சர்கார்: சமூக அக்கறை என்கிற முக்காடு எதற்கு?

Sarkar controversy: நிஜமான படைப்பாளிகள் பறவைகளைப் போல.. என்ன நிர்பந்தமென்றாலும் சிறகுகளை கத்தரிக்க அனுமதிக்கமாட்டார்கள்.

By: November 10, 2018, 5:17:17 PM

க.சந்திரகலா

குளத்திலிருந்து மீட்ட கிழவி கிணற்றில் விழுந்த கதையாகியிருக்கிறது வருண் ராஜேந்திரனிடமிருந்து மீட்ட சர்க்காரின் கதை.

கடலில் இருக்கும் தண்ணீரின் கோபம் காலம் வரைக்கும். கலயத்திலிருக்கும் தண்ணீரின் கோபம் வாய் கொப்புளிக்கும் வரைக்கும். இங்கே திரை கதாபாத்திரங்களின் கோபம் என்பது இரண்டாம் ரகம். சினிமா என்பது ரசிகனின் கண், காது வழியாக கண்டதையும் திணித்து முழுக்க முழுக்க கல்லா நிரப்பும் முயற்சி. பிறகெதற்கு சமூக அக்கறை என்கிற முக்காடு?

தமிழக தேர்தல் அரசியலில் இலவசங்கள் கோலோச்சத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது அதைக் கொளுத்தி குளிர்காய வேண்டிய அவசியமென்ன? சரி.. கொளுத்தியதுதான் கொளுத்தினார்கள். இலவசமாக கிடைத்த எல்லாவற்றையும் கொளுத்த வேண்டாமா? அதிலென்ன பாரபட்சம்? இன்றைக்கு அது தானே கேள்வியாகி்யிருக்கிறது?

சமூகத்தில் புரையோடிப் போன புண்களுக்கு களிம்பு பூசுவதை விட்டு, தேடித்தேடி சிரங்குகளை சொறிகிற வேலையை முதல்வர் கனவிலிருக்கும் அத்தனை நடிகர்களும் செய்கிறார்கள். இந்த எளிய சூத்திரத்தை கொண்டு அரசியல் கணக்கில் சரியான விடை காண முடியுமென விஜய் எப்படி நம்பலாம்.

சர்க்கார் படத்துக்கெதிராக ஆளுங்கட்சியினர் கொந்தளிப்பார்கள் என்பது விஜய் தரப்பு எதிர்பார்த்தது தான். கோமளவல்லி என்ற பெயர் திட்டமிட்டு வைக்கப்பட்டதென்பது யாருக்கு தெரியாது?! பிறகெதற்கு அது தொடர்பான சம்பவங்களை காட்சிப்படுத்தினார்கள்? திரைக்கதைக்கு கட்டாயம் அந்த காட்சி தேவையென்றால் ஏன் மறுதணிக்கைக்கு உடன்பட்டார்கள்?!

நிஜமான படைப்பாளிகள் பறவைகளைப் போல.. என்ன நிர்பந்தமென்றாலும் சிறகுகளை கத்தரிக்க அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் அப்படியில்லை. இலவசங்கள் தான் எல்லா கேடுகளையும் கை பிடித்து வழிநடத்துகிறதென்றால் அதன் காரணமாக தன்னிறைவு அடைந்த எளிய மக்கள் உங்களால் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.

இலவசங்கள் தவறல்ல… அதற்கான பயனாளிகள் தேர்கிற முறைகளால், மெத்தைகளில் கரன்சி நிரப்புகிற அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் தவறாகிப்போகிறது. ஏன், இதற்கு உத்தரவிட்டவர்களை நேரடியாக சந்தித்த நிமிசங்களில் கேட்கவில்லை.?

விஜய் படமென்றால் பாட்டு இப்படியிருக்க வேண்டும், பைட் இப்படியிருக்கவேண்டும் என திட்டமிடுபவர்கள், கதை மட்டும் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என நினைக்கிறீர்கள். இப்போதைக்கு குளம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே உங்கள் குறி.

கொஞ்சம் கவனம் விஜய். அதே குட்டையில் திமிங்கலம் பிடிப்பவர்கள் தமிழக அரசியல் களத்தில் இருக்கிறார்கள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Sarkar against freebies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X