முனைவர் கமல. செல்வராஜ்
சாந்த சொரூபன், சபரிகிரிவாசன், கானகவாசன், கலியுக வரதன், அன்னதானப் பிரபு, ஏழைகளுக்கு ஈசன், எங்கும் நிறைந்த பரம்பொருள், ஏகாந்தவாசன் இப்படி எத்தனை எத்தனையோ பெயர்களுக்குச் சொந்தகாரன் சபரிமலை ஐயப்பன்.
இந்தப் பெயர்களெல்லாம் வெறும் உதட்டளவில் யாரோ ஒரு சிலரால் உச்சரிக்கப்படுபவை அல்ல, மாறாக கோடானுகோடி பக்தர்களின் உள்ளத்தின் அடிநாளத்திலிருந்து சரணகோஷமாய் எழும் பக்தி பரவசத்தின் வெளிப்பாடு.
அவலும் பொரியும்… நெய்யும் கதளிப்பழமும்… இருமுடிக் கட்டில் தாங்கி, தலையில் சுமந்து… பெரும் நதியும், அடர்ந்த காடும்… வானுயர்ந்த மலையும் கடந்து சாமியே… ஐயப்போ… சாமி சரணம்… ஐயப்ப சரணம்… என்னும் சரண கோஷத்தோடு செல்லும் ஐயப்பப் பக்தர்களுக்காக வனத்திலுள்ள கொடிய விலங்குகளாம் புலியும் கரடியும், சிங்கமும் யானையும் கூட வழிமாறிச் செல்லும் அற்புதக் காட்சிதான் அந்த சாந்த சொரூபனின் பேரருளுக்குச் சாட்சி.
வானமும் பூமியும் எப்படி அன்று முதல் இன்று வரை மாற்றமும், சந்தேகமும் இன்றி இயங்குகிறதோ அதுபோல்தான் சபரிமலை என்றால் ஆண்களும், பருவமடையா சிறுமிகளும், வயோதிக பெண்களும் செல்லும் புனித இடம் என்பது நிரந்தரமாக இருந்தது.
காலம் கலிகாலம்… அதனால்தான் ஐயப்பனுக்கு கலியுகவரதன்… என்றொரு பெயரும் வந்ததோ என்று இப்பொழுதுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏன்றால் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்” என ஊருக்குள் கூறும் பழமொழியைப் போன்று, கடந்த ஆண்டு சபரிமலையில் ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதுவரை சாந்தமாய் இருந்த சாந்த சொரூபனின் சன்னிதி, தீப்பிளம்பு போல் போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ், ராணுவம், பக்தர்கள் கைது, ஜெயில், தண்டனை என களேபரமாக மாறியது. பயபக்தியோடு ஐயனைத் தரிசிக்க வந்து கொண்டிருந்த பக்தர்கள் பயத்தில் உறைந்து போனார்கள். அதனால் வழக்கமாக வரும் பக்தர்களில் பாதிக்கும் அதிகமானோர் ஐயனைத் தரிசிக்காமல் வேதனையோடு வீட்டிற்குள்ளே முடங்கியும் போனார்கள். எப்படியும் அத்தனைக் களோபரக் காட்சிகளையும் தாங்கிக் கொண்டு கடந்த ஆண்டு கடந்து விட்டது.
இந்த ஆண்டு இன்று(நவ.17) முதல் மீண்டும் சபரிமலை சீசனுக்காக நடை திறக்க உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ஆன்லைன் புக்கிங் மூலம் இந்த ஆண்டும் சில அமைப்புகள் சார்பில் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஐயனின் அருளால் இந்த ஆண்டு, கேரளா மாநில அரசின் நடைமுறையில் ஒரு எதிர்பாராத மாற்றம் நேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே அமல்படுத்தியே தீருவோம் என அடம் பிடித்து சுயவிளம்பரத்திற்காகச் சபரிமலைக்கு வந்த பெண்களுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுத்த கேரள அரசு, இந்த ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு வரவேண்டாம், அவர்களுக்குப் எவ்வித தனிப்பட்டப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. இது ஐயப்ப பக்தர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுத்தி, பெருமூச்சுவிட செய்துள்ளது.
எனக்கு சுய அறிவு வந்தது முதல், தந்தையின் கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சபரிமலைக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்றுவருபவன் நான். என்னிடத்தில் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கலாமா? வேண்டாமா? எனக் கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வேன் அனுமதிக்கலாம் என்று. ஆனால் அதற்கான வழிமுறை மட்டும் இதுவல்ல என உரக்கச் சொல்வேன்.
எனென்றால் எனது சிறுவயது முதல் தற்போது வரை சபரிமலைக்குச் சென்று வருவதிலிருந்து, எத்தனேயோ நடைமுறை மாற்றங்கள் சபரிமலைக்குள் வந்துள்ளது. அதில் முதல் மாற்றம் முன்பெல்லாம் சபரிமலை சீசனுக்கு அதாவது நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் மகரஜோதி வரை மட்டும்தான் சபரிமலை நடை திறக்கப்படும். அதன் பிறகு அடுத்த ஆண்டு சீசனுக்குத்தான் நடைதிறக்கப்படும். இந்த நடைமுறை மிக உறுதியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சீசனுக்கு பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் நாளிலிருந்து ஒரு வாரகாலம் வரை பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி முன்பெல்லாம் சபரிமலைக்கு மலையேறத் தொடங்கும் பகுதியான பம்பையில் இருக்கும் கணபதி கோயிலில் கூட பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் தற்போது பம்பை வரை எந்த வயது பெண்களானாலும் செல்வதற்கு அனுமதி உண்டு. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் குறிப்பிடலாம்.
இந்த மாற்றங்கள் எதுவும், எவரும் நீதிமன்றத்தில் சென்று வழக்குத் தொடுத்து வாதாடிப் பெற்றவையல்ல. எல்லாம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பாகவே நிகழ்ந்தவை. அதுபோலவே சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு எவரும் வழக்குத் தொடுக்க தேவை இல்லை. அது அந்தந்த காலத்திற்கு ஏற்ப இயல்பாகவே நடந்தேறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் எனக்கில்லை.
அதுவரை பெண்களின் சகவாசமே வேண்டாம் என வனவாசம் செய்யும் அந்த சாந்த சொரூபனின் சன்னதி சாந்தமாக இருக்கட்டும். நாட்டின் நாலா திசையிலிருந்தும் வரும் அவரின் கோடானுகோடி பக்தர்கள் சாந்தியோடும், சமாதானத்தோடும் அந்த அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனின் அருளைப் பெற்று செல்லட்டும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கல்வியாளர்- பட்டிமன்ற பேச்சாளர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.