Advertisment

சமூக நீதியின் முகம் சரத் யாதவ்

மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.

author-image
WebDesk
New Update
Sarath Yadav, the face of social justice

Sharad Yadav

அரியகுளம் பெருமாள் மணி - ஊடகவியலாளர், எழுத்தாளர்.

Advertisment

சரத் யாதவ் மறைந்தார். ராம் மனோகர் லோகியா வழிவந்த சோசியலிஸ்ட் சிந்தனையாளர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய அரசியல் கிளர்ச்சியில் முன் நின்ற மாணவர்களில் ஒருவர். எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகான வட இந்திய அரசியலை மடைமாற்றம் செய்த 'ஜனதா பரிவார்' தலைவர்களில் ஒருவர்.

இந்தியாவின் முப்பெரும் மாநிலங்களான உத்திர பிரதேசம். பிரிக்கப்படாத பீகார், ஒன்றுபட்ட மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்தும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் சரத் யாதவ். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், பீகாரின் மாதேபுரா, உத்தர பிரதேசத்தின் படூன் ஆகிய மூன்று தொகுதிகள் சரத் யாதவை மக்களவைக்கு அனுப்பிய பெருமை பெற்றவை. முப்பெரும் மாநிலங்களின் அரசியலில் கால் நூற்றாண்டு காலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் சரத் யாதவ்.

1974 ஜபல்பூர் இடைத்தேர்தலில் மாணவர் தலைவரான சரத் யாதவை வேட்பாளராக அறிவித்தார் ஜெயபிரகாஷ நாராயணன், கள அரசியலில் ஜெய பிரகாஷ் நாராயணனின் முதல் வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர் சரத்.

மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில் உள்ள குறைபாடுகளை சரத்யாதவ் அளவிற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டியவர்கள்்யாரும் இல்லை என சொல்லலாம் .

லோகியா வழிவந்த முலாயம் சிங் 1980 களின் இறுதியில் உத்திரபிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றார், ஜெயபிரகாஷ் நாராயணன் மாணவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ் ஏறக்குறைய அதே காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார், ஆனால் சரத் யாதவின் அரசியல் நாடாளுமன்றத்தை மையப்படுத்தியே அமைந்தது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பித்த அவருடைய அரசியல் பயணம் மிகவும் நீளமானது. ஏழு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மூன்று முறை மாநிலங்களவைக்கு சென்றார். 1989 விபி சிங் அமைச்சரவையிலும், 1999 வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

சரண் சிங், வி.பி. சிங், தேவகவுடா, வாஜ்பாய் என பல பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியவர், லாலு பிரசாத், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களோடு அரசியலில் பயணித்தவர். இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் வலிமை பெற்றிருந்த காலகட்டத்தில் இவரது அரசியல் பயணம் ஆரம்பமானது. ஜனதா கட்சிகள் இந்திய அரசியலை மறுவடிவமைப்பு செய்த காலகட்டத்தில் அதன் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் சரத் யாதவ். வட இந்திய அரசியலில் சமூக நீதிப் பேசியவர் சரத் யாதவ் என்பதே இவரது பெருமைகளுள் தலையாயது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் நலனில் அதிக அக்கறை செலுத்தியவர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் சமூக நீதிப் பார்வையை விசாலமாக்கி பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் அதிக பங்களிப்பை பெற்றுத் தந்தவர்களில் ஒருவர் என சரத் யாதவை குறிப்பிடலாம்.

1981 அமேதி இடைத் தேர்தலில் ராஜீவ் காந்தி போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட்டவர். 1989 ல் ராஜீவ் காந்தி ஆட்சி நிறைவு பெற்றதற்கும் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைந்ததற்கும் இடையிலான பத்தாண்டு கால தேசிய அரசியலின் சித்தாந்தத்தை, திசை வழியை தீர்மானித்தவர்களில் இவரும் ஒருவர். தனது எழுத்தாலும், பேச்சாலும் பாராளுமன்ற நடவடிக்கைகளாலும் சோசியலிச சிந்தனைகளை, சமூக நீதியை தொடர்ந்து முன்னெடுத்தவர் சரத் யாதவ். மத்திய பிரதேசத்தில் 1947 ஆம் ஆண்டு பிறந்த சரத், ரேகா யாதவை கரம் பிடித்தார். ஆணொன்று, பெண்ணொன்று என இரண்டு குழந்தைகளின் தந்தை. ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரி.

லோகியாவின் சீடர், ஜெயபிரகாஷ் நாராயணனின் முதன்மை மாணவர், எமர்ஜென்ஸி கால போராளி, சோசலிச சிந்தனையாளர், சமூக நீதி செயற்பாட்டாளர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், தனது அரசியலால் இந்திய ஜனநாயகத்தை வலிமைப்படுத்தியவர்களுள் ஒருவர் சரத் யாதவ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Nitish Kumar Lalu Prasad Yadav Rjd Party Jd U
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment