தமிழில் தலித் பாத்திரங்களை சித்தரிப்பதற்கான பொதுவான குறியீடு போல் ஆகிவிட்டார் நந்தனார். குறிப்பாக தலித்துகளை அரவணைப்பதற்கான 'மேல் ஜாதி'யினருக்கான முன்மாதிரியாக நந்தனாரே கொள்ளப்படுகிறார். தேசிய இயக்கத்தினர் தலித் பிரச்சனைகளின்பால் கவனம் செலுத்திய போது அவர்களால் கைக்கொள்ளப்பட்ட தலித் தரப்பு பாத்திரம் நந்தனார் தான்.
இந்த'நந்தனார்'1861 ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய "நந்தனார் சரித்திர கீர்த்தனை" மூலம் அறிய வந்தவர் என்றாலும் இருபதாம் நூற்றாண்டு நவீன சூழலில் திரும்ப திரும்ப எழுத்தாளப்பட்டது மூலமே அவர் இன்றைய பிரபல்யத்தை அடைந்தார்.மேல் ஜாதியினரின் உதவி மூலம் மேலேற விரும்பிய தலித்துகளும் இரண்டு தரப்புக்கான இணைப்பாக நந்தனார் என்னும் இந்த குறியீட்டையே எடுத்தாண்டனர்.நந்தனார் வாழ்நிலையில் தலித்துகள் இருந்தார்களோ, இல்லையோ அவர்கள் பற்றி இந்திய சாதி மனம் எதிர்பார்க்கும் குணாம்சங்களை நந்தனார் என்னும் பாத்திரத்தின் மீது ஏற்றி பார்த்து வந்தனர். அதில் திருப்தியடைந்ததால் தான் இங்கு அப்பாத்திரம் திரும்பத் திரும்ப எழுத்தாளப்பட்டது. தலித்துகள்,சாதிய வரையறைக்கு அடங்கி முன்பு போல இருக்க மாட்டோம் என்ற முடிவுக்கு வரும் போதெல்லாம் தங்கள் நலனின் வரையறைக்குட்பட்டு நினைவுக்கு கொணரப்பட்டவராக நந்தனார் இருந்து வந்திருக்கிறார்.
இணக்கம் என்பது நவீனமானதல்ல, மாறாக அது மரபிலேயே இருந்தது என்பதற்கான சான்றாக நந்தனார் கதை காட்டப்பட்டது. குறிப்பாக தலித்துகளுக்கும் தலித் அல்லாதவருக்குமிடையே முரணையும் இணக்கத்தையும் பேச முயன்ற போது நந்தனார் கதையாடல் நேரடியாகவோ மறைமுகமாகவோ வந்து விடும்.சில இடங்களில் அவரை தெரியாமலும் நினைவு கொள்ளாமலும் கூட இந்த முரண் - இணக்கம் தொழிற்பட்டு விட்டிருக்கிறது. அதற்கேற்பவே நந்தனாரை பற்றிய புதிய மறுஆக்கங்களும் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன.
தமிழில் சேரன் இயக்கத்தில் பாரதி கண்ணம்மா (1997) என்றொரு படம் வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாக இருந்த அதே வேளையில் படத்திற்கு வெளியேயும் படம் பற்றி கவனம் உருவானது. எதிரும் புதிருமான விமர்சனங்களும் வெளியாகின.
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய வரலாற்று ரீதியான பேச்சிலும் இன்று வரையில் இப்படம் தவறாமல் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்த் திரைப்படங்களில் பாரதி கண்ணம்மா குறிப்பிடத்தக்க படம்.
தென் மாவட்டத்தை கதைக்களமாகக் கொண்ட பாரதி கண்ணம்மா படத்தின் கதை இதுதான்: தேவர் பாளையம் என்ற ஊரிலுள்ள அம்பலக்காரர் வீட்டில் குடிக்கள்ளர் முறையின் கீழ் பண்ணையாளாக இருக்கிறார் நாயகன் பாரதி. தலித்துகளுக்கும் தலித் அல்லாத (சொந்த) சாதியினருக்குமிடையே சாதி உறவும் அதன் அமைப்பொழுங்கும் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என விரும்புகிறவர் அம்பலக்காரர். இந்த வரையறையை மீறினால் சொந்த சாதியினராக இருந்தாலும் கண்டிப்பார்; வரையறையை மீறாத தலித்துகள் மீது அன்போடு இருப்பார். பாரதி மீது அன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதன் பொருள், அவன் தலித்துகளுக்கான வரையறையோடு இருக்கிறான் என்பதேயாகும்.
இந்நிலையில் அம்பலக்காரர் மகள் கண்ணம்மா பண்ணையாள் பாரதியை விரும்புகிறாள். இதற்கு முன்பு மாயன் என்ற தலித் இளைஞன் அம்பலக்காரர் சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து ஊரை விட்டு ஓடிப்போனபோது கடுமையாக எதிர்வினை ஆற்றியவர் அம்பலக்காரர். அந்த பழைய அனுபவத்தையும் தன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வைத்து கண்ணம்மாவின் காதலை ஏற்க மறுக்கிறான் பாரதி. மனதளவில் அவள் மீது விருப்பம் இருந்தாலும் இந்த சூழல் கருதி விலகியே இருக்கிறான். இது எதுவும் தெரியாத நிலையில் கண்ணம்மாவுக்கு சொந்த சாதியில் மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார் பண்ணையார். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு கண்ணம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். தன் மீதான காதலால் தான் அவள் இறந்து போனாள் என்பது பாரதிக்கு மட்டுமே தெரியும். வாழும் போது விருப்பம் தெரிவிக்க முடியாத பாரதி, இப்போது கண்ணம்மா எரியும் சிதையில் விழுந்து இறந்து போகிறான். அப்போதுதான் அம்பலக்காரரும் அவர் சாதியினரும் இந்த காதலை புரிந்து கொள்கிறார்கள். பாரதியின் விசுவாசத்தை நினைத்து பெரும் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் பண்ணையார்.
குற்ற உணர்விலிருந்து மீள விரும்பும் அம்பலக்காரர் அதற்காக ஒரு காரியம் செய்கிறார். அதாவது முன்பு பாரதியின் தங்கையை தன் சொந்த சாதிக்காரன் காதலித்தான். ஆனால் ஊரின் சாதிய வரையறையால் நடக்காமல் போகிறது. இப்போது அவர்களை அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் 'மறுக்கப்பட்ட'காதலை சமன் செய்வதாக கருதுகிறார்.
அம்பலக்காரரின் இந்த செயல் புதிதானதில்லை. நம்முடைய மரபில் இருந்து வந்த முறையே இங்கு சற்று வடிவம் மாற்றி நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதாவது சாதி மாறி காதலையோ, கல்யாணத்தையோ செய்தால் ஆண் பெண் இருவரையோ அல்லது ஒருவரையோ கொன்று விட்டு பழிக்கு /அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவர்களை தெய்வமாக்கி விடுவது நம் மரபில் இருக்கிறது.இங்கு அம்பலக்காரர் செய்வதும் ஏறக்குறைய அதையேதான். ஆனால் நவீன கால கருத்தியல் தாக்கத்திற்கு ஏற்ப இந்த விஷயத்தை சற்றே வடிவம் மாற்றி காட்டுகிறது திரைப்பிரதி.
இங்கு அம்பலக்காரர் பாரதியையும் கண்ணம்மாவையும் கொல்லவில்லை. காரணம் 'அவர்களிடையேயான காதல் 'அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் இருவரும் சாவதற்கு அவரின் சாதி வெறியே காரணம். எனவே குற்ற உணர்வு கொள்கிறார். பாவம், அச்சுறுத்தல் என்பதை மரபு என்று எடுத்துக் கொண்டால் குற்ற உணர்வு என்பதை நவீன கால அரசியல் என்று கொள்ளலாம். இந்த குற்ற உணர்வை அவர் எவ்வாறு அர்த்தப்படுத்த விரும்புகிறார் என்பதுதான் இப்படத்தில் நாம் காண வேண்டிய செய்தி.
பண்ணையாளும் மகளும் இறந்து போனாலும், பண்ணையாள் பாரதியின் விசுவாசம் மிக்க பற்று தான் அம்பலக்காரரின் குற்ற உணர்வுக்கு காரணமாகிறது. அதற்கு பரிகாரமாக தான், பாரதியின் தங்கையை காதலித்த தன் சாதிக்காரனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறார். தொடர்ந்து ஊரின் சேவை சாதியினருக்கு அவர்கள் பணியாற்றாமலேயே - கேளாமலேயே தவறாமல் பொருட்கள் அனுப்புகிறார். தன் தேவைகளுக்கு கூட சாதி ரீதியான பணியாளர்களை வைத்துக் கொள்வதை விடுத்து, தானே நிறைவு செய்து கொள்ளுகிறார். இதன் மூலம் இறந்தவர்களுக்கு மரியாதை /பிராயச்சித்தம் செய்வதாக கருதுகிறார். பாரதி அம்பலக்காரரின் விருப்பத்தை மீறி அவர் மகளை காதலிக்கவில்லை; ஓடிப் போகவில்லை; அவரை அவமானத்திற்கு ஆளாக்கவில்லை.மாறாக தன்னுடைய இயலாமையை இறப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறான். இறப்பு தான் எல்லாவற்றிலும் இறுதியானது. அந்த இறுதி தான் அவர்கள் காதலுக்கான ஒரு செய்தியாக அம்பலக்காரருக்கு தெரிகிறது.இவ்வாறு செய்ததால் அவருக்கு அவமானம் நேரவில்லை. இந்த வகையில் பாரதி அவருக்கு முக்கியமானவனாக தெரிகிறான்.
இந்த இடத்தில் தான் சாதி கடந்து காதலித்ததால் இறந்து போனவர்களை வணங்கும் உள்ளூர் மரபு போன்று இல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் திரும்பத் திரும்ப பேசப்பட்ட நந்தனார் கதையாடலோடு இந்த படம் நெருங்கி போவதை பார்க்கிறோம்.
கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திர கீர்த்தனையின் நந்தனாருக்கும், சேரன் காட்சிப்படுத்திய பாரதி கண்ணம்மா பாரதிக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.இருவருமே தலித்துகள். நந்தனார் பண்ணைக் கூலியாக இருக்கிறார். பாரதி குடிக்கள்ளர் முறையில் வேலையாளாக இருக்கிறான். படத்தின் மொத்த கதையும் அம்பலக்காரரால் நினைவு கூரப்படுவது போல் நந்தனார் கதை உபமன்னிய முனிவரால் நினைவு கூறப்படுகிறது.
நந்தனாருக்கு முன் இரண்டு பேர் இருக்கிறார்கள்.ஒருவர் இறைவன்,மற்றொருவர் பண்ணையார்.இருவருமே நந்தனாருக்கு 'மேலானவர்கள் '.அதில் அவருக்கு இறைவன் தான் இலக்கு. இறைவனை அடைய பண்ணையாரிடம் அனுமதி கேட்கிறார்.இந்த இரண்டு பேர்களுக்கு இடையிலான நந்தனாரின் ஊடாட்டம் தான் மொத்த கதையாடல்.
ஆனால் பாரதி கண்ணம்மா கதையில் அம்பலக்காரர் மட்டுமே மேலானவர்.அம்பலக்காரர் பாரதியின் மதிப்பிற்குரியவர். அதேவேளையில் அம்பலக்காரர் நம்பும் சாதிய விதிகளை மீறாமலும் இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.
நந்தனார் இறைவனை அடைய பண்ணையார் தடையாக நிற்கிறார். தான் வணங்கும் கடவுளை நந்தனார் வணங்கினால் தனக்கு சமமாகி விடுகிறான் என்று பண்ணையார் அஞ்சுகிறார்.எனவே நந்தனார் சிதம்பரம் செல்ல மறுப்பு தெரிவிக்கிறான் பண்ணையார்.
பாரதி,கண்ணம்மாவை திருமணம் செய்தால் அம்பலக்காரரின் சாதிக்குள் வந்து விடுவான்.ஆனால் பாரதி, கண்ணம்மாவை ஏற்பதில் அம்பலக்காரர் நம்பும் சாதி விதிமுறைகள் தடையாக நிற்கின்றன. இரண்டு இடத்திலும் பிரச்சினை ஒன்று தான். நந்தனார் இறைவனுக்கும் பண்ணையாருக்கும் இடையே ஊடாடுவது போல் பாரதி, கண்ணம்மாவின் காதலுக்கும் அம்பலக்காரரின் சாதிய விதிகளுக்கும் இடையே ஊடாடுகிறான்.சிதம்பரம் சென்று நடராசரை காண விரும்பும் நந்தனாரின் விருப்பத்திற்கு இணையானது கண்ணம்மா மீதான பாரதியின் காதல்.பாரதிக்கு கண்ணம்மா மீது காதல் இல்லாமலில்லை.அவன் வெளிப்படுத்துவதில்லை, அவ்வளவு தான்.நந்தனார் பண்ணையார் அனுமதியோடு இறைவனை அடையும் விருப்பத்தை நிறைவு செய்ய பார்க்கிறார்.பாரதி இறந்ததால் 'விருப்பம்' நிறைவேறுகிறது.
பண்ணையாரைத் தாண்டி இறைவனை அடைய விரும்புகிறார் நந்தனார். அதற்காக பண்ணையார் மீது விசுவாசம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அவனை விசுவாசிக்கிறார்; அனுமதியை யாசிக்கிறார். பண்ணையார் அனுமதி பெற்றே நடராசரை பார்க்கச் செல்ல விரும்புகிறார்.
இங்கும் பாரதிக்கு கண்ணம்மா மீது விருப்பம் இருக்கிறது.அதற்காக பண்ணையார் மீதான விசுவாசத்தை விட்டுவிடவும் விரும்பவில்லை. அதேபோல் அங்கு சிதம்பரம் செல்லும் ஆசை நந்தனாரை நெருக்குகிறது.தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மன்றாடும் பாரதியை கண்ணம்மா நெருக்குகிறாள்.அவன் தவிக்கிறான். மொத்தத்தில் நந்தனாருக்கும் பாரதிக்கும் ஒரே நிலைதான்.தாங்கள் இருக்கும் அமைப்பையோ அதன் விதிமுறைகளையோ விட்டுவிட்டு வெளியேற விரும்பவில்லை என்ற அளவிலேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.மீறலும் இணக்கமும் அதற்குள்ளே நடப்பதாக காட்டப்படுகிறது. பிராமணர்கள் தலைமையிலான தேசிய இயக்கம் இந்த இணக்கத்தோடு நந்தனாரை ஏற்றுக்கொள்ள முன்வந்தது.ஆனால் வட்டார சாதியவாதம் பாரதியின் இந்த இணக்கத்திற்கும் தயாரில்லாத நிலையை தான் பாரதி கண்ணம்மா படம் வந்த போது எழுந்த எதிர்ப்புகள் காட்டின. எல்லோரையும் உள்ளடக்கிய தேசீயத்தின் தேவை நந்தனாரை ஏற்க வைத்தது.வட்டார சாதிய வாதத்திற்கு அத்தகைய தேவை இருத்திருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
நந்தனாரும் பாரதியும் மீறலுக்கும் இணக்கத்திற்கும் இடையே ஏக்கம்,தவிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்கள். இருவருமே தங்கள் மொத்த குழுவிலிருந்து தனித்து இருக்கிறார்கள்.அதனால் முரண்பாடு கூட எழுகிறது. சிவலோகநாதனையே சேவிப்போமென்று கூறிவரும் நந்தனாருக்கும் அவர் சாதியினருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. பண்ணையாரை விசுவாசிக்கக்கூடாது என்று கூறும் தன் சாதியைச் சேர்ந்த மாயவனோடு பாரதியும் வாதிடுகிறான். இருவருமே அவர்களின் வரையறையை ஏற்றவர்களாக காட்டப்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கு இருவருக்குமே ஒரே வழி தான் முன்வைக்கப்படுகிறது. நந்தனார் சிதம்பரத்திற்குள் நுழையும்போது தில்லைவாழ் அந்தணச் சாதியினர் தடையாக வந்து நிற்கிறார்கள்;ஏற்க மறுக்கிறார்கள்.
ஆனால் இறைவன் நந்தனார் கனவிலும் அந்தணர்கள் கனவிலும் தோன்றி நந்தனாரை கோயிலுக்குள் அனுமதிக்க கூறுகிறார். தீ வளர்த்து அதில் மூழ்கி எழுந்து வந்து நந்தனார் தன்னை அடைவார் என்று இறைவன் கூறியதால் தீ மூட்டுகிறார்கள். இந்த உலக சம்பந்தமாகிய நிலையில்லாத உடலத்தை ஒழித்து புண்ணியஞ் செய்கின்ற பெருமையான பிராமணமுனியின் வடிவில் இறைவனைச் சென்று சேர்க்கிறார் நந்தனார்.
அம்பலக்காரர் வீட்டில் சாவு விழுந்தது என்று கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்து ஓடி வருகிறான் பாரதி. அங்கு கண்ணம்மா உடலைச் சுற்றி நின்று உறவினர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் தடுத்ததும் செய்வதறியாது நந்தனார் புலம்பி திரிவதைப் போல பாரதி செய்வதறியாது ஸ்தம்பித்து நின்று விடுகிறான். ஆலயத்திற்குள் நுழைய அந்தணர்கள் மறுத்ததும் நந்தனார் தில்லை தெற்கு குளக்கரையில் போய் நின்று ஆடிப் பாடுகிறார். கண்ணம்மாவை பிணமாக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது பாரதியே மேளம் அடித்து செல்கிறான்.இறுதியாக கண்ணம்மா உடலுக்கு தீ மூட்டி விட்ட பிறகு யாரும் எதிர்பாராத வகையில் தீப்பாய்ந்து இறக்கிறான். இரண்டு இடத்திலும் கீழிருப்போர் தங்களை அழித்துக் கொண்ட பிறகே 'மேலோரால்' ஏற்கப்படுகின்றனர்.
தங்களின் பழைய அடையாளத்தை அழித்துக் கொண்டு புதிய அடையாளத்தை சூடிய பிறகே ஏற்கப்படுகின்றனர். இரண்டு இடத்திலும் பழைய அடையாளங்களை அழிப்பது தீ.தீ என்பது இங்கு ஓர் குறியீடு. அதாவது தூய்மைப்படுத்தலின் அடையாளம்.பெண்கள் 'கற்பிழந்த அசுத்தத்தை' அழிக்க தீயில் இறங்குவதாக இந்திய கதையாடல்கள் கூறுவதையும் இங்கு பொருத்தி புரிந்துக் கொள்ளலாம்.நந்தனாரும் பாரதியும் கீழ்ஜாதி என்னும் தூய்மையின்மையை தீயினால் அழித்து தூய்மையாக்கிக் கொண்டார்கள். அவ்விடத்தில் அவர்களுக்கு புதிய தகுதி அளிக்கப்படுகிறது. நந்தனார், நாயன்மார் ஆக்கப்படுகிறார். நவீன புரிதலின்படி சாதிய பிராயச்சித்தம் தேடுவது தான் பாரதிக்கு தரப்படும் மதிப்பாக கருதப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் இவ்விரண்டு பிரதிகளும் தலித் பற்றிய சித்தரிப்புகளில் ஒற்றுமை கொண்டிருக்கின்றன. நந்தனார் சரித்திர கீர்த்தனையை பாரதி கண்ணம்மா இயக்குனர் அறிந்திருந்தாரா? அக்கதையை தம் பிரதியுள் பிரதிபலித்தாரா? என்பது இங்கு பிரச்சனை இல்லை. அது எப்படியும் இருந்திருக்கலாம். பாரதி கண்ணம்மா இயக்குனர் சேரனுக்கு இந்த விசயத்தில் நல்ல நோக்கம் இருந்திருக்கலாம்.ஆனால் அவரை அறியாமலே குறிப்பிட்ட எல்லையை தாண்டி தாண்டி யோசிக்க முடியாமல் போகிறது. ஏதோவொரு வகையில் இந்திய மரபான மனம் யோசித்த வழியிலேயே யோசிக்க முடிந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று தெரியாவிட்டாலும் இக்கதைகளை எது தொடர்பு படுத்தியது? நந்தனார் சரித்திர கீர்த்தனை இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த சமூகம் தலித் இருப்பை தங்கள் எல்லையை தாண்டி யோசிக்கவில்லை. யோசிக்க மறுக்கின்றன என்பதையே பாரதி கண்ணம்மா பிரதி காட்டுகிறது. குறிப்பாக தலித்துகளோடு மேலோரின் இணக்கத்தை கட்டுவது குறித்து யோசிக்க தலைப்படும் போதெல்லாம் இத்தகைய கற்பனையையே உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதனை தாண்டுவதே இல்லை. ஏனெனில் இது இந்திய மனதின் கற்பனை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.