தேடி வந்த விருந்தாளிகளுக்கு வீட்டை கொடுத்துவிட்டு வெளிமுற்றத்தில் படுத்துக்கொள்ளும் வெள்ளந்தியான மனிதர்களைப்போல, ஐயப்ப பக்தர்களுக்கு காட்டைக்கொடுத்து விட்டு இடம்மாறுமாம் காட்டு யானைகள். கருநீலமோ, காவி காசாய வேசமோ சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களை சாமிகள் என சரியாக அடையாளம் காணுமாம் ஐந்தறிவு.
இங்கே மாலையிட்டு விரதமெடுத்து வந்தாலும் 10 க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் சாமிகளா..? சாபங்கள் அல்லவா என முட்டி மோதிக் கொண்டிருக்கிறது ஆறறிவு. இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வமென ஒன்று இருக்கலாம். ஆனால் கேரள இந்துக்கள் அனைவருக்கும் இஷ்டதெய்வமென்றால் முதலில் சபரிமலை ஐயப்பன்தான்.
சபரிமலைக்கு செல்பவர்கள் மாலையிட்டு விரதமிருக்க வேண்டுமென்பது விதி. கன்னிச்சாமியில் தொடங்குகிற பரவச அனுபவம் குருசாமி ஆன பிறகும் ஆண்களுக்கு வாய்க்கிறது. பெண்களுக்கு? அதென்ன பத்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு அப்படியொரு கட்டுப்பாடு?
ஒற்றையடிப்பாதை கூட ஒழுங்காக இல்லாத காலகட்டத்தில் காட்டுவழிப்பயணம் கடுமையானது. உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத 1955-ம் வருட காலகட்டம் வரை பெண்கள் சபரிமலைக்கு வந்து சென்றதாக சொல்கிறார்களே; அவர்களால் என்ன பங்கம் நேர்ந்து விட்டது?
குறிப்பிட்ட வயது பெண்கள் சபரிமலைக்கு வருவது தீட்டு என சாத்திரம் வகுக்கப்பட்டது இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கெதிராக செய்யப்பட்ட சதி என்கிறார்களே சரியா அது? கேள்வி எழாத இடங்களில் விடைகளுக்கு வேலையில்லை. இங்கே வராது என நம்பப்பட்ட கேள்வி வந்திருக்கிறது. தீட்டு என்று எதை சொல்கிறீர்கள்?பத்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட பெண்கள் செய்த பிழையென்ன?
10 வயது என்பது என்ன கணக்கு? 9 வயது பூப்பெய்திய சிறுமி சபரிமலை போகலாமா? 50 கடந்தும் உதிரம் நிற்காத பெண் போனால் தீட்டு இல்லையா? உடலுறுப்பு இயக்கமென்பது இயல்பான நிகழ்வு. உயிர் சக்கரத்தின் அச்சாணி. அதைச்சொல்லியா அனுமதி மறுப்பது? என்ன இது பிற்போக்குத்தனம். கேட்பார்களா இல்லையா?
உயர் ஜாதிக்காரர்களென காட்டிக்கொண்டவர்கள் கீழ்ஜாதிக்காரர்களென அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தார்கள். தீட்டு என்றார்கள். அதை நம்பிக்கிடந்த காலம் உண்டு.
இப்போதைய நிலை என்ன? தாழ்த்தப்பட்ட மக்களே அர்ச்சகராக இருக்கிறார்கள். இதைப்பார்த்து கடவுள் விக்ரகம் புன்னகைப்பதை கவனித்தீர்களா?!!
ஆணும் பெண்ணும் சமம் என அரசியல் சட்டம் சொல்வது உண்மையானால் உடற் கூறை காட்டி உரிமையை மறுப்பது என்ன நியாயம்? சபரிமலை தரிசனத்துக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றம் பச்சைக்கொடி காட்டுமென ஒருதரப்பு நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஏற்புடையதோ இல்லையோ சட்டத்தின் ஆட்சி நடக்கிற நாட்டில் உச்சநீதி மன்றம் சொல்வதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.
ஆனால் என்ன நடக்கிறது கேரளாவில்? இந்து அமைப்புகள்,அடையாளம் தெரியாமல் முகம் மூடிக்கட்டிய பக்த(?) பெருமக்கள், மல்லுக்கட்டியே பழக்கப்பட்ட பாஜ, காங்கிரஸ் கட்சிகளென ஆளாளுக்கு வசதியான வடிவங்களில் போராட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
பேசுகிற வாக்கியத்தில் கூட கூட்டணி கூடாதென ஒற்றை ஒற்றை வார்த்தைகளாய் பேசும் பினராய் விஜயன் இந்த இடியாப்ப சிக்கலை எப்படி சமாளிக்கப்போகிறார். எதிர்ப்பாளர்களுக்கு பயந்து போராட்டக்கார்ர்களுக்கு பணிந்தால் நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும். போலீஸ் நடவடிக்கையை கடுமையாக்கினால் தேர்தலின் போது மக்கள் மன்றத்துக்கு வந்தாக வேண்டும்.
சரணகோஷம் போட்டுக்கொண்டு தேங்காய் உடைப்பது போல வாகனங்களை உடைப்பது, ஊடக பெண் செய்தியாளர்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதெல்லாம் நாகரீக சமூகத்தில் ஏற்கத்தக்கதல்ல.. நடவடிக்கை கடுமையாகுமென சற்று அழுத்தமாகவே எச்சரிக்கிறது கேரள அரசு.
சபரிமலையில் பெண்கள் பிரவேசமென்பது கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துக்கு ஏற்புடையது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளும் தரப்புக்கு சாதகமாக இருக்கிறது. ஆக, பினராய் அரசு கிடைத்த களத்தில் சரியான ஆட்டத்தை ஆடித்தீர்க்குமென எதிர்பார்க்கலாம்.
(க.சந்திரகலா, கதை-கவிதை-கட்டுரை என தமிழ் இலக்கிய தளத்தில் வளர்ந்து வரும் ஆளுமை)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.