Advertisment

பாரதி சொன்ன நடிப்பு சுதேசிகள்

ஆண்டாளுக்காக அதிரடி வசனம் பேசிய தமிழக பரிவார தலைவர்கள் இன்று ஆண்டாள்கள் நுழைந்தால், ஐயப்பன் கோவிலில் புனிதம் கெடும் என பேசுவது பாசாங்குத்தனம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala Women Entry, BJP Protest, சபரிமலை ஐயப்பன் கோவில், கேரளா, சபரிமலை போராட்டம்

Sabarimala Women Entry, BJP Protest, சபரிமலை ஐயப்பன் கோவில், கேரளா, சபரிமலை போராட்டம்

த.லெனின்

Advertisment

கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நவீன ஜனநாயக நெறி உருவாக காரணமாக அமைந்தது. ஆனால், இந்தியாவில் இந்து மதம் அனைவரையும் சமமாக பாவித்தது கிடையாது. எனவே சமூக இயக்கங்கள் தோன்றி தனக்கான இருப்புக்கும், சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இறங்கின.

பக்தி இயக்கமே அடிப்படையில் சமூக நீதிக்கான இயக்கமாகவே கிளர்ந்து எழுந்தது. அதில் சாதி - சமத்துவ கருத்துக்கள், ஆண்-பெண் பாகுபாடுகளுக்கு எதிரான வெகுசன கருத்தோட்டம் எழவும் அதுவே காரணியாக அமைந்தது.

தாழ்த்தப்பட்ட நந்தனார் வழிப்பாட்டு சுதந்திரம் வேண்டி போராடியவர். பல தடைகள் விதிக்கப்பட்டபோதும் சிவபெருமானே அவரது நிலத்தையெல்லாம் ஒரே இரவில் சாகுபடி செய்து உதவினாலும் தில்லை கோவில் அர்ச்சகர்கள் கோவிலுக்குள்ளே நந்தனாரை அனுமதிக்க மறுத்தனர். நந்தியே விலகி சிவதரிசனம் அளித்ததாக ஒரு சமரச ஏற்பாட்டை சமய இலக்கியங்களில் காண முடிகிறது.

வேத - ஆகமங்கள் மீது நம்பிக்கை இல்லாத சித்தர்கள் சாதி பிரிவினில் தீயை மூட்டுவோம்! என முழங்கி பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டனர். தமிழகத்தின் வடக்கே வள்ளலாரும், தெற்கே வைகுண்ட சாமிகளும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கான தனித்த வழிபாட்டு முறையையே உருவாக்கினர். தேவதாசி முறையை ஒழித்து சட்டவிரோதமாக்கியது, நரபலி, தீண்டாமை, கொத்தடிமை முறையை ஒழித்தது என ஒரு பெரிய பட்டியலே நீள்கிறது.

இன்று சபரிமலை புனிதம் பேசும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பரிவாரங்கள்தான் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வழக்கிட்டவர்கள். இந்த வழக்கில் பெண்கள் சார்பாக வழக்காடிய ரவிபிரகாஷ் குப்தா, சுஷேந்திர குமார் சௌகான், பிரேர்ன குமாரி, டாக்டர் லெஷ்மி சாஸ்திரி ஆகியோரும், இதில் பிரேர்ன குமாரி ஆர்.எஸ்.எஸ்.சின் பெண்கள் பிரிவான ராஷ்டிரிய சேவிக்கா சமிதியின் பொறுப்பாளர் ஆவார்.

தேவசம்போர்டு சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், கிருஷ்ணன் வேணுகோபால், உதயக்குமார் சாகர் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் ராஜீந்தர் சச்சார், சதீஷ் ஆகியோரும் இந்து வழக்கறிஞர்கள்தான்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதிகளும் இந்துக்களே. தீர்ப்பு வந்தவுடன் முதலில் வரவேற்றது பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சும்தான். மத்திய அமைச்சர் மேனகா காந்தி இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று வரவேற்றார். ஆனால், இன்று ஐயப்ப பக்தர்கள் என்ற போர்வையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கலவரங்களை நடத்துபவர்களும் அவர்களே!

ஆண்டாளுக்காக அதிரடி வசனம் பேசிய தமிழக பரிவார தலைவர்கள் இன்று ஆண்டாள்கள் நுழைந்தால், ஐயப்பன் கோவிலில் புனிதம் கெடும் என பேசி வருவது அவர்களின் அப்பட்டமான பாசாங்குத்தனத்தை படம் பிடித்து காட்டுகிறது.

சிவனே தனது உடலில் சரிபாதியை பெண்ணுக்கு கொடுத்து (சக்தி) அர்த்தநாரீஸ்வர வடிவம் ஏகியதை பெருமை பேசும் இவர்கள் தான் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது, எங்கள் பாரம்பரியத்தை குலைக்க அனுமதிக்க மாட்டோம் என வெறிக் கூச்சலிடுகின்றனர். நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது என்றால் ஒரு காலத்தில் பில்லி-சூனியம் எடுக்க, கட்டடங்கள் எழுப்ப நரபலியாக மனிதர்களையே பலி கொடுக்கும் வழக்கம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருந்தது! ஆனால் இன்று அது கொலை குற்றம்.

கேரள நம்பூதிரி சாதியில் முதலில் பிறந்த ஆண் மட்டுமே சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியும். அதன் பிறகு பிறந்த ஆண்கள் நாயர் பெண்களோடு குடும்பம் நடத்தலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆணின் பூர்வீக சொத்தில் அந்த குழந்தைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆக சேர்ந்து வாழலாம்; திருமண உரிமையை நிலை நாட்ட முடியாது என்ற வழக்கம் இருந்தது.

சமூக இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் அதிலும் நம்பூதிரி சாதியில் பிறந்த இடதுசாரி இளைஞர்கள் குறிப்பாக இஎம்எஸ் நம்பூதிரிபாட் போன்ற புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்கள் சொந்த சாதியின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி பெரும் மாற்றங்களை கொண்டு வந்தனர்.

பாரம்பரியம் எனக் கூறி இப்போது, முன்பிருந்த அந்த வழக்கத்தை அனுமதிக்கலாமா? அப்படி அனுமதிப்பது மடமை அல்லவா? சமூக மாற்றங்கள் இப்படித்தான் படிப்படியாக நிகழ்ந்துள்ளன.

நமது இந்திய விமானத்துறையில் பணிபுரியம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் முதல் பிரசவம் அல்லது 45 வயது இதில் எது முதலில் வருகிறதோ அத்தோடு அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார். இந்திய விமானக் கழகச் சட்டம் 1953 இப்படித்தான் விதித்திருந்தது. அப்படி வேலையிலிருந்து விடுவிக்கப்படுவதே வழக்கமாகவும் இருந்தது.

இதனை எதிர்த்து அதில் பணி புரிந்த பெண்மணியான நெர்கேஷ் மீர்ஜா இந்திய விமான கழகத்தில் கடைபிடிக்கப்படும் இந்த பாகுபாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த ஃபசலாலி சையது, முர்தா, வரதராஜன் அமர்வு விசாரித்து 1981 ல் ஒரு மெச்சத்தகுந்த தீர்ப்பை வழங்கியது. அதில் விமான நிறுவனத்தில் உள்ள இந்த விதிமுறைகள் பாலியல் ரீதியான பாகுபாட்டை அடிப்படையாக கொண்டது என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்றும் கூறி, அந்த விதியை சட்டவிரோதமாக்கி நீக்க வைத்தது, பெண்களின் உரிமையை நிலைநாட்டியது.

சபரிமலைக்காக வாதாடுவோர் பெண்கள் இங்கு அனுமதிக்காமைக்கு தூய்மையையே காரணமாக கொண்டு தடுப்பதாக கூறுகின்றனர். அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்ட இக்காலத்தில் இப்படி பேசுவது அறிவீனம்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக உபயோகிக்க எவ்வளவோ சாதனங்கள் வந்துவிட்டது. சானிட்டரி நாப்கின்கள் கூட அப்படிப்பட்டதுதான். வீர விளையாட்டுகள் தொடங்கி விண்வெளி பயணத்திற்கே அதை பயன்படுத்துகிறபோது இங்கே பயன்படுத்த முடியாதா? அல்லது அந்த நாட்களை கடந்த பிறகாவது அனுமதிப்பதில் என்ன சிக்கல்? கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோய்விடும். அவர்கட்கு தனித்த ஏற்பாடுகள் செய்து அனுமதிக்க தயாரா? மாட்டார்கள்.

ஆனால், திருட்டுத்தனமாக பணம் பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு அனுமதி வழங்கி இரவோடு இரவாக பெண்கள் கலந்து கொள்ளும் வழிபாடுகள் நடக்கும் விடயம் தெரிந்தும் பா.ஜ.க பரிவாரங்கள் அதை தட்டிக் கேட்காது.

ஐயப்பன் நைஷ்ட்டிய பிரம்மச்சாரி, எனவே, இங்கு பெண்களை அனுமதிக்க முடியாது என அடுத்த அஸ்திரத்தை ஏவுகிறார்கள். அப்படி என்றால் பெண் தெய்வங்கள் மற்றும் கன்னி தெய்வங்கள் சிலையைத் தொட்டு, நீரால் சுத்தம் செய்து பூஜை செய்யும் ஆண் புரோகிதர்களை இந்து மதமும், பாரம்பரியமும் அனுமதிப்பது ஏன்? இதை எதிர்த்து ஏன் கேள்வி எழுப்பவில்லை.

“ஒவ்வொரு அறிவியலும் பரிசோதித்து நிறுவப்படுவதையே உறுதி செய்கின்றன. மதங்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு தன்னை பரிசோதித்து நிரூபிக்கின்றனவா? அறிவியலுக்கும் வெளி உலக அறிவுக்கும் இது பொருத்தப்படுகின்றனவா? எனது அபிப்பிராயம் அப்படி நடைபெற வேண்டும்; அதனை சிறப்பாக, விரைவாக செய்யப்பட வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை எப்போதும் பொருந்தும் தங்க வரிகள்!

பொருளாதார, அரசியல் துறைகளில் உலக மய கண்ணோட்டத்தில் புதிய சீர்திருத்தம் கோரும் பா.ஜ.க. பரிவாரங்கள் சமயத்துறையில் இதுபோல் ஏன் கோர மறுக்கிறார்கள். இதைத்தான் நடிப்பு சுதேசி என பாரதி பாடினான். அது அப்படியே பா.ஜ.க.வுக்கு பொருந்துகிறது.

மாட்டுக்கறி விவகாரத்தில், திருவோணத்தை வாமன அவதாரம் எனச் சொல்லி கேரள மக்களிடம் மாட்டிக் கொண்ட அமித்ஷா இன்று ஆட்சியையே கலைப்போம் என ஆட்டம் போடுகிறார். நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தையே அவமரியாதை செய்கிறார்.

ரெஹ்மா பாத்திமா என்ற பெண்ணுரிமை செயல்பாட்டாளர் இந்த தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சபரிமலைக்கு வருகை தந்ததை இஸ்லாமிய குரோத கண்ணோட்டத்தோடு பரிவாரங்கள் எதிர்த்தன. ஒரு இஸ்லாமியர் எப்படி வரலாம் என்று வினா தொடுத்தனர். ஆனால் அவர் 2017ம் ஆண்டு வி ஹெச் பி நடத்திய தாய் மதம் திரும்பும் (கர்வாப்சி) நிகழ்வில் இந்துவாக மதமாற்றம் ஆனவர். சபரிமலைக்கு வருவதற்கு முன்பு இவர் பா.ஜ.க., சங்க பரிவார தலைவர்களை ரகசியமாக சந்தித்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சி இங்கும் வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், பந்தளம் ராஜ குடும்பம் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று பெரும் கூச்சல் எழுப்புகின்றன. ஆனால் சமஸ்தானங்கள் காலத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பெண்களின் முலைக்கு, முலை வரி என்ற கொடுமையான வரி விதிக்கப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமசாமி ஐயர் இந்தியாவோடு சமஸ்தானத்தை இணைக்காமல் பாகிஸ்தான் முகவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தியவர். வரலாற்றை கிளறினால் அரச குடும்பத்தினரின் உண்மை வெளிப்படும்!

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் போலி சாமியார்களின் ஆசிரமங்களில் பெண்கள் இன்று வரை அனுமதிக்கப்படுகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்படிப்பட்ட சாமியார்களை எதிர்த்து இவர்கள் பொங்கியதாகவோ, போராடியதாகவோ வரலாறு இல்லை. சலனமின்றி அமைதியாக கடப்பதே அவர்களது நடவடிக்கைகளாக உள்ளது.

ஆனால் பெண்களை புனிதப்படுத்தியது தங்கள் மதம் என்ற வெற்றுக் கூச்சல் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இஸ்லாமிய பெண்களின் முத்தலாக்கிற்கு முழங்கியவர்கள் இன்று ஏன் முடங்கிப் போனார்கள்?

இதைத்தான் ஆதாயத்திற்கு ஆற்றை கட்டி இறைப்பது என்பதோ!

(கட்டுரையாளர் த.லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்)

 

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment