டெல்லி ரயில் நிலைய நெரிசல் விபத்து; ரயில்வே துறைக்கு எச்சரிக்கை மணி

புது தில்லி ரயில் நிலைய நெரிசல் விபத்து; முன்பதிவு செய்ய முடியாத பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் துணை நிலையங்கள் இருக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
delhi railway station

கூட்ட நெரிசலுக்கு ஒரு நாள் கழித்து புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: அமித் மெஹ்ரா)

எழுத்து: எம். ஜாம்ஷெட் M JAMSHED

Advertisment

பிப்ரவரி 14 வரை, மகா கும்பமேளாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்களை ஏற்றிச் செல்வதற்கும், திரும்புவதற்கும் வடக்கு ரயில்வேயின் முயற்சிகள் தனித்து நின்றன. கும்பம் மற்றும் மகா கும்பத்தின் போது ஐந்து முக்கிய நீராடல் நாட்களில், ரயில்வே அதிகாரிகள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.  இந்த ஆண்டும் ஜனவரி 13-ம் தேதி வரும் பவுஷ் பூர்ணிமா, ஜனவரி 15-ம் தேதி மகர சங்கராந்தி, 29-ம் தேதி மௌனி அமாவாசை, பிப்ரவரி 3-ம் தேதி பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 12-ம் தேதி மாகி பூர்ணிமா ஆகிய விழாக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தற்போது வரும் மகாசிவராத்திரி அன்றைய புனித நீராடுதலுக்கும் ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

பிப்ரவரி 15 அன்று, பிரயாக்ராஜ் மற்றும் பூர்வாஞ்சலுக்குச் செல்லும் வழக்கமான ரயில்களுடன் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கி மிகையளவில் வரும் பயணிகளைக் கையாளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பான்மையான பக்தர்களும் பயணிகளும் - அவர்களில் பலருக்கு முன்பதிவு இல்லை, அவர்கள் செல்லும் ரயில்கள் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு முன்பே புது தில்லி ரயில் நிலையத்தை அடையத் தொடங்கினர். அவர்கள் மதியம் முதல் நடைமேடைகளில் நிறைந்து இருந்தது தெளிவாகவே தெரிகிறது. அதிகரித்துக் கொண்டிருந்த பயணிகளின் எண்ணிக்கை நடைமேடைகள், மின்படிக்கட்டு மற்றும் நடை மேம்பாலம் ஆகியவற்றைத் திணறடித்தது. என்றுமில்லாத வகையில் அதிகமான பயணிகளின் வருகை ஏற்கனவே நடைமேடைகளில் உள்ள ரயில்களின் சுமந்து செல்லும் திறனுடனும் அதற்கு அடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட ரயில்களின் இருக்கையளவையும் விட மிஞ்சியதாக இருந்தது.

Advertisment
Advertisements

இரவு 9 மணியளவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசலில் 18 பயணிகள் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்திய இரயில்வே வரலாற்றில் பெரிய நெரிசல் காரணமாக ஏற்பட்ட பெரிய விபத்துகளில் இதுவும் ஒன்று.

இந்த கோர விபத்தின் காரணத்தை ஆய்வு செய்து, இதற்கு காரணமானவர்களை திட்டவட்டமாக அடையாளம் காட்டவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், ரயில்வே துறை 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. பல வழிகளில், கடந்த மாதம் மகா கும்பத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தைப் போன்றே இதுவும் உள்ளது. அந்த விபத்து குறித்து நீதித்துறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆய்வுகள் தவறு என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த கட்டத்தில் எந்த ஊகமும் தேவையற்றது.

நெரிசலுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட மற்றும் டிக்கெட்டுள்ளவர்கள் மட்டுமே செல்லும் பகுதியில் நெரிசல் ஏற்பட்டால், முழுமையான விசாரணை தேவை. மேலும் இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களை அடையாளப் படுத்த வேண்டும். இரண்டு கோணங்களில் விசாரணை தேவை - அளவுக்கு மீறிய எண்ணிக்கையில் பயணிகள் எப்படி அனுமதிக்கப் பட்டார்கள் மற்றும் எவ்வகையான கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் நடப்பிலிருந்தன. பயணிகள் மற்றும் நடைமேடைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதை, டிக்கெட் விற்பனையை கட்டுப்படுத்துவது மூலமாகவும், நுழைவு வாயில்களை மூடியும் மற்றும் பயணிகள் தங்கும் இடம்/காத்திருப்பு பகுதிகளை உருவாக்கியும் கட்டுப்படுத்தி இருக்கலாம். இது போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பிரயாக்ராஜைச் சுற்றியுள்ள பல நிலையங்களில் நடைமுறையில் உள்ளன. குறுகிய நடைமேடைகளில் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டால், அந்த நடைமேடையில் இருந்து வெளியேற வழி அந்த நடைமேடைக்கு வரும் ரயில் மட்டுமே. புது தில்லி ரயில் நிலையம் சில நூறு ரயில்களுடன் தினசரி சுமார் 4 லட்சம் வழக்கமான பயணிகளைக் கையாளுகிறது, எனவே, தனி பயணியர் தங்கும் பகுதிகளை உருவாக்குவது மற்றும் மஹா கும்ப சிறப்பு ரயில்களுக்காக சில தளங்களை ஒதுக்குவது சாத்தியமில்லை என்று வாதிடலாம். நெரிசல் மற்றும் துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புக்கு வழிவகுத்த அனைத்து அம்சங்களையும் துறை ரீதியான விசாரணைக் குழு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகைக் காலங்களிலும் மற்றும் போக்குவரத்து மிகுந்த காலங்களில் கூட்ட நெரிசலால் விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் ரயில் நிலையங்களில் நடந்துள்ளன. இவற்றில் துரதிர்ஷ்டவசமாக சில உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. ரயில்வே விபத்து கையேடு என்பது அனைத்து வகையான "ரயில் விபத்துக்கள்" மற்றும் "சம்பவங்கள்" ஆகியவற்றை வரையறுக்கும் ஒரு விரிவான ஆவணமாகும். பரந்த ரயில்வே வரையறையின்படி, ஒரு விபத்து என்பது ரயில் சம்பத்தப்பட்டதாக இருப்பது அவசியம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) ரயில்வே சட்டத்தின் 114வது பிரிவின் கீழ் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்த முடியும். எனவே, இதுபோன்ற பெரிய சம்பவங்கள் கூட CRS-ன் வரம்பிற்கு உட்பட்டவை அல்ல.

ரயில்வே அமைச்சகம் சட்டத்தில் திருத்தம் செய்து, இதுபோன்ற நெரிசல் சம்பவங்களை CRS-ன் வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை கடுமையான விபத்து என வகைப்படுத்த, குறைந்தபட்சம், விபத்து கையேட்டில் திருத்தம் செய்வதை ரயில்வே பரிசீலிக்க வேண்டும்.

முன்பதிவு செய்ய முடியாத சாதாரண பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த ரயில்வேக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாகும். பண்டிகைக் காலங்களில் சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்களுக்கான அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். முக்கிய நிலையங்களில் விமான நிலையம் போன்ற நுழைவு கட்டுப்பாடு இருக்க வேண்டும் மற்றும் மத்திய முனையங்களில் நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களைச் சுற்றி இன்னும் பல துணை ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த துயர சம்பவத்தை தீவிரமான சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மஹா கும்பம் மற்றும் பிற முக்கிய கூட்டங்களுக்கு லட்சக் கணக்கான பயணிகள் பயணம் செய்ய சிறந்த ஏற்பாடுகளை செய்த வரலாற்றை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. அதை தொடர்ந்து செய்ய வேண்டும். தினசரி ரயில்களில் பயணம் செய்யும் 2 கோடி பயணிகளின் நம்பிக்கை அதன் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.

கட்டுரையாளர், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் ஒரு புகழ் பெற்ற நபர், முன்னாள் உறுப்பினர், போக்குவரத்து ரயில்வே வாரியம்.

மொழிபெயர்ப்பு. எம். கோபால் 

Delhi Indian Railways

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: