உயிர்களுக்கு விலை பேசல் தகாது

இங்கே எழுப்பப் படும் கேள்வி, சிறுமியைக் கொலை செய்தக் கயவர்களைப் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் அவர்களைத் தூக்கிலிடுங்கள் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். அதைத் தவிர்த்து...

By: July 25, 2020, 8:17:41 PM

சிறுவயதில் கிராமப்புறங்களில் வீட்டின் முற்றத்தில் வட்ட வடிவில் சுற்றியிருந்து “குலேகுலே முந்திரிக்கா… நரியே நரியே ஓடிவா…” எனப் பாடிப்பாடி ஒரு விளையாட்டை சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடுவார்கள். அந்தப் பிள்ளைகளின் விளையாட்டு, பார்ப்பவர்களைப் பரவசமூட்டுவதாக இருக்கும். பிள்ளைகளுக்கோ மிகவும் குதுகலமாக இருக்கும்.

அன்றைக்கு அந்தக் குழந்தைகள் விளையாட்டிற்காகப் பயன்படுத்திய அந்தக் “குலேகுலே முந்திரிக்கா…” என்றப் பாடல் இன்றும் பெரியவர்களின் காதுகளில் ரீங்காரமாக ஒலித்து, ஒரு வித ஆனந்தத்தைத் தந்து கொண்டேயிருக்கும். ஆனால் அந்த “குலேகுலே” என்ற பாடல் இன்று நிஜமாகவே ஊரெங்கும் “கொலை கொலை” என உருமாறி மக்கள் மத்தியில் ஒருவித ஐயப்பாட்டை உருவாக்கியிருப்பதுதான் வேதனைக்குரியது.

இன்றைக்குச் சமூக ஊடகங்களை இரண்டேயிரண்டுச் செய்திகள்தான் அபகரித்துள்ளன. அவற்றில் ஒன்று கொடிய கொரோனா மற்றொன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து, எல்லையான கன்னியாகுமரி வரை தினம் தினம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் ஆகியன.

அவற்றில் கொலைகளைப் பொறுத்தவரை, தள்ளாடும் முதியவர்களிலிருந்து, பச்சிளம் குழந்தைகள் வரை சில காமக்கொடூரர்களின் கழுகுப் பிடிக்குள் சிக்குண்டு மூச்சற்றுப் போகின்றன.

அதனால், தற்போதெல்லாம் காலையில் எழுந்ததும் பத்திரிகைகளைப் படிப்பதும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதும் ஒருவிதப் பதற்றத்தைத் தருகின்றனவே தவிர, மனதிற்கு அமைதியான, அறிவார்ந்தச் செய்திகள் என்பவை அருகியேயுள்ளன.

இப்படி அநியாயமாகக் கொலைகள் நடப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம், இந்தக் கொலைகளின் பின்னணியில் நடக்கும் போராட்டங்களின் போக்குக் கொலையை விட அநியாயமாகயுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தந்தை – மகன் கொலை, இந்த நாட்டையே உலுக்கியுள்ளச் சம்பவம் அனைவரும் அறிந்ததே.

அந்தக் கொலையின் அச்சம் இன்னும் மக்களின் மனங்களிலிருந்து மாய்வதற்குள், அடுத்து, அதே சாத்தான்குளத்தில் ஒரு எட்டு வயது சிறுமியை கொடூரமாகக் கொலை செய்திருப்பதும், அதன் பின்னணியில் நடந்திருக்கும் போராட்டங்களும், அதற்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் நிவாரணமும், தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறிவிடுமோ என்ற கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றதும், சிறுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்ப்பதற்குச் சென்றுள்ளார். அன்று மதியம்  சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தப் போது தனது மகளைக் காணவில்லை. செய்தி காட்டுத் தீ போல் ஊர் முழுக்கப் பரவ ஊரார் சேர்ந்து வழக்கமானத் தேடுதலுக்குப் பிறகு, சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு ஒரு பெரிய தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்டு அருகிலுள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்திருந்ததைக் கண்டுப்பிடுத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சிறுமி டி.வி பார்க்கச் சென்ற வீட்டிலுள்ள இளைஞன் மூத்தீஸ்வரனும் அவது நண்பனும் சேர்ந்து கொலை செய்ததுத் தெரிய வரவே அவர்கள் இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த சிறுமியின் உறவினர்களும் சில அரசியல் கட்சியினரும் நடத்தியிருக்கும் கூத்துதான் அனைவரின் மனதையும் அழுத்துகிறது. டாக்டர்களின் வழக்கமான நடைமுறைக்குப் பிறகுச் சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போது, உறவினர்களும், சில அரசியல் கட்சிகளும் சேர்ந்து, சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும், வீடுகட்டுவதற்கு மூன்று சென்ட் நிலமும் வழங்க வேண்டும் என்றால்தான் உடலை வாங்குவோம் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இரண்டு நாள்கள் சிறுமியின் உடலை வாங்காமல் பேச்சுவார்த்தை, போராட்டம் எனத் தொடர்ந்துள்ளது. அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், உறவினர்களிடமும் போராட்டக்காரர்களிடமும் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமியின் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியும், மூன்று சென்ட் நிலத்தில் பசுமை வீடு கட்டிக்கொடுக்கப்படும். கூடவே இந்த சிறுமியின் பத்து வயதான அண்ணனின் படிப்பு செலவு அனைத்தும் அரசு ஏற்கும் என வாக்குறுதி அளித்தப் பிறகே சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இங்கே எழுப்பப் படும் கேள்வி, சிறுமியைக் கொலை செய்தக் கயவர்களைப் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் அவர்களைத் தூக்கிலிடுங்கள் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். அது நியாயமாக இருந்திருக்கும். அதைத் தவிர்த்து ஓர் உயிருக்கு ஒரு கோடி ரூபாயும் மூன்று சென்ட் நிலமும் கேட்டு போராட்டம் நடத்தியிருப்பதும், அதற்காக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாதம் ஐயாயிரம் ரூபாயும், மூன்று சென்று நிலமும் பசுமை வீடும், அண்ணனின் படிப்பு செலவும் ஏற்றிருப்பதும் வருங்காலத்தில் இது போன்ற கொடூரச் செயலுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகாதா?

மேலும், சில அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற கொலைகள் நடக்கும் போது அவர்களின் குடும்பங்களுக்கு லட்சக்கணக்கானப் பணத்தை நிவாரணமாக வழங்கி நல்ல பிள்ளை பெயர் வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற கொலைகள் நடக்காமல் இருப்பதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டுமே தவிர இதைப் போன்று லட்சங்களைக் கொடுத்துக் கொடையாளிகளாவது, கொலையாளிகளுக்கு மீண்டும் மீண்டும் வளமாகுமே தவிர, இப்படிப்பட்ட அசம்பாவிதங்களுக்கு ஒரு போதும் தீர்வாகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் படுகொலைகளுக்கும், பணம், சொத்துக்காக நடைபெறும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசும், நீதித்துறையும் புதியக் கடுமையானச் சட்டங்களை இயற்ற வேண்டுமே தவிர, இதுபோன்ற தவறான நிவாரணங்கள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர வேண்டும்.

முனைவர் கமல.செல்வராஜ்,
அருமனை. பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Sathankulam 8 year old girl assaulted case govt announces relief not resolution to murder sexual harassment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X