சிலை அரசியல்

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலை அரசியல் எப்போது உருவானது என்பதை விவரிக்கிறது.

இரா.குமார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார்  முதல்வராக இருந்த கருணாநிதி. அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிலை அரசியலும், பெயரை நீக்க்கும் அரசியலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதன் வரலாற்றை சற்று பார்ப்போம்.

கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார். அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது.

அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்.

அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி.

இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

இதே போல, அதிமுகவுக்கென்று, அண்ணா மேம்பாலத்தின் கீழே பெரியார் சிலையை நிறுவினார் எம்ஜிஆர். பெரியார் பிறந்த நாளில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினரோ, அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

1971-76ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, குதிரை ரேஸ் சூதாட்டத்தை ஒழித்தார். (நீதி மன்றத்தில் தடை பெற்று, குதிரை ரேஸ் தொடர்கிறது என்பது தனிக் கதை) இதன் நினைவாக, அண்ணா மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் இரண்டு குதிரை சிலைகளை நிறுவினார் கருணாநிதி.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, மதுரையில் 1981ல் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அப்போது, இந்த இரண்டு குதிரை சிலைகளும் மதுரையில் கொண்டுபோய் வைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை எம்ஜிஆர் கைவிட்டார்.

சிலை அரசியல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்தது. 2001 ல், முதல்வர் ஆனார் ஜெயலலிதா. டான்சி வழக்கில் தண்டனை பெற்றுள்ள அவர் முதல்வர் பதவி ஏற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். இந்த நிலையில், கடற்கரைச் சாலையில் இருந்த கண்ணகி சிலை, 2001 டிசம்பரில், திடீரென்று இரவோடு இரவாக அகற்றப்பட்டது. லாரி மோதி, அதன் பீடம் சேதமடைந்துவிட்டதால் சிலை அகற்றப்பட்டதாக அரசு விளக்கம் கூறியது.

கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு திமுக உட்பட பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னை அரும்க்காட்சியகத்தில் உள்ள ஒரு கொடுங்கோலன் சிலையின் காலடியில் கண்ணகி சிலை போடப்பட்டது.

”ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டத்தை நோக்கி கண்ணகி சிலை உள்ளது. வாஸ்துபடி, இது ஜெயலலிதாவுக்கு கேடு தரும்” என்று ஜோதிடர் சொன்னதால்தான் சிலை அகற்றப்பட்டதாகவும் சில பத்திரிகைகள் எழுதின. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடற்கரையில் வேறு ஒரு இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்படும் என்று அரசு அறிவித்தது. எனினும் சிலையை மீண்டும் நிறுவவே இல்லை.

வாஸ்து காரணமாக கண்ணகி சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, திமுக சார்பில் கண்ணகி சிலை திறக்க ஏற்பாடு செய்தார் கருணாநிதி. தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அறிவகம் வளாகத்தில் கண்ணகி சிலையைத் திறந்தார் கருணாநிதி. இந்த சிலை, போயஸ் தோட்டம் உள்ள திசையைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. 2006ல் கருணாநிதி முதல்வர் ஆனதும், கடற்கரைச் சாலையில் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது.

2006ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் கடற்கரைச் சாலையில் சிவாஜி கணேசனுக்குச் சிலை வைத்தார். 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், சிவாஜி சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்து, சிலை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் வைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் ஒருநாள் திடீரென்று இரவோடு இரவாக சிவாஜி சிலை அகற்றப்பட்டது. அந்த சிலைதான் இப்போது சிவாஜி மணிமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தசிலை கருணாநிதியால் திறக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டு இப்போது அகற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close