377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்!

377 பிரிவு ரத்து மூலமாக ஒரு பாலின விரும்பிகளை குற்றவாளிகளாக பார்க்கும் நடைமுறை மாறும். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆறுமுகம் 

377-வது சட்டப் பிரிவு நீக்கம், பாலைவனத்தில் மழை பொழிந்த சந்தோஷத்தை மனதில் விதைக்கிறது. ஒரு செயல்பாட்டாளனாக இந்திய உச்ச நீதிமன்றம் தந்த வரலாற்றுத் தீர்ப்பாக இதைக் கருதுகிறேன்!

ஓரினச் சேர்க்கையை கொலைக் குற்றத்திற்கு இணையான ஒரு பெருங்குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுதான் வரையறுத்து வைத்திருந்தது. இன்று (செப்டம்பர் 6) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அந்தச் சட்டப் பிரிவையே நீக்கி பிறப்பித்த உத்தரவு கோடிக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றாலே, அவர்களை ஏதோ கொலைகாரர்கள் போன்ற பார்வை மாறவேண்டும். இனி மாறும்! ஒரு பாலின ஈர்ப்பு என்பது, மரபணு சார்ந்த விஷயம்! தந்தை-தாய் மூலமாக வருகிற குரோமோசோம்களின் விகிதத்தைப் பொறுத்தே ஒரு பாலின விரும்பிகள் உருவாகிறார்கள்.

அறிவியல் ரீதியாக சொல்வதானால், உலகில் ஆண் என்றும் பெண் என்றும் யாரும் இல்லை. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மை இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை இருக்கிறது. மலர்களில் இருபால் மலர் இருப்பது போலத்தான் இதுவும்! இந்த விகிதம் சற்றே கூடுகையில், அல்லது குறைகையில் அவர்களின் பாலின ஈர்ப்பு மாறுபடும்.

அவர்களும் மனிதர்கள்; அவர்களுக்கும் மனித உரிமை உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மனித உரிமைக்கான எளிய விளக்கம் என்ன தெரியுமா? மனித உரிமை இயற்கையானது, ஒன்றோடொன்று இணைந்தது, விட்டுக் கொடுக்கவோ பிரிக்கவோ இயலாதது, அனைவருக்கும் பொதுவானது, உலகளாவியது!

மனித உரிமை இயற்கையானது என்று சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், பல உரிமைகளுக்கு சட்டம் இருக்காது. நீங்கள் சுவாசிக்கலாம் என்பதற்கு சட்டம் கிடையாது. ஆனால் அது இயற்கையான மனித உரிமை! அதேபோல இந்தியாவுக்கு தனி மனித உரிமை… அமெரிக்காவுக்கு தனி மனித உரிமை என்றெல்லால் இருக்க முடியாது.

பாலின உறவை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்! ஒன்று, பெண்கள் இடையிலான லெஸ்பியன். அடுத்து, ஆணுடனோ பெண்ணுடனோ உறவு வைத்துக்கொள்ளும், ‘கே’(GAY). மூன்றாவதாக, பை-செக்ஸுவல் என அழைக்கப்படும் ஆண்-பெண் இடையிலான உறவு! 4-வதாக திருநங்கைகள் எனப்படுகிற 3-ம் பாலினத்தவரின் உறவு! இதைத்தான், ‘LGBT’ என்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ஐ உச்ச நீதிமன்றம் நீக்கியதன் மூலமாக 4 பிரிவு பாலின உணர்வுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இனி இதில் எந்த பாலின உறவையும் சட்ட விரோதமாக யாரும் சொல்ல முடியாது. இவ்வளவு நாளும் இயற்கைக்கு முரணான உறவு என்ற பெயரில் இதில் 3 வகையினரை பெற்றோரே கொடுமைப்படுத்திய நிகழ்வுகள் பல உண்டு. அந்தக் கொடுமைகளால் வீடுகளை விட்டு வெளியே ஓடிப் போனவர்கள் பலர்!

அப்படிச் சென்ற பலர், ரவுடிக் கும்பல்களிடம் சிக்கி உயிரை இழந்திருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஏராளமானோர் தாக்கப்பட்டிருக்கிறார்கள், மிரட்டப்பட்டிருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளியில் ஒரு விடுதியில் ஒரு திருநங்கையை பல ஆண்கள் உறவுக்கு கட்டாயப்படுத்தி, அதற்கு மறுத்ததால் நிர்வாண நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்த நிகழ்வு நடந்தது.

திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்று ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு எதிராக பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எனவேதான் கோடிக்கணக்கான திருநங்கைகள், லெஸ்பியன்கள், ‘கே’ என்கிற பிரிவினர் ஆகியோரின் உரிமையை இந்தத் தீர்ப்பு நிலைநாட்டியிருக்கிறது என்கிறேன்.

377 பிரிவு ரத்து மூலமாக ஒரு பாலின விரும்பிகளை குற்றவாளிகளாக பார்க்கும் நடைமுறை மாறும். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உடனே சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை கிடைக்குமா? என்றால், அதற்கு சட்டப் பிரிவை நீக்கியது மட்டும் போதாது. மக்கள் மனங்கள் மாற வேண்டும். அதுவும் நடக்கும் என நம்பலாம்! அவர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற செயல்பாட்டாளர்களின் லட்சியம்!

கொடுமையான 377-வது பிரிவை நீக்கியதன் மூலமாக மனித உரிமைப் பயணத்தில் இந்தியா ஒரு படி மேலே ஏறியிருக்கிறது என நம்பலாம்!

(கட்டுரையாளர், சமூக செயல்பாட்டாளர். மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘சமூக நீதி’ என்கிற அமைப்பின் இயக்குனர்)

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close