Advertisment

ஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை - சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி

India’s Act East policy : நம்முடைய முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசவில்லை. தன் சொந்த நாட்டு நலனையே இந்திய அரசு அங்கு முன்னிலைப்படுத்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand election results BJP campaign

Jharkhand election results BJP campaign

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவழியாக நிறைவடைந்திருக்கிறது, பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்திய கூட்டமைப்பு (ஆர்.சி.இ.பி.)-ன் பேச்சுவார்த்தை. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உறுப்புநாடுகளுக்கும் அவற்றுடன் தாராள வர்த்தக உடன்பாடுள்ள நாடுகளுக்கும் இடையில் 2012 நவம்பரில் தொடங்கிய இப்பேச்சுவார்த்தை, பாங்காக்கில் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்த ஆசியான் மாநாட்டில் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய முடிவின் பின்னுள்ள நல்ல சங்கதி, நம் நாட்டுக்கான சில சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருந்தன; இதுவே ஆர்.சி.இ.பி.யில் சேரும் முடிவிலிருந்து இந்தியாவைப் பின்வாங்கச் செய்வதற்கான காரணமாக அமைந்தது. மெய்யாகவே, இந்தப் பேச்சுவார்த்தை நெடுகிலும் ஒரு திடமான முடிவிலேயே இருப்பதென இந்திய அரசு தீர்மானித்திருந்தது. நம்முடைய வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் கோரிக்கைகள் தொடர்பாக, நம்முடைய முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசவில்லை. தன் சொந்த நாட்டு நலனையே இந்திய அரசு அங்கு முன்னிலைப்படுத்தியது.

Advertisment

2008-ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடியால் இழந்துபோன அடித்தளத்தை மீட்க பல பொருளாதார வல்லரசுகள் திண்டாடிவரும்நிலையில், முகிழ்த்துவரும் நாடுகளின் பொருளாதாரமோ வளர்ச்சி வாய்ப்புகளை மையப்படுத்தியதாக உள்ளது. மேற்குலகை மையமாகக் கொண்டிருந்த உலக வர்த்தகமானது, ஆசியா மற்றும் பிற வட்டாரங்களின் வளரும் பொருளாதாரத்தை நோக்கி தெளிவாக இடம்மாறிவிட்டது. உலக வர்த்தகத்தில் வளர்ச்சி சந்தையின் பங்கானது, 1991-ல் 16 சதவீதமாக இருந்தது போய், 2011-ல் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது; அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 0.8 சதவீத அதிகரிப்பு ஆகும். உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் இது முடுக்கிவிடப்பட்டது. 2008-ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு தலா 1.5 சதவீத புள்ளிகள் எனுமளவில், ஏறத்தாழ இரட்டை மடங்காக இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. தென்பகுதி நாடுகளில் தென்பகுதியின் வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த குறிப்பான அதிகரிப்பானது, வர்த்தக உடன்பாடுகளை அவற்றின் தலைமையிலானதாக அமையும்படி மாற்றிக்கொண்டிருக்கிறது. இவ்வாறே ஆர்.சி.இ.பி.யின் உறுப்புநாடாக உள்ள இந்தியாவும் முக்கியத்துவத்தைப் பெற்றது; ஆனால், தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளவில்லை. சுவாரஸ்யம் என்னவென்றால், சர்வதேச அளவில் அண்மையில் முன்மொழியப்பட்ட- ’கிழக்கு நாடுகளைப் பாருங்கள்’ போன்ற வர்த்தகக் கொள்கைகள், தெற்கு- தெற்கு நாடுகளிடையிலான வர்த்தகத்தை நோக்கி தள்ளப்படுகிறது என்பதுதான்!

ஆர்.சி.இ.பி.-ன் குறிப்பான அம்சங்களைப் பார்த்தோமானால்... சரக்கு வர்த்தகத்தில் வலுவாகவும் வணிக வர்த்தகப் பற்றாக்குறையில் பிற 15 ஆர்.சி.இ.பி. ஒப்பந்த நாடுகளில் இந்தியா 11 ஆக, 2018-19 ஆண்டில் 107.28 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இவ்வாண்டில் இந்த நாடுகளிலிருந்து இந்தியா செய்த இறக்குமதி 34 சதவீதம்; ஆனால், இந்த நாடுகளுக்கு இங்கிருந்து 21 சதவீதம் அளவுக்கே ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த ஒப்பந்த நாடுகளில் சீனாதான் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்குவது மட்டுமன்றி, இந்த முறை பேச்சுவார்த்தை நெடுகிலும் அந்த நாட்டோடு தொடர்புடையதாகவே இந்தியாவின் ஈடுபாடு இருந்தது.

பெரியபலமான நீர்ப்பகடு விலங்கைப் போல மாறியுள்ள சீனா, உலக உற்பத்திச் சந்தையில் தன் வழியில் ஓர் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால், சீனாவிலிருந்து மிக மலிவான மின் மற்றும் மின்னணுப் பொருள்கள் இறக்குமதியாவது மேலும் அதிகரித்துவிடும்; அது உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் பாதகமானதாக மாறிவிடும் என அச்சம் நிலவுகிறது. ஆகையால், ஆரோக்கியமற்ற போட்டியால் உள்நாட்டு உற்பத்தி பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கேற்ப இந்திய அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

எடுத்துக்காட்டாக, வரிக்குறைப்புக்கான ஆண்டாக 2014-ஐ நிர்ணயிப்பது, கட்டுக்கடங்காமல் இறக்குமதி நடந்தால் அதை மட்டுப்படுத்துவதற்கான தானியக்கப் பொறிமுறை, அனைத்து நாடுகளுக்கும் வரிச்சலுகை வழங்கப்படாத குறிப்பிட்ட பொருள்கள் போன்ற விவகாரங்கள் தீர்க்கப்படவேண்டியவை. மின் மற்றும் மின்னணுத் தொழிலைப் பொறுத்தவரை இந்தியா தன்னிறைவை எட்டவுள்ளநிலையில், 2014ஆம் ஆண்டு விலை எனும் முன்வைப்பு, பெரும் பின்னடைவையே உருவாக்கும்.

பேச்சுவார்த்தையில் இடறலாக அமைந்த இன்னொரு பொருண்மை என்பது ஒப்பந்த முறைமையிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் எனும் இந்தியாவின் கோரிக்கை வெற்றிபெறவில்லை. இதைப் போன்ற ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டபடி ஏற்றுமதி- இறக்குமதி அளவு, வரி சலுகையை திடீரென நிறுத்தவோ மாற்றவோமுடியாது; ஒப்பந்தம் என வந்துவிட்டால் அதிலிருந்து விலக்கு கேட்பது இயலாது. ஆனால், வர்த்தகத்தில் பிற்காலத்தில் சிக்கல் வந்தால் உள்நாட்டு ஏற்றுமதியாளர், இறக்குமதியாளரைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளமுடியாது என இந்தியத் தரப்பு விலக்குகேட்டது.

இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதுமிருந்து ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் கையெழுத்திடக்கூடாது என விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் குரல் எழுப்பினர். இந்தியாவைப் பொறுத்தவரை, பயிர்செய்கையானது பருவகாலத்தை ஒட்டியது என்பதால், ஏராளமான சிறு மற்றும் நடுத்தட்டு விவசாயிகள் அன்றாடச் செலவுக்கு பாலையே நம்பியுள்ளனர். ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் பால் பண்ணைத் தொழிலுக்கு விதிவிலக்கு பெறாமல் இந்தியா கையெழுத்திட்டிருக்குமானால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பால்பண்ணைத் தொழிலுக்காக நியாயமற்றவகையில் இங்கு பெரும் சந்தையைத் திறந்துவிட்டதாக அமைந்திருக்கும். இதிலும் நியூசிலாந்து மட்டும் அதன் மொத்த பால்மாவு உற்பத்தியில் 93.4 சதவீதம், வெண்ணெய் உற்பத்தியில் 94.5 சதவீதம், பாலடைக்கட்டி உற்பத்தியில் 83.6 சதவீதம் என ஏற்றுமதிசெய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படியோ, உள்நாட்டு பால் கூட்டுறவாளர் நலன்களை கூடுதல் அரண்கள் மூலம் பாதுகாக்கும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இவ்வாறாக, தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கலவையான அனுபவம் கிடைத்தநிலையில், வரிக்குறைப்பானது நாட்டுக்கு உதவாது என்பதில் கவனம்குவித்து, அப்படியான ஒப்பந்தங்களில் இந்தியா அதீத எச்சரிக்கையைக் கையாள்கிறது. அண்மைய வணிக வர்த்தகப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஆசியான் நாடுகளுடனான வ.வ. பற்றாக்குறையானது அதிகரித்திருக்கிறது.

அனைவருக்கும் சாதகமான ஒரு சீரான கண்ணோட்டமே இந்தியாவின் முதன்மையான தேவையாகும். உலக அளவில் உபரியான அளவுக்கு சேவை வர்த்தகத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. இதனால், இவ்வர்த்தகத்தில் வலுவான ஓர் உடன்பாட்டைச் செய்துகொள்ள முயற்சிசெய்துவருகிறது. திறம்படைத்த மனிதவளத்தின் போக்குவரவை எளிதாக்குவதும் இதில் அடங்கும். இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியில் சேவை வர்த்தகமானது கணிசமான பங்காக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம்கூட கூறியுள்ளது. அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி, இந்திய மனிதவளத்தில் 58 சதவீதம் நடுத்தரத் திறம்கொண்டவர்களாகவும் 16 சதவீதம் உயர்தரத் திறம்கொண்டவர்களாகவும் உள்ளனர்; அவர்களின் நலனைப் பாதுகாப்பது தலையாய முக்கியத்துவமானது.

எனவே, ஆர்.சி.இ.பி. உடன்பாடு செய்துகொள்ளும் முன்னர் இவ்வனைத்து அம்சங்களையும் கருத்தில்கொள்ளவேண்டியது, அவசியம். 2018 விவரப்படி, உலகளாவிய சரக்கு ஏற்றுமதிப் பட்டியலில் 1.7 சதவீதப் பங்குடன் 20 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் 5 சதவீதம் அளவை அடையவேண்டுமென்றால் இந்தியா தன் உற்பத்தித் திறனை அதற்கேற்ப கட்டமைக்கவேண்டும். அரசின் அண்மைய நடவடிக்கைகள் இதை நோக்கியதாக உள்ளன. உலகின் மொத்த ஏற்றுமதி அளவான 20 டிரில்லியன் டாலரில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதிசெய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புவி அரசியலில் இந்தியா எவ்வாறு இலக்குநோக்கி செயலாற்றுகிறது என்பதே, ஏற்றுமதியில் ஒரு பெரும்பலமான பகடு விலங்கைப்போல அது உருவெடுப்பதைத் தீர்மானிக்கும். இந்நிலையை அடைவதற்கு, இந்தியாவின் இப்போதைய கடினமான நிலை முற்றிலும் பொருத்தமானதே!

- கட்டுரையாளர், இந்திய ஸ்டேட் வங்கியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், இக்கருத்துகள் தனிப்பட்டவையே.

தமிழில் : இரா.தமிழ்க்கனல்

India Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment