scorecardresearch

பாலைவனச் சோலையான பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியர்களின் பணிச்சுமையை தாங்க முடியாத அளவு அதிகரிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கண்ணன்
தமிழக அரசு முதல் ஆண்டை நிறைவுசெய்திருக்கும் வேளையில் பல துறைகள் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் நிலையில் இருக்கின்றன. ஆனால் பள்ளிக் கல்வித் துறை மட்டும் மிகத் துரிதமாக செயல்பட்டுவருகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிக் கல்வி மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக கல்வித் துறை ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்கலும் அங்கலாய்த்து வரும் நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்திருப்பது நம்ப முடியாத அதிசயமாக விளங்குகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது மிகத் தீவிரமாகச் செயல்படும் தமிழக அமைச்சராக விளங்குகிறார்.
தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள்
சில வாரங்களுக்கு முன் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக மாணாக்கர்களின் மதிப்பெண் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஆண்டில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் பெற்ற தர வரிசையை வைத்து கல்விக் கட்டணத்தை உயர்த்தும் தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்தைக் கட்டுப்படுத்த இது பெருமளவில் உதவும் என்று கருதப்பட்டது. ஆனால் இது ஒரு தனிச் செயல்பாடாக நின்றுவிடவில்லை.
இதைத் தொடர்ந்து பத்து, 12ஆம் வகுப்பைப் போல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவு பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது அந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 12ஆம் வகுப்பில் மாணாக்கர்களைச் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக, பல தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பிலிருந்தே 12ஆம் வகுப்புப் பாடங்களை எடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் அடிப்படைக் கல்வியைத் தரும் 11ஆம் வகுப்புப் பாடங்களில் மாணாக்கர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இது உயர்கல்வியில் தமிழக அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணாக்கர்களுக்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்கிவருகிறது. இதை சரிசெய்யவே 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு வருகின்ற கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்று, மேலும் சில பள்ளிக் கல்வித் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11,12ஆம் வகுப்பு தேர்வுகளை 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600மதிப்பெண்களுக்கு நடத்துவது, இரண்டு வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 1200க்கு மாணாக்கர்கள் எடுக்கும் மொத்த மதிப்பெண்ணே அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்புகளுக்கு பரிசீலிக்கப்படும். இதன்மூலம் 12ஆம்வகுப்பு மதிப்பெண் மட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் ஒரு மாணாக்கர் பிடித்த உயர்கல்வியைப் பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும். மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் மாணாக்கர்களின் தொடர்ச்சியான கல்விச் செயல்பாடு பரிசோதிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்களையும் சேர்த்துதான் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும்.
அதோடு 11,12ஆம் வகுப்புகளின் பாடத்திட்டம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்படப்போகிறது. 1 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களும் வரும் ஆண்டுகளில் படிப்படியாக மாற்றப்படப் போகின்றன.

இந்த மாற்றங்கள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாறியமைக்க வேண்டும், தரம் உயர்த்த வேண்டும் என்ற பிரஞை அரசுக்கு வந்திருப்பதே வரவேற்புக்குரியதாக உள்ளது.

ஆக்கபூர்வமாக யோசித்துச் செயல்படும் அதிகாரி
இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகள் பள்ளிக் கல்வித் துறையின் புதிய செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பவரின் சிந்தனையாலும் செயலூக்கத்தாலும் விளைந்தவை என்று பரவலாகப் பேசப்படுகிறது.

மூத்த பத்திரிகையாளரும் கல்வித் தரம் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவரான ஞாநி தன் முகநூல் பக்கத்தில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது. உதயச்சந்திரன் பெற்றிருக்கும் மதிப்புக்கு ஒரு சோறு பதம்: ”மெஜாரிட்டி இருந்தாலும் எந்த நிமிடமும் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ள அரசில், நேர்மையும் பார்வையும் உடைய ஒரு அதிகாரி நினைத்தால், அமைச்சரை பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்வதற்கான கூட்டாளியாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு தமிழக கல்வித் துறை சான்றாக இருக்கிறது. இதர துறை செயலர்களும் அமைச்சர்களும் இதே அணுகுமுறையைப் பின்பற்றத் தடைதான் என்ன ?”

செயற்பாட்டாளர்களின் பரவலான வரவேற்பு
மனித உரிமை ஆவர்லர் பேராசிரியர்  அ.மார்க்ஸ், தமிழ் மொழிநிகர்மைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் நிறுவனர், கல்வித் துறை செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிசியர் பிரபா கல்விமணி உள்ளிட்ட பலர் பள்ளிக் கல்வித் துறையில் தமிழக அரசு அறிவித்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர். செந்தில்நாதன், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை பாலைவனச் சோலை என்று தன் முகநூல் பக்கத்தில் வர்ணித்துள்ளார்.

இது தற்காலிக நிம்மதி மட்டுமே
இந்த அறிவிப்புகள் அனைத்தும் சற்று நிம்மதி அளித்துள்ளன. இவை நிரந்தர மகிழ்ச்சியாக மாறுவது அவை எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் அமையும். குறிப்பாக மாணாக்கர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இந்த மாற்றங்களுக்கு தயார்படுத்தபட வேண்டும்.
புதிய பாடத்திட்டத்துக்கான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஆசிரியர்களின் பணிச்சுமையை தாங்க முடியாத அளவு அதிகரிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மாணாக்கர்கள் மீது உண்மையான அக்கறையும் ஆசிரியர்கள் மீது கனிவும் கொண்டு உருவாக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே கல்வித் துறையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர உதவும்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: School education department a desert oasis