ஒரு குழந்தைக்கு இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். வழக்கு மன்னன் சாலமனிடம் வருகிறது. பிரசவ வலி வந்து பெற்றவளுக்கும், பிரச்னையை உண்டாக்க வந்தவளுக்கும் வித்தியாசத்தை கண்டுபிடித்த மன்னன் குழந்தையை நிஜமான தாயிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவளுக்கு தண்டனை வழங்குகிறான். இது கதை.
இங்கே திரைக்கதை மன்னன் பாக்யராஜிடமும் ஒரு திருட்டு வழக்கு வருகிறது. வந்திருப்பது கர்ப்பத்தில் பிறந்த குழந்தை திருட்டு அல்ல. முழு மூளைக்காரனின் கற்பனையில் ஜனித்த கதை திருட்டு.
பெரிய கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் 'சின்ன உடல்வாகு வாய்த்தவன்' ஆகப்பெரிய திருடனாக இருப்பான் என்கிற பொதுவான அனுமானத்தைக்கொண்டு இந்த திருட்டில் ஒரு முடிவுக்கு வர முடியாது. இது உள்ளூர் முருங்கைக்காயை வயாகரா ரேஞ்சுக்கு உலக பிரபலமாக்கிய பாக்யராஜுக்கும் தெரியும். தனது கண்களை அகல விரித்து வரிக்கு வரி ஆராய்கிறார்.
வருண் ராஜேந்திரன் என்பவர் 2007-ல் எழுதி பதிவு செய்து வைத்திருந்த செங்கோல் என்ற கதை தான் அப்படியே சர்கார் படமாக உருவாகியிருப்பதை உறுதி செய்து சான்றளிக்கிறார் அவர் . கூடவே சட்ட நிவாரணம் தேடிக்கொள்ளச் சொல்லி தனது கையாகாலாதனத்தையும் காட்டும் போதுதான் விவகாரம் பல்லிளிக்கிறது.
தென்னிந்திய சினிமா எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் கே .பாக்யராஜ் ஒரு அதட்டல் கூட விடவில்லை. எவருக்கோ அச்சப்படுகிறாரென்றால் எதற்கு இப்படியொரு அமைப்பு? பொறுப்பு?
லாட்ஜ் வைத்தியர்கள் போட்டுக்கொள்ளும் கேள்விப்படாத டிகிரியை போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஆளை விட நீள பொறுப்புகளுக்கு ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் என்ன செய்திருக்க வேண்டும்.?
கதை வருண் ராஜேந்திரன் என டைட்டிலில் கௌரவப்படுத்திவிட்டு, பெரும்தொகை கொடுத்து பேசி முடித்திருக்க வேண்டாமா?
செய்யமாட்டார்கள்? தனது ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனதில் கதாநாயகன் விஜய் கொள்கிற ஆவேசம்தான், அவரை ஆட்சியமைக்கிற சர்கார் ஆக்குகிறது என்பது கதை என்கிறார்கள்.
உச்ச நட்சத்திரங்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளுகிற இடத்தில் இன்றைக்கு விஜய் படங்கள் இருக்கிறது. விஜய் ஸ்டிக்கர் கம்மல் ஒட்டிக்கொண்டால் அவரது ரசிகர்கள் ஓட்டை போட்டு கடுக்கன் மாட்டுகிற அளவுக்கு அவரை கண்டு வளர்கிறார்கள் அவருக்கான ரசிகர்கள்.
தாவணி கட்டுகிற பெண் கல்யாண ஆசையை வீட்டாருக்கு காட்டுவதற்காக , காஞ்சிபுரம் பட்டுப்படவைக்கு மாறுவதைப்போல, சர்க்கார் படமும் விஜயின் அரசியல் ஆசையை வெளிப்படுத்த கிடைத்த களமென பேசப்படுகிறது. முதல்வர் கோலத்தின் முதல் புள்ளிதான் இதுவாம்.
ஆக, படம் வெளியாவதில் காட்டும் ஆர்வத்தில் அரை விழுக்காட்டைக்கூட , அழுது நிற்கும் வருண் ராஜேந்திரனுக்கு காட்ட விரும்ப மாட்டார் என்பதுதான் இப்போதைக்கான நிஜம். இது மாத்திரமல்ல.. பிரபல நடிகர்களுக்கு தனது கதையை உண்ணக் கொடுத்துவிட்டு பட்டினியில் செத்த தமிழ் சினிமா கதை எழுத்தாளர்கள் விட்டுச்சென்ற கண்ணீர் தடங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன.
சர்கார் பாடல் வெளியீட்டின் போது சிம்டாங்காரன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடியபோது ஆளை அசத்துபவன், கண் இமைக்க மறந்து பார்த்து நிற்க வைப்பவன்... இப்படி ஏதேதோ சொன்னார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.
கதைத் திருட்டை கண்டு கொள்ளாதவன் என்பதை மட்டும் கடைசிவரை சொல்லவேயில்லை.