முத்தலாக் விவகாரம்: மாற்றம் கோரும் காலத்தின் குரல்

இஸ்லாமிய மதத்துக்குள்ளும் தலாக் முறைக்கு எதிராகக் குரல்கள் எழுகின்றன

இஸ்லாமிய மதத்துக்குள்ளும் தலாக் முறைக்கு எதிராகக் குரல்கள் எழுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முத்தலாக் விவகாரம்: மாற்றம் கோரும் காலத்தின் குரல்

சந்திரன்

இஸ்லாமிய மதத்தின் முத்தலாக் விவாகரத்து குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் குரல்கள் எழுந்துவந்தாலும் தற்போதைய சூழலைப் போல் தீவிரமாக ஒலித்ததில்லை. தற்போது நாட்டின் பிரதமர் தலாக் முறை குறித்துப் பேசுகிறார்; முஸ்லிம் பெண்களின் அவலநிலை குறித்து கண்ணீர் மல்கப் பேசுகிறார். அதேபோல, உச்ச நீதிமன்றமும் முத்தலாக் பற்றிய வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்துவருகிறது. முத்தலாக் முறை என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பது மத்திய அரசின் வாதம்.

உள்ளிருந்து எழும் குரல்கள்

Advertisment

இஸ்லாமிய மதத்துக்குள்ளும் தலாக் முறைக்கு எதிராகக் குரல்கள் எழுகின்றன. சில அமைப்புகள் முத்தலாக்கை ஆதரித்தாலும், சில அமைப்புகள் காலத்துகேற்ற வகையில் மாற்றங்கள் அவசியம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. அது மட்டுமல்ல, எண்ணிக்கையில் சொற்ப அளவில் இருந்தாலும் சில முஸ்லிம் பெண்களும் தலாக் குறித்து வாய் திறந்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இது முஸ்லிம்களின் மத நம்பிக்கை என்பதால், மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ தலையிடக் கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டிருக்கிறது. தவிர, பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களுக்குப் பரிந்து பேசுவதுபோல நடித்து, மதத்துக்குள் பிளவை ஏற்படுத்த முயலுவதாக, சில அமைப்புகள் கூறுகின்றன. முத்தலாக் என்பது மனம் போன போக்கில் சொல்லப்படுவதல்ல என்றும் அதற்கென்று நியாயமான கால அவகாசமும் மறுபரிசீலனைக்கான வழிமுறைகளும் உள்ளன என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள். எனினும் நடைமுறையில் அது அவ்வாறு இல்லை என்பதையே இஸ்லாமியப் பெண்கள் பலரது குரல்களும் கூறுகின்றன.

மத விவகாரங்களில் பிறர் தலையிடக் கூடாது என்னும் வாதத்தை முன்வைத்து, முஸ்லிம் பெண்களை அபலைகளாக்குவதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று முற்போக்காளர்கள் கேட்கிறார்கள். முஸ்லிம்கள் மத்தியிலும் இந்தக் குரல் எழுந்துள்ளது. உலகில் ஆண்டாண்டு காலமாக நிலவும் எல்லா மரபுகளும் அது உதித்த காலகட்டத்தையும் சமூகக் கட்டமைப்பையும் சார்ந்தே தோன்றியுள்ளன. அதேபோல, தலாக் முறைக்கும் ஏதாவது ஒரு காலப் பொருத்தம் இருக்கக்கூடும். ஆனால், தற்போதைய நவீன காலத்துக்கு தலாக் எப்படி பொருந்த முடியும்? காலத்துக்கேற்ற வகையில் மாற வேண்டியது மனிதர்களின் தேவையல்லவா என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisment
Advertisements

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான களந்தை பீர் முகம்மது அண்மையில் நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் இக்கருத்தை முன்வைக்கிறார். “முத்தலாக் என்பது இஸ்லாத்தின் பொதுவான நடைமுறை அன்று. இஸ்லாமிய அறக் கோட்பாட்டுக்கு அது இசைவானதல்ல. அதனை இந்த அளவில் சமூகம் முட்டுக்கொடுத்துத் தாங்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறும் களந்தை பீர் முகம்மது, “தம்முடைய பிடிவாத நிலைப்பாடுகளைக் கைவிட்டு, இளைஞர்களின் மத்தியில் இந்த உண்மையை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் தேவ்பந்த் மதரஸாவும் தீவிரமாகக் கொண்டுசெல்ல வேண்டும்” என்கிறார்.

காலத்துக்கேற்ற மாற்றம்

இன்றைய காலத்தில், கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகமாகப் பெருகியுள்ளது. அவர்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பிய காலம் கடந்து, ஆண்-பெண் சமத்துவம் பேசும் காலம் இது. மத அடிப்படைவாதிகளின் பிடிகளையும் மீறி, ஏராளமான முஸ்லிம்கள் தங்களது வீட்டுப் பெண்களுக்குக் கல்வியைத் தருகிறார்கள். மறுபுறம் முஸ்லிம் பெண்களின் கல்வி, மதத்தின் பெயரால் மறுக்கப்படுவதோடு, நினைத்த மாத்திரத்தில் விவாகரத்து செய்யப்படும் நிலையும் உள்ளது. விவாகரத்தில் ஆணாதிக்க சிந்தனையைப் பிரதிபலிக்கும் முத்தலாக் முறை இப்போதும் தேவைதானா என்ற பரிசீலனை காலத்தின் கட்டாயம் என்றே பலரும் கருதுகிறார்கள். “முத்தலாக் முறை பெண்கள் மீதான அடக்குமுறை. முத்தலாக் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் உலகமயமாக்கல் போன்ற மாற்றங்கள் காரணமாகவும் பெருகிவரும் மனித உரிமை விழிப்புணர்வு காரணமாகவும் பல்வேறு சமூகக் கட்டைமைப்புகளும் மறுபரிசீலனைக்கு உள்பட்டுவருகின்றன. இந்தச் சமயத்தில், நாட்டின் இரண்டாவது பெரிய சமயத்தினர், மாற்றத்துக்கு உள்படத் தயாரில்லை என்று கட்டமைப்புகளை மேலும் இறுக்கிக்கொள்வது, அந்தச் சமுதாயத்தின் மீதான விமர்சனத்தை மேலும் அதிகரிக்கவே உதவும். ஒரு சமூகம் காலத்துக்கேற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டால், பிறர் தலையிடுவதற்குத் தேவையே இருக்காது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: