அரண்மனைக்குள்ளே சென்ற சந்திரமுகி.
நான் சிறுவயதாக இருந்த போது எங்கள் வீடு கிராமத்திற்குள் இல்லாமல் வயற்காட்டில் இருந்தது. வீட்டிற்கும் கிராமத்திற்கும் நடுவில் வேலி மரங்கள் அடர்ந்த ஓடைக்கரை உண்டு. அங்கொரு பாழடைந்த கொட்டகை இருந்தது. மத்தியானம் உச்சி வெயில் நேரத்தில் மட்டும் அந்த கொட்டகை வழியே போகவோ நிற்கவோ கூடாது என்பார்கள். அந்த கொட்டகை உரிமையாளர் அதிலேயே தூக்கிட்டு செத்துப் போனாராம். அகாலத்தில் செத்துப் போனதால் அவர் பேயாக உலவுவதாகவும், உச்சி பொழுதில் அவர் அலைவார் என்றும் காரணம் சொல்வார்கள். உச்சிபொழுதில் யாராவது அவ்வழியே போனால் பேய் அடித்து விடும் அல்லது பிடித்துக் கொள்ளுமாம். இதனால் சிறுவர்களாகிய நாங்கள் பயந்தபடியே அந்த கொட்டகையை கடப்போம். ஆனால் கடைசி வரைக்கும் எங்களை பேய் பிடித்ததுமில்லை; அதை நாங்கள் பார்த்ததும் இல்லை.
பேய் ஓட்டும் நிகழ்ச்சிகளை மட்டும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம். குறிப்பாக அது பெண்களையே பிடிக்குமாம். பேசாமல் ஆகிவிடுவார்கள்; திடீரென அழுவார்கள்; மொத்தத்தில் சராசரி தன்மையிலிருந்து விலகி இருப்பார்கள். இதனால் அவர்களை இறந்த யாரோ ஒருவரின் ஆவி அடித்திருப்பதாக கூறுவார்கள். சில சமயம் கோயிலில் சாமி வரும். பேசாமல் அமர்ந்திருந்தால் பேய் பிடித்திருக்கிறது என்றும் பேசினால் சாமி வந்திருக்கிறது என்றும் கூறுவார்கள். பேய் பிடித்தலை பாவமாகவும், அதிலிருந்து விமோசனம் பெறுவதற்கு தெய்வ வழிபாட்டை கைக்கொள்வதும் வழமை. 'முறையான பூசாரி'யாக இல்லாவிட்டாலும், ஊரில் கோயில் விழாவின்போது மட்டும் பூஜை செய்யும் பெரியவர்கள் பேய் ஓட்டுவார்கள். அஞ்சி ஓடுவதும் கிட்ட வருவதும் என்று வேடிக்கையாக இருப்போம்.
பேய் பிடித்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து வருவார்கள். எருக்கஞ்செடி கோலால் அடிப்பார்கள். உச்சந்தலைமுடியை மரத்தில் இழுத்து வைத்து ஆணியில் அறைவார்கள். ஓங்கி அடிக்கும் போது அந்த முடி பிய்த்துக் கொண்டு நிற்கும். அதோடு பேய் ஓடிவிட்டதாக சொல்வார்கள். புளிய மரங்களில் இவ்வாறு ஆணியால் அறையப்பட்ட முடிகளை தொட்டுத் தொட்டு விளையாடுவோம்.
ஆண்களையும் பேய் பிடித்திருப்பதாக சொற்பமாக சொல்லியிருக்கிறார்கள். அதனை காற்று சோகை அடித்து விட்டது என்பார்கள்.அதை கன்னிமார்கள் ஆவியாக வந்து பிடித்துக் கொண்டார்கள் என்று தான் சொல்வார்கள். ஆனாலும் ஆண்களுக்கு பேயோட்டி பார்த்ததில்லை. ஆனால் எங்கள் உறவுக்காரர் ஒருவர் அணைக் கட்டும் வேலைக்கு சென்று திரும்பியிருந்தார். காட்டுப்பகுதி அது.அவர் திடீரென வெறி பிடித்தால் போல ஓடத் தொடங்குவார். அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பூஜை செய்து, பூஜை பொருட்களை புற்றில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வரச் சொன்னார்கள்.
ஆக மொத்தத்தில் அகாலத்தில் இறந்து போனவர்களே பேயாகிறார்கள். நிறைவேறாத ஆசை; நிறைவடையாத வாழ்வு. பெரும்பாலும் பேய் பெண்களை பிடிப்பதாகவே கூறப்படுகிறது. கன்னிப்பெண்கள், நிறைசூலிகள், ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் போன்றோரே பேயாக உலவுவதாக நம்பிக்கைகள் இருக்கின்றன.
இந்த நம்பிக்கைகளில் பேய் மட்டுமல்லாது கொல்லப்படும் இடமும், பேய் இருக்கும் இடமும் முக்கிய இடம் பிடிக்கிறது. பேய் தொடர்பாக மக்களிடையே நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றில் சில திரைப்படத்திற்கான கருப்பொருட்களாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழில் அரண்மனை என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து அரண்மனை 2 என்ற படத்தை அதே படக்குழு எடுத்தது. சுந்தர் சி இயக்கியிருந்தார். முதல் படத்தின் எதிர்பார்ப்பை மூலதனமாக கொண்டதால் இந்த படத்திற்காக அதிகம் மெனக்கிடவில்லை. ஆனால் இந்த படத்தின் கதை வேறு வகையில் முக்கியமானது. பேய்க்கதை என்ற போதிலும் இப்படக்கதை சமகாலத்தோடு தொடர்புடையது.
கோவிலூரில் பெரிய குடும்பம். குடும்பப் பெரியவரே ஊர் பெரியவர். அவர் தலைமையில் அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடக்கவிருக்கிறது. அதோடு புதிய அம்மன் சிலையையும் செய்து கண் திறக்க ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கிடையில்
பெரியகுடும்பம் குடியிருக்கும் அரண்மனைக்குள் பேய் நுழைகிறது. வீட்டிலிருப்போரின் உடலில் நுழைந்து கொண்டு ஒவ்வொருவராக கொல்லத் தொடங்குகிறது. முதலில் குடும்ப பெரியவரை படுத்த படுக்கையாக்கி கொல்லுகிறது.பிறகு பணியாளரைக் கொல்கிறது. தொடர்ந்து குழந்தையையும் கொல்ல முயற்சிக்கிறது. வீட்டின் மூத்த மகனை கொன்றுவிட்டு இளைய மகனை கொல்ல நெருங்குகிறது. இதற்கிடையில் இக்கொலைகளை துப்பு துலக்க வரும் அதிகாரியும் குடும்பத்தின் இளையவனும் சேர்ந்துக்கொண்டு பேயை வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.
இந்த வீட்டுக்குள் பேய் ஏன் வரவேண்டும்? குடும்ப வம்சத்தையே ஏன் அழிக்க வேண்டும்? அதற்கொரு பின் கதை இருக்கிறது. குடும்பத்தில் மாயா மட்டுமே பெண்.அப்பா, இரண்டு அண்ணன்களால் செல்வாக்காக வளர்க்கப்பட்டவள். அவளுக்கு திருமணம் நிச்சயிக்க போகும் தருணத்தில்,தான் காதலித்த ஆணோடு ஓடிப் போகிறாள். மூன்று வருடம் கழித்து இருவரும் பெங்களூரில் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். குடும்பத்தினர் சென்று கர்ப்பிணியாக உள்ள மாயாவையும் அவள் கணவனையும் அழைத்து வருகிறார்கள். ஆனால் வரும் வழியிலேயே கணவனை அடித்துக் கொன்று விட்டு அவளுக்கும் விஷம் கொடுத்துக் கொல்கின்றனர். "நம்பி வந்தோம், இப்படி பண்ணிட்டீங்களே, உங்க வம்சத்தையே அழிக்காமல் விடமாட்டேன்" என்று சபித்துவிட்டு இறந்து போகிறாள் மாயா. அவளே இப்போது பேயாக மாறி அப்பா தொடங்கி வீட்டின் கடைக்குட்டி குழந்தை வரையிலும் கொல்ல முயற்சிக்கிறாள். கர்ப்பிணியாக இருந்து ஆவியானோருக்கு உக்கிரம் அதிகம். ஆவிக்கு சொந்த பந்தம் தெரியாது. சாகும்போது என்ன கோபம் இருந்ததோ, அதே கோபம் ஆவியான பின்பும் உக்கிரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, பேயாக உலவும் மாயா கடும் உக்கிரதோடு இருக்கிறாள்.
அடிப்படையில் இது ஒரு ஆணவக் கொலை. அதனை இந்த கதையிலேயே அழுத்தம் திருத்தமாக சுட்டியிருக்கிறார்கள். வர்க்க நிலையிலும் சாதி நிலையிலும் மாயா 'மேல்' இருப்பவள். காதலனை 'பண்ணை 'யாள் என்று குறிப்பிடுவதன் மூலம் சாதியாகவும், வர்க்கமாகவும் 'கீழ்' இருப்பவன் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்த திருமணத்தால் தங்களின் அந்தஸ்து, கௌரவம், வம்சம், சாதி சார்ந்த பெருமைகள் போய்விட்டதாக குடும்பத்தினர் கருதுகிறார்கள். "உன் ரத்தம் எங்கள் வீட்டு பெண் வயிற்றில் கலந்து விட்டதே" என்று கூறியே காதல் கணவனை அடிக்கிறார்கள். கடைசியாக மாயா "வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாது தன்னை விட்டுவிடுமாறு " தந்தையிடம் கெஞ்சுகிறாள். தந்தையோ "அதனால் தான் உன்னை சாகடிக்கிறேன்" என்று கூறுகிறார். இது புதுமையான கதையல்ல. ஆனால் சமூகத்தளத்தில் ஆணவக் கொலைகளும் அதற்கான 'நியாயங்களும்' அழுத்தம் பெற்றுள்ள நிலையில் அத்தகைய கதை ஒன்றை படமாக்கியிருப்பது முக்கியமான விஷயம். மேலும் படத்தின் மொத்த தொனி ஆணவ கொலைக்கு எதிராக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் இப்பிரச்சினையை நடைமுறையில் வைத்து படம் அணுகவில்லை. மாறாக மரபான புரிதலையே எடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஆணவக்கொலை தொடர்பான சமூக நம்பிக்கை ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஆணவக் கொலை தொடர்பாக சமூகத்தில் நிலவி வரும் வழமையான நம்பிக்கையையே கதையாக மாற்றிக் கொண்டுள்ளது.உள்ளூர் அளவில் இதுபோன்ற ஏராளமான கதைகள் உண்டு. வழிபாடாக - கதையாக -சடங்காக - ஊர்ப்பெயராக இத்தகைய கதைகள் விரவிக் கிடக்கின்றன.
மதுரை வீரன், முத்துப்பட்டன், காத்தவராயன் கதைப் பாடல்கள் இத்தகையதே. சாதி மாறி காதலித்ததால்/ மணந்ததால் கொல்லப்பட்ட பெண்கள் பின்னர் அம்மன்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
கதைப் பாடல்களில் ஆண்கள் முக்கியத்துவம் பெற்றாலும் உள்ளூர் அளவிலான கதைகளில், வழிபாடுகளில் பெண்களே முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.இத்தகைய கோயில்களில் பெரும்பாலும் பெண்களே முதன்மை தெய்வங்களாகவும்,தங்கள் காதலர் அல்லது கணவன் துணை தெய்வங்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு தான் வழிபாட்டில் பெண் முதன்மை இடம்பெறுகிறாள். ஏனெனில் ஆணை விட அவளுக்கு இழைக்கப்படும் அநீதி தான் அதிக பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.அவள் இறந்து போகும்போது கன்னியாகவோ கர்ப்பிணியாகவோ இருப்பாள். சமயங்களில் நம்ப வைக்கப்பட்டு கொல்லப்படுகிறவளாக இருக்கிறாள். இவை பெரும் பாவமாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய உள்ளூர் கதைகளில் பெரும்பாலும் சமூக ரீதியாக பெண் 'மேல்' இருப்பவளாகவும், ஆண் 'கீழ் 'இருப்பவளாகவும் இருப்பார்கள். இதில் பெரும்பாலும் பெண்ணே வழிபடப்படுகிறவளாக இருக்கிறாள். ஏனெனில் பெண் குடும்பத்தினரே அதிகம் கொல்பவர்களாக இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியில் ஆணும் சாகிறான். எனவே அவளே பழி வாங்குபவளாக இருக்கிறாள். பல இடங்களில் தன் குடும்பத்தாருக்கு/ சாதியினருக்கு எதிராகவும், காதலன் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் அவள் இருக்கிறாள்.
அரண்மனை படத்திற்கான முன்னுதாரணம் தமிழில் ஏற்கனவே வெளியான சந்திரமுகி (2005) படம். சந்திரமுகியை காட்டிலும் சமகாலத்திற்கு நெருக்கமான உள்ளூர் கதையை எடுத்துக் கொண்டது அரண்மனை படம். ஆனால் கதையாடல் இரண்டிலும் ஒன்றே. அரண்மனை, பாத்திரங்கள், வெளியிலிருந்து வந்து விமோசனத்திற்கு வழிகாட்டும் ஒருவர் (ரஜினி, சுந்தர்.சி) என பலவும் இரண்டு படத்திலும் ஒற்றுமையுண்டு.
பணக்காரனான செந்தில்நாதன், பலரும் வேண்டாம் என்று கூறிய வேட்டையபுரம் அரண்மனையினை விலைக்கு வாங்கி மனைவி கங்காவுடம் குடியிருக்கிறான். முன்பு வேட்டையன் என்ற ஜமீன்தாரின் அரண்மனையாக இருந்த இந்த வீடு, பல மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுவதாலேயே பலரும் வாங்க மறுத்து வந்தனர்.ஆனால் செந்தில்நாதன் குடியேறிய பின்னர், நிலைமை சராசரியாக இருப்பதாக கருதி உறவினர்கள் வந்து விடுகின்றனர்.கொஞ்ச நாட்கள் சென்ற பின்பு செந்தில்நாதன் மனைவி கங்காவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அடிக்கடி கோபப்படுகிறாள். அரண்மனையில் மேலே பூட்டப்பட்டிருக்கும் அறைக்கு சென்று தனித்து இருந்துவிட்டு வருகிறாள். இந்நிலையில் செந்தில்நாதனின் விருந்தினராக வந்து அரண்மனையில் தங்கியிருக்கும் மனோதத்துவ டாக்டர் சரவணன் இதை ஆராய்ந்து அறிகிறார். அதாவது கங்காவின் உடம்பினுள் வேறொரு ஆவி புகுந்து இருப்பதே அவளிடம் இம்மாற்றங்கள் ஏற்பட்டதற்கான காரணம் என்கிறார்.
பல வருடங்களுக்கு முன் வேட்டையனின் சபையில் நடனமாட சந்திரமுகி என்ற நடன மங்கை அழைத்துவரப்பட்டாள். தன் காதலனோடு வந்து அரண்மனையில் தங்கி நடனம் ஆடுகிறாள். அவளை அடைய விரும்பும் வேட்டையன், அவள் கண் முன்னே காதலனின் தலையை துண்டிக்கிறான். சம்மதிக்காத அவளும் எரித்துக்கொள்ளப்பட்டாள். தன் காதலனின் சாவுக்கு பழிவாங்க விரும்பும் அவளே இப்போதும் அரண்மனையில் ஆவியாக திரிகிறாள். அந்த சந்திரமுகியின் ஆவியே இப்போது கங்காவின் உடலில் புகுந்து இருக்கிறது.இதனாலேயே சந்திரமுகியாக திரியும் கங்கா, இப்போது நடனம் கற்றுத்தர அரண்மனைக்கு வருகை தந்திருக்கும் நடன ஆசிரியனை தன் காதலனாக போலச்செய்து கொள்கிறாள்.
சந்திரமுகி கொல்லப்பட்ட நாளான துர்காஷ்டமியன்று அவள் பழி தீர்க்கிற உக்கிரத்தை பெறுவாள்.அந்த நாளில் அவளின் அந்த பழி தீர்க்கும் ஆசையை நிறைவேற்றினால், அந்த திருப்தியில் ஆவி கங்கா உடலிலிருந்து வெளியேறிவிடும் என்று மருத்துவர் ஆலோசனை தருகிறார். அதன்படியே மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டு வேட்டையன் உருவம் போன்ற ஒன்றினைச் செய்து, அவ்வுருவத்தின் தலையை வெட்டி நிஜ தலையை வெட்டியதான தோற்றத்தை சந்திரமுகிக்கு ஏற்படுத்தும் போது கங்கா உடலிலிருந்து அவள் வெளியேறுகிறாள்.
அடிப்படையில் இக்கதையும் ஆணவக் கொலை கதைக்கு இணையானதே. இங்கும் காதலன் சாதரணனாகவும் வேட்டையன் பணக்காரனாகவும் இருக்கிறான்.எனவே இதிலும் மேல், கீழ் என்கிற சிந்தனையே ஊடாடுகிறது. தன் அரண்மனையில் ஆட வருகிற நடனமங்கை தனக்கு இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் அதிகாரத்திலிருக்கும் அரசன். இதற்கு தடையாக இருக்கும் அவளின் காதலனை வெட்டுகிறான். பிறகு இணங்காத சந்திரமுகியையும் கொல்கிறான். இதனால் அவள் பழி தீர்க்க துடிக்கிறாள். அவள் வேட்டையனை சபித்துவிட்டு கூட சென்றிருக்கலாம். ஆனால் கதையில் அவை சொல்லப்படவில்லை. பழி தீர்ப்பதற்கு ஆவி அலைவதும், அதற்கு விமோசனம் செய்வதும் தான் கதையாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை அசலானதல்ல. மாறாக தழுவல். இதன் முதல் வடிவம் 1993 ஆம் ஆண்டு மலையாளத்தில் மணிசித்திரத்தாழ் என்ற படமாக வெளியானது. இந்த படத்தை கன்னடத்தில் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். பிறகு தமிழிலும் சந்திரமுகியாக எடுத்தார். இந்த கதை கேரள பண்பாட்டின் சாயலை கொண்டது என்றாலும் இறந்தோர் ஆவியாக வந்து பழி வாங்குவர் என்பது பொதுவான நம்பிக்கையேயாகும். இந்த நம்பிக்கையே மூன்று மொழிகளிலும் இப்படத்தை ஓட வைத்தது. அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களும் செய்யப்பட்டன.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.