அரசியல் சாசனப் பதவியில் இருப்பவர்கள் ‘கட்சி அரசியலில்’ அல்ல, ‘அரசியலமைப்பு அரசியலில்’ ஈடுபட வேண்டும்; தமிழக ஆளுநர் வழக்கில் தெளிவுப்படுத்திய உச்ச நீதிமன்றம்

அரசியலமைப்பைச் செயல்படுத்துபவர்கள் ஒரு நியாயமான காலக்கெடுவிற்குக் கட்டுப்படாவிட்டால், அரசியலமைப்பின் உண்மையான நோக்கை நிறைவேற்ற முடியாது

அரசியலமைப்பைச் செயல்படுத்துபவர்கள் ஒரு நியாயமான காலக்கெடுவிற்குக் கட்டுப்படாவிட்டால், அரசியலமைப்பின் உண்மையான நோக்கை நிறைவேற்ற முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn guv sc

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி (கோப்பு படம்)

கட்டுரையாளர்: அவானி பன்சால்

நமது அரசியலமைப்பில் ஆளுநர்களின் பங்கு என்ன? மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் வெவ்வேறாக இருக்கும் போது அரசியலிலும், மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளிலும் இந்தக் கேள்வி பரவலாக விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பு மூன்று குறிப்பிடத்தக்க விசயங்களைச் செய்திருக்கின்றது.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

முதலில், பார்டிவாலா மற்றும் மகாதேவன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ல் (இது 'மசோதாக்களுக்கு ஒப்புதல்' வழங்குவதற்கான நடைமுறையை முன்வைக்கிறது) ஒரு குறிப்பிட்ட கால அவசியத்தைப் பார்க்கிறது, அதன்படியே ஆளுநர்கள் ஒரு மசோதாவைப் பற்றி தங்கள் நிலையை முடிவு செய்ய வேண்டும் - அது ஒப்புதலாக இருக்கலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை ஒதுக்கி வைக்கலாம். முக்கியமாக, பிரிவு 200 எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை, இதன் மூலம் "பாக்கெட் வீட்டோ" (கால வரையறையின்றி கிடப்பில் போடுதல்) என்பது நடைமுறைக்கு வந்தது, இதன் அடிப்படையில் ஆளுநர் ஒரு மசோதாவின் தலைவிதியை தீர்மானிக்காமல் அவர்கள் விரும்பும் வரை "நிலுவையில்" வைத்திருக்க முடியும்.

ஆனால், சட்டப்பிரிவு 163-ன்படி, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதால், அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அதை மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இருப்பினும், கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த பின், மாநில சட்டமன்றம் இரண்டாவது முறையாக மசோதாவை நிறைவேற்றினால், அவர் ஒரு மாதத்திற்குள் 200வது பிரிவின் கீழ் அவரது விருப்பத்தைச் செயல்படுத்த வேண்டும்.

Advertisment
Advertisements

மூன்று மாதங்கள் முதல் ஒரு மாதம் வரையிலான இந்த காலக்கெடு ஒரு குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு வளர்ச்சியாகும், இது "நேரத்திற்கான உரிமை" என்ற ஒரு புதிய சட்ட ஆய்வின் ஆரம்பமாக விவரிக்கப்படலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டாளர்கள் எந்தவொரு நியாயமான காலக்கெடுவிற்கும் கட்டுப்படாவிட்டால், அதன் உயிரோட்டத்தை நிறைவேற்ற முடியாது.

அரசியலமைப்பு விதிகளில் நேர வரம்புகள் எதுவும் இல்லாத நிலையில், இது நீதித்துறை மீறலா என்று கேட்கலாம்? ஆனால் 200 மற்றும் 163 வது பிரிவுகளின் ஒருங்கிணைந்த விளக்கங்களுக்கு வழங்கப்பட்ட "உள்நோக்கத்தின் விளக்கம்" ஒரு உயர்ந்த சட்ட வழியாகும், இது அரசியலமைப்பின் பல இடங்களில் "நேரத்திற்கான உரிமை" செருகப்படுவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. நீதிமன்ற அமர்வு "நேரத்திற்கான உரிமை" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவில்லை, ஆனால் நேர வரம்புகள் இல்லாத நிலையில், ஆளுநரின் செயல்கள் நேர்மையற்ற முறையில் செயல்படுவதாக சுட்டிக்காட்டியது.

இரண்டாவது விசயம், அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் அரசியலமைப்பிற்கு விசுவாசமாகச் செயல்பட வேண்டுமா அல்லது அவர்களை நியமித்த கட்சிக்கு விசுவாசமாக செயல்பட வேண்டுமா என்பது இந்தியாவில் அரைக்-கூட்டாட்சி முறையின் செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆளுநர்கள் தங்களை நியமித்துள்ள கட்சியின் நலன்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக, சுமூகமான மத்திய-மாநில உறவுக்கு இடையூறாக இல்லாமல் பாலமாக செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. அனைத்து அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களும் "கட்சி அரசியலில்" அல்ல, "அரசியலமைப்பு அரசியலில்" ஈடுபட வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் ஒரு பாராட்டத்தக்க வேலையை நீதிமன்றம் செய்துள்ளது.

இறுதியாக, ஆளுநர் ஒப்புதலை  நிறுத்தியிருந்ததன் காரணமாக மாநில சட்டமன்றம் இரண்டாவது முறையாக அதை நிறைவேற்றியிருந்தால், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியதன் மூலம், அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் "பகுப்பாய்வு" என்பதை விடவும் "செயல்முறை" முக்கியம் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எழுத்தாளர்கள் சிப் ஹீத் மற்றும் டான் ஹீத் அவர்களின் "தீர்க்கமான" என்ற புத்தகத்தில் "பகுப்பாய்வு" என்பதை விட "செயல்முறையின்" முக்கியத்துவத்தை விளக்குகிறார்கள். டேன் லொவேல்லோ மற்றும் ஒலிவியர் சிபோனி ஆகியோரின் ஆராய்ச்சியைப் பயன்படுத்தி, ”ஆயிரம் பெருநிறுவன முடிவுகளை ஆறு காரணி மூலம் ஆய்வு செய்தபோது பகுப்பாய்வு செய்வதை விட செயல்முறை முக்கியமானது" என்று ஹீத் எடுத்துறைக்கிறார். அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள், குறிப்பாக கவர்னர்கள், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் ஒப்புதலை "பகுப்பாய்வு" அடிப்படையில் நிறுத்தி வைத்திருப்பதாக நியாயப்படுத்துவது போதாது. அதற்கு பதிலாக, ஆளுநர்கள் மற்றும் அனைத்து அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் ஒரு "செயல்முறையை" பின்பற்ற வேண்டும். "சட்டத்தின் ஆட்சி" மற்றும் அரசியலமைப்பின் கருத்துரு "செயல்முறைக்கு" ஒரு விருத்தமே ஆகும்.

குறிப்பாக சமீப காலங்களில் நாம் காண்பது, பல்வேறு அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்களின் எதிரெதிர் நிலைப்பாடாகும், அதன் மூலம் முன்னேற்றத் திட்டங்களை தடுமாற்றம் செய்து, அற்ப அரசியலிற்காக வளர்ச்சி பீடத்தின் மீது பலி கொடுக்கப்படுகின்றது. இந்த தீர்ப்பின் தாக்கங்கள், தமிழகத்தில் தற்போது "ஒப்புதல் பெற்றதாக" கருதப்பட்ட 10 மசோதாக்களுக்கு அப்பாலும் செல்லும். இது இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியலமைப்பின் பதவி வகிப்பவர்களுக்கு இடையிலான உறவை மறுவரையறை செய்யும். காலம் இந்தத் தீர்ப்பை நமது அரசியலமைப்பு வரலாற்றின் பதிவுகளில் மிகச்சிறந்த ஒன்றாக பொறித்து வைக்கும்.

கட்டுரையாளர் ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.

மொழிபெயர்ப்பு: எம். கோபால் 

Supreme Court Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: