எனும் தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது. ஜாஃப்ரலட், பாரிசில் உள்ள CERI-Sciences Po/CNRS-ல் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும் இலண்டன், கிங் இந்தியா கல்விக்கழகத்தின் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர். லாலிவாலா குஜராத்தைச் சேர்ந்த, நிறுவனம்சாராத, அரசியல் -வரலாற்று ஆய்வாளர்.

தமிழில் : இரா. தமிழ்க்கனல்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Redefining the constitutional morality citizen amendment act