அ.பெ.மணி
திராவிட இயக்கத்தில் தளபதி என்ற வார்த்தை மிகவும் புகழ்பெற்றது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் தளபதியாக வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பேரைச் சொல்வார்கள்.
முதலாவதாக பட்டுக்கோட்டை அழகிரி, அடுத்து அண்ணா. மூன்றாவதாக கி வீரமணி.
பட்டுக்கோட்டை அழகிரி உடல் நலம் குன்றி இருந்த காலகட்டங்களில் அறிஞர் அண்ணா செயற்கரிய செயல் ஒன்றைச் செய்தார், தன்னை யாரேனும் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டுமேயானால் பட்டுக்கோட்டை அழகிரி பெயருக்கு நூறு ரூபாய் மணியாடர் அனுப்பிவிட்டு அந்த ரசீதை தன்னிடம் கொண்டு வந்து காட்டினால் தான் கூட்டத்திற்கு தேதி கொடுப்பதாகச் சொன்னார், இப்படி பிறன் துயர் தன் துயர் போல எண்ணி துடைக்கின்ற பாங்குதான் அறிஞர் அண்ணாவை தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளராகவும் செயல் வீரராகவும் மாற்றியது.
தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச் சமூகத்திற்கு எந்த வகையில் பயனளிக்கிறது என்று எண்ணியபடியே தன் பயணத்தைத் தொடர்ந்தவர் அறிஞர் அண்ணா.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கி இருந்த காலகட்டத்தில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அண்ணாவை பார்க்கச் செல்கிறார், அண்ணாவின் படுக்கையைச் சுற்றி பத்துப் பன்னிரெண்டு புத்தகங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றை எடுத்து இதுதானே உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? என்று பேராசிரியர் கேட்கிறார், எனக்குப் பிடித்து என்னவாகப் போகிறது இனிதான் நான் படித்ததை என்னால் தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாதே? என்று வேதனைப்படுகிறார் அண்ணா. இதுதான் அண்ணா!.
1909 ஆம் ஆண்டு காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரையாக பிறந்த அண்ணா, 1934 ஆம் ஆண்டு தந்தை பெரியாரை நேரடியாக சந்திக்கிறார். அப்போது அவருக்கு வயது 25. 1938 முதல் தந்தை பெரியாரோடு இணைந்து பயணிக்கிறார். பத்தாண்டுகள் கழித்து 1949ல் திமுகவை தொடங்குகிறார் அப்போது அண்ணாவின் வயது 40.
அடுத்த இருபது ஆண்டுகள் அரசியல் களத்தில் பயணித்த அண்ணா முதலமைச்சர் என்ற மிகப்பெரிய உயரத்தை எட்டி 60 வயதில் மரித்துப் போனார். 30 ஆண்டுகள் கல்வி, 10 ஆண்டுகள் சமூகப்பணி, இருபது ஆண்டுகள் அரசியல் களம் என எளிதாக அண்ணாவை வரையறை செய்யலாம்.
தீராத அறிவுத்தேடலோடு இணையற்ற சமூக சிந்தனையோடு உயர்வான அரசியலை தமிழ் பெரு நிலத்திற்குள் முன்னெடுத்த தகையாளர் அறிஞர் அண்ணா.
வேறு எந்த தலைவரும் முன்னெடுக்காத வகையில் இளையவர்களை அரசியல் படுத்தி அதிகார அடுக்குகளை நோக்கி பெரிய அளவில் நகர்த்தியவர் அண்ணா.
தன்னையொத்த தன்மையிலேயே தன் தம்பிகளையும் வார்த்தார். படிக்க சொல்லித் தந்தார், எழுத களம் அமைத்துக் கொடுத்தார், பேச மேடைகளை எழுப்பினார், பிறகு அதிகாரத்தில் உட்கார வைத்தார். பெற்ற அறிவையும் கைக்கெட்டிய அதிகாரத்தையும் ஏழை எளியோருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி மறைந்தவர் அண்ணா.
1957 ஆம் ஆண்டு திருச்சியில் திமுகவின் மிகப் பெரிய மாநாடு நடக்கிறது, அந்த மாநாட்டிற்கு அன்பில் அழைக்கிறார் என்று தன் தம்பிகளில் ஒருவரை முன்னிலைப்படுத்தி அழைப்பு விடுத்தவர் அண்ணா.
கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் சட்டப்பேரவைக்குள் வர வேண்டியதுதானே என்று காமராசர் திமுகவிற்கு சவால் விடுத்தார், அவரது சவாலை ஏற்று 1957ஆம் ஆண்டு நடந்த திமுக மாநாட்டில் தொண்டர்களிடம் தேர்தலில் போட்டியிடலாமா? என கருத்து கேட்க பெட்டிகளை வைத்தார் அண்ணா,
தொண்டர் தம் எண்ணத்திற்கு ஏற்ப 1962 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று 15 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்குள் நுழைந்தனர்.
பாவேந்தர் பாரதிதாசன் அண்ணாவை கடுமையாக விமர்சிப்பதாக அவரிடம் கூறிய பொழுது, கவிஞர்களே எப்பொழுதும் அப்படித்தான், கோபம் வந்தால் பேசத்தானே செய்வார்கள்! நம்மை மட்டுமா பேசுகின்றார்கள்? என்று எண்ணிக் கொள்ளவேண்டியதுதான் என்றாராம் அண்ணா.
ஒரு முறை பாவேந்தர் பாரதிதாசனுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அண்ணா அளித்தார், அப்போது பணத்தை ஒரு தட்டில் வைத்து அதை அண்ணா நீட்ட பாவேந்தரை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இப்படி ஒரு மனிதனின் தேவையறிந்து உதவுகின்ற பாங்கும் பண்பறிந்து விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பாங்கும் ஒருங்கே பெற்றவர் அண்ணா.
அண்ணா எழுதிய ஓரிரவு நாடகத்தை திருச்சியில் வைத்துப் பார்க்கிறார் கல்கி, இதோ ஒரு பெர்னாட்சா தமிழ்நாட்டில் இருக்கிறார் என மனம் திறந்து அண்ணாவை பாராட்டினார்.
பெரியார் உங்களை கடுமையாக திட்டுகிறார் என்று அண்ணாவிடம் சொன்னார்கள், பெரியார் என்னை எவ்வளவோ பாராட்டி இருக்கின்றார். இப்போது திட்டுவதை பழைய பாராட்டுகளில் இருந்து கழித்துப் பார்த்தால் கூட பாராட்டுகளே மிஞ்சி நிற்கும் என்று பதில் சொன்னவர் அண்ணா.
லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து ஒரு தலைமுறையையே செழுமைப் படுத்தியவர் அண்ணா.
ஜனநாயக நாட்டில் அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான நவீன அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா.
அமைப்பு ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன் காலத்திற்குப் பிறகும் கூட வலிமையாக இருக்கும்படியான ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒரு தலைவனுக்கு மிக நவீனமான பார்வை வேண்டும், அது அண்ணாவிடம் நிறையவே இருந்தது. நவீன தமிழகத்தின் சிற்பி என்று அண்ணாவை சொல்லலாம்.