சமூக வலை தளங்களும்... சமூக பொறுப்புகளும்!

சந்தோஷ் ராஜின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. அவர் எல்லோரையும் கேள்வி கேட்டார். ஆனால் ரஜினிக்கு எதிராக மட்டுமே பேசினார் என்ற சித்திரத்தை உருவாக்கினர்.

ச.கோசல்ராம்

‘என் எதிர்காலம் என்ன ஆகும்’ ஓரே நாளில் ஹீரோ ஆன ஒரு இளைஞனின் குரல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சமூக வலை தளங்கள் யாரை வேண்டுமானாலும் சில நிமிடங்களில் ஹீரோவாக தூக்கிப் பிடித்துவிடும். அதன் பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிகழும் எதையும் கண்டு கொள்வதில்லை. இந்த பொறுப்பற்ற தன்மைக்கு இளைஞன் ஒருவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பின்னர், ஓரே நாளில் ஹீரோவாகவும் அதே நாளில் தேச துரோகியாகவும் மாற்றப்பட்ட இளைஞனைப் பற்றித்தான் சொல்கிறேன்.

ரஜினி தூத்துக்குடி சென்ற போது, ‘யார் நீங்கள்?’ என்று கேள்வி கேட்ட சந்தோஷ் ராஜ் பற்றித்தான் சொல்கிறேன். ரஜினியை கேள்விக் கேட்டார் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு, ரஜினி எதிர்ப்பாளர்கள் அவரை சமூக வலை தளங்களில் ஹீரோவாக்கினார்கள்.

ரஜினியை கேள்விக் கேட்ட வீர தமிழன் என்றெல்லாம் பட்டம் கொடுத்தனர். இதையடுத்து மீடியாக்களும் அதைப் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த வீடியோவை போட்டு செய்தியாக்கினர்.

இத்தனைக்கும் அத்தனை மீடியாக்களுக்கும் தூத்துக்குடியில் நிருபர்கள் இருந்தார்கள். ரஜினியைக் கேள்விக் கேட்ட சந்தோஷ், ரஜினியை மட்டும் கேள்விக் கேட்கவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜூவை கேள்விக் கேட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் இதே கேள்வியைத்தான் கேட்டார். இன்னும் சில தலைவர்களையும் இது போல கேட்டிருக்கிறார்.

ரஜினியைப் பற்றிக் கேள்விக் கேட்டதும், ஓரே நாளில் சமூக வலை தளங்களில் பிரபலமானார். அடுத்த சில மணி நேரங்களில் அவரைச் சந்தித்த தீலிபன் என்பவர், இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். இந்த திலீபன், வேறு யாருமில்லை. தேசிய கொடியை எரித்ததாக கைதானவர்.

deelipan with santhosh

சந்தோஷ், திலீபனுடன் எடுத்துக் கொண்ட படம்

இது போதாதா ரஜினி ஆதரவாளர்களுக்கு… ’திலீபன் கூட்டாளி… இவன் தான் சமூக விரோதி’ என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். சந்தோஷை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

பதறிப்போன சந்தோஷ், மீடியாக்களை அழைத்து கதறியுள்ளார். ‘‘தேசிய கொடியை எரித்ததாக திலீபன் மீது வழக்கு உள்ளதாகவும், எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. நான் இதற்கு முன்பு அவரைப் பார்த்தது கூட கிடையாது. எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகுதான் திலீபன் வந்து சென்றார். எனக்கும் திலீபனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி என் மீது வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கும்’’ என்றார்.

மேலும், ‘‘நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களிடம் மட்டுமே கேள்வி கேட்டேன்’’ என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சந்தோஷ் ராஜின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. அவர் எல்லோரையும் கேள்வி கேட்டார். ஆனால் ரஜினிக்கு எதிராக மட்டுமே பேசினார் என்ற சித்திரத்தை சமூக வலை தளங்களில் பரப்பினர். அதே சமூக வலை தளமே, அவரை பதற வைத்திருக்கிறது.

அவர் சொன்னது போல அவர் மீது வழக்குப் போட்டால்… அவர் எதிர்காலமே வீணாகியிருக்கும்.

சமூக வலை தளங்களால் பாதிக்கப்பட்ட முகம் தெரியாத இளைஞர்களின் அண்மை சாட்சியாக சந்தோஷ் இருக்கிறார். இனிமேலாவது சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

×Close
×Close