Advertisment

ஸ்டாலின் ராஜாங்கம் எழுதும் 'எதிர்மறுத்து மொழிதல்' - 2

Tamil writer Stalin Rajangam New Series for Tamil Indian Express Tamil News: புத்தரின் பொதுவான தோற்றம் தியான நிலையிலானது. எனவே, அவரை இந்த வகை பிம்பங்களில் தியான நிலையில் காட்டுவதை தவிர வேறு வழியில்லை.

author-image
WebDesk
New Update
Stalin Rajangam Tamil Indian Express series part - 2

stalin rajangam

காட்சிக்கு வரும் புத்தர் சிலைகள்: அலங்காரமும் மூளியும்

Advertisment

உலகில் சேகுவராவை விடவும் அதிகம் சிலையாகவும், படமாகவும் ஆக்கப்பட்டிருப்பவர் புத்தர் தான். வீட்டின் சுவர்களில், வரவேற்பறைகளில், மேஜைகளில் அலங்காரத்திற்கான பிம்பமாக புத்தரேஅதிகம் இடம் பெறுகிறார். வணிக மையங்கள், வாழ்த்து அட்டைகள், ஆடைகள் என்று புத்தர் பிம்பங்கள் பரவலாக ஜொலிக்கின்றன. நெடுஞ்சாலையோர உணவு விடுதிகளில் அலங்காரப் பொருட்கள் விற்கும் பகுதிகளில் புத்தர் சிலைகள் விற்பனைக்கு இருப்பதைப் பார்த்து விட முடியும். சமய மற்றும் மெய்யியல் அடையாளம் விலக்கப்பட்டு அழகான பிம்பமாக மட்டும் ஆக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் பிம்பங்களை வைத்துக் கொள்வதில் யாருக்கும் பிரச்சினை இருக்க போவதில்லை. புத்தரை பயன்படுத்துவோர் பௌத்தராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயரே கூட தெரிந்திருக்க வேண்டியதில்லை என்றாகி விட்டது.

புத்தரின் பொதுவான தோற்றம் தியான நிலையிலானது. எனவே, அவரை இந்த வகை பிம்பங்களில் தியான நிலையில் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. புத்தரின் தோற்றம் தியான நிலையில் நின்றவாறும் அமர்ந்தவாறும் இருக்கின்றன. தலைக்கு பின்னாலும் மேலேயும் ஞானச்சுடர் விதவிதமாக சுடர்விடுகின்றன. இவற்றில் இந்திய பாணியிலான புத்தர் சிலைகளை விடவும் தைவான், திபேத், கொரிய, சீன பாணி புத்தர் தோற்றங்கள் உள்ளன. புத்தர் சிலைகளில் இத்தனை வடிவங்கள் இருப்பதற்கு இந்த பாணிகளே காரணம். இன்றைக்கு புத்தர் சிலை அலங்காரப்பொருளாக மாறியிருப்பதில் இந்த நாடுகளின் பாணிகளே முக்கிய காரணமாகியிருக்கின்றன.

தமிழகத்திற்கு புத்தர் புதிதானவர் இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் குறைந்திருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரையில் புத்தரின் கருத்துகளும் பெயரும் பொதுவெளியில் பரவலாக கையாளப்பட்டன. ஜனநாயக சமூகம் குறித்த சொல்லாடலையொட்டி இந்தியச் சமூகத்தின் சீர்திருத்த முன்னோடியாக புத்தரை பேசி வந்திருக்கிறார்கள். கூட்டங்களின் பதாகைகளிலும், நூல்களிலும் அவர் உருவம் பதியப்பட்டன. ஆரம்ப கால தமிழ்ப்படங்களில் புத்தர் படமோ, சிலையோ பின்புலமாக கையாளப்பட்டன.

இன்றைய தியான நிலை புத்தர் உருவங்கள் ஆசிய நாடுகளில் நிறுவப்பட்ட விகார்கள், சிலைகள் ஆகிவற்றை ஒட்டி உருவாகி நீடிக்கின்றன. சிலை பண்பாடு பௌத்ததினுடையதாகும். உலக அளவில் நிறைய - பெரிய சிலைகள் புத்தருக்கே இருக்கின்றன. மலைகளிலும் காடுகளிலும் மணல் குன்றுகளிலும் புத்தர் சிலைகள் கிடைத்து வருகின்றன. இந்த பின்னணியில் தான் இன்றைக்கு அலங்கார சிலையாக புத்தர் உருவங்கள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

இதேவேளையில், மற்றொரு போக்கு உருவாகி வருவதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதாவது, தமிழ்ப் பண்பாட்டு பொதுவெளிகளிலும் புத்தர் உருவங்கள் பெருகி வருகின்றன. இந்த உருவங்கள் தமிழகத்தில் கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளை பிரதிபலிக்கின்றன.

மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் மலையின் மீதிருக்கும் புத்தர் சிலைக்கு மாலை போட்டு பொங்கல் வைக்கும் காட்சியை பார்க்கலாம். அண்மையில் victim என்னும் திரைப்பட தொகுப்பில் பா.ரஞ்சித் இயக்கிய தம்மம் படம் முழுவதும் ஒரு புத்தர் சிலை இடம்பெற்றிருக்கிறது.

இப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள் மேற்கண்ட அலங்கார சிலைகள் போல் இருப்பதில்லை. அதேபோல் தனித்தும் காட்டப்படுவதில்லை. மாறாக அவை கதையின் பகுதியாக இருப்பதை பார்க்கிறோம். அதாவது குறிப்பிட்ட பின்புலத்தில் வைத்து அந்த சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கர்ணன் திரைப்படத்தில் மக்கள் அச்சிலைக்கு பொங்கல் வைத்து மீன் வெட்டும் சடங்கு செய்கிறார்கள்.

இந்த விதத்தில் அந்த சிலையும், அதை ஒட்டிய சடங்கும் குறிப்பிட்ட பண்பாட்டுப் பின்னணியில் பொருள் பெறுகிறது. தம்மம் படத்தில் ஒருவர் புத்தர் சிலையை சாமியாக கருதுவதாகவும் சிறுமி ஒருத்தி அவரை சீர்திருத்தவாதியாக கருதுவதாகவும் காட்டப்படுகிறது. அது குறித்து அவர்களுக்கிடையே சிறு உரையாடல் நடப்பதாகவும் காட்சி விரிகிறது. புத்தர் சிலையை எடுத்து விட்டால் அப்படத்தின் கதையே இல்லை.

அலங்காரத்திற்காக கையாளப்படும் புத்தர் சிலைகளுக்கும், இந்த படங்களில் காட்டப்படும் சிலைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. இத்தகைய அலங்கார சிலைகள், புத்தருக்கு இருப்பதாக கூறப்பட்டு வரும் சமூக அரசியல் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டவை அல்ல. அவற்றை விலக்கி இருப்பதாலேயே இந்த சிலைகள் அலங்கார பொருளாக இருக்க முடிகிறது.

உள்ளடக்கத்தில் மட்டுமல்ல உருவ அமைதியிலும் கூட இந்த பின்புலம் விடுபட்டு இருக்கிறது. இப்படங்களில் காட்டப்பட்ட புத்தர் சிலைகள் அழகானவை இல்லை. அதற்காகவும் அவ்வுருவங்கள் காட்டப்படவில்லை. மாறாக நம்முடைய பண்பாட்டின் பின்புலத்திலிருந்து இந்த சிலைகள் காட்டப்பட்டுள்ளன. எனவே, இவற்றில் இயல்பாகவே உள்ளூர் பண்பாட்டு அர்த்தம் பிணைந்து விடுகின்றன.

இவ்வாறு தமிழகத்தில் நிறைய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் பல அருங்காட்சியகங்களிலும் சில உள்ளூர் வழிபாட்டிலும் இருக்கின்றன. சில இரண்டிடங்களிலும் இல்லாமல் தனித்து கிடக்கின்றன. சில சிலைகள் முழுமையாக கிடைத்துள்ளன. பல சிலைகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றுள் தலை வெட்டப்பட்ட சிலைகளும் மூக்கு சிதைக்கப்பட்ட சிலைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன.

இந்த சிதைவுகளில் இயல்பாக நடந்தவை குறைவு. மற்றபடி இந்த சிதைவுகளுக்கு பின்னால் பெரும் அரசியல் காரணிகள் இருந்திருக்கின்றன என்பதே ஆய்வாளர்கள் பலரின் கருத்து. மாற்று மதத்தவர்களின் படையெடுப்புகளினாலும் பண்பாட்டு தாக்குதல்களினாலும் இந்த சிதைவுகள் நடந்திருக்கின்றன. புத்தர் சிலைகளின் சிதைவுகள், பௌத்தம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. எனவே, அவற்றை காட்டுவது / காட்சிப்படுத்துவது பண்பாட்டு நிலையில் முக்கியமான அரசியலாக ஆகிவிடுகிறது. இவ்விடத்தில் பண்பாட்டுக்கு தொடர்பில்லாத அலங்கார புத்தர்களை காட்டுவதை விடவும், பண்பாட்டோடு தொடர்புடைய அலங்கார புத்தர் சிலைகளை காட்டுவது முக்கியமாகிறது. அலங்கார புத்தரை விட, அலங்காரமில்லாத புத்தரை காட்டுவது முக்கிய அரசியல் செயல்பாடாகி விடுகிறது. சிலைகள் உள்ள இடங்கள், சிலையின் தன்மை, வழங்கப்படும் பெயர்கள் சார்ந்தும் அவற்றில் உள்ளூர் தன்மை வலிமையடைகின்றன.

தலையிழந்த புத்தர் சிலை என்பதும் வேறு தலையை பொருத்தி வழிபடுவது என்பதும் வரலாற்றில் நடந்து வந்த பல பண்பாட்டு மாற்றங்களை தாங்கி நிற்கும் குறியீடுகளாகும். புத்தர் சிலையின் தலைகள் திட்டமிட்டும் திட்டமிடப்படாமலும் உடைக்கப்பட்டு இருக்கின்றன. ஒருபுறம் மாற்று மதத்தினர் உடைத்திருக்கின்றனர் என்றால், மறுபுறம் புத்தர் சிலைகளின் தலைகளை உடைத்தால் புதையல் கிடைக்கும் என்ற 'நம்பிக்கை'யை பரப்பி வெகுமக்களையே உடைக்க வைத்ததும் நடந்திருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளில் தலை உடைக்கப்பட்டவையே அதிகம்.ஆனால் இத்தனை எண்ணிக்கையில் தலையிழந்த புத்தர் சிலைகள் கிடைத்தும், அவற்றைப் பற்றிய ஆய்வுகள் ஏதும் இங்கு நடக்கவில்லை. பிற்போக்காளர்கள் மட்டுமல்ல பௌத்தம் பற்றிய ஒவ்வாமையினால் முற்போக்காளர்கள் என்போரும் இதில் கவனம் செலுத்துவதில்லை.

தலை இழந்த புத்தர் சிலை கர்ணன் படத்தில் இடம்பெற்றது. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்றில் தலையிழந்த புத்தர் சிலை அச்சிடப்பட்டிருந்தது. எழுத்தாளர் நீதிமணியின் முகநூல் முகப்பு படமாக (Profile picture) தலையிழந்த புத்தர் சிலை இருந்ததை பார்க்க முடிந்தது. இவ்வாறு உள்ளூர் புத்தர் உருவங்கள் வெகுஜன வெளியில் பரவி வருகின்றன. பொதுவெளியில் புத்தர் பற்றிய மாற்று சித்திரத்தை அவை காட்சிக்கு கொண்டு வருகின்றன. இன்றைக்கு திரைப்படம், சுவரொட்டி, முகநூல் படங்கள் என்று இந்த உருவங்கள் பரவினாலும் இந்த இடத்திற்கு வந்தடைந்ததற்கு பின்னால் நெடிய பயணம் இருக்கிறது.

பௌத்தத்தின்/புத்தரின் உள்ளூர் தன்மை குறித்து பேசும்போது முதலில் நினைவுக்கு வருபவர் அயோத்திதாசர் (1845 - 1914) தான். இந்தியா ஒரு பௌத்த தேசம்; இன்றைக்கு இங்கிருப்பவை பலவும் பௌத்தத்திலிருந்து தோன்றி பின்னர் திரிக்கப்பட்டு தக்கவைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறினார். புத்தர் சிலைகளின் தோற்றம் திரிக்கப்பட்டதற்கான அரசியலை அவர் எழுத்தை படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தக் குகைகள், எழுத்துருக்கள் பற்றி அவர் எழுதி இருப்பினும் உடைபட்ட சிலைகள் பற்றி குறிப்பாக எழுதவில்லை. ஆனால், இன்றைக்கு புத்தர் சிலைகளுக்கு உள்ளூரில் வழங்கப்படும் பெயர்கள் (பிரம்மரிஷி, முனி, சிவனார்) பற்றி எழுதியிருக்கிறார். அவர் நடத்திய தமிழன் இதழில் (1907-1914) உடைபட்ட சிலைகள் பற்றி பிறர் எழுதியுள்ளமை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக அண்மையில் புத்தர் சிலை என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சேலம் முனீஸ்வரர் கோயிலின் சிலை பற்றி தமிழன் இதழில் தி.ந. அனுமந்த உபாசகர் (தமிழன், 03.04.1912) என்பவர் எழுதியுள்ளார்.

தமிழில் பெளத்தம் குறித்து எழுதிய திசையில் குறிப்பிடப்பட வேண்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி. அவர் எழுதிய "பௌத்தமும் தமிழும்" நூலின் இரண்டாம் பதிப்பின் அட்டை படத்தில் வயல்வெளியில் கிடந்த தியாகனூர் புத்தர் சிலையை இடம்பெறச் செய்தார். பௌத்தம் பற்றிய நூலில் உள்ளூர் அளவிலான புத்தர்சிலை இடம்பெற்ற முதல் நூல் என்று இந்நூலை தான் கூற வேண்டும்.

நூலின் உள்ளே தமிழகத்தில் கிடைத்த புத்தர் சிலைகளையும் மயிலையார் பட்டியலிட்டு இருக்கிறார். சில சிலைகளின் ஒளிப்படத்தையும் இணைத்து இருக்கிறார். அவற்றில் தலையிழந்த புத்தர் சிலைகளின் படங்களை அவர் இணைக்கவில்லை. ஏனெனில் அது போன்ற சிலைகளை அவர் பார்த்திருக்கவில்லை. ஆனால், சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் பற்றி அவருக்கு தெரிந்திருந்தது. அவற்றை கூறிவிட்டு படங்கள் சிலவற்றையும் சேர்த்து இருந்தார். குறிப்பாக மூக்கும் கைகளும் உடைக்கப்பட்ட நிலையில் ஏழு அடி புத்தர் உருவச்சிலை காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் இருந்ததை ஒளிப்படமாக இணைத்துள்ளார்.

தலையிழந்த புத்தர் சிலைகளை பார்த்திராவிட்டாலும் அத்தகைய சிலைகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார். தென்னாட்டில் தலையிழந்த புத்தர் சிலை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை பார்க்கலாம். மதுரையில் இன்றைக்கு இருக்கும் பாண்டி முனி கோயிலையே அவர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார் என்று கருதலாம்.

இதற்கு பிறகு உள்ளூர் புத்தர் சிலைகள் பற்றிய ஒர்மை உருவானது என்றால் அது பா. ஜம்புலிங்கம் ஆய்வினால் தான். இன்றைய உள்ளூர் தன்மையிலான புத்தர் சிலைகளின் தோற்றத்திற்கு அவர் ஆய்வே காரணமாகியிருக்கிறது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பா. ஜம்புலிங்கம் முனைவர் பட்டம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தபோது தேர்வு செய்த தலைப்பு "சோழ நாட்டில் பௌத்தம்" என்பதாகும். அந்த ஆய்வுக்காக புத்தர் சிலைகளை தேட ஆரம்பித்து ஆய்வு முடிந்துவிட்ட இன்றுவரையிலும் புத்தர் சிலைகளை தேடுபவராகவும் கிடைக்கும் புத்தர் சிலைகள் பற்றி விளக்கம் கூறுபவராகவும் இருக்கிறார். ஒன்றுபட்ட தஞ்சை திருச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்துள்ளார். அவர் பார்த்த சிலைகளில் தான் தலையிழந்த புத்தர் சிலைகளையும், உடல் இல்லாமல் தலை மட்டும் உள்ள சிலைகளையும் இனங்காட்டினார்.

அந்தவகையில் மணலூர், வளையமாபுரம் ஆகிய ஊர்களில் தலையிழந்த புத்தர் சிலைகள் உள்ளன.

பெரண்டா கோட்டை என்ற ஊரில் தலை மட்டும் வணங்கப்பட்டு வருகிறது. பா.ஜம்புலிங்கம் செல்லாத ஊர்களான சின்னமனூர் , பாண்டிச்சேரி, கடகத்தூர் (இந்தச் சிலை தற்போது தர்மபுரி அருங்காட்சியகத்தில் இருக்கிறது) போன்ற இடங்களிலும் தலை இழந்த புத்தர் சிலைகளை பார்க்க முடிகிறது.

அயோத்திதாசர் சிந்தனைகள் நூல்களாக தொகுக்கப்பட்டு வெளியான பின்னால் சிந்தனையளவில் உள்ளூர் அளவிலான பெளத்தம் பற்றிய பேச்சு உருவாயின.

இந்திய அளவிலான பெளத்தத்தில் தமிழ்ப்பகுதி பெளத்தம் தனித்தன்மை கொண்டதாக இருந்தது என்ற வாதத்தைக் கொண்ட Imagining a place for Buddhism: Literary Culture and Religious in Tamil-Speaking South india நூலொன்று உண்டு. Anne Monius (1964–2019) என்ற அமெரிக்க நாட்டு இந்தியவியல் அறிஞர் எழுதிய இந்த நூலை Oxford University Press 2001 ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போது அட்டையில் எந்த படமும் இடம் பெறாமல் தலைப்பு மட்டுமே இடம்பெற்றது. இந்த நூலை 2009 ஆம் ஆண்டு இந்திய பதிப்பகமான நவயானா வெளியிட்டது. புதிய பதிப்பில் அட்டை மாறியிருந்தது. அதாவது பெரும்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தில் தெருவில் கிடக்கும் அமர்ந்த நிலையிலான புத்தர் சிலையை அட்டையில் போட்டிருந்தனர். இச்சிலையின் தலையோ மூக்கோ சிதைக்கப்பட்டிருக்க வில்லை எனினும் அது உள்ளூர் பண்பை பிரதிபலித்தது என்பதும், அது சர்வதேச நூலொன்றின் அட்டையில் இடம் பெற்றது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பிரம்மரிஷி என்ற பெயரில் வணங்கப்படும் புத்தர் சிலை குறித்து கட்டுரை ஒன்றை (காலச்சுவடு) எழுதியிருந்தார் ரவிக்குமார். அதேபோல ஸ்டாலின் ராஜாங்கம் "எதார்த்த பெளத்தம்" (2012)என்ற தலைப்பில் நூலொன்றை தொகுத்து வெளியிட்டார். உள்ளூர் பெளத்தம் எதார்த்தத்தில் எவ்வாறிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாகவே அந்த தலைப்பு சூட்டப்பட்டிருந்தது. அதற்கேற்ப நூலின் அட்டையில் வளையமாபுரத்தில் கிடைத்த தலையிழந்த புத்தர் சிலை இடம்பெற்றிருந்தது. நூலினுள் "பாண்டிமுனியாகி விட்ட புத்தர் " என்ற தலைப்பிலான அவரின் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. மதுரைப் பகுதியில் வணங்கப்படும் பாண்டிமுனி என்ற தெய்வத்தின் சிலை தலையிழந்த புத்தர் சிலையே என்றும், அத்தலை மீது வெறொரு தலை ஒட்ட வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது என்றும் அக்கட்டுரை விளக்கியிருந்தது.

இதேபோல சேலம் கோட்டைப் பகுதியில் வணங்கப்படும் தலைவெட்டி முனீஸ்வரன் தலைவெட்டப்பட்ட புத்தர் சிலையே என்று எழுதப்பட்ட அவரின் கட்டுரை தி இந்து தமிழ்த்திசை நாளேட்டில் (09.07. 2015) வெளியானது.

இத்தகைய தொடர்ச்சியில்தான் இன்றைக்கு பொதுவெளியில் காட்சிப்படத் தொடங்கியிருக்கும் உள்ளூர் பெளத்த பிம்பங்களை பார்க்க முடியும். முந்தைய முயற்சிகளோடு இன்றைய பொதுவெளி பிம்பங்களை உருவாக்குவோருக்கு நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். அப்படியான கட்டாயமும் இல்லை. ஆனால், முந்தைய முயற்சிகள் பொதுவெளியில் உருவாக்கிய தடம் ஏதோவொரு வகையில் பிந்தைய முயற்சிக்கு காரணமாகியிருக்கலாம் அல்லது தாக்கம் செலுத்தியிருக்கலாம். அவை கண்ணுக்கு புலப்படாத தாக்கம் / மாற்றம். ஒன்றை சிறிதாகவோ பெரிதாகவோ தொடர்ந்து பயன்படுத்தும்போது அதற்கான அரசியல் தேவை வரும்போது ஏதோவொரு வகையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரதிபலிக்கும். அதுதான் இப்போது நடக்கிறது. பண்பாட்டில் காட்சி ரீதியான பிம்பங்களின் அரசியல் என்பது இதுதான்.

அண்மைகாலமாக மூக்கோ தலையோ சிதைந்த புத்தர் படங்கள் சமூக வலைதள பக்கங்களில் இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் தன் குறிப்பு ஒன்றை எழுதி அப்படத்தை பயன்படுத்தியிருந்தார். புத்தர் வழிபாடே விநாயகர் வழிபாடாக மாறியது என்பதை விநாயகர் சதுர்த்தி நாளில் குறிக்க வந்த நீலம் சோஷியல் மீடியாவின் படம் ஒன்று தலையிழந்த புத்தர் சிலை அருகே யானை உருவத்தை காட்டியிருந்தது. யானையின் தலையே தலையிழந்த புத்தர் சிலை வைக்கப்பட்டது என்பதாக அப்படம் கூறியிருந்தது. எப்படியிருப்பினும் புத்தரின் தலை திருகப்பட்டது என்கிற அரசியல் அர்த்தம் அதில் இருக்கிறது. இவ்வாறு திரும்ப திரும்ப தலை வெட்டப்பட்ட - தலைமாற்றப்பட்ட புத்தர் நினைவு ஏதோவொரு வகையில் இங்கு ஊடாடத் தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு அரசியல் அர்த்தத்தோடு தொடங்கியிருக்கும் உள்ளூர்மயமான புத்தர் பிம்பங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது அதுவே மற்றுமொரு அலங்காரமாக உறைந்து விடுவதற்கான அபாயம் இருக்கிறது. இது பிம்ப அரசியலின் வழமை. அவற்றிற்கு இருக்கும் பண்பாட்டு அரசியல் உள்ளடக்கம் தான் மற்ற அலங்கார சிலைகளிலிருந்து வேறுபடுத்தி வந்தது. அத்தகைய உள்ளடக்கத்தை தக்க வைப்பது/நினைவு படுத்துவது தான் இந்த உள்ளூர் அடையாளங்கள் மற்றுமொரு பிம்பமாக மாறுவதை தடுக்கும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment