நாராயணன் திருப்பதி
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 2017-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 119 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் மற்றும் ப. சிதம்பரம் போன்றவர்கள் 2014ல் 55வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100 வது இடத்திற்கு வந்து விட்டதே என்று கவலையோடு, பாஜக அரசு குறித்து தங்களின் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகளை முறையாக படித்து, தெரிந்து கொண்டு அதன் பிறகு விமர்சனங்களை முன்வைப்பதே ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர்களுக்கு சிறப்பு. ஆனால், தன் மகனின் மீதான முறைகேடுகள் வழக்கில் நீதிமன்றத்தின் பிடி இறுகுவதால் அவசர கோலத்தில் அரசின் மீது விமர்சனங்களை அள்ளித்தெளித்திருக்கிறார்.
2014ல் 55வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100 வது இடத்தில் இருக்கிறது என்பது உண்மையா?
இந்த ஆய்வானது 2012-2016ம் ஆண்டுகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டரை வருடம் காங்கிரஸ் ஆட்சி இருந்ததும் இந்த வருடங்களில் உள்ள குறைபாடுகள் அதற்கு முந்தைய வருடங்களில் பிறந்த குழந்தைகளிடம் தான் அதிகம் இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த ஆய்வுக்கு முன் 8 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியே இருந்தது என்பதை மறந்து விட்டாரா சிதம்பரம்?
கடந்த 2014ம் வருடத்தில், இந்தியா வளரும் 76 நாடுகளில் 55 வது நாடாக இருந்தது. அப்போது 5க்கும் குறைவான தர வரிசை குறியீட்டை பெற்றிருந்த 44 வளரும் நாடுகள் பட்டியலிலேயே கிடையாது. ஆனால், 2016 ஆண்டு இந்த 44 நாடுகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அதனால், மொத்த நாடுகளின் எண்ணிக்கை 120 என ஆனது.ஒரு வேளை, இந்த 44 நாடுகளை அப்போது இந்த பட்டியியலில் சேர்த்திருந்தால்,2014ல் 99வது இடத்திலேயே இருந்திருக்கும். 1992ல், 46.2 ஆகவும், 2000ம் ஆண்டு 38.2 ஆகவும், 2008ல் 35.6 புள்ளிகளாக ஆக இருந்த குறியீடு தற்போது 2017ல் 31.4 ஆக குறைந்திருக்கிறப்பது வளர்ச்சியையே காட்டுகிறது. மேலும் இந்த அறிக்கையானது நான்கு முக்கிய காரணிகளை கொண்டது.
1. ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் : 1991-93 ல், 21.7 விழுக்காடாகவும், 1999-2001ல், 17.2 விழுக்காடாகவும், 2007-2009ல், 16.3 விழுக்காடாகவும், 2014-2016ல், 14.5 விழுக்காடாகவும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
2. உயரத்திற்கேற்ற அளவு எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை : 1990-1994ல், 20 விழுக்காடாகவும், 1998-2002ல் 17.1 விழுக்காடாகவும், 2006-2010ல், 20 விழுக்காடாகவும்,2012-2016ல், 21 விழுக்காடாகவும் இருந்திருக்கிறது.
3. வயதுக்கு தகுந்த உயரம் இல்லாத வளர்ச்சி குன்றிய குழந்தைகள் : 1990-1994ல்,61.9 விழுக்காடாகவும், 1998-2002ல் 54.2 விழுக்காடாகவும், 2006-2010ல், 47.9 விழுக்காடாகவும், 2012-2016ல் 38.4 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.
4. ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் இறப்பு விகிதம் : 2010ல் 100 பேருக்கு 47 ஆகவும், 2012ல்,42 ஆகவும்,2014ல் 40 ஆகவும், 2015ல் 37 ஆகவும், 2016ல் 34 ஆகவும் குறைந்துள்ளது என்பது இந்தியாவில் பல்வேறு குழந்தைகள் நல திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதையே உணர்த்துகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே உலக பட்டினி குறியீடானது ஆய்வு செய்யப்படுகிறது என்பதும், 2வது காரணி நீங்கலாக மற்ற அனைத்திலும் தொடர்ந்து இந்தியா, குறைபாடுகளை நீக்கி முன்னேறிக்கொண்டு வருகிறோம் என்பதையுமே குறிக்கிறது.
மேலும், ப. சிதம்பரம் அவர்கள், உணவு பாதுகாப்பு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்ற ஒரு மிக பெரிய குற்றச்சாட்டை வைத்திருப்பது அவர் தன் கவனத்தை இழந்து விட்டதையே காட்டுகிறது. தேர்தலுக்காக அவசர அவசரமாக காங்கிரஸ் அரசு 2013 இறுதியில் கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை, திட்டத்தை ஆய்வு செய்து, செம்மைப்படுத்தி, சீர்திருத்தி அணைத்து மாநிலங்களையும் 2016, நவம்பரில் இந்த திட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. மேலும் 2013-2014ல் உணவு மானியமாக ஒதுக்கப்பட்டது 80000 கோடி மட்டுமே. ஆனால் 2016-2017ல் உணவு மானியம் 1,35,172.96 கோடியாகவும், 2017-2018ல் 1,45,338.60 கோடியாகவும் பாஜக அரசு உயர்த்தியிருப்பது ப. சிதம்பரத்தின் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது வேறு ஏதேனும் அவரின் கண்களை மறைத்து விட்டதா? நாடு முழுவதும் மூன்றாண்டுகளில் 4.5 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களுக்கே உணவு மானியம் சென்றடைய வழிவகுத்துள்ளது பாஜக அரசு என்பதை சிதம்பரம் அவர்களால் மறுக்க முடியுமா?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு, பிரதம மந்திரி மாத்ரித்வா சயோக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 6000/- நேரடியாக அப்பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஜனவரி 2017 முதல் மார்ச் 2020வரை ரூபாய் 7932 கோடி இதற்கான நிதி ஒதுக்கீடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்பிணிப்பெண்கள் மற்றும் குழந்தைகள், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தொற்றினாலேயே இறப்பிற்கு பெரும் காரணம். இதை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இது நாள் வரை 5 கோடியே,11 லட்சத்து, 44 ஆயிரத்து, 547 கழிப்பறைகள் அக்டோபர் 2, 2014 முதல் கட்டப்பட்டுள்ளன. இது பாஜக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் காட்டும் தீவிர அக்கறையை உணர்த்துகிறது. இது நாள் வரை 6 மாநிலங்கள், 220 மாவட்டங்கள், 2,63,312 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டதாக ப.சிதம்பரம் அவர்கள் கருதினால், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவன அறிக்கை சரியானதே என்று அவர் கருதினால், அதற்கு காரணம் அவர் நிதியமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு தான் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், இந்த அறிக்கை தங்களுடைய ஆய்வு செய்யும் சூத்திரத்தை மாற்றி கொண்டு, ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் அளவுகோலை கொண்டது என்பதை ஏற்று கொண்டு, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இந்த அறிக்கையின் உண்மை தன்மையை, நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறார்.
நாட்டு மக்களின் மிக முக்கியமான இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், சர்வதேச நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் மாறுபட்ட அறிக்கையை மக்களிடம் எடுத்து சொல்லி, இந்தியா சுகாதாரத்துறையில் பல ஆண்டுகளாகவே முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும், தற்போதைய பாஜக அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக்குவது அனைத்து எதிர்க்கட்சிகளின் கடமை. இல்லையேல் உண்மையை உணரும் போது, மக்களின் நலன்களில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு புறந்தள்ளுவார்கள் மக்கள்.
கட்டுரையாளர் நாராயணன் திருப்பதி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்.