Advertisment

சம உரிமை - சுய மரியாதைக்கு பாதை அமைக்குமா இலங்கை அதிபர் தேர்தல்?

KS Radhakrishnan Writes: ஈழத்தமிழர்கள் நிம்மதியும், சம உரிமை, சுயமரியாதையோடு வாழக்கூடிய நிலை வரவேண்டுமென்பது தான் நம்முடைய விருப்பங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu local body election result chennai high court dismissed petition

Tamil Nadu local body election result chennai high court dismissed petition

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

Advertisment

உலகின் பெரும்பாலான நாடுகளில் பிரதமர் ஆட்சிமுறை காணப்பட்டாலும், இலங்கையைப் பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை என்பது முக்கியமானதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் இரண்டாம் சரத்துக்கு அமைய எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரும் டிசம்பரில் மைத்ரிபால சிறிசேனேவின் காலம் அங்கே முடிகிறது. நவம்பர் 16 ஆம் தேதி (சனிக் கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

மொத்தமாக 41 வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தபோதும் அவர்களில் 35 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கோட்டபாய இராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியிலிருந்து அனுரகுமார திசாநாயக்க, மற்றும் மகேஸ் திசாநாயக்க ஆகியோரும் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியளாளர் அஜந்தா பெரேரா, தேசிய அபிவிருத்தி முன்னணியிலிருந்து றொகான் பலேவத்தே, முன்னிலை சோசலிச கட்சியிலிருந்து துமிந்த நாகமுவ, மக்கள் சக்தி கட்சியிலிருந்து சமன் பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஆரியவன்ச திசாநாயக்க, ஐக்கிய சோசலிச கட்சியிலிருந்து ஸ்ரீதங்க ஜெயசூர்ய நவசம, சமாஜ கட்சிலிருந்து வெட்டி கமகே, நந்திமித்ர சோசலிச சமத்துவக்கட்சியிலிருந்து வஜிரபனி ஸ்ரீவர்த்தனே, நவ சிங்கள உறுமய கட்சியிலிருந்து சரத் மன்னமேந்திரா, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியிலிருந்து ஏ எஸ்பி லியனகே, ஜனசேத்தா பெரமுனவிலிருந்து பத்ரமுல்லே சீலாரத்ன தேரோ, மக்கட்தலைநாடு இயக்கத்திலிருந்து அருண டீ சொய்சா, ருகுண ஜனதா பெருமுனவிலிருந்து அஜந்தா டீ சொய்சா, தேசிய இனங்களின் ஜக்கியத்திற்கான அமைப்பிலிருந்து நாமல் ராஜபக்ச, எமது தேசிய முன்னணியிலிருந்து சுப்பிரமணியம் குணரத்னம், ஒக்கோம வசியோ ஒக்கோம ராஜவரு சண்வகானநயவிலிருந்து பிரிந்த எதிரிசிங்கே, ஆகியோருடன் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களாக ஜெயந்த கெற்றகொட, ஸ்ரீபால அமரசிங்கே அப்பரேக்கே புன்னாநந்த தேரர், மில்றோய் பெனாண்டோ, சமன்சிறி கேரத், சரத் கீர்த்திரத்ன, அனுருத்ர பொல்கம்பொல, சமரவீர வீரவன்னி, அசோக வடிகமன்கவ, இலியாஸ் ஐரூஸ், முகமட் பியசிறி, விஜயநாயக்க ரஜீவ வீரசிங்க, எம் கே சிவாஜிலிங்கம், எம்.எல்.ஏ.எம் கிஸ்புல்லா, கசன் முகமட் அலி, ஆகியோரும் ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இலங்கை மக்களிடையே எதிர்பார்ப்பினை எற்படுத்தியுள்ள இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து போட்டியிடுகின்ற கோட்டபாய இராஜபக்ச ஆகியோருக்கிடையில் கணிசமான போட்டித்தன்மை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களுக்கு அடுத்த நிலையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து போட்டியிடுகின்ற அனுரகுமார திசாநாயக்க தொடர்பான வெளிப்பாட்டினை மக்கள் கொண்டிருந்தாலும் இருபது ஆண்டுகளின் பின் களத்தில் இறங்கியுள்ள பெண் வேட்பாளர் என்ற ரீதியில் சூழலியளாளர் அஜந்தா பெரேராவும் கவனம் பெறுகின்றார்.

எது எவ்வாறிருப்பினும் சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபாய இராஜபச்ச ஆகியோருக்கிடையில் நிலவும் போட்டியானது பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை கொழும்பு, கழுத்துறை கேகாலை போன்ற மாவட்டங்களில் அனேகமான சிங்கள மக்களது அதரவு ஜக்கிய தேசியக்கட்சி சார்ந்து சஜித் பிரேமதாஸவின் பக்கம் காணப்படுகின்றது. கண்டி உள்ளிட்ட மலையகப்பகுதிகளிலும் இந்நிலை காணப்படுகின்றபோதும் மலையக தமிழ் தலைமைகளில் ஆறுமுகம் தொண்டமான் கோட்டபாய ராஜபச்சவிற்கு அதரவு வழங்கப்போவதாக குறிப்பிட்டுள்ளமையும் கருத்திற்கொள்ள வேண்டியது.

காலி, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அம்மக்களின் வாக்கு என்பது எப்பொழுதும் கோட்டபாய ராஜபக்சவினர் சார்ந்திருப்பது வழமை. எனினும் அங்குள்ள படித்தவர்கள் மத்தியில் இம்முறை கோட்டபாய ராஜபக்சவிற்கான வாக்குகள் வீழ்ச்சியுற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் செல்வாக்கு அவர்மீது திணிக்கப்படலாம் என்பதே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாணவர்கள் தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி 13 அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளனர். தமிழர் தேசிய கூட்டமைப்பு சாஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சம்பந்தன் சாஜிக்கு ஆதரவாக திரிகோணமலையில் பிரச்சாரத்தை துவங்கினார்.

கிழக்கு மாகாண மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்குள்ள முஸ்லீம் மக்களது பெரும்பான்மையான வாக்கு ஜக்கிய தேசியக்கட்சி சார்ந்து சஜித் பிரேமதாஸவிற்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கைப்பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களது நியாயபூர்வமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக்குறைவு என்பதனால் யார் வந்தாலும், யார் வென்றாலும் யாரும் எதையும் நிகழத்திவிடப்போவதில்லை என்கின்ற மனோநிலை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

எனினும் வாக்களிப்பது உரிமையும் கடமையும் என்கின்ற அடிப்படையில் அவர்களது வாக்குக்கள் சஜித் பிரேமதாச சார்ந்து அமைவதற்கான வாய்ப்புக்களே அதிகம். 2009ம் ஆண்டு இறுதியுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் சார்ந்த செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபாய ராஜபக்சவின் மீதான தீராத வெறுப்புணர்வினை எற்படத்தியுள்ளன. இந்நிலையில் அவருக்கான வாக்குகள் தமிழர் தாயகப்பிரதேசங்களில் எட்டாக்கனி.

தமிழீழ விடுதலைப்புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட கட்சி என்கின்ற காரணத்தினாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் அதரவு இருந்து வந்தது. இனி எப்படியோ நிலை?. இந்நிலையில் அவர்களது நிலைப்பாட்டை கருத்திற்கொண்டு இத்தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

தவிர சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களால் நாடளாவிய ரீதியில் வாக்குகள் சிதறடிக்கப்படுவற்கான வாய்ப்புகள் இருப்பினும் பெரும்பான்மை என்பது சஜித் பிரேமதாச மற்றும் கோட்டபாய ராஜபக்ச சார்ந்தே நகரும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையில் அதிபர் பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் போட்டியிட விதியில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி கோத்தபயேவுக்கு எதிராக உள்ளது. தமிழர்களுடைய ஆதரவை பெற விரும்பு ஒவ்வொரு சிங்களவரும் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழினத்தை அழிக்கக் கூடிய நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு மைத்ரி, ரணில்வரை நன்றியற்ற செயல்பாடுகளை காட்டியுள்ளனர். அனுராகுமார திசநாயவும் களத்தில் இருக்கின்றார். கோத்தபய வெற்றி பெற வேண்டுமென்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் ஆதரவளித்துள்ளார்.

சஜீத் உடைய செல்வாக்கு பெருகி வருவதாக தகவல். சஜீத் இதுவரை ஊழல் இல்லாத, தமிழர்களை அழித்த ரத்தக்கரை படாத இளம் ஜனாதிபதி என்ற கருத்தும் ஒரு பக்கத்தில் இருக்கிறது. யார் வந்தாலும் இதுவரை தமிழருடைய நலனை போற்றவில்லை என்பது தான் இதுவரை நடந்த நிலைப்பாடுகள்.

அதிபர் தேர்தல் முடிந்தவுடன் இராணுவத் தமிழ் கைதிகளை விடுதலை செய்வேன் என்று கோத்தபய ராஜபக்சே கூறுகிறார். ஆனால், சஜீத்துடைய பிரச்சாரங்கள் அனைத்தும் பொதுவாக உள்ளன. அவர் நாட்டின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று மட்டும் சொல்லி வருகிறார். சஜீத்துக்கு ரணிலுடைய ஆதரவு உள்ளது. தமிழர்கள் வாக்கு மட்டுமல்லாமல், தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதிலும் சஜீத் ஆர்வம் செலுத்துகிறார்.

ரணில் விக்கிரமசிங்கே தமிழருக்கான தீர்வைப் பற்றியும் பேசினால் மட்டுமே தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளமுடியும் என்று நம்புவதாக சஜத்திடம் சொல்லி வருகிறார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ரணில் தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யவே இல்லை. போர்க்குற்ற, சர்வதேச நம்பகமான விசாரணைக்கும் ரணில் ஒத்துழைப்பே அளிக்கவில்லை.

இந்நிலையில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இல்லாததனால் கொண்டுவர ரணிலால் இயலவில்லை. இதை குறித்தும் இந்த தேர்தல் களத்தில் எந்த கருத்தும் வெளிப்படவில்லை.

இதற்கு முன்னேற்பாடு தான் யாழ்ப்பாண விமான நிலையத்தை திரும்பவும் செயல்படுத்தி தமிழர்களுடைய ஆதரவை பெற ரணிலும், மைத்ரிபால சிறிசேனேவும் போட்டி போட்டு தங்கள் கடமையை செய்தனர்.

எல்.எல்.ஆர்.சி (LLRC) அறிக்கையின்படி எந்த நல்லெண்ண நடவடிக்கைகளும் இதுவரை இல்லை. வெறும் பசப்பு வார்த்தைகளாக மைத்ரியும், ரணிலும் பேசி வருகின்றனர்.

இலங்கையில் 70 ஆண்டுகால அரசியல் நிகழ்வில் தமிழர்களுக்கு பல உத்தரவாதங்களும், ஒப்பந்தங்களும் அறிவித்து எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த தேர்தலிலும் வெறும் உறுதிமொழிகள் மட்டுமே தமிழர்களுக்கு இருக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கும் அதிகமாக ஏதாவது உறுதிமொழி கொடுத்துவிட்டால் பெரும்பான்மையான சிங்களர்கள் வாக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் இனப்பிரச்சனைகளை பேசாமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டுமே முன்வைக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 இலட்சம் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி புலம்பெயர்ந்து விட்டனர். வேலைவாய்ப்புகளும் அதிகமாக இல்லை. தமிழர்களுடைய பிரச்சனை பேசாப் பொருளாகிவிட்டது. சம்பிரதாயத்திற்கு வாக்குகளை வாங்கவே தமிழர்களுக்கு போலியான வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் வழங்கப்படுகிறது.

ஆனால் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கீழ்க்குறிப்பிட்ட கோரிக்கைகளை யாரும் நிறைவேற்றக்கூடிய அளவில் வேட்பாளர்கள் எந்த அழுத்தமான உறுதிமொழியும் கொடுக்காதது வேதனையான விடயமாகும்.

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார்.

சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.

2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.

3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.

5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.

தமிழர்களின் வாக்குகளைப் பெற கடந்த காலங்களில் சிங்களர்கள் பிரபாகரனையும், சம்மந்தனையும் யாழ்ப்பாணம் வரை வந்து சந்தித்து கையை, காலைப் பிடித்து பல உறுதிமொழிகளைக் கொடுத்து நம்பவைத்து எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை. இன்னும் இந்த இரண்டு வேட்பாளர்களும் பட்டும் படாமல் தமிழர்களுடைய வாக்குகளை பெற தங்களுடைய பிரச்சார யுக்திகளை வகுத்து வருகின்றனர். எந்த தீர்வும், வளர்ச்சித் திட்டங்களும் தமிழர்களுக்கு பொறுப்புக்கு வந்தவுடன் தட்டிக் கழிக்கத்தான் செய்வார்கள். தமிழர்களுடைய நிலை என்ன செய்யமுடியும்?

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து தமிழர்களுடைய நியாயங்களை அறிந்து பணியாற்றக் கூடிய நேர்மையான அதிபர் வந்தால் இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளி பெறும். இது நடக்குமா என்பது தான் வேதனையான விடயம்.

மறுபுறம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய வார்த்தைகளை நம்பி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கும் முடிவை தமிழ் மக்கள் எடுத்தால் அது தவறான முடிவாகும் என்று பொருள்பட முன்னைய ஐனாதிபதி மகிந்த இராஜபக்ச கூறியுள்ள கருத்திற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க தமிழ் மக்கள் தெளிவான அரசியல் அறிவும் பார்வையும் கொண்டவர்கள், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை அவர்கள் புறம் தள்ளியதில்லை. எனவே இது தொடர்பாக மகிந்த இராஜபக்ச கருத்துக் கூறத்தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

இதே சந்திரிக்கா குமாரதுங்கதான் புனித பீட்டர்ஸ் தேவாலய படுகொலைக்கும், 1995 காலப்பகுதியின் யாழ்ப்பாணப் போர் நடவடிக்கைக்கும், தாரை தாரையாக கண்ணீர் சிந்திய மக்களின் இடப்பெயர்விற்கும் காரணியாக இருந்தவர், நாவற்குழிப்பாலத்தை கடக்க முடியாமற் கடந்து வந்த ஒரு தந்தை தன் மகனை கட்டை வண்டியில் ஏற்றிக்கொண்டு வண்டியை உருட்டிக்கொண்டு செல்ல அதில் இருந்த மகன் வண்டியின் கைப்பிடியின் முன்பகுதியில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த வாழைக்குலையிலிருத்த பச்சைக்காயை உண்டபடி ஏ9 தெருக்கள் வழியே அகதிகளாக நகர்ந்துகொண்டிருந்ததை சாவகச்சேரியின் தெருக்களிலிருந்து சிறுமியின் கண்களால் கண்டேன் என்ற காட்சிகளையெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்றைக்கு அங்கு தேர்தல் களத்தில் கடந்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற வேடிக்கை காட்சிகள், வேடிக்கை மனிதர்கள், காட்சிப் பிழைகள், இடமாறு தோற்றப் பிழைகள் தேர்தல் களத்தில் நடந்துக் கொண்டுதானிருக்கின்றது.

திரும்பவும் பார்ப்போம், இலங்கையின் அரசியல் சதுரங்கத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டால் மகிழ்ச்சியே. ஈழத்தமிழர்கள் நிம்மதியும், சம உரிமை, சுயமரியாதையோடு வாழக்கூடிய நிலை வரவேண்டுமென்பது தான் நம்முடைய விருப்பங்கள்.

(கட்டுரையாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர் – திமுக, இணை ஆசிரியர் – கதைசொல்லி- பொதிகை – பொருநை – கரிசல். தொடர்புக்கு rkkurunji@gmail.com)

Srilanka K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment