விவேக் கணநாதன்
எல்லோரும் சப்த ஸ்வரங்களுக்குள் சரணடைந்து, 24 பாவங்களுக்குள் இன்னிசையைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு குரல் ஆயிரம் நிலாக்களை அள்ளிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் வந்தது.
பல்லாயிரம் பாடல்களால், ஆயிரக்கணக்கான படங்களில், நூற்றுக்கணக்கான நாயகர்களுக்காக இந்தியாவின் ஆகச்சிறந்த இசைக்கலைஞர்கள் அனைவருடனும் சேர்ந்து சுமார் 100 கோடி மக்கள் கேட்கக்கூடிய அளவுக்கு 16 மொழிகளில் பாடியிருக்கும் அந்தக்குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
50 ஆண்டு கலைப்பயணம், 50,000 பாடல்கள், 16 மொழிகள், 6 தேசிய விருதுகள், 14 பிலிம்பேர் விருதுகள், 25 ஆந்திர மாநில அரசு விருது, 4 தமிழ்நாடு மாநில அரசு விருது, 3 கன்னட அரசு விருதுகள் என இணையில்லாத சாதனைகளைச் செய்த எஸ்.பி.பி, தான் அள்ளிவந்த ஆயிரம் நிலாக்களையும் 100 கோடி செவிகளுக்கு பந்தி வைத்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என ஆறு சூப்பர் ஸ்டார்களின் குரலாகவும் இசைத்த எஸ்.பி.பி, கே.வி.மகாதேவன், இளையராஜா, ஹம்சலேக்கா, ஏ.ஆர்.ரகுமான் என நான்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் 5 தேசிய விருதுகளைப் பெற்றவர்.
பாடலுக்காக, இசை அமைத்ததற்காக, டப்பிங்குக்காக என மூன்று வெவ்வேறு பணிகளுக்காக விருதுபெற்ற ஒரு ஆச்சர்ய கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
எஸ்.பி.பியின் குரலில் இதயம் ஒரு கோவில், அதை உறைவன யாவும் பாடல்கள். சாயங்காலங்கள் அவருக்கு பொன்மாலைப் பொழுது - அதில் அந்திமழைகளை பொழியவிட்டு, ரசிகர்களை ஆனந்த இசையில் நனையவிட்டார். இளையநிலாக்கள் பொழிய எல்லோருடைய இரவுக்குள்ளும் புகுந்து கலாட்டா செய்யும் தந்திரக்காரன் அவர்.
ஒருபக்கம் சிங்காரிகளின் சரக்கை காதுமடல்களின் கடைசி நரம்பு வரை டப்பாங்குத்தாக ஊற்றிக்கொடுத்த எஸ்.பி.பி குரலில், இன்னொருபக்கம் சங்கீத ஜாதி முல்லைகள் சப்த ஸ்வரங்களை அள்ளிக்கொண்டு காற்றோடு முத்தமிட்டன. உறங்கும்போது கூட என்ன சப்தம் இந்த நேரம் என இருதயத்தின் ஓசையோடு சேர்ந்து சப்தமிட்டன.
கூட்டநெரிசலில்கூட தமிழ்நாட்டுப் பேருந்துகள், கல கல கலவென வளையோசை எழுப்பி காதல் கவிதைகள் படித்தன. வண்ணம் கொண்ட வெண்ணிலாக்களை வானிலிருந்து கீழிறக்கின. ஆயிரம் தாமரை மொட்டுக்களை அள்ளிவந்து எல்லோருடைய வீட்டுவாசலையும் அல்லிக்குளமாக்கின.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியாத உள்ளங்களின் இளமை எனும் பூங்காற்றுக்கு, மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழக்கூடுமோ என பதில் சொன்னார் எஸ்.பி.பி.
காதல் ரோஜாக்களை கண்ணீர் வடிக்க வைத்து,
அஞ்சலிகளின் இதயத்துக்கு சரிகமபதவில் கடிதங்கள் எழுதி
செனோரீட்டக்களிடம் I love you சொல்லி,
புதிய மனிதா பூமிக்கு வா என எந்திரங்களின் உடலில் தன் காந்தர்வ இசைக்குரலால் உணர்ச்சிகளை பாலூட்டியவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
எல்லோருடைய குரலையும் கேட்டதால் இனிக்கும், எஸ்.பி.பி.குரலை நினைத்தாலே இனிக்கும்.
எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.பி, இயற்கையெனும் இளைய கன்னி என காலத்தை அழைத்துக்கொண்டு ஜெமினி கணேசன் குரலாகவும், அடிமைப்பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே வா என அழைத்துக்கொண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-ன் குரலாக வும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1969ல் தமிழுக்குள் வந்தார்.
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என எம்.ஜி.ஆருக்காக பின்னணியில் பாடிய எஸ்.பி.பி, தன் வரலாற்றைத் தன் குரலாலேயே எழுதிக்கொண்டார். தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையோடு பல ஆண்டுகள் பயணித்த எஸ்.பி.பி, நான் பொல்லாதவன் என சாசனம் எழுதிக்கொண்டார். எங்கேயும், எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என தமிழ் வாழ்வுக்குள் ஐக்கியமானார்.
ஒலிக்கும் குரலிலேயே ரசிகர்களை உலகம் சுற்ற வைத்த எஸ்.பி.பி, ஜெர்மனியின் செந்தேன் மலரை தமிழ்நாட்டுக்கு தாரைவார்க்கச் செய்தது இசைஞானி இளையராஜாவின் இசை.
அன்னிக்கிளியில் அறிமுகமாகியிருந்த இளையராஜா ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இந்திய கிராமங்களில் புதைந்திருந்த சின்னஞ்சிறு இசை சப்தங்களுக்கு திரை உயிர் கொடுத்தார். மேற்கத்திய இசையின் வெவ்வேறு வடிவங்களை தமிழ்ப்படுத்திக் கொடுத்தார்.
ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் இடம்பெறும் situation-க்கு ஏற்றார்போல, மிக முழுமையான இசை இயக்கத்தை உருவாக்க விரும்பிய இளையராஜாவின் கரங்களுக்கு, எஸ்.பி.பியின் வெண்கலக் குரல் விதம் விதமாய் முத்தமிட்டது.
திரையுலகிற்கு வருவதற்கு முன்பிலிருந்தே இசைக்கச்சேரிகளில் இணைந்து பணியாற்றி வந்த இளையராஜாவும், எஸ்.பி.பியும் திரையுலகில் கைகோர்த்த பிறகு, தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல், ஒரு இசை சகாப்தத்தை நிகழ்த்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வேறு பாடகர்களுக்கு இடம் கிடைக்குமா என யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 பாட்டுக்கள் என குரலைக் கொட்டினார் எஸ்.பி.பி.
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ என கேள்வி கேட்டார். என்னம்மா கண்ணு சௌக்கியமா என்ற குசல விசாரிப்புகளை ஆமாம்மா கண்ணு சௌக்கியம் என கேலியால் உடைத்தார். காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல என பந்தி விரித்தார்.
கேளடி கண்மணி என ராகம்பாடி
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணுக்கு தன்பாட்டு பாடி உண்மைகள் சொல்லி
கலைவாணியோ ராணியோ என தேடி அலைந்து
பாதக்கொலுசுப்பாட்டு பாடி முடித்தார் காதல் பாட்டுக்களில் காவியம் செய்த எஸ்.பி.பி.
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் என அவர் உருகியபோது, அபூர்வமற்ற சகோதரர்களைக்கூட காதலித்துத் தோற்றுப்போகும் ஆசைகள் வந்து ஆட்டுவித்தன.
ஓடும் நதிக்கும், உரசும் மரங்களுக்கும் மத்தியில் காதலின் தீபம் பாடிய கட்டிளம் குரல் தான், ஏஞ்சோடி மஞ்சக்குருவியில் அர்த்தநாரீஸ்வர பாவத்தில் அட்டகாசம் செய்தது என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள்.
சுந்தரிக்கு கண்ணால் ஒரு சேதி சொன்ன சுந்தரக்குரலில் காதல் சௌந்தர்யம் பாடியவர்தான், ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேர்த்தணைக்க என சரசத்தோடு விரசம் பாடினார் என்றால் யார் நம்புவார்கள்.
கோபம், வீரம், தன்மானம், காதல், கேலி, கொண்டாட்டம், இன்பம், சரசம், விரசம், அறைகூவல், அறிவிப்பு என சகல உணர்ச்சிகளிலும், சகல பாவங்களிலும் பாடியவர் எஸ்.பி.பி
அம்மா , அம்மா எந்தன் ஆருயிரே என அடிவயிற்றின் உணர்ச்சிகளை காற்றிலே அவர் கரையவிட்டபோது, ஆண்கள் கூட தங்கள் அடிவயிற்றில் கர்ப்பப்பை முளைத்துவிட்டதோ என தடவிப்பார்த்துக் கொண்டார்கள்.
எஸ்.பி.பி.யின் மிகத்தனித்துவமான Vocal expressions என்கிற குரல் பாவனைகள், திரைப்படத்தின் பாடல் இடம்பெறும் situationக்கு ஏற்ப கதைநாயகனின் முழு குணாதிசியத்தையும் ஒரே பாடலில், குரலில் காட்டிவிடும் வித்தையாக நிகழத்தொடங்கியது.
வெவ்வேறு குரல் பாவனைகள், இசைத்துணுக்கொலிகள், வெவ்வேறு குரல் மாதிரிகள், மிமிக்கிரி அட்டகாசம் என ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு கதையின் நாயகனை, ஹீரோவாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்தின எஸ்.பி.பி-யின் குரல்.
எம்.ஜி.ஆர்-ன் பின்னணிக்குரலாக ஒலித்த டி.எம்.சௌந்தரராஜன் தன் உச்ச ஸ்த்ததி பாடல்களால், எம்.ஜி.ஆரே நேரில் தோன்றி பாடும் அனுபவத்தை உருவாக்கி, எம்.ஜி.ஆர்-ன் தத்துவப் பாடல்கள் வழியாக அவரை மகா நாயகனாக உயர்த்தியதைப் போல, ஒவ்வொரு நடிகருக்கும் அந்த நடிகரின் ரசிகர் பட்டாளம், அந்நடிகரின் பிம்பம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் கதாநாயகத்தன்மைக்கு ஏற்றவாரு தனித்துவமாக பாடிய எஸ்.பி.பி நடிகர்களை நாயகர்களாக்குவதற்கான முக்கிய வாகனமாக மாறிப்போனார்.
சங்கீத ஞானத்தை நிரூபிக்கும் ராக கட்டுப்பாட்டுகளுக்குள் தன்னை அடக்கிக் கொள்ளாமல், ஒரு சாமானியனின் இசை விருப்பத்தை பூர்த்தி செய்யும் இசை பிரவாகமாக தன்னை மாற்றிக்கொண்டவர் எஸ்.பி.பி. அதுதான் அவரை வேறு எந்த பாடகரும் நிகழ்த்த முடியாத வீச்சை நிகழ்த்த வைத்தது. எஸ்.பி.பி-ஐ பாட்டு சூப்பர் ஸ்டார் ஆக்கியது.
சாமானிய ரசனைகளை மையப்படுத்தி இசைத்த எஸ்.பி.பி, தன் அபாரமான குரல் பாவனைகளால் இசையை ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்காட்டினார்.
எஸ்.பி.பி உருவாக்கிய கொண்டாட்ட வெளி, அவர் யாருக்காக குரல் கொடுக்கிறாரோ, அந்த நாயகனின் வெகுஜன பொழுதுபோக்குத்தன்மையை உயர்த்தியது. தனிப்பெரும் சந்தை மதிப்பை உருவாக்கியது. இந்திய இசை வெளியில் இப்படி தனித்த பெரும் சந்தை எஸ்.பி.பிக்குத்தான் பல மொழிகளிலும் அமைந்தது.
ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என ரஜினிகாந்த் தன் ஆக்ரோஷ ஆளுமையை எஸ்.பி.பியின் குரலில் அறிவித்துக்கொண்டார்.
விஷ் யூ ஹேப்பி தி நியூர் என வருடாவருடம் வீட்டுக்குள் வந்த கமலஹாசன் நான் தான் சகலகலா வல்லவன் என எஸ்.பி.பி மூலம் சங்கநாதம் செய்தார்.
சின்னமணிக்குயிலே பாடிக்கொண்டு விஜயகாந்த் கிராமத்து பெண்களிடம் செல்வாக்கு பெற்றார்.
மாங்குயிலே பூங்குயிலே, ராமராஜனை பட்டிதொட்டியெங்கும் பாடும் கிராமத்து சூப்பர் ஹீரோவாக்கியது.
பனிவிழும் மலர்வனத்தில் பாதை அமைத்து கார்த்திக் காதல் ராஜாங்கம் செய்தார்.
பாடும் நிலாவின் தேன் கவியில் மோகன் ஊரெங்கும் பாடும் மைக் மோகனார். சங்கீத மேகத்தில் தேன் சிந்தும் நேரம் நாயகனானார்.
போவோமோ ஊர்கோலம் என சின்னத்தம்பியாக ஒலித்த எஸ்.பி.பியின் குரலில், சின்னத் திலகம் பிரபு தமிழ்உலகம் முழுவதும் கேட்கும் நடிகரனார்.
வில்லனாக இருந்து மிகச்சிறந்த நடிகரான சத்யதாஜுக்கு வைகை நதியோரம் ஓர் பொன்மானைத் தேடிக்கொடுத்தார், எஸ்.பி.பி.
டி.ராஜேந்தரின் காதல் ராகங்களுக்கும், கவர்ச்சி ராகங்களுக்கும் தன் துள்ளல் குரலால் தூரிகை சேர்த்த எஸ்.பி.பி, முத்துநகையே முழுநிலவே பாடி சரத்குமாரின் குரலை முழுமைப்படுத்தினார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், மோகன், பிரபு, ராமராஜன், சத்யராஜ், சரத்குமார் என ஒருதலைமுறை நாயகர்களின் குரலாக ஒலித்த எஸ்.பி.பி தமிழ்நாட்டின் மூன்று பொழுதிலும் கேட்கும் முப்பொழுதுக்குமான முழுக்குரலானார்.
எஸ்.பி.பியின் குரலுக்கு நிகரான அழகானது, அவரது உச்சரிப்பு துல்லியம்.
ல, ள, ழ என லகரங்களையும், ந, ன, ண என னகரங்களையும், ர, ற என்ற ரகங்களையும் மிகத்துல்லியமாக உச்சரிக்கும் எஸ்.பி.பியின் குரல்தான், பலருக்கும் தமிழ் உச்சரிப்பை சரிபார்த்துக் கொள்வதற்கான உச்சரிப்பு வாய்ப்பாடு.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட16 மொழிகளில் பாடியுள்ள எஸ்.பி.பி எல்லா மொழியையும் மிகச்சரியாக உச்சரித்த பெருமைக்குரியவர்.
தமிழைவிட மிகசெல்வாக்கான வீச்சை தெலுங்கில் நிகழ்த்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜுனா, மகேஷ் பாபு, பவன் கல்யாண் என தலைமுறைகள் தாண்டி பாடிக்கொண்டிருந்தார்.
தமிழில் எஸ்.பி.பி யின் தாக்கம் உச்சத்துக்கு சென்றதன் முக்கியப்புள்ளி, ரஜினி - கமல் என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் அவர் ஒலிக்கத் தொடங்கியதே.
டூயட் பாடல்களின் கொஞ்சல்களின் தனிச்சரித்திரத்தை உருவாக்கிய எஸ்.பி.பி; லதா மங்கேஷ்கர், சுசிலா, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா, ஷ்ரேயா கோஷல் என தலைமுறைகளைத் தாண்டி ஜோடி பாடியுள்ளார்.
எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாடும் நேரம் யாவும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.
எஸ்.பி.பி - ஜானகி குரல் இணைந்து இசைக்கும் நேரமெல்லாம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், தென் மதுரை வைகை நதியோரம் தினமும் தமிழ்ப்பாட்டு பாடியது. மாங்குயிலும் பூங்குயிலும் ஒன்றைத் ஒன்றைத் தேடி வரும் நாள் பார்த்து காதல் நட்சத்திரம் குறித்ததுக்கொண்டது.
ஒருநாளும் உனை மறவாத, பிரியாத வரம் வேண்டும் என ரசிகர்களை நோக்கி காதல் வரம் கேட்டது எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்த காந்தப்பாடல்கள்.
ஜானகிக்கு அடுத்த தலைமுறைக்கு குயில்குரலோடு பாடவந்தார் சித்ரா. ஆனால், இந்தத்தலைமுறைக்கும் ஜோடிக்குரல் எஸ்.பி.பி தான்.
எஸ்.பி.பி-யும் சித்ராவும் இணைந்து ஒலித்தபோது செம்பூவே செம்பூவே என சிறைச்சாலைகள் சத்தம்போட்டு காதல் செய்தன. கண்களா, மின்னலா, கூந்தலா, ஊஞ்சலா என்று வெட்கச்சந்தேகத்தில் சங்கதி வாசித்தன. சிக்கி முக்கி ஒய்யாலா என சிரித்துக்கொண்டு, ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுதுபோல் என சத்தியம் செய்துகொண்டு, காதல் காதல் காதல், கண்ணில் என்ன மோதல் என காவியம் பேசிக்கொண்டன.
கமல்ஹாசனின் பின்னணிக்குரலாகவும், தெலுங்கில் கமலுக்கான டப்பிங் குரலாகவும் விளங்கிய எஸ்.பி.பி நூற்றுக்கணக்கான பாடல்களை கமலுக்காக பாடியுள்ளார். எஸ்.பி.பி பெற்ற அதிக தேசிய விருதுகள் கமல் படங்களுக்காகத்தான்.
கமலுக்காக, கம்பன் ஏமாந்தான் என புதுக்காவியம் பாடினார். சிப்பியிருக்குது முத்துமிருக்குது என வெண்கலக்குரலில் கவிதை பாடினார்.
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலாக்களை பூமியில் இறக்கினார். மௌனமான நேரங்களில் தன் குரலால் மயக்கினார். சிங்களத்து சின்னக்குயில்களுக்கு காதல் ரசமூட்டினார். உனக்கென்ன மேலே நின்றாய் என ஓ நந்தலாலா பாடினார்.
உன்னால் முடியும் தம்பி என சத்தியம் பாடினார். அண்ணாத்தை ஆடுறார் என ரகளை செய்தார். சாந்து பொட்டையும், சந்தனப்பொட்டையும் இளமை ரகளையும் துள்ள தன் குரலால் குழைத்துக் கொடுத்தார்.
பூங்காற்று கமல் பேர் சொல்ல கேட்டுக்கொண்டே இருந்த எஸ்.பி.பி குரல், மாயா மச்சிந்திரா என மாயாஜாலம் செய்தது. அவ்வை சண்முகிக்கு ஆண் குரல் கொடுத்தது.
இசையை ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்கச் செய்த எஸ்.பி.பி குரலின் முழு கொண்டாட்ட உற்சவத்தையும், ரஜினிக்கு எஸ்.பி.பி பாடிய நாயகப்பாடல்களில் காணலாம். ரஜினியின் ரசிக செல்வாக்கை பட்டிதொட்டியெங்கும் பாடச்செய்த ஒலிக்கச் செய்த பாடல்களாக எஸ்.பி.பி-யின் Rajini Intro பாடல்கள் அமைந்தன.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும் என மாஸ்காட்டிய எஸ்.பி.பி, தோட்டத்துல பாத்திக்கட்டிய பாடல்களை தமிழ்ச்சோற்றுக்குள் பாத்தி கட்டி ரஜினியின் குரலாக தமிழில் ஒலித்தார்.
வந்தேண்டா பால்காரன் என 90களில் தொடங்கிய ரஜினி சுனாமியை தொடங்கிவைத்த எஸ்.பி.பி, ராக்கம்மா கையத்தட்டு என கட்டளையிட்டு,
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என கூவி அறிவிப்புச்செய்தார்.
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா என அதகளப்படுத்திய எஸ்.பி.பி, ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழ்வாழ்வின் நற்செய்தியை படையப்பாவில் பாட்டாக பாடினார்.
தேவுடா தேவுடா என சந்திரமுகிக்காக திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்ட எஸ்.பி.பி, பல்லேலக்கா பாடி கூல் சொன்னார்.
ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்கள் ஒரு தலைமுறை இளைஞர்களையும், சிறுவர்களையும் குத்தாட்டம் போடச் செய்தன.
தென் தமிழகத்துக்கு பெரிய தலைக்கட்டு பெரிய தேவர் மகன் சக்தி தேவரின் பாட்டு எப்படி இருக்கும்? என்பதற்கு விடைதான் சாந்துப்பொட்டு சந்தனப்பொட்டு. ஆண்டனியை துவம்சம் செய்த பாம்பேயின் மாணிக் பாட்ஷா எப்படிப்பாடுவார் என்பதற்கு விடைதான் ரா ரா ராமய்யா...
இளையராஜாவின் இசை சாம்ராஜ்ஜியத்தில் எஸ்.பி.பி-யின் குரலோடு திளைத்துக் கொண்டிருந்த காலத்தில், தமிழ் திரையுலகில் புதிய புரட்சி ஒன்று நடந்தது, அந்த புரட்சிக்குப் பெயர் ஏ.ஆர்.ரகுமான்.
90களில் இசைவெளியில் புத்தம்புதிய மாற்றங்களின் மகா சாட்சியமாக புயல் வீச வந்த ஏ.ஆர்.ரகுமான் இசையில், தன் உச்சக்குரல் பாடல்களிலேயே புதிய உச்சத்தைத் தொட்டார் எஸ்.பி.பி
ரகுமான் இசையில் எஸ்.பி.பி. பாடும்போது, தொட தொட மலர்ந்தன - தொட்டதெல்லாம் மலர்ந்தன.
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லைத் தட்டுப்பாடு என சரிகமபதநிகளால் சரித்திரம் பாடினார். மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயில்களுக்கு அள்ளி அள்ளி இசைச்சீதனம் கொடுத்தார். காதலேனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன்களின் ஏக்கத்தை என்னைக் காணவில்லையே நேற்றோடு என பொங்கி வடிந்தார்.
ஒருவன் ஒருவன் முதலாளி என வாழ்க்கையின் தத்துவத்தை சாராட்டு வண்டி சத்தத்தோடு குதிரைக்கு வெண்கலக்குரல் வந்ததுபோல பாடிக்காட்டினார்.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வி.குமார், கங்கை அமரன், டி.ராஜேந்தர், மனோஜ் க்யான், தேவா, சிற்பி, பரணி, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்க ராஜா, பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், மணி ஷர்மா, கார்த்திக் ராஜா, தீனா, ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், இமான், அனிருத் என தமிழில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ரஜினி - கமல் இருவரின் பிரதான குரலாகவும், இளையராஜா - ரகுமான் இசைகளில் முதன்மைக்குரலாகவும் ஒலித்த எஸ்.பி.பி தங்கள் படத்தில் பாடினாலே கௌரவம் என்ற உயர்ந்த இடம் 90களின் இறுதியில் உருவானது.
விஜய் - அஜித் யுகம் தொடங்கிய போது பாடகர்களின் குரு என்கிற நிலைக்கு உயர்ந்த எஸ்.பி.பி விஜய் - அஜித் காலத்து நாயர்களுக்கும் கம்பீர குரலாக ஒலித்தார்.
என்ன அழகு எத்தனை அழகு விஜய்க்காக கேள்விகேட்ட, உன்னைப்பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என அஜித்துக்காக உருகினார்.
முன்பனியா முதல் மழையா என சூர்யாவுக்காக காதல் ரசம் வடித்த எஸ்.பி.பி, பொல்லாதவனில் எங்கேயும் எப்போதும் பாடி தனுஷ் வரை தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.
90களுக்குப் பிறகான காலத்தில் அஜித்தின் குரலுக்குத்தான் எஸ்.பி.பி கம்பீரம் மிகப்பொருத்தமாக இருந்தது.
அஜித் திரையுலகத்துக்குள் நுழைவதற்கே முக்கிய காரணமாக இருந்த எஸ்.பி.பி, சிவப்பு லோலாக்கு குலுங்கு ரசிகர்களை ஊட்டி அழைத்துச் சென்றார். நலம் நலமறிய ஆவல் காதல் சங்கதி பாடி கடிதம் எழுதி, வத்திக்குச்சி பத்திக்காதுடா என திமிர் பாடி, நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு அந்த நிறங்களில் சிகப்பே சிறப்பு என அஜித் பாடல்களுக்கு தனி மவுசை உருவாக்கியதில் எஸ்.பி.பிக்கு முக்கியப்பங்குண்டு. காற்றில் ஒரு வார்த்தை மிதந்து வரப்பாடி, அஜித்தை பட்டிதொட்டியெங்கும் பாடி மகிழச் செய்த எஸ்.பி.பி, விஜய் - அஜித் இருவருக்குமே குரல் கொடுத்ததன் மூலம் 3வது தலைமுறை சூப்பர் ஸ்டார்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டார்.
விஜய்யின் மென்மைக்குரலுக்கு எஸ்.பி.பி அதிகம் பாடியிருக்காவிட்டாலும், இந்தத் தலைமுறை நடிகர்களில் எஸ்.பி.பியோடு இணைந்து நடித்தவர் விஜய் மட்டும் தான்.
இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் தமிழ் சினிமாவில் பேசப்படப்போகும் சில கலைஞர்கள் யார் என்று விஜய்யிடம் கேட்டபோது, முதலில் எஸ்.பி.பி பெயரைத்தான் சொன்னார் விஜய்.
ஆம். தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கப்போகும் எஸ்.பி.பியின் குரல், எங்கேயும் எப்போதும் இசைரத்தத்தில் பாடிக்கொண்டே இருக்கும்.
காரணம், எஸ்.பி.பி.யின் கலைவெளி வெறும் திரைவாழ்க்கை அல்ல, அது சாமானியத் தமிழ் உலகின் கொண்டாட்ட வெளி.
(கட்டுரையாளர் விவேக் கணநாதன், எழுத்தாளர்- பத்திரிகையாளர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.