பீட்டர் அல்போன்ஸ்
புத்தாண்டு பிறக்கிற நேரம், நாட்டில் புதிய மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம்! 2019 நாடாளுமன்றத் தேர்தலின் திசை வழியும் இப்போதே புலப்படுகிறது.
ஆனாலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை, வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக காங்கிரஸ் பார்க்கவில்லை. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலாகவும் கருதவில்லை. நாம் போற்றி வளர்த்த இந்தியா என்னும் தத்துவத்தை அடுத்த 50 ஆண்டுகளுக்கு போற்றி பாதுகாக்க வேண்டிய கருத்தியல் யுத்தமாக உணர்கிறோம். எனவேதான் இதை எங்கள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குகிற தேர்தல் என சுருக்கி, பா.ஜ.க.வின் சதி வலையில் சிக்க நாங்கள் விரும்பவில்லை.
தேசம் முழுவதும் மத நல்லிணக்கம், சமூக நீதி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைக்க விரும்புகிறோம். ஆனால் பாரதிய ஜனதாவோ இதை மோடி vs ராகுல் என அதிகாரப் போட்டியாக முன்னிறுத்த விரும்புகிறது.
எனவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, திசைதிரும்பிவிடக் கூடாது என நாங்கள் கருதினோம். அந்த அறிவிப்பு தேவையற்றது என்கிற நிலைப்பாடை காங்கிரஸ் எடுத்தது.
அதேசமயம், இந்தியாவில் மதச்சார்பற்ற ஒரு அணி காங்கிரஸ் பங்களிப்பு இல்லாமல் அமைய முடியாது என்பது எல்லோரும் உணர்ந்த எதார்த்தம். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் பவார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் அணி என்பதை ஏற்கனவே உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
அந்த அணியின் செயல்பாட்டை கூர்மைப்படுத்த வேண்டும்; தேர்தலில் வெற்றி பெறத்தக்க வகையில் மாற்ற வேண்டும் என்கிற அடிப்படையிலேயே ராகுல் காந்தி தலைமை என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு காங்கிரஸ் காரன் என்ற முறையில் மட்டுமல்ல, மத நல்லிணக்க இந்தியாவில் - சமூக நீதியில் - நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு வாக்காளன் என்ற முறையிலும் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கருத்தை வரவேற்கிறேன். மும்பையில் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் எனது இந்தக் கருத்தை முன் மொழிந்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் கருத்தால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கும் என்கிற கருத்தை பாஜக ஆதரவு ஊடகங்கள் முன்வைக்கின்றன. பாஜக.வையும், மோடியையும் எதிர்க்கும் கட்சிகளுக்கு இடையே எந்தெந்த மாநிலங்களில் ஒற்றுமை ஏற்படவில்லையோ, அங்கே மட்டும் இதில் சிறு தயக்கம் இருக்கலாம்.
உதாரணத்திற்கு, மேற்கு வங்கத்தில் மம்தா - இடதுசாரிகள் இடையிலான பிரச்னையில் காங்கிரஸை ஒரு நிலை எடுக்க வற்புறுத்துகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் இடையே ஏற்படவேண்டிய ஒற்றுமை காரணமாக நெருக்கடி இருக்கலாம். மற்றபடி, இதில் பிரச்னை எதுவும் இல்லை.
பல முனைகளிலும் தோற்றுப்போன மோடி அரசு; 2014-ல் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மோடி அரசு; 2019 தேர்தல் களத்தை மீண்டும் அடையாள அரசியலின் ஆர்ப்பாட்டக் களமாக மாற்ற முற்படுகிறது. ராமருக்கு ஆலயம் என்பதே 2019 தேர்தலுக்கு மீண்டும் பாஜக முன்வைக்கும் கோஷம் என கருதுகிறேன்.
இந்து மதத்திற்கு ஏகபோகமாக சொந்தம் கொண்டாடுவதன் மூலமாக மற்றக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இந்து விரோதிகள் என சித்தரிக்க நினைக்கிறது பாஜக. இந்திய ஜனத்தொகையில் 15 சதவிகிதம் மட்டுமே இருக்கிற மதச்சிறுபான்மையினர், 85 சதவிகித இந்து மக்களை அழித்துவிடுவார்கள் என்கிற தவறான பிரசாரத்தை பாஜக.வினர் முன்னெடுக்கிறார்கள். இதன் மூலமாக சமூகங்களுக்கு இடையே வெறுப்பு விதைகளை தூவி, தேர்தல் அறுவடையை முடிக்க நினைக்கிறார்கள்.
மோடி - அமித்ஷா கூட்டணியின் இந்த பாசிச வியூகத்தை உடைத்தெறிந்து நமது அரசியல் சாசன சட்டத்தையும், அது உருவாக்கித் தந்திருக்கும் நிறுவனங்களையும் பாதுகாத்து எதிர்கால இந்தியாவை வழிநடத்த ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பெரிய பொறுப்பும், கடமையும், தகுதியும் இருப்பதாக நான் கருதுகிறேன். நாட்டு மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள்.
(பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளின் மூலமாக தனி முத்திரை பதித்தவர்)