ரமேஷ் வெங்கட்ராமன்
கட்டுரையாசிரியர், மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர், தற்போது லண்டனில் இருந்து இயங்கிவரும் நிறுவன முதலீட்டாளர்
சபரிமலைக்குப் போய்விட்டு வந்த தாராளவாதியாக இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன். ஐயப்பனைத் தரிசிக்க அனைத்துப் பெண் பக்தர்களுக்கும் உரிமை உண்டு என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நித்ய பிரம்மச்சாரியான ஐயப்பன், மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் தன்னைத் தரிசிக்க வருவதால் பாதிப்படையக்கூடியவர் அல்லர். அவருக்கு சங் பரிவாரத்தின் பாதுகாப்பு வழங்குவது இருக்கட்டும், பழமைவாத பக்தர்கள் வழங்கும் பாதுகாப்புகூட அவருக்குத் தேவையில்லை.
ஆனால், இந்தியாவில் உள்ள தாராளவாதிகளோ, சபரிமலை விஷயத்தில் சுயலாபங்களுக்காகச் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது. ஐயப்ப பக்தர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளை சிதைக்கும்விதமாக உச்ச நீதிமன்றமும், கேரள அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளை இவர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். பக்தர்களோடு ஓர் உரையாடலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இடதுசாரி தாராளவாதிகள், சமயச் சீர்திருத்தத்துக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடுகிறார்கள். அவர்கள் நீதிமன்றங்களின் மாண்பையும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும் குலைக்க முயற்சி செய்கிறார்கள்.
தாராளவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் இலக்குகளில், சபரிமலைக்குக் கடைசி இடம்தான். நான் சென்ற இந்து ஆலயங்களிலேயே, ‘பார்ப்பன’தன்மை குறைவான, அதிக சமரசத்தன்மையும், அனைவரையும் அரவணைக்கும் தன்மையும் (10 முதல் 50 வரையுள்ள பெண்களை அனுமதிக்காததைத் தவிர) கொண்டிருப்பது சபரிமலைதான். பல நூற்றாண்டுகளாக, அனைத்து சாதியினரும் வர்க்கத்தினரும் 41 நாட்கள் விரதமிருந்து, நீண்ட காட்டுப்பாதையில் பயணம் செய்து, கோவிலுக்கு வந்துள்ளனர். கிறிஸ்துவரான கே.ஜே. யேசுதாஸும் எண்ணற்ற இஸ்லாமியர்களும் இந்தக் கோவிலின் நீண்டகால பக்தர்கள். சபரிமலைப் பாதையிலுள்ள எருமேலி வாவர் மசூதிக்கும் இவர்கள் செல்வார்கள். இங்கே பண பலமோ, அரசியல் பலமோ இல்லவே இல்லை (உதாரணமாக, திருப்பதி கோவிலில் உள்ள பல்வேறு வி.ஐ.பி. தரிசனங்களும் சிறப்புக் கட்டணங்களும் இருப்பது போல் இங்கில்லை). பணக்காரனோ ஏழையோ, அதிகாரமுள்ளவனோ, சாதாரணமானவோ, அனைவரும் தலையில் இருமுடி கட்டி பதினெட்டுப் படிகள் ஏறி சாமி தரிசனம் செய்கின்றனர். காலில் செருப்பு இல்லாமல், கறுப்பு ஆடை உடுத்தி, சரண கோஷம் எழுப்பியபடி, கடினமான மலையை ஏறும் ஐயப்ப பக்தர்களின் தோழமையையும் ஏற்றத்தாழ்வுகளற்ற தன்மையையும் ஒருவர் நேரில் பார்த்தால்தான் உணர முடியும்.
- நித்ய பிரம்மச்சாரியான ஐயப்பன், மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் தன்னைத் தரிசிக்க வருவதால் பாதிப்படையக்கூடியவர் அல்லர்.
- ஐயப்ப பக்தர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், வயது வித்தியாசமில்லாமல் அனைத்துப் பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்க முடியும்.
ஆனால், சபரிமலையின் ‘ஆணாதிக்க’ பழக்கங்களைக் குறைகூறும் தாராளவாதிகளுக்கு, அதன் உயர்ந்த பண்புகளும் முற்போக்கு எண்ணமும் தெரியவே இல்லை. இதற்காக பெண்களைக் கோவிலுக்கு அனுமதிக்காததை நான் பூசிமெழுகுகிறேன் என்று அர்த்தமில்லை. மாறாக, அதன் வளமான தாராளவாத பண்பாட்டை முன்னிறுத்தி, சபரிமலையின் கதவுகள் பெண்களுக்கும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதனைச் சொன்னேன். மேலும் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது ஐயப்பனின் மரபுசார்ந்த புராணங்களில் இருந்தும் பக்தி பாரம்பரியத்தில் இருந்தும் வருவதுதானே!
இந்த வழக்கை ஆரம்பத்தில் தொடுத்த இடதுசாரி வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களை நாடாமல், ஐயப்ப பக்தர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், வயது வித்தியாசமில்லாமல் அனைத்துப் பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்க முடியும். இத்தகைய ஓர் கனிவான மரியாதைக்குரிய அணுகுமுறையோடு, தார்மிக அழுத்தமும் இணைந்து, சக ஐயப்ப பக்தர்களாக அமைதியான போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு இருந்தால், அது நீதிமன்றத்தை நாடுவதைவிட வலிமையானதாக இருந்திருக்கும். இடதுசாரி தாராளவாதிகளின் இத்தகைய மனப்பூர்வமான முயற்சியின் மூலம், ஐயப்ப பக்தர்களின் மனத்தை மாற்ற முடியாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. அவர்களுக்குச் சட்டப் பூர்வமான தீர்வை நோக்கி நகர்வதற்கு ஓர் நியாயம் கிடைத்திருக்கும். ஆனால், இப்போதைய அணுகுமுறையோ, அவர்கள் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்களை மதிக்கவும் இல்லை என்ற தோற்றத்தோடு, விஷமத்தனமாக பிரச்னையும் செய்கிறார்கள் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. இறுதியாக, சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாலின சமத்துவத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எழவில்லை.
- மத்திய அரசை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட வைக்கும்போது, அது மதரீதியான அரசாங்கத்துக்கான வாசலைத் திறந்துவிட்டுவிடும்.
- எந்த மதரீதியான பரம்பரைப் பழக்கங்களை மாற்றவேண்டும் என்று சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அது அந்தச் சமூகத்துக்குள்ளேயே நிகழுமானால், அதனால் கிடைக்கும் பலன்கள் சிறப்பானதாக இருக்கும்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, இந்து மதத்தின் ‘முக்கியமான பழக்கங்கள்’ என்று சொல்லப்பட்ட, சதி, குழந்தைத் திருமணம், தீண்டாமை (அதனால் தலித்துகளுக்கு கோவிலுக்குள் நுழைய தடை), இருதார மணம், வரதட்சணை போன்ற தீய பழக்கங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அதற்குப் பின்னர் வந்த இந்திய ஆட்சியாளர்களும் தடுத்து நிறுத்தியதை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பேற்படுத்திய பழக்கங்கள். ஆனால், சபரிமலையில் பெண்களை அனுமதிக்காததை இதனோடு பொருத்திப் பார்ப்பது சரியல்ல.
பழமைவாதிகளின் நம்பிக்கைகள், பழக்கங்களுக்குள் நுழையும்போது - அவர்களால் எந்தத் தீங்கும் இல்லை - நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மதக்கோட்பாடு, சம்பிரதாயம் போன்ற கரடுமுரடான விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடும்போது, அவற்றில் போதிய தேர்ச்சி இல்லை என்பதால், அது தன் நம்பத்தனமையை இழந்துவிடும் வாய்ப்பே அதிகம். சபரிமலை தீர்ப்பில் சில அபத்தமான காரணங்கள் முன்வைக்கப்பட்டதைப் பார்த்தோம். உதாரணமாக, ஐயப்ப பக்தர்கள் ஒரு தனியான மதப்பிரிவினரா இல்லையா அல்லது பல்வேறு அடுக்குகளும் பன்மைத்தன்மையும் ஒன்றொடு ஒன்று கலந்திருக்கும் இந்து மரபில் இவர்கள் ஒரு பகுதியினரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதேபோல், மத்திய அரசை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட வைக்கும்போது, அது மதரீதியான அரசாங்கத்துக்கான வாசலைத் திறந்துவிட்டுவிடும். சபரிமலைத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முனையும் போது, சங் பரிவார் அமைப்புகள் காட்டும் எதிர்ப்பில் ஓர் உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது, மதச்சார்ப்பற்ற இந்தியா என்பது இந்து ராஷ்டிரமாக மாறாதவரை, இந்துகளுக்கு ஆபத்து என்பதே அதன் உட்கருத்து.
- மதச்சார்பற்ற நாட்டில், இவற்றை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்தான் அணுகவேண்டுமே அன்றி, எடுத்தவுடன், அதனை சட்ட ரீதியாக அணுகுவது சரியல்ல.
- நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நினைக்கும் தாராளவாதிகள், தங்கள் கருத்துகளை ஏற்காதவர்களையும் ஏற்கவைக்க வேண்டும்.
இதற்காக, தாராளவாதிகள் இங்கே நிலவிவரும் பல்வேறு பாகுபாடுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உதாரணமாக, கோவில்களிலும் பள்ளிவாசல்களிலும் தேவாலயங்களிலும் பெண் அர்ச்சகர்கள் இல்லை என்பதைப் பற்றியோ, திருமணங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது என்பதையோ எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், நம்மைப் போன்ற மதச்சார்பற்ற நாட்டில், இவற்றை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்தான் அணுகவேண்டுமே அன்றி, எடுத்தவுடன், அதனை சட்ட ரீதியாக அணுகுவது சரியல்ல.
சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து சமூக ரீதியான இயக்கத்தைக் கட்டமைத்த பெருமை கேரளத்துக்கு உண்டு. தமிழ்நாட்டிலோ, திராவிட இயக்கங்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தையும், தம் கொள்கைகளுக்குக் கிடைத்த ஆதரவையும் வைத்துக்கொண்டு, உயர் சாதியினரின் சமூக மேலாதிக்கத்தைப் பெருமளவு குறைத்தார்கள். வெளிநாடுகளிலும் இது நடந்திருக்கிறது. ஆங்கிலிகன் தேவாலயங்கள் பெண் பாதிரிமார்களை அனுமதித்துள்ளது. அது இங்கிலாந்து நீதிமன்றத்தின் உத்தரவினாலோ, அரசாங்கத்தின் அழுத்தத்தினாலோ நடைபெறவில்லை. மாறாக, பல்லாண்டுகளாக நடைபெற்ற உரையாடல் மூலம், தேவாலயத் தலைமை ஒப்புக்கொள்ளவைக்கப்பட்டது.
எந்த மதரீதியான பரம்பரைப் பழக்கங்களை மாற்றவேண்டும் என்று சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அது அந்தச் சமூகத்துக்குள்ளேயே நிகழுமானால், அதனால் கிடைக்கும் பலன்கள் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக, இன்று பல கோயில்களில் தலித் அர்ச்சகர்களை ஏராளமாக பார்க்கமுடிகிறது. இதற்குக் காரணம், வைணவ ஆழ்வார்களிலும் சைவ நாயன்மார்களிலும் உள்ள தீண்டத்தகாதவர்களின் பங்களிப்புகளை இன்றைய நவீனகால சீர்திருத்தவாதிகள் முன்வைத்து மனமாற்றத்தை ஏற்படுத்தியதே.
மொத்தத்தில், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நினைக்கும் தாராளவாதிகள், தங்கள் கருத்துகளை ஏற்காதவர்களையும் ஏற்கவைக்க வேண்டும். இப்படித்தான் தாராளவாத ஜனநாயகம் செயல்பட வேண்டும்.
சபரிமலை விஷயத்தில் நாம் பார்க்கும் இடதுசாரி தாராளவாதிகளின் வெறித்தனம் என்பது, நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் போற்றும் அதே மண்ணில் இருந்தே தோன்றியுள்ளது. இவர்களால் தாராளவாத மதிப்பீடுகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இதுதான் இந்து வலதுசாரித்தனத்தின் பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமளிக்கிறது. இறுதியில், ஒருகாலத்தில் மதச்சார்பற்ற நாடுகளாக இருந்த துருக்கி போன்ற நாடுகளில் நடைபெற்றது போன்று, மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகள், தாராளவாதிகளைத் திருப்பித் தாக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதன்மூலம், நாட்டில் கண்டிப்பாக செய்யப்படவேண்டிய சமூக மற்றும் மதச் சீர்திருத்தங்கள், பாதிக்கப்பட்டுவிடும் என்பது நிச்சயம்.
(கட்டுரையாசிரியர், மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர், தற்போது லண்டனில் இருந்து இயங்கிவரும் நிறுவன முதலீட்டாளர்)
தமிழில் : துளசி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.