திராவிட ஜீவா
கடந்த ஆறு மாத காலமாகவே இசை வெளியீட்டு விழாக்களில் மட்டுமல்ல… பொது வெளியிலும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் அரசியல் கருத்துக்களை துணிவுடன் பேசிவந்தவர் நடிகர் சூர்யா. சூப்பர் ஸ்டார் முதல் விஜய் வரை அரசியல் நிலைப்பாடுகளில் முன்னுக்குப்பின் முரணாக எதார்த்த நிலைக்கு எதிர் நிலையிலேயே பேசி வருதாக விமர்சனம் இருக்கிறது. எனவே சூர்யா சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டு வருகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்கள் மனநிலையில் இருந்து விமர்சிப்பதாக தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் பெண்களிடம் கூட சூர்யாவின் மதிப்பீடு உயர்ந்துள்ளது. சமீப காலங்களாக பொதுவெளியில் அரசியல் பேசிவந்த சூர்யா, தற்போது தனது படங்களின் மூலம் இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக்கொள்கைகளை பேசுவது அரசியல் அரங்கில் மட்டுமல்ல, சினிமாவிலும் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
அதிரடி பேச்சு… அசைத்துப் பார்க்கும் சூர்யா
நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர்ந்து பேசியும் அறிக்கையும் விடும் சூர்யா, அதில் மனுதர்மத்தை பற்றி எல்லாம் பேசுவது, மேற்கோள் காட்டுவது, அரசியலுக்கு அச்சாரம் போடும் நடிகர்களின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது. சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் ரியல் ஹீரோவாக… இன்னும் சொல்லப்போனால் சுப்பீரியர் ஸ்டாராக சூர்யா போற்றப்படுகிறார். இது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தரப்பை மட்டுமல்ல, அந்தந்த நடிகர்களின் இமேஜையே அசைத்துப் பார்க்க தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையில் ரஜினி படங்களுக்கு இணையான ஒரு வரவேற்பை ஓடிடி-யில் ரிலீசான சூர்யாவின் சூரரைப் போற்று படம் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமாக இருக்கிறது. படத்திற்கான விமர்சனம், இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் போற்றிப் புகழப்பட்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்கள், திரைத் துறையினர், இரு துறையையும் சாராத பிரபலங்கள் படத்தைப் பற்றிய நேர்மறை விமர்சனங்களை தெரிவிப்பது சூர்யாவின் அந்தஸ்தை சுப்பீரியர் ஸ்டாராக உயர்த்தியுள்ளது. படத்தின் வசனங்கள் சமூக வலைதளங்களில் சதிராட்டம் நடத்துகிறது. ஒருவேளை தியேட்டரில் படம் ரிலீஸாகி இருந்தால் ரஜினி படங்களுக்கு இணையான வசூலை அள்ளியிருக்கும் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் 60 கோடிக்கு விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வாங்கி வெளியிட்ட நிறுவனம் 150 கோடியை வசூலித்துள்ளது என்கிற புள்ளி விவரம் முன்னணி கதாநாயகர்களின் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் இதுவே ரஜினி படங்களை தவிர்த்த உச்சபட்ச வசூல் படமாக இருக்கும்.
விஜய் vs சூர்யா அரசியல்
இந்தப் படத்திற்கு முன்பாக கடந்த ஐந்து ஆறு வருடங்களாக சூர்யாவின் படங்கள் சரியாகப் போகாததால் சூர்யாவின் திரை மார்க்கெட் சரிவில் இருந்தது. இந்த இடைவெளியில் நடிகர் விஜய் ஒரு சில படங்களில் வலிந்து திணித்த அரசியல் கருத்துக்களால் ஓரளவுக்கு வசூலைப் பெற்றது கவனிக்கத்தக்கது. குறிப்பாக சர்க்கார், பிகில் போன்ற படங்கள்!
அரசியல் பரபரப்பு இருந்தும் ஒரு முன்னணி நடிகராக மிகப் பெரிய தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸான பிகில் நான்காவது நாளிலேயே சென்னை அண்ணா சாலை தியேட்டரில் ஆளில்லாமல் ஷோ கேன்சல் செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தது. எனினும் வசூலில் முதல் இரண்டு நாட்கள் பரபரப்பில் ஹவுஸ் ஃபுல்லானது. இந்த இரு படங்களுக்கு முன்பாக ரிலீஸான மெர்சல் படமும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அதன் தயாரிப்பாளரே ட்விட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பரபரப்பு இல்லாமல் வந்த விஜய்யின் புலி, பைரவா போன்ற படங்கள் வந்த சுவடே தெரியாமல் போனது. ஜில்லா பெயரளவுக்கு சுமார் ரகமே. இதே நிலைதான் சூர்யாவுக்கும்! தற்போது அரசியல் பரபரப்பில் விஜய்- சூர்யா மோதலுக்கு தயாராவது போல தோற்றமளித்தாலும் கடந்த தசாப்தங்களிலேயே சுழி போடப்பட்டது இவர்களின் மோதலுக்கு! அதற்கான வேலையை விஜய் தரப்பே செய்தது.
சூர்யாவை உயர்த்திய படங்கள்
2005-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் சச்சின் பட தோல்விக்கு பிறகு கஜினி என்கிற மாபெரும் வெற்றியின் மூலம் ரஜினிக்கு அடுத்த மிகப்பெரிய வியாபார வட்டம் உடைய நடிகராக சூர்யா வந்தார். தொடர்ந்து அயன், தமிழ் திரையுலகில் ரஜினி படங்களுக்கு அடுத்து மிகப்பெரிய வசூல் புரட்சியை செய்தது. சூர்யாவின் இந்த வியாபாரமும் ஸ்டார் வேல்யூவும் விஜய்யை பயமுறுத்தியது. ஆனாலும் ரசிகர்களின் ஆதரவால் தாக்குப் பிடித்தார் விஜய்.
தொடர்ந்து சூர்யாவின் ஏழாம்அறிவு படமும் விஜயின் வேலாயுதமும் ஒன்றாக ரிலீஸாகின. அந்த ரேஸிலும் விஜய்யை பின்னுக்குத்தள்ளினார் சூர்யா. தமிழ் திரையுலகில் ரஜினியின் படங்களுக்கு அடுத்து மிகப்பெரிய வசூல் படமாக ஏழாம் அறிவு இடம்பெற்றதாக அதன் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டது. அனைவரின் கருத்தும் அனைவரும் நினைவும் சரியாக இருக்கும் என்றால் இன்றுவரை ஒரு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வமான மாபெரும் வசூல் படமாக ரஜினி படங்களுக்கு அடுத்து மிகப்பெரிய வசூல் படமாக ஏழாம் அறிவு படத்தை தவிர இதுவரை யாரும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை; அறிவிக்கவும் இல்லை. அந்த ரேஸிலும் சூர்யா வென்றார்.
அதற்கு பின்பும் விஜய்யின் நண்பன், இயக்குனர் ஷங்கரின் திரை வாழ்வில் மிகவும் கசப்பான அனுபவங்களைக் கொடுத்த படமாக சங்கராலேயே அறிவிக்கப்பட்டது. ஒரு பெரிய இயக்குனராலும் விஜய்யை வைத்து வெற்றியை தரமுடியவில்லை. தொடர்ந்து வேட்டைக்காரன், சுறா போன்ற படங்கள் தோல்வி அடைய… தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினிக்கு அடுத்து சூர்யாவின் சிங்கம் வசூல் புரட்சியை ஏற்படுத்தியது. அந்த ஐந்தாறு வருடங்கள் திரைப் போட்டியில் சூர்யாவிடம் படாதபாடு பட்டார் விஜய்.
துப்பாக்கி வெற்றியை தனதாக்கிய முருகதாஸ்
ரசிகர் பலத்தால் சூர்யாவை விட முன்னணி கதாநாயகர்கள் என்கிற அந்தஸ்தை விஜயும் அஜித்தும் பெற்றிருந்தாலும், வெற்றிப்பட வரிசையில் சூர்யாவிற்கு பின்தங்கியே இருந்தனர். பிறகு பிரபல இயக்குநர் முருகதாஸிடம் சென்றார் விஜய். அந்தப் படத்தை (துப்பாக்கி) முருகதாஸ் தனது ட்ரேட்மார்க்கில் தன்னுடைய படமாக முன்நிறுத்தினார். ரஜினியின் வாழ்த்துக்களை தனது படத்திற்கான வாழ்த்தாக முருகதாஸ் மாற்றினார். அதிலும் தலைவர் சூப்பர்ஸ்டார் என்று தனது ட்விட்டரில் முருகதாஸ் தெரிவித்தது விஜய்க்கு துப்பாக்கியின் வெற்றி கிரடிட்டை தர இயக்குநர் விரும்பவில்லை என்பதையே பறைசாற்றியது.
அதற்குப் பின்பு அரசியல் பரபரப்பு செய்திகளின் மூலம் விஜய் லைம் லைட்டுக்கு வந்தார். ஆனாலும் பல இடங்களில் பிரச்சினைகள் வரும்போது அரசாங்கத்திடம் சரணாகதி அடையும் சராசரி நபராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக தலைவா படபிரச்சினையில் ஜெயலலிதாவிடம் கைகட்டி வீடியோ வெளியிட்டு மன்றாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதற்கிடையில் சுப்பீரியர் ஸ்டாராக உருவெடுத்திருந்த சூர்யா தைரியமாக அரசியல் கருத்துக்களையும் அறிக்கைகளையும் விட்டு அரசியல் சினிமா இரண்டிலும் இறங்கி அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரின் சூரரைப் போற்று படமும் வந்து சூறாவளியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவசரமாக வந்த மாஸ்டர் டீசர்
இந்த இடைவெளியில் கடந்த ஏப்ரலில் வெளிவந்திருக்க வேண்டிய விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசாகாமல் இருக்கிறது. அவராகவே சில அரசியல் பரபரப்புகளை கிளப்பினாலும் கூட மிகப்பெரிய விவாதத்திற்குள் மக்கள் ஆதரவு வட்டத்திற்குள் அவரால் வர முடியவில்லை என்பதே உண்மை. சூரரைப் போற்று படத்தின் வெற்றியும் சூர்யாவின் அரசியல் அறிக்கையும் இளைஞர்களிடத்தில் வலுவாக வலம் வருவதை விஜய் உன்னிப்பாக கவனிக்கிறார். இதனால்தான் சூரரைப் போற்று வெளியாகி பரவலான வரவேற்பை மக்களிடம் பெற்றுக்கொண்டு விவாதங்களை உருவாக்கியிருக்கும் இந்த நேரத்தில் தனது மாஸ்டர் பட டீசரை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் விஜயின் இடம் கேள்விக்குள்ளாக்கப்படுமோ என்கிற கருத்தும் துளிர்விடத் தொடங்கியது. ரஜினி ஃபார்முலாவை நோக்கியே சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சியும் தொடர் வெற்றியும் வசூல் நிலவரமும் இருந்தது. அதனால் கலவரத்துக்குள்ளாகியிருந்த விஜய், இப்போது சூர்யாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
மாஸ்டர் டீசர் ரசிகர்களின் ஆதரவோடு பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அது சூர்யாவின் சூரரைப் போற்று சூறாவளி வெற்றிக்கு ஈடு கொடுக்குமா என்பதை போகபோகத்தான் பார்க்க முடியும். எம்ஜிஆர், ரஜினி என்கிற சகாப்த கதாநாயகர்களின் அரசியல் அடுத்த தலைமுறைக்கு இடம்பெயரும் காலம் வந்துவிட்டதே களம் உணர்த்தும் நிலவரம்.