சாலை மேம்பாடும் அதன் அரசியலும்

சாலை மேம்பாடு எப்போதும் வளர்ச்சிக்கே வித்திடும் என்று கொள்ளாமல், அதன் நேரிடை மற்றும் மறைமுக விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மகேஷ் கேசவபிள்ளை

சாலை கட்டமைப்பு ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எத்தகைய வளர்ச்சிக்காக, எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன; அதற்காக கொடுக்கப்படும் விலை மற்றும் அதன் பின்விளைவுகளை கணக்கில் கொள்வதும் முக்கியமானதே.

சாலை கட்டமைப்பு மேம்பாடு ஆதரவாளர்கள், முன்னுதாரணமாக காட்டுவது அமெரிக்காவைத்தான். அமெரிக்க சாலைகள் உலகிலேயே முதலிடம் பெற்றவை என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், அதன் பின்புலம், அதன் பின்னிருக்கும் அரசியல் மேலும் அதற்காக கொடுக்கப்பட்ட விலை இவற்றையும் அறிந்து கொள்வோம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கங்களில் அமெரிக்காவில் சாலைகள் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தன. சாமானிய மக்கள், நடக்கும் தூரங்களை நடந்தே கடந்தார்கள். பொதுப்போக்குவரத்து வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. தனியார் வாகனங்கள் குறைந்த அளவில் புழக்கத்தில் இருந்தன.

சாலை புரட்சி வெடித்தது. இது மோட்டார் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்ட காலம் என்பதையும் நினைவில் கொள்வோம். அகன்று விரிந்த சாலைகள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. நகர சாலைகள், பெரு நகரங்கள், புறநகர்களை இணைக்கும் சாலைகள், மாநிலங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்து பெருமளவு பயன்பாட்டுக்கு வந்தது. தனியார் கார்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் பெருகியது. கார் இல்லாத அமெரிக்கரே இல்லை எனும் அளவிற்கு அதிகரித்தது. கார் நிறுவங்கள் செல்வம் கொழிக்கத் துவங்கின. பொதுப் போக்குவரத்து முறை நலிவடைந்தது.

சாலை மேம்பாடு காரணமாக கார்கள் வாங்குவது பெருகியது, வளர்ச்சி மேம்பட்டது என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், இந்த கருத்தை பல சமூக ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

கார் விற்பனையை பெருக்குவதற்காகவே, பெரும் அரசாங்க நிதி செலவு செய்யப்பட்டு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதன் பின்னணியில், கார் தயாரிப்பு நிறுவனங்களும், எண்ணெய் நிறுவனங்களும் இருந்ததாக எடுத்துக்காட்டப்படுகிறது. இவர்களது lobbying காரணமாகவே, The Interstate Highway Act of 1956 கொண்டு வரப்பட்டு பெரும் சாலைகள் நிறுவப்பட்டன. சாலை விதிகள் கடைபிடிப்பது கடுமையாக்கப்பட்டது. அதுவரை சாதாரணமாக இருந்து வந்த Jay-walking பழக்க வழக்கங்கள் கட்டுப்பாடு, பார்க்கிங் விதிமுறைகள் இவை சட்டங்கள் மூலமாகவும், அவமானப்படுத்தப்படும் (public shaming) பரப்புரை மூலமாகவும், கடுமையாக செயல்படுத்தப்பட்டன.
தனியார் கார்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கவே இத்தகைய வழிகள் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது;
1920-30 களில் அமெரிக்காவின் ஏகதேசம் எல்லா பகுதிகளிலும் light- rail system trolley service எனப்படும் வெகுஜன சேவை இருந்தது. இத்தகைய பொதுப்போக்குவரத்து முறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

1947-ல் ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டாண்டர்ட் ஆயில் ஆஃப் கலிஃபோர்னியா, Firestone tire, Phillips Petroleum உள்ளிட்ட கம்பனிகள் light- rail system ஐ விலைக்கு வாங்கி அதன் தடங்களை அழித்து ஒழித்ததாக நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டது கவனிக்கத் தக்கது.

முட்டையில் இருந்து கோழி வந்ததோ, கோழியில் இருந்து முட்டை வந்ததோ, வரம்பு மீறிய சாலை விரிவாக்கமும், கட்டுங்கடங்கா கார்களின் பெருக்கமும் நல்ல விளைவுகளைத் தேடித் தரவில்லை. ஆனால், பல முன்னேறிய ஐரோப்பிய நாடுகள் சமச்சீரான, நிதானமான சாலை மேம்பாடு பணிகளை மேற்கொண்டன. ரயில் போன்ற வெகுஜன போக்குவரத்து முறைகள் தொடர்ந்து பேணப்படுகின்றன.

இன்றும் அமெரிக்காவில் ஒவ்வொரு தனிமனிதனும் குறைந்தபட்சம் ஒரு காராவது வைத்துள்ளார்கள். தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்துவிட முடியும்; ஆனால், கார் இல்லாமல் ஒரு நாள் கூட கழிக்க முடியாது என்ற நிலையில்தான் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு இருக்கிறது. குடியிருக்க வீடு இல்லாதவர்கள் கூட கார் வைத்திருக்கிறார்கள்; இது ஆரோக்கியமான வளர்ச்சிதானா? இத்தகைய ‘வளர்ச்சி’, கடுமையான சுற்றுப்புற மாசுபடுதலுக்கும், எண்ணெய் வளங்களை அழிப்பதற்கும் உதவியது என்பதே உண்மை.

மாசுக்கட்டுப்பாடு, எண்ணெய் சேமிப்பு, புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்களை மனதில் கொண்டு, பொதுப்போக்குவரத்து பயன்பாட்டைப் ஊக்குவித்தல், car pooling போன்ற முறைகளை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஒவ்வொரு தனி மனிதனும், ஒரு தனி பெரிய காரில் சென்று வரும் நிலைதான் நிலவுகிறது.

கார்களின் பெருக்கத்தின் மற்ற பக்க விளைவுகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்கள்: எரிபொருள் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு, விபத்துகள், அதீத நகரமயமாதல், உள்ளூர் கிராம பொருளாதார பாதிப்பு, காற்று மட்டும் ஒலி மாசுபாடு, இருதய நோய் பாதிப்புகள், விளைநில பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், ரயில் போக்குவரத்து அழிவு மற்றும் பல.

அமெரிக்காவிடமிருந்து எல்லா விஷயங்களையும் அப்படியே பின்பற்றும் பழக்கத்தை நீக்கிவிட்டு யோசிக்க வேண்டியது அவசியம்.

ஒரு குறிப்பிட்ட நல்ல நோக்கிற்காக சாலை மேம்பாடு செய்வதில் தவறில்லை; சாலை மேம்பாடு எப்போதும் வளர்ச்சிக்கே வித்திடும் என்று கொள்ளாமல், அதன் நேரிடை மற்றும் மறைமுக விளைவுகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அவசியம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close